கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 784 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வண்டிக்காரப் பொன்னன் மட்டும் வாசலில் உட்கார்ந் திருந்தான். வெளியே நல்ல வெயில் தீய்ந்து கொண்டிருந்தது. ஒரு மணிச் சங்கு ஊதிய சற்று நேரத்திற்கெல்லாம் முதலாளி செந்தில்நாயகம் சாப்பிடப் போய்விட்டார். சிங்காரத்துக்குப் பசி கிள்ளியது. என்றாலும் என்ன செய்ய முடியும்? சில்லறை வேலைகள் மிஞ்சியிருந்தன. அன்றைக்குப் பெரிய இடங்களி லிருந்து நான்கைந்து ‘ஆர்டர்’கள் வந்திருந்தன. சுறுசுறுப்பாகச் சோடா கலர்ப் புட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் சிங்காரம். வேலை முடிந்து விட்டால் சாப்பிடக் கிளம்பிவிடலாம்.

ஆனந்தமாக ஆரஞ்சுக் கலரைக் குடித்துவிட்டு அப்பொழுதுதான் ஏப்பம் விட்டான் ஆறுமுகம். கள்ளிப் பெட்டியில் தாளம் போட்ட வண்ணம் வேலையைச் செய்யாமல் உட்கார்ந்திருந்தான் அவன். ஆறுமுகம் துணிச்சல்காரன். சிங்காரம் அப்படியல்ல: முதலாளி ஒன்று ஏவிவிட்டால் அதை உடனடியாகச் செய்து முடிப்பதுதான் சிங்காரத்தின் வேலை. இல்லையென்றால் செந்தில் நாயகத்திடம் நல்ல பெயர் வாங்கியிருக்க முடியுமா?

ஆறுமுகம்… அப்புறம் தாளம் போடலாம்! வேலையை எப்படியாவது முடிக்க வேண்டாமா…?” என்று சாந்தமாகக் குரல் கொடுத்தான் சிங்காரம்.

ஆறுமுகம் இத்தனை நேரமாக எதிர்பார்த்தது இதனைத்தான்! சிங்காரத்தின் வாயிலிருந்து ஒரு சொல் உதிராதா என்றுதான் காத்திருந்தது.

“டேய், சிங்காரம், உன் வேலையைக் கவனி; எனக்குக் கட்டளையிட நீ யார்? இந்த ஆறுமுகத்துக்கிட்டே வாலாட்டற வேலையை இன்னியோட நிறுத்திப்புடு…!”

“நீயா இப்படிப் பேசறே. ஆறுமுகம்? நான் என்ன சொல்லிட்டேன்?”

“என் விசயத்திலே தலையிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? இருந்தும் அவருகிட்டே என்னைப்பத்தி வேட்டு வைச்சது எனக்குத் தெரியாமலா போகும்!’

“வீண் பேச்செல்லாம் எதுக்கு? உண்மையைச் சொல்ல நான் எதுக்குத் தயங்கணும்?” என்ற வண்ணம் வேலையில் ஈடுபட்டான் சிங்காரம்.

“டேய், அரிச்சந்திரன் நீ. இந்தச் சோடாக் கம்பெனி வேலையை விட்டால் கதியில்லாத பயலாடா நான்…? உன்னைப் போல் வாயில்லாத பயலல்லடா நான்!”

“சரிதான். வாயை மூடுடா; உன் புராணம் யாருக்கு வேணும்?”

ஆறுமுகத்தின் நெஞ்சு எழுந்தது. ஆத்திரத்தால் முகம் சிவந்தது.சோடா பாட்டிலைக் கையிலெடுத்தான். சிங்காரத்திடம் பாய்ந்து வந்தான். சிங்காரத்தின் நெற்றியைத் தாக்கியது சோடா பாட்டில்!

வஞ்சம் தீர்த்துவிட்ட பெருமிதம் ஆறுமுகத்தின் நெஞ்சில் கொஞ்சியது. அப்பால் நகர்ந்தான். அவசரத்தோடு பாட்டில்களைப் பெட்டியில் அடுக்கினான்.

