கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 15,394 
 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1.இளமையும் புலமையும்

பாண்டிய நாடு பல வளமும் சிறந்தது. அதன் தலைநகரமாக விளங்கியது மதுரை. மதுரை பாண்டிய அரசர்க்கே அன்றிப் புலவருக்கும் இருப்பிடம் ஆயிற்று. தமிழோசை இனிய ஓசை. இனிய தமிழோசை எங்கும் நிறைந்தமையால் இனிய நகரம் எனும் பெயரை மதுரை ஏற்றது. அந் கரத்தில் பாடும் புலவரும் அவரை நாடும் செல்வரும் எங்கும் விளங்கினர்.

இம் மதுரையில் கணக்காயனர் என்றொருவர் இருந்தார். இவர் நிறைந்த தமிழ்ப் புலமை உடையவர். தமிழ்க்கடலில் எப்போதும் குளித்துக் கொண்டிருப்பவர். தமிழ் நூல்கள் பலவற்றை நன்றாகப் பயின்ற உயர்வால் கணக்காயனார் என்று அழைக்கப்பட்டார். ‘கணக்கு’ என்பது இலக்கண இலக்கிய நூல்களைக் குறிக்கும்.

மதுரையில் சொக்க நாதக் கடவுள் அங்கயற் கண்ணி அம்மையுடன் கோயில் கொண்டிருக் கின்றான். ஆண்டவனை வணங்குவதில் தவறமாட்டார் நம் புலவர் கணக்காயனார். அப்பெருமான் அருளால் இவருக்கு ஒரு மகவு பிறந்தது. அக் குழந்தை இளமைக் காலத்திலேயே நல்ல சொற்களைக் கூறிற்று. அதனால் அக் குழந்தையை நக்கீரன் என்று அழைத்தார்கள். [ந – சிறந்த; கீரன் – சொற்களைச் சொல்லுபவன்.]

“தந்தை மகற் காற்றும் உதவி, அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்பது திருக்குறள் தந்தை எனப்படுவான் தன் மகனுக்குப் பொரு ளீட்டி வைக்க வேண்டியதில்லை. இக்காலத்தில் பலர் பொருளே உயர்ந்தது. எனப் பொருளை மிகுதியும் சேர்த்து வைக்கின்றனர். பொருள் இருக்கும்; அழியும். ஆனால், என்றும் அழியாத பொருள் ஒன்றுண்டு. அதுவே கல்வி எனப் படுவது. கல்வியே கருந்தனம். இவ் வுண்மைகளை எல்லாம் உணர்ந்த அறிஞர் கணக்காயனார். ஆதலினால், தம் மகனாகிய நக்கீரனுக்குக் கல்விச் செல்வத்தைத் தேடி வைத்தார். ‘தந்தையே தன்னுவாத்தி’ என்பர் பெரியோர். கீரரின் தந்தை சிறந்த தமிழறிஞர். ஆதலின், தம் மகனுக்கும் தமிழறிவை நிரம்பத் தந்தார்.

நக்கீரர், தந்தை வழி நின்றார். முறையாகச் சிறு நூல்களைக் கற்றார். உயர்ந்த இலக்கிய நூல்களையும் பயின்றார். இலக்கண நுண்பொருள்களை உணர்ந்தார். இயற்கை இன்பத்தைக் கண்டார். பெருநாவலர் கவிகளில் காணப்படும் உயிர் நிலை யில் கருத்தை ஊன்றினார். தம்மை மறந்து தாமும் அருந்தமிழ்ச் செய்யுள்களைப் பாடினார்.

‘மகனறிவு தந்தை அறிவு,’ ‘மகனுரைக்கும் தந்தை நலத்தை -‘ என்பன உயர்ந்த பொன்மொழிகள். தமிழறிஞர் பலரும் நக்கீரரின் இனிய செய்யுட்களைக் கண்டனர்; உவகை பூத்தனர்; ‘தந்தையை யொத்த மதி நலம் வாய்ந்தான் இவன்’ எனப் போற்றினர்; புகழ்ந்தனர்.

மதுரையில், அக்காலத்தில் சங்கம் ஒன்று இருந்தது. சங்கம் எனினும் கூட்டம் எனினும் ஒன்றே. தமிழ்ப் புலவர்கள் அங்கே கூடுவர். ‘அவர்கள் இனிய செய்யுள்களைப் பாடுவர்; அருஞ்செய்யுட்கு உரை கூறி மகிழ்வர். அரச னும் அவர்களைப் பெரிதும் மதித்து வந்தனன். அவர்களுடன் சிவபெருமான், முருகன் முதலா னோரும் புலவராய் எழுந்தருளி யிருந்தார்கள் என்றால், அவர்கள் பெருமை எத்தகைத்து? தமிழாராய்ந்து கொண் டிருந்த புலவர்கள் நக்கீரரின் பெருமையை உணர்ந்தனர். அவரை அழைத்துத் தம்முள் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.

அக்காலத்தில் நக்கீரருடன் புலவர் நாற் பத்தொன்பதின்மர் இருந்தனர். அவர்கள் தம்முள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வழக்கம். தலைவரைத் தேரும் காலம் வந்தது. அப்போது, நக்கீரரது தமிழறிவின் பெருமையை யாவரும் உணர்ந்திருந்தனர். ஆதலின், வேறுபாடு இல்லாத உள்ளத்தினை உடைய அவர்கள் தகுதியறிந்து தலைமைப் பெருமையை நக்கீரருக்கே தந்தனர். நக்கீரர், சங்கப் புலவராயிருந்தார். இப்பொழுது சங்கத் தலைவராயினார்.

2.உரை கண்ட உயர்வு

பாண்டி நாட்டில் மழைவளம் குறைந்தது. பஞ்சம் தஞ்சம் புகுந்தது. மக்களும் மாக்களும் வாடினர். அரசன் துயருற்றான். செழித்துள்ள நாடு நோக்கி யாவரும் சென்றனர். புலவரும் அவ்வாறு பல நாடுகளுக்குச் செல்லவேண்டியவ வரானார். ஆகவே, சங்கத்துப் புலவரும் வேறிடம் புகுந்தனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தன. மழை, மீண்டும் பெய்தது. பசும்பயிர் தலைக் காட்டிற்று. தடங்கள் தண்ணீர் நிறைந்து விளங்கின. நாடு குளிர்ந்தது. சென்ற மக்கள் மீண்டும் வந்து குடி புகுந்தனர். அரசன், நூல் வல்ல புலவர்களைக் கொண்டு வருமாறு அமைச்சருக்குக் கட்டளை இட்டான். இலக்கிய அறிவு மிகுந்தவரும் இலக்கண வல்லுநரும் வந்தனர். தமிழ் இலக்கணத் தில் எழுத்ததிகாரம் என்பது, எழுத்தின் இலக் கணத்தைக் கூறுவது. சொல்லதிகாரம் என்பது எழுத்தினாலாகிய சொல்லின் அமைதியைச் சொல்லுவது. பொருளதிகாரம் என்பது சொற் பொருளைப் பலவகையால் விளக்குவது. முத லிரண்டு இலக்கணங்களாகிய எழுத்தும் சொல் லும் அறிந்தவர்களையே அமைச்சர் வருவித் தனர். “பொருளிலக்கணம் அறிந்தாரைக் காண்கிலேம்” என்று கூறினர்.

என்னே மன்னன் துன்பம்! நாட்டை இழந்தாலும் அங்ஙனம் வருந்த மாட்டான். “என்ன செய்வேன் ! என் தமிழன்னை பொரு ளிலக்கணம் இல்லாதிருப்பாளோ? என் அன்னையின் உயர் பொருளாகிய உயிர்ப்பொருள் அல்லவா பொருளிலக்கணம் ! மதுரையில் எழுந் தருளும் இறைவா ! தமிழ்த் தலைவா! யாது செய்வேன்? நீயே இக்குறையைப் போக்க வேண்டும்” என்று மனம் கசிந்தான். மதுரைச் சொக்கநாதர் திருக்கோயிலுட் புகுந்து அப்பெருமானை வணங்கினான்.

இறைவன் பெருமையை என்னென்பது! அரசனின் துன்பம் ஒழுங்கானதே என்று இறை வன் கருதினான்; தானே பொருளிலக்கணத்தை எழுதத் தொடங்கினான். ‘அன்பின்’ என்று தொடங்கி அறுபது சிறிய செய்யுட்களை எழுதினான். ஒவ்வொரு செய்யுளும் சூத்திரம் என்று சொல்லப்படும். அதற்குக் களவியல் என்று பெயர். மூன்று செப்புத் தகட்டில் அறுபது செய்யுட்களையும் (நூற்பா-சூத்திரம் ) எழுதித் தன் இருக்கையின் முன் வைத்தார்.

செப்பிதழ்கள் குருக்கள் கையில் அகப்பட்டன. உண்மை உணர்ந்த அவர், அவற்றை அர சன்பாற் சேர்ப்பித்தார். மன்னன் மனம் எவ்வாறு மகிழ்ந்திருக்கும்! மகிழ்ச்சி, சொல்லின் எல்லையைத் தாண்டியது! தன் அரசிருக்கையினின்று எழுந்தான். ஏடுகளுடன் நக்கீரர் தலைமையிற் கூடி இருந்த சங்கப்புலவர் கூட்டத்தை நோக்கி விரைந்து சென்றனன். சென்று அவர்கள் கையில் தந்து, “அறிஞரீர்! இவை எம்பிரான் அருளியவை, உரை வகுத்தல் வேண்டும்” என்றனன். மாணவர்களே! அரசனின் தமிழ் அன்பைக் கவனியுங்கள்! இவ்வாறு அரசரும் தம்கருத்தை வைத்தாலன்றோ மொழிகள் சிறக்கும்! உயர்வடையும்.

மன்னன் தந்த செப்பிதழ்களி லுள்ளவற்றை யாவரும் எழுதிக்கொண்டனர். ஒவ்வொருவரும் உரை எழுதினர். யாருரையைக் கொள்ளுவது?

இந்தச் சிக்கலை எவர் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்? புலவர்கள், தங்களுக்கு ஒரு காரணிகன் வேண்டும் எனக் கருதினர். காரணிகன் என் போன் நடு நிலைமை மேற்கொண்டு தீர்ப்பு வழங்குவோன். இவர்களிலும் சிறந்தார் வேறொருவர் இல்லை. அவ்வாறிருக்கக் காரணிகனை எங் குத் தேடுவது? அரசனும் மனம் வருந்தினான். புலவர்களுக்கு ‘யான் காரணிகனை எங்குச் சென்று தேடுவேன்?’ என்றான். அடுத்து, ஓர் எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. ‘களவியல் தந்தவன் கடவுள். அவனே காரணிகனையும் தருவன். அவனை வேண்டுவோம்’ என்று எண்ணிக் கோவில் புகுந்து வரம் கிடந்தான்.

இடையாமத்தில், மன்னன் கனவில் நனவே போலப் பின் வருமாறு எம்பிரான் உரைத்தனன். “அரசனே! மனம் வருந்தற்க. இவ்வூரில் உப்பூரிகுடி கிழான் என்றொருவன் உளன். அவன் மகன் உருத்திரசன்மன், ஐந்து வயதினன்; ஊமைப்பிள்ளை. அவனைக் கொண்டு வந்து சங்கப் பலகையின்மேல் இருத்தி உரைப் பொருளை உரைப்பீர்களாக. அவன் உண்மை யான உரையைக் கேட்ட போழ்து மெய்ம்மயிர் பொடித்துக் கண்ணீர் ஒழுக இருப்பன். அவ்வா றிருக்கும் நிலைமை பெற்ற உரையை நல்லுரை எனக் கொள்க.” அரசனும் மகிழ்ந்தான்.

மறுநாள், எம்பிரான் சொன்னவாறே, உருத்திரசன்மனைப் பலகையில் ஏற்றினர். யாவரும் உரை கூறிய போதெல்லாம் உருத்திரசன் மன்வாளா இருந்தனன். மருதனிளநாகனர் என்பவர் உரை கூறியபோது ஓரோரிடத்தில் மெய்ம் மயிர் பொடிக்க இருந்தனன். நக்கீரனார், அடுத்துத் தாம் எழுதிய உரையைப் படித்தார். ஒவ் வொரு சொல்லையும் உணர்ச்சி மிகக் கேட்டனன் உருத்திரசன்மன். ஆதலின், நக்கீரர் உரையே மெய்யுரை என்று போற்றப்பட்டது.

அதுகாறும் நக்கீரர் பல செய்யுள்களைப் பாடி ‘இயற்புலவர் என்ற பெருஞ் சிறப்பைப் பெற் றிருந்தார். இப்பொழுது உரை எழுதி உயர்வு அடைந்தார். கடவுளும் அவர் உரையில் ஈடுபட்டார். உரையாசிரியர் என்ற உயர்வும் வந்தது. நக்கீரரின் சிறப்பே சிறப்பு! கல்வியின் பெருமையே பெருமை!!

3.கொண்டானை அடக்கல்

மதுரையில் ஒரு புறம் வடமொழிப் புல வரும் வந்து சேர்ந்தனர். அவரிடத்தில் வட மொழியைப் பலர் கற்றனர். அவருள் ஒருவர் கொண்டான் என்னும் பெயருடையவர். இவர் – வேட்கோவர் குலத்துப் பிறந்தவர். இவருக்கு வடமொழியைக் கற்க வேண்டும் என்ற ஆவலுண்டாயிற்று. ஆதலின் அம்மொழியைக் கற் றார். படித்த அவருக்கு அம்மொழியில் அளவிறந்த அன்பு உண்டாகத் தொடங்கியது. எத்தகைய அன்பு? தம் தாய்மொழியின் பெருமை யையும் மறக்கும் அளவில் அவர் வடமொழியிடத்தில் அன்பு செலுத்தினார். தம் அன்பை வெளிப்படுத்த ஆசைகொண்டார்.

பறை ஒன்றைக் கழுத்தில் கட்டிக்கொண் டார். இரண்டு தடிக் குச்சிகளைக் கையில் எடுத்துக் கொண்டார். யார்? கொண்டான் என்ற குயப் புலவர். அடுத்து என்ன செய்தார் ? சாலை வழி வந்தார்; கைத்தடி கொண்டு பறையை அடித்தார். ‘டும், டும்’ என்ற ஒலி எங்கும் பரவிற்று. வழியே செல்வோர், கொண்டான் ஏன் பறை அடிக்கின்றார், கேட்போம் என எண்ணி நின்றனர். அக்கூட்டத்தைப் பார்த்து, அவர் ‘ஆரியம் நன்று; தமிழ் தீது’ என்று கத்தினார்.

“என்ன இது! கொண்டானுக்குப் புத்தி மாறிவிட்டதோ? அறிவு அழிந்து விட்டதோ? தமிழ், தாய்மொழி என்பதை மறந்தாரே! ஒழுங் கற்ற முறையில் பேசுகின்றாரே!” என்றெல்லாம் பலர் வருந்தினர். சங்கப் புலவர்பால் இதனை உரைப்போம் எனச் சிலர் விரைந்தோடினர்.

தமிழ்ச் சங்கத்தில், நக்கீரர் தலைவராக அமர்ந்திருக்கின்றார். புலவர் பலர் நூல்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவ்வமயத்தில் கொண்டானும் தமிழ்ச் சங்கம் இருக்கும் சாலையை அடைகின்றார். அவருடைய கொடுஞ் சொற்களைச் சொல்லுவோம் என்று முன்னோடி வந்தவர், சங்க மண்டபத்தினுள் புகுந்தனர். கொண்டான் கூறுவதை வாய் புதைத்துக் கை கட்டி நின்று கூறினர்.

புலவர் யாவரும் கேட்டனர். சினம் சிறிதும் கொண்டிலர். குணம் என்ற குன்றேறி நின்றவர் அப் பெருந்தகையினர். குடிப்பிறப்பின் பெருமையை வெகுளி ஒழிக்கும் என்றுணர்ந்த மாண்பினர் அவர். ஆதலின் அவர் அடங்கி நின்றனர். தலைவராக இருந்த புலவராகிய நக்கீரரின் திருமுகத்தை நோக்கினர்.

அவாவும், அச்சமும் அறவே அழிய நின்ற வர் அருந்தமிழ்க் கவிஞர்; ஆதலின் ஒன்றினை யும் உரைக்கவில்லை. இதற்குள் கொண்டான் சங்கத்தின் முன்னர் வந்து நின்றுகொண்டார். ஒலி மிகுதியாக உண்டாகும்படி பறையைக் கொட்டினார். “தமிழ் தீது! ஆரியம் நன்று” என்று முழக்கினார். இவ்வளவிலேயே, இதனை விடுத்தல் தக்கதன்று என்று புலவர் கருதித் தம் இருக்கையினின்றும் எழுந்தார். மற்றவர் யாவரும் எழுந்தனர். நக்கீரர் வெளிப்புறத்தை நோக்கி நடக்கலுற்றார். யாவரும் பின்வந்தனர்.

நக்கீரர் – வாயிற்படியில் நின்று, கொண்டானைக் கூவினார். “என்ன தொண்டு ஆற்றுகின்றீர்?” என்றார் புலவர் தலைவர். “யாமறிந்த மொழிகளில் ஆரிய மொழியாகிய வடமொழியே உயர்ந்தது எனக் கண்டோம். ஆதலின் அதனை யாவருக்கும் அறிவிக்கின்றோம்” எனத்தருக்கி உரைத்தார் பறைகொட்டும் புலவர். “நீவிர் பறை சாற்றுவது ஒன்று; இப்போது கூறுவது ஒன்று; வேறுபாடு ஏன்?” என்றார் தலைவர். “எவ்வாறு சொல்லும்!” என்றார் குயப்புலவர். “தமிழ் தீமை நிறைந்தது. ஆரியமே சிறந்தது” எனும் பொருள்படச் சொல்லிக்கொண்டு வருகின்றீர். அவ்வாறு சொல்லாமல் வட மொழியை மட்டும் புகழ்கின்றேம் என்கிறீரே?” என்றார் நக்கீரனார்.

கொண்டான் சிறிது தலையைத் தூக்கினார். கால்களை நன்கு ஊன்றிக்கொண்டார். மார்பினை அகற்றிக்கொண்டார். சிறிது சிரித்துக்கொண்டார். “நன்று, யாம் கூறுவோம். வடமொழியின் பெருமையை யாம் உணர்ந்தோம். அதனுடன் சமமாகவும் நிற்கும் பெருமை தமிழ்க்கில்லை என உறுதியாகக் கூறுவோம். ஆதலாலே, இவ்வாறு கூறுகின்றோம்” என்று வருவதை அறியாது கொடுஞ் சொற்களைக் கூறினார்.

நக்கீரர், கொண்டான்பால் அன்பு வைத் தார். தமிழ் மகன் என்பதை அவர் நன்கறிவார். ஆயினும் அவர் அறியாமைக்கு வருந்தினார். நன்மொழி கூறித் திருத்த முயன்றார். “ஐய! கோவே! வேட்கோவர் தலைவரே! வட மொழி என்பதன் பொருள் அறிவீரோ?” என்றார். “ஆம். நன்றாக அறிவேன், வடக்கிலிருந்து வந்த மொழி என்பது அதன் பொருள்” என்றார் அவர்.

நக்; “நன்று! நும் நாட்டு மொழி யாது?”

கொண்: “தமிழ்!”

நக்: “வடமொழியை முதலில் கற்றீரா? அல்லது தமிழை முதலில் அறிந்தீரா?”

கொண் : தமிழையே அறிந்தேன் ; அதனால் தமிழையே உயர்ந்தது என்று யான் எண்ண வேண்டுமா?”

நக்: “நன்று சொன்னீர்! நும்மைப் பெற்றமை யாலேயே நும் தாய்க்குப் பெருமை கொடு என்றுரைத்தால் நீவிர் ஏற்றுக்கொள்வீரா? மறுப்பீரா?”

கொண்: “இவற்றையெல்லாம் யாம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டோம். ஆரியம் நன்று; தமிழ் தீது” என்று சொல்லிப், பறை அடிக்கத் தொடங்கினார்.

‘இன்சொல் இனிப் பயன் தாராது’ என்று அறிந்தார் கீரர். கொண்டானைத் திருத்தாது விடவும் அவருக்கு மனமில்லை. ஆதலால் வன்சொல் கூறியேனும் திருத்த விரும்பினார். “ஆரியத்தில் அழுந்திய புலவரே! தாய்மொழியைக் குறைகூறும் ஒருவரே! கேளும். இதுவரை நீர் வாழச் சிலவற்றைக் கூறினோம். நீரோ ஏற்றுக்கொள்ளவில்லை. என் செய்வது! நும் வினைப்பயனை யார் அறிவார்!…” என்று கூறிக்கொண்டிருந்தார். அவர் சொல்லி முடிப்பதன் முன் “நும் வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. நீர் விரும்புவதைச் செய்யும்” என்றுரைத்து, கொண்டான் பறைகொட்டினான்.

சுடுசொல்லும் பயன் தந்திலது. ‘கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’ என்பது பழமொழி. ஆதலின், கொண்டானை உணரவைக்கவேண்டும் என்று நக்கீரர் எண்ணினார். “ஏ,கொண்டானே! இதுவரை பலவழியாலும் நல்லவற்றைச் சொன்னேன். வீணே நம் தமிழன்னையைக் குறை கூறினீர் ! வடமொழியை உயர்த்தினீர். அதுபற்றி எமக்குக் கவலை இல்லை. தமிழாகிய நம் தாய் மொழியைக் குற்றம் சொன்னீர். ஆதலால் எம் மொழி நும்மால் பாராட்டப்பட்டதோ அம் மொழியாலேயே நும்மைக் கொல்லுவோம்” என்றுரைத்து,

“முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி. அரணியல்
ஆனந்த வேட்கையான் வேட்கோக்குயக்கொண்டான்
ஆனந்தம் சேர்கசுவா கா”

[முரண் – மாறுபாடு ; பொதியில் – பொதியமலை; முதற்புத்தேள் – அகத்தியர் ; ஆனந்தம் சேர்க – இறக்க.]

என்ற செய்யுளைக் கூறினார்.

வீரத்துடன் விழித்துக் கொண்டிருந்த கொண்டான் கண்கள் தாமே மூடின ! பறை அடிக்க எழுந்த கைகள் அயர்ந்து வீழ்ந்தன; நிமிர்ந்த அவருடலைத் தாங்கிக் கொண்டிருந்த கால்கள் தள்ளாடின; பறை ஒருபுறம் ஆக, அடிக்குங் கோல்கள் மறுபுறம் ஆக, கால் துவள , உடல் வளைய , உயிர் அற்றுக் கீழே வீழ்ந்தார். “ஆரியம் நன்று; தமிழ் தீது” என்ற ஒலியும் அடங்கிற்று.

கூட்டமாகக் கூடி நின்ற பலரும் இதனைக் கண்டார்கள். “கொண்டானுயிரைத் தென்னவன் (யமன்) கொண்டான்; இனி ஒன்றும் சொல்லமாட்டான்” என்றனர் சிலர்; “தவறான வழிச்செல்வோர் இவ்வாறுதான் ஆவர்” என்றனர் சிலர். இங்கு, இவரிறந்ததை அவர் உறவின் முறையார்க்குக் கூறுவதற்காகச் சிலர் ஓடினர்.

கொண்டானின் அன்னையும் அப்பனும் மற்றவரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். “ஐயோ, இறந்தாயோ ! நம் தாய் மொழியைக் குறை கூறாதே என்றோமே! கேட்டாயில்லையே! நாங்களன்றோ இப்போது வருந்துகின்றோம்” என்று வாய் விட்டலறினர். புலவர் குழாத்தை (கூட்டத்தை) நோக்கி ஓடினர். நக்கீரருடைய காலில் விழுந்து, எவ்வாறேனும் தம்மவனை உயிர் பிழைத் தெழுமாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

நக்கீரர், “நன்று! வருந்தாதீர். எமக்கு அவரிடத்தில் எவ்வகை வருத்தமும் இல்லை. நன்றி யறியாது இருக்கின்றாரே எனத்தான் வருந்துகின்றோம். இனியேனும் திருத்தமுற்ற அறிவுடன் இருக்கச் செய்க. அவ்வளவே யாம் விரும்புவது” என்று கூறி,

“ஆரியம் நன்று தமிழ்தீ(து) என உரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் சீரிய
அந்தண் பொதியிலகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா”-

[காலக்கோட்படல் – எமனால் கொள்ளப்படல், இறத்தல்]

எனும் பாவினைப் பாடினார்.

கீழே கிடந்த தலை நிமிர்ந்தது. துவண்ட உடல் அசைந்தது. வளைந்த கால்கள் நிமிர்ந்தன. மூடின கண்கள் திறந்தன. ஒட்டிய இதழ்கள் அசைந்தன. விறைத்த கைகள் புரண்டன. வீழ்ந்து கிடந்தவர் எழுந்திருந்தார்; இருந்தவர் எழுந்து நின்றார்; பறையைக் கண் டார். தொலைவில் கிடந்த குருந்தடிகளைக் கையில் கொண்டு பறையை அடித்து, “ஆரிய …” என்று பழைய பல்லவியைப் பாடத் தொடங்கினார்.

இதுவரை உயிர்பிழைத் தெழும் அவரைக் கண்டுகொண்டிருந்தனர் அவர் உறவினர். மீண்டும் பழைய செயலையே செய்ய முற்படுதலை இப்போது அறிந்தனர். இச்செயலே முன்னர் அவர் உயிரைப் போக்கியது. அதனை அவர் அறியவில்லை. ஆதலின் அவர் உறவினர் விரைந்து அவரிருக்கும் இடத்திற்கு ஓடினர்; அழுத்தமாக அவர் வாயினை மூடினர்; ‘அச்சொற்களைச் சொல்லாதே!’ என்றனர்.

கொண்டான், ‘ஏன்?’ என்றார்; விழிக்கின்றார். நக்கீரருடன் தான் பேசிக்கொண்டிருந்தது அவர் நினைவுக்கு வந்தது. பின், என்ன நடந்தது என்பதையே அறியாதிருந்தார். உறவினர்களைக் காணவே, ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கின்றார்.

‘ஏன் என்றா கேட்கிறாய்? உன்னையே நீ எண்ணிப் பார். நின்றிருந்த நீ, ஏன் கீழே கிடந்தாய்? ஒன்றும் தெரியவில்லையா? உன் முன் நிற்கும் இத் தமிழ்க்கடவுளைக் காண்பாயாக. இவரே உனக்கு உயிர் கொடுத்தவர். இவர் திருவடிகளை முதலில் வணங்கு; பறையை அப்புறப்படுத்து ; குறுந்தடிகளை வேற்றிடத்தில் வீசு; வீண் சொற்களை இனியேனும் சொல்லாதே’ என்றனர் உறவோர்.

சங்க_இலக்கியக்_கதைகள்17கொண்டான் யாவற்றையும் அறிந்தார். தான் செய்தது தவறு என உணர்ந்தார். தம்மைக் கொன்றவர் மீண்டும் உயிர் தந்தார் என்பதை அறிந்த காலத்தில், அவருக்கு நக்கீரர் பால் அன்பு வளரலாயிற்று; கண்கள் நீரைப் பெருக்கின; உடலினை மண்மேல் கிடத்தினார்; தலைமேல் கைகளைக் கூப்பினார்; அன்புக் கிருப்பிடமே! அடியேன் செய்த பிழையை மன்னிக்க வேண்டும் என்று கூறி, வாய் பொத்தி அடக்கமாக எழுந்து நின்றார்.

பறையினைத் தொட்டுப் பார்த்தார். கையி லிருந்த அடிக்கும் தடிகளால் பறையை ஓங்கி அடித்தார். கேட்போர் காது செவிடுபடும்படி, “ஆரியம் தீது! தமிழ் நன்று!” என்று கூறினார். நக்கீரர் உடனே, ‘வேண்டா’ எனக் கை அசைத் தார். “கொண்டானே! எம் அன்பைக் கொண் டோனே! வேண்டா. அவ்வாறும் கூறாதே. அம் மொழியும் வாழட்டும். நம்மொழியும் வாழ்க. பிறரைக் குறை கூறுவது நமக்கு அடாத செய்லாகும். தாய்மொழியில் நின் அன்பு குறைவின்றி இருந்தாற் போதுமானது” என்று சொல்லிச் சங்கத்தை அடைந்தார்.

மாணவர்களே! புலவரின் வன்மையைக் கண்டீர்களா! கொல்லும் வன்மையும் பிழைக்க வைக்கும் வன்மையும் அறிவுடையோர்க் குண் டென்பது புலப்படுகின்றதன்றோ?

4.குற்றம் குற்றமே!

நக்கீரர்காலத் திருந்த பாண்டிய மன்னன் சண்பகமாறன் எனப்படுவான். சொக்கநாதக் கடவுளுக்குச் சண்பகமாலை அணிந்து வந்தமையால் . இப்பெயர் பெற்றான். இவன் வேனில் காலத்தில் மலர்ச்சோலை சென்று உலாவுவது வழக்கம். அக் காலத்துப் பெருங்கோப் பெண்டும் (பட்டமகிஷி) உடனிருப்பள். ஒருநாள் நறுமணம் வீசிற்று. நறு மணம் வந்தது எவ்வாறு என மன்னன் எண்ணி னான். சுற்றிலும் அத்தகைய மணத்திற்குக் காரண மாக மலர் ஒன்றும் இல்லை. அவன் பட்டத்தரசி மட்டும் தலைமயிரை ஆற்றிக்கொண்டிருந்தாள். இந்தக் கூந்தலிலிருந்துதான் மணம் வந்ததோ என்று ஐயுற்றான். ஆனால், அவள் மலர் ஒன்றும் சூடிக்கொண்டிருக்கவில்லை. ஆகவே, கூந்தலுக்கே இயற்கையாக மணம் இருக்கவேண்டும் என ஊகித்தான். அதன் உண்மையை அறிய ஆவல் கொண்டான்.

மறுநாள், ‘தன் மனத்தில் உள்ளதைக் கூறு வோர், இப் பொற்கிழியைக் கொண்டு போகலாம், என்று சொல்லி, ஒரு பொற்கிழியைத் தூக்குவித் தான். ஆயிரம் பொன் அடங்கிய முடிச்சு இங்கே பொற்கிழி எனப்பட்டது. பல புலவரும் பல செய்யுள்களை எழுதி மன்னனுக்குக் காட்டினர். மன்னன் கருத்தினுக்கு யாதும் ஒத்துவரவில்லை.

சொக்கநாதரை வணங்கித் திருக்கோயில் தொண்டு செய்து வாழ்ந்தவன் தருமி என்பவன். அவன் மணம் ஆகாதவன். மணம் செய்து கொள்ளவேண்டும் எனும் விழைவு உள்ளவன். ஆதலின், அங்கயற்கண்ணி பங்கரை அடைந்தான்.

“எங்கும் நிறைந்த எம் தலைவரே! உமக்குப் பாண்டிய னுள்ளம் தெரியாதா? அவன் கருத் தறிந்து ஒரு செய்யுளை எழுதித்தரல் வேண்டுகின்றேன். அவ்வாறு செய்யின், நான், கிழியிலுள்ள ஆயிரம் பொன்னையும் அடைந்து மணம் செய்து கொள்ள முடியும்” என்று கூறி வணங்கினான்.

இல்லற வழி நிற்கத் தருமி விழைவதை இறைவனும் விரும்பினான். ஆதலின், “கொங்கு தேர் வாழ்க்கை’ என்ற தொடக்கமுடைய செய்யுளை எழுதிக் கொடுத்தனன். கொண்ட தருமி, அரசனை அடைந்து காட்டினன். கருத்தொத்து இருத்தலைக் கண்ட மாறன் மகிழ்ந்து, ‘கிழியைக் கொண்டு போக’ என்று உத்தரவு இட்டான்.

பூரித்த தொண்டன் கிழியை எடுக்க நெருங்கு கின்றான். ‘நில் நில், கிழியைத் தொடாதே! நின் செய்யுள் குற்றமுடையது. சொற் குற்றம் ஒன்று மில்லை; பொருட்குற்றம் இருக்கின்றது’ என்று சொல்லித் தடுத்தார் கீரர்.

தருமி பொருமினான். ‘கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே’ என வருந்தினான். ‘ஆண்டவன்பாற் சென்று கூறுவேன்’ என்று கோயிலை அடைந்தான். “சுந்தர! ஆலமுண்ட கந்தர! வேத மந்திர ! என்ன ஒழுங்கு? கீரன் நும் கவியில் குற்றம் காட்டினான். பொருட்குற்றம் உண்டு என்று கிழியைத் தர மறுத்தான். நும் பெருமைதான் என்ன? இதுவோ எனக்கு அருள் புரியும் வழி!” என்று சொல்லி வருந்தினன்.

பிறர் உடன் வர, சொக்கநாதனே, புலவர் போல் தோற்றம் கொண்டு சங்கத்தைச் சார்ந்தான். புலவர்கள் முன்னர் நின்றான். ‘என் கவிக்குக் குற்றம் கூறினார் யார்?’ என்று வினாவினன். ‘யான் கூறினேன்’ என்றார் கீரர்.

புலவர் :- என்ன குற்றம்?

கீரர் :- கூந்தலுக்குச் செயற்கை மணம் உண்டு; இயற்கை மணம் இல்லை. நும் செய்யுள் இயற்கை மணம் உண்டு என்கின்றது. ஆதலின் பொருளால் குற்றப்பட்டது.

புலவர்: உயர்ந்த பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்பதை அறியீரோ?

கீரர் :- இல்லை. இயற்கை மணம் கூந்தலுக்கு இல்லை.

புலவர் :- தெய்வப் பெண்கள் கூந்தலுக்காவது இயற்கை மணம் உண்டோ ?

கீரர் :- இல்லை.

புலவர் :- நீர் வழிபடும் பரமனருகில் எழுந்தருளி இருக்கும் ஞானப் பூங்கோதை அம்மையின் கூந்தலுக்கும் இயற்கை மணம் இன்றோ? –

கீரர் :- அதுவும் அவ்வாறே.

வந்த புலவராகிய ஆண்டவன் தன் நுதல் விழியினைச் சிறிது திறந்து காட்டினன். “நின் உடம்பெல்லாம் கண்களாயினும் நின் செய்யுள் குற்றமுடையதே. குற்றங் குற்றமே!” என்றார் கீரர். சிவன் விழி கான்ற அனல் அவரைத் துன் புறுத்த அவர் அருகிருந்த பொற்றாமரை வாவியில் விழுந்து வருந்தினார். இறைவன் மறைந்தனன்.

சங்கப்புலவர் கீரரின் துன்பத்தைக் காண வருந்தினர். பெருமானை வணங்கி வேண்டினர். கற்றாருக்கு ஆவன புரியும் இறைவன் மனம் அன்பு நிறைந்தது. ஆதலின், தாமே முற்பட்டுக் கீரனைக் கரையேற்றினார். கீரர் உடம்பெல்லாம் வெந்து வெப்புப்புண் உண்டாய் விட்டது. ஆண்டவன், ” நக்கீர! கைலைக்கு வா, நின்னுடற் புண்ணைப் போக்குவோம்” என்று கூறி மறைந்தார்.

5.முருகாற்றுப் படை மொழிதல்

நுதற்கடவுள் நெற்றிக்கண் கொடிய அனலை வெளியிட்டது என்று முன் சொன்னோமல்லவா? அச்சூடு தாங்காமல் நக்கீரர் பொற்றாமரை வாவியில் புகுந்தார். சிவபெருமான் கரையேற்றக் கரை சேர்ந்தார். ஆனால் வெப்பு நோய் புலவரை வாட்டத் தொடங்கியது. இந்நோயை நீக்குதற் காகவே ‘கைலை வா’ எனக் கடவுள் கட்டளை இட்டார்.

கைலை செல்ல வேண்டும் எனின், மதுரையை விட்டுப் பிரிதல் வேண்டும். தமிழ்ச் சங்கத்தை விட்டு நீங்க வேண்டும். தமிழ்ப் புலவர் களினின்றும் பிரிதல் வேண்டும். என்றும் வணங்கி வந்த சொக்கநாதர் திருவடிகளைப் பின்னர்க் காணல் இயலாது. காணும் கடவுளாய்த் தமிழ்க்கு உறையுளாய் எழுந்தருளியிருந்த பாண்டி மன்னன் தொடர்பும் இல்லாது நீங்கும். இவ்வாறெல்லாம் பல எண்ணிப் புலவர் வருந்தி னார். ஆண்டவன் கட்டளையை எவர் மீறுவர்?

தம் பிரிவை யாவரிடமும் சொல்லிக் கொண்டார் புலவர். எல்லோரும் மனம் கசிந்தனர். மன்னன் அழுதுகொண்டு நின்றான். மக்களைப் பற்றிக் கூறுவானேன்? நக்கீரர் கண்கள், இரண்டு அருவிகளாக நீரைச் சொரிந்தன.

பாண்டிநாட் டெல்லையை நீங்கினார். கைலை யைக் காணும் எண்ணத்துடன் வடக்கு நோக்கி நடந்தார். புலவருள்ளம் உலகத் துயரை எண் ணவில்லை. என்று இனிக் கைலை காண்போம்? என்று கைலை நாதன் அருள் கிடைக்கும் என்றே எண்ணிக்கொண்டு சென்றார்.

ஒரு மலைச்சாரல் அவர் கண் முன்னர்த் தோன்றியது. அங்கு அடைந்த புலவர், ஒரு பெரிய ஆலமரத்தினைக் கண்டார். அதன் நிழலில் ஒரு பெருந்தாடகம் இருந்தது. நீரினை யும் நிழலினையும் கண்ட புலவர்க்கு ஓர் எண்ணம் உண்டாயிற்று. கடவுளை வழிபடுதற்குத் தக்க இடம் என அதனை எண்ணி, இறைவனை எண்ணும் உள்ளத்தோடு அமர்ந்தார்.

அங்கிருந்த ஆலமரத்திலும் அதன் கீழிருந்த குளத்திலும் ஒரு புதுமை உண்டு. ஆலமரத்திலிருந்து விழும் இலை மண்மேல் வீழ்ந்தால் பறவையாகிப் பறந்து செல்லும். தடத்து நீரில் விழுந்தால் மீனாகி நீந்திச் செல்லும். கீரர், இறை எண்ணத்துடன் இருந்தபோது ஓர் இலை நீரிலும் நிலத்திலும் விழுந்தது. நீரில் விழுந்த பகுதி மீனாயிற்று. நிலத்தில் விழுந்த பகுதி பறவை ஆயிற்று. இரண்டும் அவர் உள்ளத்தை இழுக்கத் தொடங்கின. இதனைக் கண்டு வியந்தார் கீரர். தம் கடவுள் வழிபாட்டைச் சிறிது மறந்தார்.

அச்சம் விளைக்கும் பூதம் ஒன்று தோன்றியது. புலவரைத் தூக்கிச் சென்றது. ஒரு மலைக் குகையில் வைத்து மறைந்தது. அவ்விடத்தில் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்பதின்மர் இருந்தனர். அவர்களும் நக்கீரரைப் போலவே கடவுள் வழிபாட்டில் தவறியவர்கள். அவ்வாறு தவறியவர் ‘ஆயிரவரைக் கொன்று உண்ணும் நோன்பினை அப்பூதம் கைக்கொண்டிருந்தது. நக்கீரருடன் அத்தொகை நிறைந்தது. ஆதலின் எல்லோரையும் கொன்று உண்ணும் எண்ணத்துடன் பூதம் வெளியிற் சென்றது.

நக்கீரர் வந்தமையாலே தாங்களும் சாவ நேர்ந்தது, என்று சொல்லி மற்றவர் வருந்தினர். நக்கீரர், தனக்கென வாழாது பிறர் நலத்தையே பெரிதும் மதிக்கும் பெரியார். ஆதலால், மற்றவர்களை வாழ வைக்க விரும்பினார். தமிழ் நாட்டுத் தனிப் பெருங் கடவுளாகிய முருகனை எண்ணினார். ஐந்து பூதங்களிடை வருந்தும் உயிரைக்காக்கும் வன்மையுடையவன் அவன்; ஆதலால், இச்சிறிய பூதத்தினிடமிருந்து மற்றவரையும் காத்தல் எளிது என்ற முடிவுக்கு வந்தார். திரு முறுகாற்றுப் படை என்ற அரிய நூலை மொழிந்தார்.

முருகன் தோன்றினான். செவ்வேளின் வேல் மலையைப் பிளந்தது. பூதம் ஒழிந்தது. யாவரும் உய்ந்தனர். வெப்பு நோயால் புலவருடல் வருந்துகின்றதே எனத் தாயொத்த முருகன் வருந்தினான். கைலைக்கு வருக’ என்ற சிவபெருமான் கட்டளையை அறிந்தான். “தென் கைலை வடகைலை என வேறு பிரித்துப் பெருமான் கூறவில்லை. ஆதலின், தென்கைலை ஆகிய திருக்காளத்திக்குச் செல்லுக,” என்று முருகன் அன்புடன் கூறினான்.

அவன் விருப்பப்படியே கீரர் காளத்தி சார்ந்தார். இறைவனை வழிபட்டார். வெப்பு நோயாகிய உடல் நோய் ஒழிந்தது. உயிர் நோயும் அகன்றது. இறை நலம் உற்றார். இன்ப வாழ்வில் திளைத்தார். என்றும் மாறாப் புகழைப் பெற்றார்.

6.முடிவு

கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று இவர் போற்றப்படுகின்றார். இவரின் சிறப்பியல்பு களைக் காணுங்கள். தந்தைக்குத் தக்க மகனாய் விளங்கினார். தந்தை தன் கடமைகளாகிய கல்வி கற்பித்தல் முதலியவற்றைச் செய்தும், எத்துணை மக்கள் சீரிய ஒழுக்கம் இல்லாது போகின்றனர். – தந்தை வழி நின்று நற்பெயர் பெற்ற கீரனின் சிறப்பைச் சிந்தித்து நீங்களும் அவரைப்போல் உயர்ந்த நோக்கத்துடன் வாழுதல் வேண்டும்.

நீங்காத உழைப்பை மிகுதியாகக் கொண்டவர் கீரர். அதனாலன்றோ உருத்திரசன்மன் இவருரையே உயர்ந்தது எனக் கொண்டான். அவர் புலவர் பலரிடையிலும் சிறந்து விளங்கினாரென்றால், நீங்களும் எவ்வாறு சிறக்கவேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள்!

தம் மொழியாகிய தாய் மொழியைக் குறை கூறுவதை இவர் ஏற்கவில்லை. நயமாக இவர் சொல்லும்பொழுது கடுஞ் சொல்லையே கொண்டான் கூறுகின்றார். சொல்லால் பயனில்லை என்று அறிந்த பின்னரே அவர் இறக்கப் பாடுகின்றார். கடைசி வரையிலும் பொறுமையுடனும் அடக்கத்துடனும் இருக்கும் புலவர் பெருமையைக் காணுங்கள்!

‘நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்ற இவர் மனத்துணிவு, நமக்கெல்லாம் அச்சத்தை உண்டாக்குகின்றது அன்றோ? கடவுள் என்று அறிந்தும், தாம் முன்னர்க் கூறியதை மறுத்து வேறு ஒன்றும் சொல்லவில்லை. ‘குற்றம் குற்றமே’ என்று மொழிகின்றார். இவ்வாறு துணிபு நிறைந்த மனம் நமக்கு ஒருவாறு வேண்டியதே.

தமக்கென ஒன்றையும் பெரியோர் கருதார். பிறருக்கே வாழ்நாளை ஆக்குவார் அறிஞர். ஆதலால், மற்றவர் துன்புறுகின்றாரே என்று முருகனை எண்ணலானார்; ஆற்றுப்படை மொழிந்தார். ஆண்டவன் அடிகளை அடைந்தார். இவர் நம்மால் எக்காலத்தும் மறக்கத்தக்கவரல்லர்.

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *