அன்பழகன் பாடங்களில் கெட்டி. வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்க் எடுத்து வருபவன். இதற்காக ஒவ்வொரு வருடமும் அவனுக்கு கோப்பை, சான்றிதழ் கிடைக்கும். அவற்றை எல்லாம் பெருமையாக வீட்டு ஷோகேஸில் வைத்திருந்தான் அன்பழகன்.
ஒருமுறை அவன் வகுப்பு ஆசிரியர் ‘‘ஜெர்மனியிலிருந்து சில கல்வி அறிஞர்கள் சென்னைக்கு வந்திருக்காங்க. சில பள்ளிகளிலிருந்து மாணவர்களை அழைத்து அவங்களோட பேசப் போறாங்களாம். நம்ம பள்ளியிலே இருந்து அன்பழகனையும் இன்னொரு மாணவனையும் அனுப்புவதாக இருக்கிறோம்’’என்றார்.
அன்பழகனுக்கு நியாயமான கர்வம் ஏற்பட்டது. அன்றிரவு தன் அம்மாவிடம் ‘‘அம்மா, ரெண்டு பேர்லே ஒருத்தன் நான்தான் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தே இல்லை. இன்னொருத்தனைத்தான் யோசித்துத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்’’என்று கூறினான்.
அன்பழகனோடு, கதிரவனும் தேர்ந்து எடுக்கப்பட்டான். கதிரவன் பத்திலிருந்து பதினைந்து ரேங்குக்குள் வாங்குவான். பேச்சுப்போட்டி, கால்பந்து என்று அவன் கவனம் சென்றுவிடுவதால், அவனால் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.
நிகழ்ச்சிக்கான நாளும் வந்தது. கிளம்புமுன் தலைமை ஆசிரியர், அவர்களை கூப்பிட்டு ‘‘மிகவும் நன்றாக பதிலளிக்கும் மாணவர்களுக்கு பரிசு தரப்போறாங்களாம். ரெண்டு பேரும் நல்லா செஞ்சிட்டு வாங்க’’என்று கைகொடுத்தார். அன்பழகனின் தோளைப் பாராட்டுதலாகத் தட்டினார். ‘எப்போதும் முதல் ரேங்க் வாங்குவதால் தன்மீது தலைமை ஆசிரியர் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்’ என்பது அன்பழகனுக்குப் புரிந்தது.
பாடங்களில் மட்டுமல்ல, நாளிதழ்களைப் படித்து பொதுஅறிவையும்நன்றாகவே வளர்த்துக்கொண்டிருந்தான் அன்பழகன். மேல் வகுப்பு படிக்கும் மாணவர்களைவிட அன்பழகனுக்கு அறிவுத்திறன் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
நிகழ்ச்சிக்கு இருவருமாகச் சென்று வந்து மூன்று நாட்கள் கடந்துவிட்டிருந்தன.
அன்று ஆசிரியர் அறிவித்தார்.‘‘சிறப்பு பரிசு நம் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவனுக்குக் கிடைத்திருக்கிறது. அவன்…’’ வகுப்பில் எல்லோருடைய பார்வையும் அன்பழகனின் மீது பதிந்தது.
சின்ன இடைவெளி கொடுத்த ஆசிரியர் தொடர்ந்தார். ‘‘கதிரவனுக்குதான் இந்த கௌரவம்’’ என்றதும் கதிரவன் எழுந்துநிற்க அனைவரும் கைதட்டினார்கள்.
விஷயத்தைக் கேள்விபட்ட அன்பழகனின் அப்பா ‘‘என்னடா ஆச்சு? அறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு உனக்கு பதில் தெரியலையா?’’ என்றார்.
‘‘எல்லா கேள்விக்கும் எனக்கு பதில் தெரிஞ்சிருந்தது. அத்தனை பேர் நடுவிலே சொல்லத்தான் தயக்கமாக இருந்தது’’ என்றான்.
அன்பழகனின் இடத்தில் வள்ளுவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?
படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பேச்சுத்திறமையை வளர்த்துக்கொண்டு இருப்பார். ஏனென்றால் அவரைப் பொருத்தவரை ‘போரில் பயப்படுபவர்களுக்கு கத்தி உதவாது. அதுபோலவே சபையில் பேச அஞ்சுபவர்களுக்கு புத்தகங்கள் உதவாது’.
இதைத்தான் ‘அவை அஞ்சாமை’ என்ற அத்தியாயத்தில் கீழ்க்கண்ட குறளில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
‘‘வாளடென் வன்கண்ணார் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு’’
– வெளியான தேதி: 01 மார்ச் 2006