(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாம் வாழும் நிலப்பகுதிக்குத் ‘தமிழகம்’ என்று பெயர். தமிழகம் என்பது தமிழ்மொழி பேசப்படும் இடமாகும். இங்கே வாழ்வோர் தமிழ்மக்களாவர். முற்காலத்திருந்த- ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த – தமிழகத்தை இப்போது நாம் காண்கின்றேமில்லை. அக்காலத்தில் முடிதரித்த மன்னர் மூவர் வாழ்ந்திருந்தனர். அவர் சேர, சோழ, பாண்டியர் எனப்படுவார். இம் மூவரின் ஆட்சிக்கும் உட்பட்டு விளங்கிய இடமே தமிழகம் எனச் சிறந்திருந்தது.
ஒரு காலத்தில் சேரமன்னன் மிக்கவன்மை யுடையவனாய் விளங்குவான். அப்போது அவன் ஆட்சியின்கீழ் மற்ற மன்னர் இருவரும் அடங்கி நடப்பார்கள். அவ்வாறே, சோழன் படைத்தகுதிகளால் வலுப்பெறின், மற்றவர் அவனுக்கு அடங்கிக்கிடப்பர். பாண்டியனும் அவ்வுயர் நிலையை அடைதல் உண்டு.
அக்காலத்தில், ஐயூர் முடவனார் என்னும் தமிழறிவு சான்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் பெயரை நோக்கியே அவர் உடல் முடம்பட்டிருந்தது என அறியலாம்.
ஆனால், அவர் நிறைந்த அறிவினர். அறிவு முடம் அவருக்கு இல்லை. உடல் அழகு மட்டும் அழகாகாது. எட்டிப்பழம் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. உண்போர்க்கோ கசந்து தோன்றும். அழகான உருவத்தை மட்டும் ஒருவர் பெற்றிருப்பதனால் பயனில்லை. ‘கல்வி அழகே அழகு’. அவ்வழகினைப் பெற்ற உடல் எவ்வாறு இருப்பினும் பெருமை அடையும். ஆதலின், கல்வியால் சிறந்து விளங்கிய முடவனாரை யாவரும் மதித்தனர்.
முடவனார், கொடைமடம் பட்டார்பால் சென்று இன்றமிழ்ச் செய்யுள் பாடி அவரை இன்புறுத்துவர். அவர்கள் மனமுவந்து பரிசு தருவர். தகுதி அறிந்து அது தரப்பட்ட தாயின் அதனைப் பெற்று வாழ்த்தி வருவார்.
தோன்றிக்கோன் என்பவன் ஒரு சிற்றரசன். முடவனார் அவனை அடைந்து, தம்மால் நடக்கமுடியவில்லை என்பதைப் புலப்படுத்தி ஊர்திவேண்டும் என்று ஒருகால் கேட்டார். இப்புலவர்க்கு எது செய்யினும் எது தரினும் அது அழியாப் புகழைத் தரும் என்ற எண்ணம் உடையவன் கோன். ஆதலின், வண்டிப்பகட்டினையும் ஆனிரைகளையும் நிரம்பப் புலவர்க்குத் தந்தான்; புலவரும் வாயார வாழ்த்தி மீண்டார்.
நாட்டின் பல பாகங்களை நேரிற் காண் பதனால் அறிவு பெருகும். சுவடியில் படித்தறியும் பல பொருள்களை நேரில் காண்பது நல்லதல்லவா? பலவகையான குணங்களையுடைய மக்களையும், வேறு பிறவற்றையும் அதனால் நன்றாக அறிந்துகொள்ள முடியும். ஆதலால், நம் புலவர் தென்னாடு முழு வதையுமேனும் சுற்றிப்பார்க்க விழைந்தார்.
வண்டி மீது ஊர்ந்து சென்றார். காவிரி ஆறு பாய்வதனால் நல்ல விளைவையுடையது சோழ நாடு. இந் நாட்டினைச் சுற்றிப்பார்த்தார் புலவர். மலைவளம் சிறந்த சேர நாட்டினையும் கண்டார். பின்பு பாண்டி நாட்டைப் பார்ப்பதற்கு நெருங்கினார்.
பாண்டிய நாட்டினர் பலர், வேறு நாட்டினைப் பார்க்கும் எண்ணத்துடன் ஒன்று சேர்ந்தனர். அந்நாட்டு நாகனார் என்ற தமிழ்ப் புலவரும் அவர்களுடன் சேர்ந்தார். எல்லாரும் பாண்டி நாட்டெல்லையைத் தாண்டி வந்தனர். வந்தவர்கள், வண்டியையும் அதனுள்ளிருக்கும் புலவர்பெருமானையும் கண்டனர். அப்புலவர் பெருமானை அறிந்த சிலர், “அவர் ஐயூர் முடவனார் என்னும் புகழ் வாய்ந்த புலவர். அவருடன் பேசிப் பின் செல்லலாம்,” என்று கூறிப் புலவரை நெருங்கினர். கற்றவருடன் கலந்து பேசி மகிழ்வதே மகிழ்ச்சி!
அவர்கள் புலவரை நெருங்கும் நேரத்தில், அவரும் பகட்டினை அவிழ்த்துவிட்டு மர நிழலில் அமர்ந்தார். வந்த பாண்டி நாட்டினரும், முடவனாரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டனர். ஒருவர் புலவரை நோக்கி, “ஐயரே! தாங்கள் எங்குச் சென்று வருகின்றீர்?” என்றார்.
புலவர், “தமிழ்நாட்டினையேனும் சுற்றிப் பார்க்க என்னுள்ளம் விழைந்தது. ஆதலின், சோழநாட்டினையும் சேரநாட்டினையும் பார்த்து வருகிறேன்,” என்று கூறினார்.
ஒருவர் :- “எங்கள் எண்ணமும் அதுவே. அந்நோக்கத்துடனேயே நாங்களும் புறப்பட்டோம். தாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் எங்கட்குக் கூறவேண்டும். புதுவதாக அறிதலைவிடத் தங்கள் மூலம் முதலில் அறிந்தால் அவற்றைக் காணும்போதும், கேட்கும்போதும் நாங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடியும்.”
புலவர் :- “நன்று, உங்கள் கருத்தினை அறிந்தேன். சேர சோழ நாடுகளைக் கண்டும் யான் காணாதவனே. ஆதலின், யான் எவ்வாறு கூறமுடியும்?”
ஒருவர் :- “இப்போதுதானே அந்நாடுகளிலிருந்து வருகின்றீர்கள். அங்ஙனமிருக்க ஏன் இவ்வாறு கூறவேண்டும்?”
புலவர் :- “அவ்விரு நாடுகளையும் கண்டேன். ஆங்குப் பல நிகழ்ச்சிகளையும் கேட்டேன். அப்போதெல்லாம், உங்கள் நாட்டு மன்னனாகிய மாறன் வழுதியைக் காண வேண்டும் என்னும் விருப்பமே மிகுதிப்பட்டது. ‘நாடு கண்டோம்’ எனக் கண்டதால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை.”
ஒருவர் :- “அங்ஙனம், விருப்பமுண் டாதற்குக் காரணம் யாதோ?”
புலவர் :- “உங்கள் நாட்டினை ஆளும் மன்னனது சினத்தை எண்ணும் போது நெஞ்சு பகீர் என்கின்றது.”
ஒருவர் :- “தாங்கள் இன்னும் எங்கள் நாட்டெல்லையையும் மிதிக்கவில்லை. அவ்வாறிருக்க, எங்கள் மன்னன் சினமுடையான் என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்?”
புலவர் :- “உங்கள் மன்னனை யான் காணாவிடினும், அவன் சினத்தைக் கண்டுளேன்.”
“என்ன விந்தை! ஒரு மனிதனைக் காணாமல் அவன் சினத்தை மட்டும் தனியே எப்படிக் காண முடியும்? புலவர் ஏதோ தடுமாறுகின்றார் போலும்!” என்று அங்கிருந்தவரிற் பலரும் நினைத்தனர். நினைத்த வற்றை வெளிப்படையாகக் கூறுதற்கும் அஞ்சினர்.
அவர் தமைப் பார்த்த புலவர், “அன்பினீர்! உங்கள் மயக்கத்தை நன்கறிவேன். சினம் ஒரு குணம்; அதனைக் குணியுடன் (குணம் பொருந்தியிருக்கும் பொருளுடன்) காணமுடியுமே அன்றித் தனித்துக் காண இயலாது என்பதுதானே உங்கள் கருத்து,” என அவர்கள் மனம் அறிந்து சொல்லினார்.
“நாம் வினாவி அதனால் அவர்க்கு மனப் பண்ணை உண்டாக்குவானேன்?” என்று முதலில் எண்ணிய பாண்டி நாட்டுக் குழுவினர்க்கு ஐயம் அறவே ஒழிந்தது. மனம் மகிழ்ந்தனர். ‘மேலும் புலவர் என்ன கூறு வாரோ’ என்று அறிய ஆவலுற்றனர்.
புலவர் :- “சினமெனும் குணத்தைக் காணமுடியாது என்பது உண்மை. ஆனால், சினம் காரணமாக நிகழ்ந்த காரியங்களைக் காணமுடியுமல்லவா?”
‘ஆம்’, என யாவரும் கூறினர். புலவர் தம் அறிவு கண்டு அகமகிழ்ந்தனர். அறிஞர் கூட்டுறவால் உண்டாகும் மகிழ்ச்சிக்கோர் எல்லை இல்லை!
புலவர் :- “உங்கள் மன்னவன் மாறன் வழுதியின் சினம் செய்தவற்றைச் சொல்லுகின்றேன். எம்மால் இரு நாட்டிலும் இவையே அறியப்பட்டன. நீர் தன் நிலை கடந்து ஓடினால் அதனைத் தடுக்கும் அர ணும் உண்டோ? நெருப்பு மிகுந்து நிற்கின், உயிர்கள் தங்குவதற்கு நிழல் இருக்குமா? காற்றுக் கடுகி வீசினால், அதனைப் பொறுக்கும் வல்லமை யாருக்குண்டு? அவ்வாறே, உங்கள் அரசர் வழுதிக்குச் சினம் மூளுமாயின், அதற்கு எதிரில் உய்ந்து வாழ்வார் எவரேனும் உளரோ? முடிமன்னரும் சிற்றரசரும் தத்தம் உயிரைக் கையிலேந்தி நிற்பர். ‘அடியேன் யான் மீளா அடிமையாக உள்ளேன்; இவை திறைப் பொருள்; ஏற்று மகிழ்க; சினம் தணிக,’ எனத் திறை தந்து உயிர்பெறுவோரே பலர். அங்ஙனம் செய்ய அறியாது தமக்கும் வீரமுள்ளது என மாறுபடுவோர், புற்றினின்றும் புதிதாக வெளிப்படும் ஈசல் ஒரு பகற்பொழுதிலேயே அழிவதுபோல அழிந்தொழிவர். இவையே யாம் கண்டனவும் கேட்டனவும் ஆகும். ‘வழுதி’ என உரக்கக் கூறுதலே போதும். அந்நாட்டரசர்கள் உடனே கைகூப்பித் தொழுது நிற்கின்றனர். இங்ஙனம், பகைவரை வணக்கும் சினம் சிறந்த மன்னனைக் காணும் ஆவலுடன் யான் புறப்பட்டுவந்தேன்,” என்று சொல்லி முடித்தார்.
