கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,326 
 
 

சைலாதி முனிவர் சிறுவனாக இருந்தபோது அவர் வீட்டிற்குத் துறவி ஒருவர் வந்து பிச்சை கேட்டார். கேலி செய்ய நினைத்த சைலாதி அந்தத் துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கல்லைப் போட்டார். உணவுடன் அந்தக் கல்லையும் சாப்பிட்டு விட்டார் துறவி. ஆண்டுகள் உருண்டோடின. துறவி ஆனார் சைலாதி.
ஒரு சமயம் அவர் எமலோகத்திற்குச் சென்றார். எமனின் இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாறை கிடந்தது.

Paarai“”எதற்காக இவ்வளவு பெரிய பாறை இங்கே கிடக்கிறது?” என்று கேட்டார் சைலாதி.

“”உங்களுக்காகத்தான் இந்தப் பாறை இங்கே உள்ளது. சிறுவனாக இருந்தபோது துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கல்லைப் போட்டீர். அந்தத் துறவியும் அதை அறியாமல் சாப்பிட்டார். ஒருவர் செய்த பாவம் அவரே அனுபவித்தால்தான் தீரும். இது விதி. நீங்கள் போட்ட அந்தச் சிறு கல் நாளும் வளர்ந்து பெரிய பாறையாக உள்ளது. நீங்கள் இறந்து இங்கே வரும்பொழுது இந்தப் பாறையை உடைத்துச் சிறிது சிறிதாக உங்களுக்கு உண்ணக் கொடுப்போம். பாறை முழுவதும் தின்றதும் உங்கள் தண்டனை தீரும்,” என்றான்.

“”நான் இங்கு வராமலேயே இந்தத் தண்டனையை நுகர வழி உள்ளதா?” என்று கேட்டார் அவர்.

“”இதே அளவு பாறையை நீங்கள் இந்தப் பிறவியிலேயே தின்று விட்டால் உங்கள் பாவம் தீரும்,” என்றான் எமன்.

பூவுலகத்திற்கு வந்தார் அவர். அதே அளவுள்ள பாறை ஒன்றைத் தேர்ந்து எடுத்தார். அதை உடைத்துச் சிறிது சிறிதாக உண்ணத் தொடங்கினார். அந்தப் பாறையின் அளவு குறையக் குறைய எமலோகத் தில் இருந்த பாறையும் குறைந்து கொண்டே வந்தது.

பல ஆண்டுகள் முயற்சி செய்து அந்தப் பாறை முழுமையும் தின்று தீர்த்தார். எம லோகத்தில் இருந்த பாறையும் மறைந்தது. ஒருவழியாக முனிவரின் பாவமும் தீர்ந்தது.

இந்தச் சின்ன பாவத்திற்கே இந்த தண்டனை என்றால், பெரிய பாவங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை காத்திருக்கும் தெரியுமா?

– ஆகஸ்ட் 27,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *