சோமு அந்த ஊருக்குப் புதிது. அவன் அப்பாவுக்கு போன வாரம்தான் வேலை மாற்றலாகி இருந்தது.
அவன் தெருவில் நடந்துகொண்டு இருந்தபோது நாலைந்து சிறுவர்கள் பக்கத்தில் வந்துகொண்டு இருந்தார்கள். புதிய பள்ளியில்நேற்று சேர்ந்தபோது அவர்களை அங்கே பார்த்திருந்தான்.
சோமுவைப் பார்த்த சிறுவர்கள் நட்பாகச் சிரித்தார்கள். பிறகு சேர்ந்து நடந்தார்கள்.
‘‘ சோமு, போன வாரம் நம்ம ஸ்கூலில்லே கலைவிழா நடந்தது தெரியுமா? அதிலே ‘புத்திசாலி’னு ஒரு நாடகம் போட்டாங்க’’ அதில வரும் ஒரு காட்சியை சொன்னா நீயும் சிரிப்பே’’ என்று ஒருவன் கூறத் தொடங்கினான்.
நாடகத்தில் அந்தக் காட்சி இதுதான். தன் வேலைக்காரனின் முட்டாள்தனத்தை சோதிப்பதற்காக அவனிடம் பத்து ரூபாய் கொடுத்து ‘‘கடைக்குப் போய் ஒரு டி.வி. செட் வாங்கிட்டு வா’’ என்கிறான் எஜமானன். பிறகு ‘‘அப்படியே பாக்கி இருக்கும் பணத்திலே ஒரு பெரிய பீரோவும் வாங்கிட்டு வா’’ என்கிறான்.
உடனே ‘‘அதெல்லாம் முடியாதே எஜமான்’’ என்று வேலைக்காரன் பதில் அளித்ததும் எஜமானுக்கு சந்தோஷம். ‘இவனுக்கு மூளை வேலை செய்யத் தொடங்கிவிட்டதே!’ என்று நினைப்பதற்குள் வேலைக்காரன், ‘‘இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. கடை மூடியிருக்கும். நாளைக்கு வாங்கிட்டு வர்றேன்’’ என்றான்.
இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க, சோமு, ‘‘வேலைக்காரன் சொன்னதிலே என்ன ஜோக் இருக்கு?’’ என்று கேட்டான். மற்றவர்கள் திகைத்துப்போய் பார்க்க, சோமு தொடர்ந்தான். ‘‘எங்கப்பா, அம்மா, அக்கா மூணு பேரும் ஆளுக்கொரு பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாங்க. உங்களோடு பேசிட்டு வந்ததிலே எனக்கு ஒரே குழப்பமாயிடுச்சு.
எங்கப்பா ஒரு கிலோ அரிசி வாங்கிட்டு வரச்சொன்னரா? இல்லை, ஒரு லிட்டர் அரிசி வாங்கிட்டு வரச்சொன்னாரானு தெரியல.
எங்கம்மா முகத்துக்குப் போட்டுக்க பவுடர் வாங்கிட்டு வரச்சொன்னாங்க. அது டிட்டர்ஜென்ட் பவுடரா அல்லது டால்கம் பவுடரான்றது மறந்து போச்சு.
எங்கக்கா தலைக்கு வெச்சுக்க பூ வாங்கிட்டு வரச் சொன்னாங்க. தாழம்பூன்னு சொன்ன மாதிரியும் இருக்கு. வாழைப்பூன்னு சொன்ன மாதிரியும் இருக்கு’’ இப்படி சோமு கூறிவிட்டு திரும்பிப் பாத்தபோது மற்ற நால்வரும் தலை தெறிக்க ஓடிக்கொண்டு இருந்தார்கள். சோமுவுக்கு காரணம் விளங்கவில்லை.
வள்ளுவர் அங்கு இருந்திருந்தால் சோமுவிடம் என்ன கூறியிருப்பார்?
‘‘இல்லாமையிலேயே மிக மோசமானது அறிவில்லாமை. மற்ற இல்லாமைகளை அவ்வளவு மோசமாகக் கருதமாட்டார்கள்’’னு சொல்லியிருப்பார். இதைத்தான் அவர் ‘புல்லறிவாண்மை’ என்ற அதிகாரத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.
‘அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு’
– வெளியான தேதி: 16 நவம்பர் 2006