(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பேரறிவுள்ள பெரியோரைத் துணையாகக்கொள்ளுதல்
சிவஞான சுவாமிகள் தாம் செய்த காஞ்சிப் புராணத்தை அரங்கேற்றக் காஞ்சீபுரம் சென்ற னர். சென்றபொழுது தம்மாணாக்கரும் தம்மிலும் மிக்க அறிவு நுட்பமும் உடைய கச்சியப்ப முனிவ ரையும் அழைத்துச் சென்றனர். காஞ்சீபுரத்தில் ஒருபெரிய மண்டபத்தில் பலரும் கூடிய பொழுது சுவாமிகள் தாம்பாடிய பாடலைப் பாட ஆரம்பித்தார்கள். இதை அறிந்த அவ்வூரில் உள்ளவர்கள் எவ்வளவோ கற்றவர்கள் இவ்வூரில் இருக்க, “வேறொருவர் பாடி இங்குவந்து அரங்கேற்றுவது சரியா! இவரது பாடலில் ஏதாவது குற்றம் கூறித் தடைசெய்ய வேண்டும்” என்று தேவாரம் மட்டும் பாடத் தெரியும் ஓதுவாரிடம் இதைச் சொல்ல அவ ரும் தடைசெய்வதற்கு உடன்பட்டு வந்திருந்தார், ஆரம்பித்த பாடலில் விநாயகர் வணக்கங்களாகிய முதல் இரண்டு பாட்டைப் பாடினார். பின் நடராசர் துதி பாடினார். அப்போது ஓதுவார், “படிப்பதை நிறுத்தும்; முத்திநகரங்கள் ஏழில் ஒன்றாகிய இந்தக் காஞ்சீபுரத்திற்குப் புராணம் பாடவந்த நீங்கள் சிதம்பரம் நடராசருக்கு எப்படித் துதி கூற லாம்? ஸ்ரீ ஏகாம்பரநாதர் துதியையல்லவா கூற வேண்டும்? எல்லாப் புராணங்களிலும் உள்ள – அமைப்பைப் பாருங்கள்” என்றார். அப்போது சிவ ஞான முனிவர் பலகாரணம் சொல்லியும் மேலும், மேலும் தடை கூறியே வந்தார். பக்கம் உள்ளவர் களும், “ஓதுவார் சொல்வதே சரி” என்றார்கள். இவ்விதண்டாவாதத்தைக் கச்சியப்பர் கவனித்தார் குருவினிடம் சிறிதுநேரம் பேச உத்தரவு பெற்றார்; ஓதுவாரை அழைத்துத் “தாங்கள் பேசியதால் சபையில் சத்தம் அதிகமாக இருக்கிறது. ஒரு தேவாரம் சொல்லவேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். வேண்டுகோளுக் கிரங்கித் தொண் டையைக் கனைத்துக்கொண்டு, தன்னுடைய சாமர்த் தியம் வென்றுவிட்டது என்று சந்தோஷமேலீட்டால் கம்பீரமான குரலில் “திருச்சிற்றம்பலம்” என் றார். கச்சியப்பர் ‘நிறுத்தும் உம்மைக் காஞ்சீபுரம் தேவாரம் சொல்லச் சொன்னால் “திருவேகம்பம்” என்று சொல்லாமல் “திருச்சிற்றம்பலம் என்று ஏன் சொல்கிறீர்” என்று கேட்டார். ஓதுவார் தலை குனிந்தார்; “தான் செய்த பிழையை மன்னிக்க வேண்டும்” என்று வேண்டினார். சபையில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிப்புராண மும் அரங்கேறியது. பின் சிவஞான சுவாமிகள், கச்சியப்பரைப் பார்த்து உமது பெருந்துணையால் வெற்றி பெற்றேன் என்று அவர் அறிவின் திறத் தைப் புகழ்ந்து பாராட்டினார், வள்ளுவரும், வியா பாரம் செய்பவர்க்கு முதல் பணம் இல்லாவிட்டால் பயனில்லை. அதுபோல் தம்மைத் தாங்கும் பெரி யோர் இல்லாவிட்டால் கலங்கா துவாழும் வாழ்க்கை இல்லை என்று கூறினார்.
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை.
முதல் இலார்க்கு = முதற் பணம் இல்லாத வணிகருக்கு
ஊதியம் = அதனால் வருகின்ற லாபமானது
இல்லை = கிடையாது.
அதுபோல மதலையாம் = தம்மைத் தாங்குபவராகிய
சார்பு இலார்க்கு = துணை இல்லாதவர்க்கு
நிலை இல்லை = (கலங்கா துநிற்கும் வாழ்க்கைத்) தன்மை இல்லை.
கருத்து: பெரியோர் துணை இல்லா தவர்க்குக் கலங் காத வாழ்க்கைத்தன்மை இல்லை ,
கேள்வி: கலங்காத வாழ்க்கைத்தன்மையை உடையவர் எவர்?
இப்பாடலில் உபமான உபமேயங்களாகத் தனித்தனி இரண்டு வாக்கியங்கள் வந்து நடுவில் “அதுபோல” என்ற சொல் மறைந்து வந்திருப்பதால் இப்பாடல் எடுத்துக் காட்டுவமை அணி.
மதலை = தூண். அது இங்கே தூணைப்போல் தாங்கு வது என்ற பொருளை உணர்த்திற்று.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.