பொருளின் அருமை தெரியாதவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,863 
 

ஒரு சிற்றூரில் வீரன் என்னும் விறகு வெட்டி ஒருவன் இருந்தான்.

அவன் நாள் தோறும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, தலையில் சுமந்து வந்து அதை விற்று, வாழ்ந்து கொண்டிருந்தான்.

வழக்கம்போல் வீரன் காட்டுக்குச் செல்லும் போது, ஏதோ நினைவில் வெகு தொலைவு சென்று விட்டான்.

அப்போது கந்தவர்கள் இருவர் அவன் எதிரே வந்தனர்.

வீரனைக் கண்டு அவனை விசாரித்தனர். வீரன் தன்னுடைய கடின உழைப்பைக் கூறினான்.

அவனிடம் இரக்கம் கொண்டு, தங்களுக்கு வேலையாளாக இருக்கும்படி கேட்டனர். வீரனும் அதற்குச் சம்மதித்தான்.

கந்தர்வர்கள் காலையில் வெளியே சென்றனர். அவர்களுக்கு உணவு தயாரித்து வைக்க நினைத்தான் வீரன். ஆனால், சட்டிகள், அரிசி, பருப்பு முதலியவை இல்லாததால், திகைத்து நின்றான் வீரன்.

கந்தர்வர்கள் திரும்பி வந்ததும் வீரனின் திகைப்பைப் பார்த்து புன்முறுவலுடன் அங்கே ஓர் மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டி ஒன்றைக் காட்டி, ‘இது ஒரு அமுதசுரபி’ என்றனர்.

அமுத சுரபி’ என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது என்று கூறி, திரு திரு என்று விழித்தான் விறகு வெட்டி வீரன்.

“நமக்கு என்ன உணவு வேண்டுமோ, அதை நினைத்து, சட்டியில் கையை விட்டால், சட்டியில் என்ன உணவு வேண்டுமானாலும் நிறையக் கிடைக்கும்” என்றனர் கந்தர்வர்கள்.

வீரன் அவர்கள் கூறியதைக் கேட்டு அதிசயப்பட்டான். அறுசுவை உணவு வேண்டும் என்று நினைத்து சட்டியில் கையை விட்டான்.

சுவையான அறுசுவை உணவு கிடைத்தது. மகிழ்வோடு மூவரும் உண்டனர்.

இப்படியாக வீரன் உழைக்காமல் உண்டு சுகமாக இருந்து வந்தான்.

பல மாதங்கள் சென்றன. கந்தர்வர்கள் புறப்படத் தயாரானார்கள்.

அப்பொழுது வீரனிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டனர். அவன் அமுதசுரபி பாத்திரத்தை தருமாறு கேட்டான்.

“அதை உன்னால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயலாது; வேறு ஏதாவது தருகிறோம்” என்றனர்.

வீரன் பிடிவாதமாக, அதையே விரும்பிக் கேட்டான் அவர்களும் அவன் விருப்பப்படி அமுதசுரபி பாத்திரத்தை அவனுக்குக் கொடுத்து விட்டுச் சென்றனர்.

வீட்டுக்குத் திரும்பியவீரன் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தான். முன்போல் அவன் விறகு வெட்ட காட்டுக்குப் போகவில்லை.

“சில நாட்களாக வீரன் காட்டுக்குப் போகாமல், விறகு வெட்டி வராமல், எப்படி சுகமாக வாழ்கிறான்” என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர் அவனுடைய உறவினர்கள். அதோடு அக்கம் பக்கத்தில் உள்ளோரும் பேசலானார்கள்.

ஒரு நாள் வீரனிடமே அதைக் கேட்டு விட்டனர்.

வீரனுக்கு மகிழ்ச்சியும் மதிப்பும் அதிகரிக்கவே, சிறிது அதிகமாகவே மது அருந்தி, ஆடிப் பாடத் தொடங்கினான். அதோடு கூட அமுத சுரபிப் பாத்திரத்தையும் தோளில் வைத்துக் கொண்டு, ஆடிப்பாடி குதித்தான். அமுத சுரபிப் பாத்திரம் கீழே விழுந்து நொறுங்கியது.

வீரன் மிகவருத்த முற்றான். முன்போலவே காட்டுக்கு விறகு வெட்டி வரச் சென்றான்.

பொருளின் அருமை தெரியாதவனிடம் பொருள் தங்குவது இல்லை.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *