பொன்குடமும் மண்குடமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 11,221 
 
 

ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப்பார்கள்.

பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.

நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி போன் குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து வருவாள். நீர் மொண்ட பின் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

ஒருநாள் இருவரும் நீர் தூக்கிக்கொண்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் ஒரு கால்வாய் வெட்டிக் கிடந்தது.

அந்தக் கால்வையைக் கண்டவுடன் ஒருத்தி கேட்டாள்: “தலையில் உள்ள குடத்தோடு இந்தக் கால்வாயைத் தாண்டவேண்டும். உன்னால் முடியுமா?”.

அதற்கு மற்றொருத்தி பதில் சொன்னாள்: “என்னால் முடியும். உன்னால்தான் முடியாது.”

“ஏன் முடியாது?. வேண்டுமானால் இருவருமே தாண்டிப் பார்த்துவிடுவோம்” என்றாள் முதலில் கேட்டவள்.

இருவரும் அந்தக் கால்வாயைத் தாண்ட அதன் அருகில் சென்றார்கள்.

முதலில் ஒருத்தி தாவினாள். அவள் கால்வாயைத் தாண்டிவிட்டாள். ஆனால் அவள் தலையில் இருந்த பொன் குடம் கீழே தரையில் விழுந்து தண்ணீர் கொட்டிவிட்டது. குடமும் ஒரு பக்கம் நெளிந்துவிட்டது.

தொடர்ந்து தாவிய மற்றொருத்தியும் கால்வாயைத் தாண்டிவிட்டாள். அவள் தலையில் இருந்த மண்குடம் கிழே விழுந்து உடைந்து விட்டது, சுற்றிலும் தண்ணீர் சிந்தியது.

முதல் பெண் நெளிந்துபோன பொன்குடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் மொண்டுவர ஊருணிக்குச் சென்றாள். இரண்டாவது பெண், தாயார் கோபிப்பாளே என்று பயந்து அழுது கொண்டே வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினாள்.

கருத்துரை: பொன்குடம் உடைந்தால் பெண்ணாகவே யிருக்கும். மண் முடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயந்த குணம் படைத்தவர்கள் வறுமையடைந்தாலும் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். இழிந்த குணம் படைத்தவர்கள் வறுமையுற்றால் எவ்விதப் பயனும் அல்லாதவர்களாகி விடுவார்கள்.

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம் – முதற் பாதிப்பு ஜனவரி 1965.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *