புள்ளையாரே! உன்ன பாக்க வரமாட்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 3,700 
 
 

மழையை முன்கூட்டியே அறிந்து, சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள்.

கூட்டம் கூட்டமாக பறவைகள் தன் கூட்டை நோக்கி பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை பீறிக் கொண்டு பெய்யும் என்பதுபோல தயார் நிலையில் இருந்தது. மழைத்துளி பூமியை நெருங்கும் நேரம் சில நொடிகளே இருந்தன. எப்போது நெருங்கும் என ஜன்னலின் வழியே ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தான் சுட்டிப்பையன் மணி. ஆனால் மேகம் கலைந்தது மழை ஏதும் வரவில்லை. ஒரு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.குளக்கரை பிள்ளையார் மேல மணிக்கு கோபம் வந்தது. தொலைக்காட்சி செய்திகளில் மழை காரணமாக நாளை பள்ளிகூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் மாவட்டங்களில் இவன் வசிக்கும் மாவட்டத்தின் பெயர் வரவில்லை.

‘நாளைக்கு ஸ்கூலுக்கு போகனும்னு’ நினைக்கிறதை விட, ‘மழை வரலன்னு’ நெனச்சு வருத்தப்பட்டதுதான் அதிகம்.ஏன்னா! அந்த ஊரில் குடிக்க தண்ணீர் எடுக்கவே இரண்டு கிலோமீட்டர் தூரம் போகணும். அந்த கிராமத்துக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மழையும் பெய்வதில்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போயிருந்தது.மரம்,செடி,நிலங்கள் எல்லாம் வறண்டு கிடந்தன. கால்நடை பராமரிப்புக்கு கூட நீர் ஆதாரம் இல்லாமல் பலரும் பக்கத்து ஊர்,மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.

மணி சின்ன பிள்ளையாக இருந்தபோது அந்த ஊர்ல மழை பெஞ்சது. அந்த ஊர் குளம் நிரம்பி வழிஞ்சது.தண்ணீர் பிரச்சனை இல்லாம இருந்தது.இப்ப மூனாம் கிளாஸ் படிக்கிறான்.ரெண்டு வருஷமா மழையவே பார்க்கல.

இந்த ரெண்டு வருஷத்துல “மழ எப்ப பெய்யும்னு” பக்கத்து வீட்டு அக்கா மலர்கிட்ட எப்பவும் கேட்டுகிட்டே இருப்பான். மலரும் இவன் தொல்லை தாங்க முடியாமல் “மரம் வளர்த்தா மழை பெய்யும்னு” சொல்லுவா.

“மரம் எப்புடி வளக்குறதுன்னு” கேட்டான்.

“வித போட்டு,மரம் வளக்கனும்”

“வித எங்க இருக்கும்னு” கேட்டான்.

“அட.! காட்டுக்குள்ள கிடக்கும்டான்னு” திட்டினாள்.

முகத்தை பாவமா வச்சமாதிரி,”எனக்கு வித எடுத்துகுடுன்னு” கேட்டான்.

“நசமாதிரி படுத்திகிட்டே இருன்னு” திட்டிகிட்டே பக்கத்துல கீழ கிடந்த வேப்பம் பழத்தை எடுத்துக்குடுத்து “இத வீட்டு பக்கத்துல,குளக்கரையில குழிய பறிச்சு போடு.இது வளந்தது அப்பறம் நமக்கு மழ பெய்யும்னு” சொல்லி அனுப்புனாள்.

மணியும் ஆர்வமா எல்லாம் குழி பறிச்சு வச்சான்.

மறுபடியும் மலருகிட்ட வந்து,”இன்னும் கொஞ்சம் வித தரீயான்னு” கேட்டான்.

கோபத்தில தன் தின்னுகிட்டு இருந்தா, ஆரஞ்சு பழத்தில் இருக்கிற விதையை எடுத்து அவன் கையில் கொடுத்து, “இதயும் புதச்சு வை. தண்ணீ எடுத்து ஊத்து. உடனே செடி வளரும். அப்பறம் மழயும் பெய்யும் அப்படின்னு” சொன்னாள்.

பாவம் அந்த பிஞ்சு மனசு அதையும் வாங்கி வீட்டுக்கு பக்கத்துல இருக்கு இடத்தில் புதைச்சு தண்ணி ஊத்திட்டு இருந்தான். சில நாட்களுக்கு அப்பறம், “அதுல செடி வரவே இல்லை. ஏன் வரலைன்னு” மறுபடியும் போய் கேட்டேன். அதுக்கு மலர் ஏதேதோ சொல்லி சமாளித்தாலும், இப்பவும் போய் பக்கத்துல இருந்த வேப்பம்பழத்த எடுத்து “போய் நடுன்னு” குடுத்தாள்.இது மாதிரி இரண்டு வருஷத்துல அந்த பகுதியில் நிறைய வேப்பம் பழத்தை போட்டுருந்தான்.இப்போது அது எல்லாமே செடி மாதிரி வளர்ந்திருந்தது. இப்ப

“ஏன் மழை பெய்யல. எப்ப மழை பெய்யும் அப்படின்னு” மலர போட்டு தொந்தரவு செய்தான். இவன் தொல்ல தாங்க முடியாமல் “போடா,குளக்கர ஆல மரத்து பிள்ளையார் கிட்ட போய் வேண்டிக்கோ, அவரு மழ பெய்ய வப்பாரு அப்படின்னு” சொல்லி அனுப்பி விட்டாள்.

வேகமா, பிள்ளையார்கிட்ட போய், “அம்மா தினமும் தண்ணி பிடிக்க ரொம்ப தூரம் நடந்து போயிட்டு தண்ணி எடுத்துட்டு வருவாங்க. பாக்கவே கஷ்டமா இருக்கு. அதனால ஊருக்கு சீக்கிரம் மழய குடு. இந்த குளமும் ரொம்பனும். தண்ணி பிரச்சனை இல்லாம இருக்கனும் அப்படின்னு” வேண்டிகிட்டு,பக்கத்துல இருந்த திருநீறு எடுத்து பூசிகிட்டு வந்து, அன்னைக்கு ராத்திரி வானத்தையே வேடிக்கை பார்த்துக் கிட்டே உட்கார்ந்திருந்தான்.அன்று மழையே வரவில்லை. ரொம்ப வருத்தப்பட்டு மறுநாள் குளக்கரை பிள்ளையார்கிட்ட போய், மறுபடியும் கை கூப்பி கும்பிட்டு வேண்டி, ‘மிட்டாய் வாங்கி சாப்பிடுவதற்காக வைத்திருந்த காசுன்னு’ இருந்த இரண்டு ரூபாயை எடுத்து உண்டியல்ல போட்டு, “இன்னைக்காவது மழை வரணும். இந்த கொளம் ரொம்பனும்னு” சொல்லிட்டு போனான்.

அதுதான் இன்று வானம் கருத்தும்,கடைசியில் மழை பெய்யாமல் பொய்த்தது.

மறுநாள் பிள்ளையார்கிட்ட கோவமா வந்து, “உனக்கு நான் உண்டியல்ல காசு போட்டு வேண்டுனே, ஆனா நீ மழய தரல. நாளைக்கு மழை வரல அப்படின்னா, புள்ளையாரே, இனிமேல் நா உன்னைய பாக்கவே வரமாட்டேன் அப்படின்னு” கோவமா பேசிட்டு போனான். அந்த மரத்துக்கு பின்னாடி நின்னுட்டு இருந்த பாலுவும், வள்ளியும் கேட்டு, “அய்யய்யோ மணி கோப்பட்டுடானே.! மழை வரலைன்னா.! ‘புள்ளையார,நா பாக்க வரமாட்டானாமன்னு’ ஊர் முழுக்க சொல்லி, கேலி பண்ணி சிரிச்சாங்க.

“பாவம் புள்ளயாரு நீ வரலைன்னா வருத்தப்பட்டு மரத்து மேல ஏறி உட்காந்துக்க போறாருன்னு” சொல்லி மலரும் கிண்டல் பண்ணி சிரித்தாள்.

அன்னைக்கு சாயந்திரம் காட்டு பகுதி பக்கம் விளையாட போகும் போது, தான் விதை வச்ச இடமெல்லாம் சின்ன செடியாக முளைச்சிருந்ததை பார்த்தான்.

விளையாட போன இடத்துல மணியை எல்லாரும் கேலி பண்ணி சிரிச்சாங்க. கோவப்பட்டு,

“நீ வேணா பாரு டா.! இன்னைக்கு ராத்திரி மழ வரும். கொளம் ரொம்பும் அப்படின்னு” சொல்லிட்டு எழுந்து வீட்டுக்கு வந்துட்டேன். “வானமே கருக்களை எப்படிடா மழை பெய்யும்னு” எல்லாரும் கிண்டல் பண்ணாங்க.

அன்னைக்கு ராத்திரி தூங்காம ஜன்னல் வழியே வானத்தை பார்த்துக்கிட்டே தூங்கிட்டான்.

நைட்டு ஒரு மணிக்கு மேல இருக்கும். திடீரென்று அந்த ஊரில் மழை பெய்ய ஆரம்பிச்சது. மூணு நாளா யாருமே வெளியில் போக முடியல அவ்வளவு மழை. பிள்ளையார் கோயில் குளம் நிரம்பி வழிய ஆரம்பிச்சது. தொடர்ந்து 72 மணி நேரமா விடாம மழை பெய்து கொண்டே இருந்தது. மழை விட்டு கொஞ்சம் நிலைமை சாதகமாகவே, ஒரு வாரம் ஆச்சு. அப்போ மணி தெருவுல கெத்தா நடந்து போனான். கிண்டல் செய்தவங்க எல்லாம் அவனை பார்க்கவே வெட்கப்பட்டு ஓடி ஒளிஞ்சிகிட்டாங்க. லேசான தூறல் விழ ஆரம்பிச்சது. வானத்தை அன்னாந்து பார்த்து, மகிழ்ச்சியா குளத்துகரை பிள்ளையார் கோவிலுக்கு வீரநடை போட்டு போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *