பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு நிலச் சுவான்தாரரின் மகனாகப் பிறந்தார். அவர் வளர்ந்து பெரியவரான போது அவரது குடும்பம் நிறைய பணம் கொண்டு செழித்தது. அவருக்கு ஒரு தம்பியும் இருந்தான்.
கொஞ்ச நாட்களில் நிலச் சுவான்தாரர் இறக்கவே அண்ணணும், தம்பியும் குடும்ப விவகாரங்களைச் சேர்ந்தே கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒருமுறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப, அந்த கிராமத்து ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால், போதிசத்வர் தன் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினார். இதற்குள் தம்பி அதே போல் ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே, தம்பி தன் அண்ணனான போதிசத்வரை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, “”ஐயோ அண்ணா! பணமூட்டை ஆற்றில் விழுந்து விட்டதே!” எனக் கூவினான்.
போதிசத்வரும், “”போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்!” எனக் கூறினார். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், உண்மையில் அவன் ஆற்றில் போட்டது பண மூட்டையையே. கற்களை வைத்துக் கட்டிய மூட்டை தான் அவனிடம் இருந்தது.
அந்த ஆற்றில் ஒரு ஜலபூதம் இருந்தது. போதிசத்வர் முன்பு அவ்வூருக்குப் போகும் போது சாப்பிட்டு விட்டுப் போட்ட உணவை அந்த ஜலபூதம் உண்டதால், விசேஷ சக்தியைப் பெற்றிருந்தது. எனவே, தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் அது ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.
ஜலபூதம் தம்பி செய்த மோசத்தை ஊகித்து விட்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் போதிசத்வரிடம் சேர்த்து விட எண்ணி, மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாத படி காவல் காத்தது. போதிசத்வரும் அவரது தம்பியும் காசியில் உள்ள தங்கள் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, “ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே!’ என எண்ணி மனம் புழுங்கினான். அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது, ஜலபூதம் ஒரு மீனவனை நல்லவனாக மாற்றி அவனது வலையில், பண மூட்டையை விழுங்கிய மீனை விழச் செய்தது. அவனுக்கு அந்த மீனைப் பற்றிய விவரம் தெரியும் படியும் ஜலபூதம் செய்தது. அந்த மீனவன் அந்த மீனை எடுத்துக் கொண்டு காசிக்குப் போனான். அங்கு பெரிய மீனைப் பார்த்து அதனை வாங்க நினைத்தவர்கள் எல்லாரும், மீனவன் அந்த மீனின் விலை ஆயிரத்தோரு பவுன் என்றதும் திகைத்துப் போயினர். அவனோ தான் கூறிய விலையில் ஒரு செப்புக் காசு கூடக்குறைக்க முடியாது எனக் கூறவே அவனை எல்லாரும் பைத்தியம் என்று கூறி கேலி செய்யலானர். அவனோ அதைப் பொருட்படுத்தாமல் நேரே போதிசத்வாரின் வீட்டிற்குப் போனான். அவரிடம் மீனைக் காட்டி விலைக்கு வாங்கிக் கொள்ளச் சொன்னான். அவரும் என்ன விலை என்று கேட்கவே மீனவனும், “”உங்களுக்கு என்றால் ஒருபவுன்!” என்றான்.
போதிசத்வர் ஆச்சரியப்பட்டு, “”ஏன் அப்படி?” என்று கேட்க மீனவன், “”இதை நான் உங்களுக்காக எடுத்து வந்தேன். அதற்காக கூலி ஒரு பவுன். அதனை மட்டும் பெற்றுக் கொள்வேன். மற்றவர்களுக்காக கொண்டு வரவில்லை. அதனால் அவர்களுக்கு இந்த மீனின் விலை ஆயிரத்தோரு பவுன் எனக் கூறினேன்!” என்றான். போதிசத்வர் அந்த அதிசய மீனவனைப் பார்த்து திகைத்தார். அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அவர் அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பண மூட்டை வெளியே விழுந்தது. அது கண்டு போதிசத்வர், “இது நம் பணமே! இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?’ என எண்ணி ஆச்சரியப்படலானார். அப்போது ஒரு அசரீரி வாக்கு, “”போதிசத்வரே! நான் அந்த ஆற்றில் வாழும் ஜலபூதம். ஒருநாள் நீங்கள் சாப்பிட்டு விட்டு மீதமான உணவை அந்த ஆற்றில் போட்டீர்கள். அதை சாப்பிட்ட எனக்கு உடனே அற்புத சக்தி கிடைத்தது. உங்கள் தம்பி ஆற்றில் போட்ட பண மூட்டையை ஒரு மீனை விழுங்கச் சொன்னேன்.
“”அந்த மீனை ஒரு நல்ல மீனவனுக்கு கிடைக்கும்படி செய்தேன். அவனுக்கு எல்லா விவரங்களும் தெரியும்படி செய்யவே, அவன் உங்கள் பணத்தை உங்களிடம் ஒப்படைக்க இங்கு வந்தான். நீங்கள் போட்ட உணவிற்கு நான் நன்றி செலுத்தினேன். உங்களை வஞ்சிக்க நினைத்த உங்கள் தம்பிக்கு மட்டும் இதிலிருந்து எதுவும் கொடுக்க வேண்டாம்!” என்று கூறி சென்றது. அது கேட்டு போதிசத்வர் மகிழ்ந்தார். ஆனால், அது கூறியது போலத் தன் தம்பியிடம் நடக்காமல், அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.
– ஜூலை 02,2010