(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அருளுடைமை
எல்லா உயிரிடத்தும் இரக்கம் கொள்ளுதல்
வந்தி என்பவள் தரும் பிட்டை வாங்கி உண்டு விட்டு அவளுக்காகக் கரை அடைக்கச் சென்றவன் சரியாக மண் வெட்டிப்போடவில்லை. அப்போது பாண்டியன் அவனைக் கோபித்துத் தன் கையில் இருந்த பிரம்பால் ஓர் அடி அடித்தார். அடித்த அடி ஆள் முதுகின் மேல் பட்டவுடன் அரசன் முதுகின் மேலும் மற்ற எல்லாவுயிர்கள் மீதும் பட்டது. அடிபட்டவுடன் மதுரை மன்னன் இந்த ஆள் நம்மிலும் வலியன், இவனை எளியன் என்று அடித்துவிட்டோமே என வருந்தித் தான் செய்த தவறை மன்னிக்க அந்த ஆளிடம் வேண்டினான். அந்த ஆள் திடீரென மறைந்துவிடவே ஆளாக வந்தவர் மதுரைக் கடவுளே என்று எண்ணி நில மிசை விழுந்து வணங்கினான். பின் சுவாமி! “இனி நான் எளியவர்களைத் தண்டிக்கும்போது, என்னைக் காட்டிலும் வலிமையுடையவர் என் முதுகில் இப் போது அடித்த அடிக்கு அஞ்சிநிற்கும் நிலையை நினைத்து நடப்பேன்” என்று பலதரம் வணங்கி எழுந்து அருள் நிறைந்த மனமுடையவன் ஆகி தன் அரண்மனையை அடைந்தான். வள்ளுவரும் “எளிய வர் மீது கோபம் வரும்போது வலியவர் முன் தான் அஞ்சிநிற்கும் நிலையை எண்ணவேண்டும்” என்று கூறியுள்ளார்.
வலியார்முன் தன்னை நினைக்க; தான் தன்னின்
மெலியார்மேற் செல்லும் இடத்து.
தான் = அருள் இல்லாத ஒருவன்
தன்னின் = தன்னைக் காட்டிலும்
மெலியார்மேல் = எளியவர் மீது
செல்லும் இடத்து = (அவரைத் துன்பம் செய்யப்) போகும் போது
வலியார் முன் = தன்னைக் காட்டிலும் வலிமையுள்ளவர் எதிரில்
தன்னை = அஞ்சி நிற்கும் தன் நிலையை
நினைக்க = எண்ணல் வேண்டும்.
கருத்து: ஒருவன் எக்காரணத்தாலும் பிறரை வருத்துதல் கூடாது.
கேள்வி: மெலியாரைத் துன் புறுத்தப்போகும் ஒரு வன் எதை நினைத்தல் வேண்டும்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.