முடவனார் தடைபடாது கூறிவந்தனவற்றை அங்கு இருந்தவர் விருப்பத்தோடு கேட்டு நின்றனர். புலவர் சொல்லிக்கொண்டுவந்த போது, அவருள் ஒருவர் முகம், விளக்கம் பெற்றுத் திகழ்ந்தது. உதடுகளும் சிற்சில நேரங்களில் அசைந்தன. சில சொற்களைச் சொல்ல அவாவும் தன்மையில் அவர் இருந்தார் என்பது புலப்பட்டது. அவர் மனக்கருத்தைப் புலவர் அறிந்துகொண்டார். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி யன்றோ! முடவர் அவரைப் பார்த்து, “ நீங்கள் ஏதோ உரைக்க எண்ணுகின்றீர்கள் போலும்; அதனைச் சொல்லுங்கள்,” என்றார்.
அவர் :- “நான் சில சொல்ல ஆசைப்படுவது உண்மையே. நான் வடநாடு சென்று இப்போதுதான் மீண்டேன். இவர்கள் தமிழகம் காண விரும்புவதை அறிந்து இவர்களோடு கூடினேன்.
புலவர் :- “தேடிச்சென்ற மருந்து காலில் அகப்பட்டது,” என்பது பழமொழி. வண்டியில் மெல்லச் செல்லும் என்னால் வடநாடுவரை சென்றுவர இயலாது. ஆதலின், சென்று வந்த உங்களைக் கண்டு மகிழ்கின்றேன். அந்நாட்டு நிலைமையை உங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம் என எண்ணுகின்றேன். முதலில், உங்கள் பெயரை அறிவிக்கலாமோ?”
அவர் :- “என் பெயர் நாகன். நீங்கள் வடநாட்டினைக் காணவேண்டும் என்பதில்லை. தென்னாட்டில் பெரும் பகுதியைக் கண்டதே போதும்.”
முடவனார் :- “ஏன் அவ்வாறு கூறுகின்றீர்?”
நாகனார் :- “வடநாட்டு அரசர் சேர, சோழரினும் தாழ் நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்களையும் வழுதி விடவில்லை.”
முடவனார் :- “எவ்வாறு?”
நாகனார் :- “வடவர், வழுதி எண்ணிய படி அடிபணியவில்லை. அவ்வளவுதான்! வழுதிக்குச் சினம் மூண்டது. மலைக்குகையில் உறங்கிக்கிடந்த புலி உணவை வேண்டித் துயிலை வெறுத்து எழுந்தது போல, வழுதி எழுந்தான். வடநாடு எக்கதிக்கு உட்பட்டிருக்கும் என்பதை யான் எடுத்துரைக்க வேண்டுவ தில்லை. பிறநாடுகளில் நடந்ததை நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள். நான் கண்டன சிலவற்றைச் சொல்லுவேன். மீன் நெளிந்தோடும் வயலிடங்கள் மணல் மேடுகளாயின. பொழுது போக்குக்காக மகிழ்வுடன் வட்டாடித் தேய்ந்த இடங்களில் காட்டுக்கோழிகள் முட்டை இட்டுத் தம் இனத்தைப் பெருக்குகின்றன. மக்கள் வாழ்ந்த ஊர், விலங்குகள் இருக்கும் இடமாயின. பெருங் கட்டிடங்கள் இடிந்துவிழ, அவற்றில் கூகை முதலிய பறவைகள் குடியிருந்து பெருங் கூச்சலிடுகின்றன. இவ்வாறு வடநாடு நலமின்றிப் பாழ்பட்டது.”
முடவனார் :- “அப்படியா? என்னே வழுதியின் வீரம்! வடநாட்டைப் பார்க்கவில்லையே என்று ஒரு வருத்தம் இருந்தது. அதனைப் போக்கிய நீங்கள் என்றும் வாழ்க. யான் வழுதியைக் கண்டு மகிழ்வேன்.”
மாணவர்களே, வழுதியின் பெருமை இப்புலவர்களின் வாய்மொழியிலிருந்து எவ்வளவு நன்றாகத் தெரிகின்றது பார்த்தீர்களா!
– சங்கநூற் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.