கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 11,479 
 
 

இமயமலையடிவாரத்தில் ஒரு குரு தியானம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஒரு மனிதர் துறவியிடம் வந்தார். துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார். உடனே வந்தவர், அவரைப் பணிவுடன் வணங்கிப் பேச ஆரம்பித்தார்.

“”ஐயா! தாங்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். நான் ஒரு புகழ் பெற்ற மடாலயத்தின் தலைவர்.”

Thevathothar

குரு மவுனமாக இதற்குத் தலையசைத்தார்.

“”என் மனம் தற்போது மிகவும் வியாகூலத்தில் இருக்கிறது. அதனால், தங்களைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் புறப்பட்டு வந்தேன்.”

“”சரி! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் குரு.

“”ஐயா! எங்கள் மடம் மிகப் புராதனமானது. பழமையும், கீர்த்தியும் மிகுந்தது. உலகம் முழுவதிலும் இருந்து ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் இதைத் தேடி வருவர். கோவில் முழுதும், எப்போதும் இறை வழிபாட்டு ஒலியால் நிரம்பியிருக்கும். இப்போதோ, ஆன்ம ஞானம் தேடுவோர் குறைந்து விட்டனரோ அல்லது வேறு காரணமோ தெரியாது.

“”எவரும் எங்கள் மடத்தை நாடி வருவதில்லை. அங்கு இருப்பதோ, ஒரு சில பிக்ஷுக்கள் தான். அவர்களும் கூட, சிரத்தையின்றி ஏனோ தானோவென்று தம் கடமைகளை ஆற்றி வருகின்றனர். இது எதனால் ஏற்பட்டது? இதற்கு என்ன விதமாய்ப் பரிகாரம் காணலாம்? இதற்கு விடை தேடித்தான் தங்களைக் காண வந்துள்ளேன்.”

மடாலய தலைவரின் குரலில் தென்பட்ட வருத்தத்தையும், ஆழ்ந்த வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார்.

“”அறியாமை என்ற வினை தான் காரணம்.”

“”அறியாமையா?” வியப்புடன் கேட்டார் மடாலயத் தலைவர்.

“”ஆம்! உங்கள் கூட்டத்தில், உங்கள் நடுவே இறைத்தூதர் ஒருவர் உறைகிறார். அவரை நீங்கள் அறியவில்லை. அதை அறிந்து கொண்டால் போதும், இந்தக் குறைகள் எல்லாம் விலகிவிடும்.”

இப்படிச் சொல்லிவிட்டு, கண்மூடி மவுனத்தில் ஆழ்ந்துவிட்டார் ஜென் குரு.
மடாலயத் தலைவர் குழப்பத்துடன் ஊர் திரும்பினார். அவர் மனம் முழுவதுமே பரபரப்பு நிரம்பி இருந்தது. நம்மிடையே ஒரு தேவ தூதர் இருக்கிறாரா? நாம் இதை அறியவில்லையே! யார் அவர்? அவர் யாராயிருக்கும்?

சிந்தனை அலைகளுடனும், மனம் முழுவதும் கேள்விகளுடனும் திரும்பியிருந்த அவர், எல்லாரையும் அழைத்துக் குருவின் செய்தியை அவர்களிடம் விளக்கிக் கூறினார். இதைக் கேட்ட எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவநம்பிக்கையுடனும், அதேசமயம், பயம் கலந்த சந்தேகத்துடனும், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இவராயிருக்குமோ? அவராயிருக்குமோ? யார் அந்தத் தேவதூதர்? இப்படிப்பட்ட சந்தேகங்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்பதைத் தம்மால் கண்டுபிடிக்க முடியாது. அது இங்குள்ளவர்களில் யாராகவும் இருக்கலாம் என்று தங்களுக்குள் நினைத்துக் கொண்டனர். அதனால், ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் மற்றவரை தேவதூரதாக எண்ணிப் பணிவுடனும், மதிப்புடனும் நடத்தினர்.

விளைவு? மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள், இங்குள்ள சூழ்நிலையைப்பற்றிப் பலரிடமும் மகிழ்வுடன் கூற, மேலும் பலர் ஆர்வமுடன் இந்த மடத்தைத் தேடிவர, வந்தவர்கள் பல இடங்களிலும் இதுபற்றி எடுத்துரைக்க, இதனால், எண்ணற்றவர் இறைப்பணி புரிய மீண்டும் இந்த மடத்தைத் தேடிவர, வெகுவிரைவில் அங்கே ஆன்மிகமும், புகழும் போட்டியிட்டுக் கிளைவிடலாயிற்று.

மடாலயத் தலைவர், தேவதூதர் வேறெங்கும் இல்லை, நம்முள்ளேயே தான் ஒளிந்திருக்கிறார் என்பதைக் கண்டு கொண்டார். கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக்கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும் என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசித்தாலே போதுமானது.

– ஜூலை 30,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *