கிருஷ்ணதேவராயருடைய மந்திரிகளில் ஒருவர் அப்பாஜி. மிகவும் புத்திக்கூர்மையுடையவர். ஒருநாள் அரண்மனைக்கு நேரம் தாழ்த்தி வந்தார்.
அரசர் கோபமாக, “”அப்பாஜி! ஏன் காலதாமதமாக வந்தீர்கள்?” என்று கேட்டார்.
“”அரசே! புறப்படும் சமயத்தில் என் புதல்வன் ரொம்பப்படுத்தி விட்டான். அவனைச் சமாதானப்படுத்திவிட்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது!” என்று பணிவோடு கூறினார்.
“”இதெல்லாம் நொண்டிச்சாக்கு. இதை என்னால் நம்பமுடியாது. குழந்தைகளைச் சமாதானப்படுத்துவது அவ்வளவு கஷ்டமா?” என்றார் அரசர்.
“”மன்னா! ரொம்ப ரொம்ப சிரமமான விஷயமே அதுதான்!” என்றார் அப்பாஜி.
“”வசதியில்லாதவர்களுக்கு வேண்டுமானால் நீ சொல்வது சரியாயிருக்கலாம். கேட்டதை வாங்கிக்கொடுத்தால் குழந்தை சமாதானமாகப் போகிறது!” என்று அலட்சியமாகச் சொன்னார் வேந்தர். அப்பாஜி அதை மறுக்கவே, “”சரி சிறிது நேரத்துக்கு நீ குழந்தையாய் இரு. நான் தந்தையாக இருக்கிறேன். நீ எது வேண்டுமானாலும் கேள். எப்படிச் சமாதானப்படுத்துகிறேன் பார்!” என்றார் வேந்தர்.
அப்பாஜி ஒப்புக்கொண்டார்.
இப்போது அப்பாஜி குழந்தைப் போல், “”அப்பா! பானை வேணும்!” என்று அழுதார்.
“”யாரங்கே! ஓவியப்பானை ஒன்று கொண்டுவா!” என்று கைதட்டினார். பானை அரை நொடியில் வந்தது.
அழகழகாய் ஓவியங்கள் வரைந்த பானை.
“”அப்பா! யானை வேணும்!” என்று மீண்டும் விசும்ப ஆரம்பித்தது அப்பாஜி குழந்தை.
“”டேய்! ஒரு அழகான யானை பொம்மை எடுத்துவா!” என்றார் அரசர்.
“”ஹும்! எனக்கு பொம்மை யானை வேண்டாம். நிஜ யானை வேணும்!” என்று முரண்டுபிடித்தார் அப்பாஜி.
“”அப்ப வா! நாம யானைக்கொட்டடிக்கே போகலாம். உனக்கு எந்த யானை பிடிச்சிருக்கோ, அதோட விளையாடலாம்!” அரசரும் அப்பாஜியும் யானைக்கொட்டடிக்குச் சென்றனர்.
ஒரு குட்டியானையைக் காட்டி, “”இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா!” என்றது அப்பாஜி குழந்தை. அதை அவிழ்த்துத் தனியாக நிறுத்த உத்தரவிட்டார் அரசர். சிறிது நேரம் அப்பாஜி அதன் மேல் உட்கார்ந்து ஊர்வலம் வந்தார். அதன் தும்பிக்கை, காது, தந்தம், வால், கால், உடம்பு எல்லாவற்றையும் தடவிப் பார்த்தார்.
பிறகு தந்தையிடம் வந்து, “”அப்பா! யானையைக் களவாணி தூக்கிட்டுப் போயிடுவான். இந்தப் பானையிலே போட்டு மூடிடலாம்!” என்றார்.
அரசர் அன்பாக, “”அதெல்லாம் வரமாட்டான். காவலுக்கு ஆள் போட்டிருக்கேன். வா! போய் தூங்கலாம்!” என்றழைத்தார்.
“”முன்னேக்கூட காவலுக்கு ஆள் இருந்தாங்க. பட்டத்துக் குதிரை திருடுபோகலியா? ஊஹும். இந்தப் பானைக்குள்ளே யானையை அடைக்கச் சொல்லு!” என்று பிடிவாதம் பிடித்தது குழந்தை.
“”இந்தப் பானை சின்னது. யானை பெரிசு. எப்படிப் பானையிலே அடைக்க முடியும்? நீயே சொல்லு?” என்று கேட்டார் அரசர்.
“”அப்போ யானை கொள்ற பெரிய பானையா கொண்டு வரச்சொல்லு!” என்று காலை உதைத்துக் கொண்டு அழுதது அப்பாஜி குழந்தை.
“”வரவர உனக்கு அழும்பு அதிகமாப் போச்சு. முடியாத காரியத்தைச் செய்யச் சொல்கிறாய். ரெண்டு கொடுத்தால்தான் சரியாவாய்!” பொறுமையிழந்த அரசர் அடிக்கக் கையை ஓங்கினார்.
“”அரசே! நான் அப்பாஜி!” என்று அவசரமாய் சொன்னார் அமைச்சர்.
“”அப்பாஜி! நிஜமாகவே குழந்தை வளர்ப்பது ரொம்பக் கஷ்டம்தான்!” என்று ஒப்புக்கொண்டார் அரசர்.
அறிவாளிகள் நினைத்தால் எதையும் சமாளிக்க முடியும். நேரமானதற்கு மன்னிப்புக் கேட்காமல் நிரூபித்த அப்பாஜி எத்தனை சாமர்த்தியசாலி!
– அக்டோபர் 01,2010