மங்கோலியாவில் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் குறிபார்த்து அம்பு எய்வதில் கெட்டிக்காரன். அவன் வேட்டையாடும் பொருள்களை தனக்கு மட்டுமே வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் கொடுத்து மகிழும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
ஒருநாள் அவன் வழக்கம் போல காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அப்போது ஒரு மரத்தினடியில் வெள்ளை நிறப் பாம்புக்குட்டி ஒன்றைப் பார்த்தான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பருந்து வந்து அந்தக் குட்டியைக் கவ்விக் கொண்டு சென்றது.
குட்டிப் பாம்பு, “அய்யோ… ஆபத்து… யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்’ என்று அலறியது.
வேடன் கொஞ்சமும் தாமதிக்காமல், ஓர் அம்பை எடுத்தான். வில்லில் பூட்டினான். பருந்தை நோக்கி எய்தான்.
அந்த அம்பு பருந்தின் கால்களில் பட்டுக் காயத்தை எற்படுத்தியது. வலி பொறுக்க முடியாத அந்தப் பருந்து பாம்பைக் கீழே விட்டது.
உயிர் தப்பிக் கீழே விழுந்த அந்த வெள்ளைப் பாம்புக்குட்டி வேடனுக்கு நன்றி சொன்னது.
சில நாட்கள் கழித்து, வேடன் திரும்பவும் வேட்டைக்குச் சென்றான். அந்த வெள்ளைப் பாம்புக்குட்டியைக் கண்டான்.
அப்போது, திடீரென்று அந்த வெள்ளைப் பாம்புக்குட்டியின் பின்னே நூற்றுக்கணக்கான குட்டிப் பாம்புகள் அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.
வேடன் பாம்புக்குட்டிகளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.
வெள்ளைப் பாம்புக்குட்டி அவனைப் பார்த்துச் சென்னது –
“வேடனே, என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா? உன்னால் காப்பாற்றப்பட்ட பாம்புக்குட்டி நான்தான்!’
‘தெரிகிறது… இவர்கள் எல்லாம் யார்?’ என்று கேட்டான் வேடன்.
“நான் பாம்பு அரசியின் ஒரே மகள். இவர்கள் எல்லாம் எங்களது அரண்மனையில் உள்ள பாம்புக்குட்டிகள். என் தாய் உங்களை அரண்மனைக்கு அழைத்து வரச்சொன்னார்’ என்றது வெள்ளைப் பாம்புக்குட்டி.
“அங்கே வந்து நான் என்ன செய்யவேண்டும்?’
“என் தாய் நிறையப் பரிசுப் பொருள்களைத் தருவார். அவற்றை வாங்கிக் கொள்ளாதே. அவரது வாயில் ஒரு மந்திரக்கல் இருக்கிறது. அது வேண்டும் என்று கேள். அவர் தந்து விடுவார். அந்தக் கல்லை வைத்திருந்தால், பறவைகள், மிருகங்களின் மொழியெல்லாம் உனக்குப் புரிய ஆரம்பித்துவிடும்’ என்றது பாம்புக்குட்டி.
வேடன் நாகலோகத்துக்குச் சென்றான். எங்கு பார்த்தாலும் விதவிதமான பாம்புகள். பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தன. சில பாம்புகள் வாத்தியக் கருவிகளையும் இசைத்துக் கொண்டிருந்தன. சில பாம்புகள் கடினமான வேலைகளைக்கூட சுலபமாகச் செய்து கொண்டிருந்தன.
வெள்ளைப் பாம்புக்குட்டியைக் காப்பாற்றியதற்கு நன்றி சொன்னது பாம்பு ராணி.
“என் மகளைக் காப்பாற்றியதற்கு நன்றி! உனக்கு என்ன வேண்டும் என்று கேள். தருகிறேன்’ என்றாள் அவள்.
“நான் கேட்பது கிடைக்குமா?’ என்று கேட்டான் வேடன்.
“ம்ம்..ம்.. கேள்’ என்றாள்.
வேடன் அரசியின் வாயில் வைத்திருக்கும் மந்திரக்கல்லைக் கேட்டான்.
பாம்பு அரசி வாக்குத் தவறாதவள். எனவே, அவள் மந்திரக்கல்லை உடனே அவனிடம் கொடுத்தாள்.
வேடன் அந்தக் கல்லை கையில் எடுத்ததும் அரசி, அந்தக் கல்லின் சக்தியைப் பற்றிக் கூறி ஒரு எச்சரிக்கையையும் கொடுத்தாள். வேடன் மந்திரக்கல்லை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் காட்டுக்குள் வந்ததும் பாம்புக்குட்டி சொன்னது உண்மையாயிற்று. பறவைகளின் மொழி அவனுக்குப் புரிய ஆரம்பித்தது.
அவன் ஒரு மரத்தைக் கடந்தபோது இரண்டு பறவைகள் பேசிக் கொண்டிருந்தன. உற்றுக் கேட்டான். அந்த இரு பறவைகளும் அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறி விடவேண்டும் என்றன. மேலும் அந்தப் பகுதி பூகம்பத்தில் சிக்கப்போவதாகவும் அங்குள்ள எல்லாம் அழிந்து போய்விடும் என்றும் அவை கூறிக்கொண்டன.
இதைக் கேட்ட வேடன் திகைத்துப் போனான்.
ஊரிலுள்ள அனைவரையும் அழைத்து, அவர்களை உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறச் சொன்னான். நாட்டில் பூகம்பம் ஏற்படப்போகிறது என்றும் சொன்னான்.
அவன் சொன்னதை சிலர் நம்பினார்கள். சிலர் நம்பவில்லை. கேலி செய்தனர். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றனர்.
அவனுக்கு இது எப்படித் தெரிந்தது என்று கேட்டனர்.
ரகசியத்தைச் சொன்னால் அந்தக் கணத்திலேயே அவன் கல்லாக மாறிவிடுவான் என்று பாம்பு அரசி எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
சொல்லாவிட்டால் ஊர்மக்கள் அந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை.
தனது உயிருக்கு ஆபத்து என்றாலும் நல்ல காரியத்துக்காகப் போகட்டும் என்று ரகசியத்தைச் சொல்ல முடிவு செய்தான்.
தான் பாம்புக்குட்டியைக் காப்பாற்றியதையும் பாம்பு அரசி மந்திரக்கல்லைக் கொடுத்ததையும் இதன் மூலம் பறவைகளின் மொழியை அறிய முடிந்ததையும் சொன்னான்.
“இரண்டு பறவைகள் இங்கே பூகம்பம் ஏற்படப்போவதாக பேசிக் கொண்டிருந்தன. அதனால்தான் சொன்னேன். நான் விரைவிலேயே கல்லாக மாறிவிடக் கூடும்’ என்று சொன்னான்.
அந்தக் கணத்திலேயே அவன் கல்லாக மாறிவிட்டான். இதைக் கண்டதும் சிலர் தலைதெறிக்க ஓடினார்.
என்ன ஆச்சரியம்! அடுத்த சில நிமிடங்களில் அந்த ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. தரைகள் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. மலைகள் சிதறின. வீடுகள் தரைமட்டமாகின. ஆடுமாடுகள் எல்லாம் இறந்துபோயின.
பூகம்பம் ஓய்ந்தது. ஊரே தலைகீழாக மாறிப் போயிருந்தது. வெளியேறிய மக்கள் அந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தனர்.
வேடனது கற்சிலையைப் பார்த்த மக்கள் கண்ணீர் சிந்தி அழுதனர். அவனை ஒரு தெய்வமாகவே வழிபட்டனர். காலம் காலமாக வேடனின் தியாக வரலாற்றைச் சொல்லிப் போற்றிப் புகழ்ந்தனர்.
இன்றுவரை மங்கோலியாவின் சிறு கிராமத்தில் வேடன் கற்சிலையாக நிற்கிறான்.
– மங்கோலிய நாடோடிக் கதை தமிழில்: கண்மணி (பெப்ரவரி 2012)