சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன். அநியாய வட்டி வாங்கினான். தர்மவானான தந்தை முன்பு செய்து வந்த அன்னதானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
“பூ, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, இதெல்லாம் தண்டச்செலவு என்று கூறி தெய்வ வழிபாட்டை நிறுத்தினான். கணவனை எதிர்க்க முடியாத வச்சலா மவுனமாக கண்ணீர் உகுப்பாள்.
ஒருநாள் “”வட்டிக்கடைக்காரர் வேணு வீடு எது?” என்று விசாரித்தப்படியே வந்தார், ஒரு பெரியவர்.
அவரிடம் “”யாசகமா?” என்று இகழ்ச்சியாகக் கேட்டார் வேணு.
“ஆயிரம் வராகன் வேண்டும். என் பிள்ளைக்குக் கல்யாணம் வைத்திருக்கிறேன்,” என்று பணிவோடு கேட்டார் பெரியவர்.
“”ஏனய்யா, சொத்து பத்து இல்லாத நீர் எதற்காகப் பிள்ளைக்கு விவாகம் பண்ண வேண்டும்? கோவிலுக்கு சென்றீர்களானால் சுவாமிக்குப் போட்ட மாலையைப் தருவார்கள். அதையே உன் மகனிடம் கொடுத்து சன்னதியிலேயே மாலை மாற்றி, ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கொம்பை முடிந்து கட்டும்படி கூறும். இதற்கு எதற்கு தண்டமாய் ஆயிரம் வராகன் கடன்படுகிறீர்?” என்று கடுகடுத்த வேணு, கதவை சாத்திவிட்டு கடைக்குச் சென்றான்.
அவன் தலை மறைந்ததும் பெரியவர் வீட்டுக் கதவைத் தட்டி, “அம்மணி’ என்று குரல் கொடுத்தார்.
வச்சலா வெளியே வந்து “பெரியவரை நமஸ்கரித்து, “”சுவாமி! என் பிறந்த வீட்டில் போட்ட வைர மூக்குத்தி ஒன்று திருகு தொலைந்து விட்டதால், பெட்டியில் போட்டு வைத்திருக்கிறேன். விற்றால் 2000 வராகன் கிடைக்கும். இதை பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள். ஆனால், இதை இந்த ஊரில் விற்க முயற்சிக்க வேண்டாம்,” என்று எச்சரித்து விட்டு மூக்குத்தியை தேடி எடுத்து வந்து தந்தாள்.
பெரியவர் வடிவில் வந்து மூக்குத்தியைப் பெற்றுச் சென்ற பகவான், நவரத்ன வியாபாரி ரூபத்தில் ஆடம்பரமாக உடை அணிந்து, வேணு கடைக்கு வந்து மூக்குத்தியைக் காட்டி, “”என்ன விலை கொடுப்பீர்?” என்று கேட்டார்.
“”ஆயிரம் வராகன் கொடுக்கலாம்,” என்றான் வேணு.
வச்சலாவிடம் இதே மாதிரி ஒரு மூக்குத்தி உண்டு. அவளுக்கு இரக்க சுபாவம். நாம் கடைக்கு வந்ததும் கிழவர் உள்ளே நுழைந்து யாசகம் கேட்டிருப்பாரோ? அவள் கிழவரிடம் கொடுத்திருப்பாளோ? எதற்கு சந்தேகம்? ஒரு நடை வீட்டிற்குப் போய் பார்த்து விடலாமே என்று சிந்தித்தான்.
“”ஐயா! இங்கே அதிகப் பணம் வைத்திருப்பதில்லை! ஒரு நொடியில் வீட்டிற்குப் போய் எடுத்து வருகிறேன்,” கூறிவிட்டு வீட்டிற்கு அவரசமாகச் சென்றான்.
நேரங்கெட்ட நேரத்தில் கணவன் வந்ததைக் கண்டு திகைப்படைந்தாள் வச்சலா.
அதிலும் அவன் அவரசமாக, “”வச்சலா! திருகு தொலைந்ததென்று ஒரு வைர மூக்குத்தியை உள்ளே வைத்திருந்தாயே! அந்த மூக்குத்தியை எடுத்து வா,” என்றதும் அவளுக்கு, “பகீரெ’ன்று என்றது.
பயந்து கொண்டே உள்ளே சென்றாள். வேணுவின் கூரிய பார்வையை சமாளிக்க, தேடுவது போல் பாவனை செய்தாள். உள்ளம் இறைவனின் திருவடிகளைக் கண்ணீரால் நனைத்தது. என்ன ஆச்சரியம்! அவளுடையதைப் போலவே ஒரு அழகான மூக்குத்தி அவளது விரல்களில் தட்டுப்பட்டது.
மூக்குத்தியை ஆராய்ந்த வேணு நிதானமாக, “வச்சலா! இது உன்னுடையதல்ல! உண்மையைச் சொன்னால் கோபப்பட மாட்டேன். இவ்வளவு உயர்ந்த வைரத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை,” என்று கேட்க, வச்சலா நடந்தது நடந்தபடி கூறினாள்.
“”வச்சலா! பரந்தாமனே தருமச் செயலுக்கான பலனை எனக்கு விளக்க லீலை புரிந்திருக்கிறார். வா! வியாபாரி வடிவிலிருக்கும் பகவானை வணங்குவோம்!” என்று வச்சலாவுடன் கடைக்கு விரைந்தான். பக்தன் உணர்ந்துதம் பகவான் இருப்பாரா?
வேணு மானசீகமாக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, இரப்போர்க்கும் இல்லையெனாது வாரி வழங்கி சத்திரம், நந்தனம், வேத பாட சாலைகள் என்று ஏராளமான அறப்பணிகளைச் செய்தான். கர்நாடக சங்கீதத்தின் பிதாமகரான புரந்தரதாசர்தான் அந்த வேணு.
– நவம்பர் 2011