(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
தன் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வுவந்தால் உயிர் வாழாமையும் ஆகியகுணம்
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர் பட்டி னத்தார். இவர் செல்வம் உள்ள பொழுது அரச னைக் கண்டால் வணங்குவது; எழுந்து நிற்பது; அர சர் பின்னே சென்று உத்தரவு வாங்கி மீண்டுவரு வது முதலிய மரியாதைகளைச் செய்வது பழக்கம். ”பட்டினத்தார் செல்வத்தை வெறுத்து வெளியே துறவியாகச் சென்றார்” என்று அயலவர் சொல் வதை அரசன் கேட்டான். கேட்ட அரசன் அவ ரது மரியாதைக்குணத்தை நினைந்து தானே சென்று பார்க்கத் துணிந்தான், போய் நேரில் பார்க்கப் பட்டிணத்தார் ஒரு சாம்பல் மேட்டில் கோவண ஆடைகட்டிக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று செல்வ வாழ்க்கையை விட்டுவிட்டு இந்தவிதம் வாழ்க்கை நடத்துவதால் என்னபயன்? இதனால் என்ன பெருமை ; வேண்டாம் முன்போலவே வாழ்க்கை நடத்துதல் நல்லது என்றான். பட்டினத் தார் பேசாது இருந்தார். அப்போது மீண்டும் மன் னன் முன்னையவிட இப்பொழுது என்ன பெருமை பெற்றீர் வேண்டாம் வீண் பிடிவாதம் என்றான். அப்பொழுது அவர், ”நீர் நிற்கவும் நான் இருக்க வும் பெற்றேன்” என்றார். இதனால் செல்வமுள்ள காலத்தில் பணிவைக் காட்டியவர் செல்வம் சுருங்கியகாலத்தில் தமது உயர்வைக் காட்டினார். இவ் விதம் வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. (70)
பெருக்கத்து = (குடிப்பிறந்தவர்க்கு) நிறைந்த செல்வம் உண்டான இடத்து
பணிதல் = யாவரிடத்தும் வணங்கி நடத்தல்
வேண்டும் = வேண்டும்.
சிறிய சுருக்கத்து = குறைந்த வறுமையுண்டான இடத்து
உயர்வு வேண்டும் = பணியாமை வேண்டும்.
கருத்து : செல்வம் வந்தபோது பணிவு வேண்டும். செல்வம் சுருங்கிய வறுமையுண்டான போது உயர்வு வேண்டும்.
கேள்வி: பெருக்கத்திலும், சுருக்கத்திலும் மக்கள் நடக்க வேண்டிய முறை என்ன?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.