சிங்காரம் ஒரு கணம் கலங்கினான். என்றாலும். தவிப்பையடக்கிக் கொண்டு எப்படியோ வேலையை முடித்துவிட்டு எழுந்தான். பொன்னனிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் சிங்காரம்.

***

நெற்றியைத் தடவிய வண்ணம் சிங்காரம் நடந்தான். ஆறுமுகம் இத்தனை மோசமாக நடந்து கொள்வான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. செந்தில்நாயகம் சோடா பாக்டரியை ஆரம்பித்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆரம்பித்த நாளிலிருந்து சிங்காரம் இருந்து வருகிறான். பத்து ரூபாய்ச் சம்பளம் வாங்கும் ஒன்பது வயதுச் சிறுவனாக வேலையில் சேர்ந்தவன் சிங்காரம். இன்றுவரை அந்தக் கட்டடத்தில் எல்லா வேலைகளையும் அறிந்தவனாக உலவி வருகிறான்.

சிங்காரம் பொறுப்போடு வேலையைச் செய்வான். காலத்தில் வந்து கடமைகளைக் குறைவின்றிச் செய்யும் அவனை முதலாளிக்கு மிகவும் பிடித்திருந்தது. திறமை அறிந்து செந்தில்நாயகம் நல்ல சம்பளமும் கொடுத்து வந்தார். ஆறுமுகம் அங்கே வந்து ஓராண்டுகூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே சிங்காரத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டான். சிங்காரத்தைவிட இரண்டு வயது மூத்தவன் அவன். ஆனாலும் சிங்காரத்தின் வேலையில் பாதிகூட அவனுக்குத் தெரியாது.

செந்தில்நாயகத்திடம் சிங்காரத்திற்கு இருந்த செல்வாக்கைப் பற்றி ஆறுமுகத்திற்குத் தெரியும். பல மாதங்கள் பழகியும் தன்னிடம் முதலாளி அன்பு காட்டவில்லையே என்ற குறை அவனுக்கு. சிங்காரத்திடம் இயல்பாகவே பொறாமை ஏற்பட்டது. அது நாள்போக்கில் வளர்ந்தது. சம்பளம் அவனுக்குப் போதவில்லை. எனவே அவனுக்கு வேறு வழிகளும் தென்பட்டன. எத்தனை நாளைக்கு அது முடியும்?

ஒரு கடைக்காரர் கொடுத்த பணத்தை ‘அபேஸ்’ பண்ணிய வகையில் ஆள் அகப்பட்டுக் கொண்டு விட்டான். அவர் வேறொருவரிடம் ஒரு வருடத்திற்குக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியூர் போயிருந்தார். போகும்போது சோடா கலர் பாக்கி ரூபாயை ஆறுமுகத்திடம் கொடுத்து முதலாளியிடம் சேர்த்துவிடச் சொன்னார். ஆறுமுகம் முதலாளி யிடம் சொன்ன செய்தி வேறு; பணம் திரும்பி வர ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று கதையளந்தான். செந்தில்நாயகம் நம்பினார்.

ஒரு நாள் அந்தக் கடைக்குப் போயிருந்தான் சிங்காரம் கடைக்காரர் பணம் கொடுத்துவிட்டுப் போன செய்தி அவனுக்கு எப்படியோ எட்டியது. செந்தில்நாயகம் கேட்டார். அவருக்குச் சூடு பிடித்தது. ஆறுமுகம் விழித்தான். அது முதல் சிங்காரத்தின்மீது விஷப் பார்வையை வீசத் தொடங்கினான் ஆறுமுகம். இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்பது அவன் திட்டம். அதை இப்பொழுது நிறைவேற்றி விட்டான். சோடா புட்டியால் அடித்ததன் மூலம்! அப்படித்தான் அவன் நினைத்தான்!

***

மணி நான்காகியிருந்தது. ஓய்வாகச் சற்று நேரம் உட்கார்ந்திருந்தான் சிங்காரம். நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான்; அது புடைத்துப் போயிருந்தது. சாப்பிடும்போதுகூட அம்மா அதைப் பற்றிக் கேட்டாள். எதையோ சொல்லி மழுப்பினான் அவன்.

சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தான் சிங்காரம். அவன் இதயத்தில் எண்ணங்கள் நிழலாடின. முதன் முதலாக ஆறுமுகத்தை அவன் பார்த்த கோலம் நெஞ்சில் நின்றது.

டவுன் ஹாலுக்கு வெளிப்புறம்! காந்தி ‘பார்க்’கைப் பார்த்த வண்ணம் பரட்டைத் தலையோடு அவன் நின்றிருந்தான். ஒட்டி உலர்ந்த கன்னங்கள்; கண்கள் ஒளி இழந்திருந்தன. கவலை கவிந்திருந்தது அந்த முகத்தில் வழியில் வந்த சிங்காரத்திடம் வலிய வந்து பேச்சுக் கொடுத்தான் அவன் ஆறுமுகம்! ‘பசிக்கிறது’ என்றான்; ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

சிங்காரம் யோசித்தான். ஊருக்குப் புதியவன் ஆறுமுகம் மனம் இரங்கியது ! சோடாக் கம்பெனிக்குப் புதிதாக ஒரு பையன் தேவை என்று செந்தில்நாயகம் முதல் நாள்கூடச் சொல்லிக் கொண்டிருந்தார். சிங்காரத்தின் உள்ளம் மகிழ்ந்தது.

“சோடாக் கம்பெனியில் வேலை செய்கிறாயா?”

“எதுவாயிருந்தாலும் சரி!”

“ஆகட்டும்…” என்றான் சிங்காரம்.

சிங்காரத்தின் சிபாரிசு வெற்றி அளித்தது. ஆறுமுகத்திற்கு நிறையச் சொன்னார் செந்தில்நாயகம். புதியவன் சுறுசுறுப்பாகவே வேலையைச் செய்து வந்தான். சிங்காரத்திடம் அன்பு வைத்திருந்தான். ஏழெட்டு மாதம் நல்லவனாகத்தான் இருந்தான். அப்புறம் எல்லாம் பழங்கதைகளாகி விட்டன. சோடாக் கம்பெனிக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு ‘கோஷ்டி’யிருந்தது. எப்படி ஸ்டைலாக, சுருள் சுருளாகப் புகை விட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள அங்கே போனால் போதும்! ஆறுமுகம் அங்கேதான் போனான். காசு சேர்க்கப் புதிய வழிகளெல்லாம் அப்புறந்தான் அவனுக்குத் தெரிந்தன. சிங்காரம் எல்லாவற்றையும் பார்த்தான். அசட்டுத்தனமாகச் செய்கிறான் என்று ஆரம்பத்தில் விட்டு வைத்திருந்தான். பத்தும் ஐந்துமாக பணத்தைச் சுருட்டும்போது அவனால் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? விஷயத்தைத் துணிவோடு முதலாளியிடம் சொல்லிவிட்டான். அதனால் தான் அவனுக்குப் ‘பரிசு’ கொடுத்தான் ஆறுமுகம். ஆறுமுகம் சைக்கிளில் வெளியே போயிருந்தான்.

***

சிங்காரத்தைக் கூப்பிட்டார் செந்தில்நாயகம். சோலையப்பன் தெருவில் ஒரு கல்யாணம். இரண்டு மூன்று ‘குரோஸ்’ அங்கே அனுப்ப வேண்டும். அது பற்றித்தான் சிங்காரத்திடம் கேட்டார் முதலாளி,

“பொன்னனைக் கூப்பிட்டு வண்டியில் ஏற்றச் சொல். சிங்காரம்…!” என்றார் அவர். சிங்காரம் வேலையில் விரைந்து முனைந்தான். பொன்னன் வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான்.

சன்னல் வழியே சாலையைப் பார்த்த வண்ணம் செந்தில்நாயகம் உட்கார்ந்திருந்தார். மாலை வெயில் தாழ்ந்திருந்தது. வெப்பம் குறைந்திருந்தது. கணக்குப் பிள்ளை நாயுடு சில்லறைக் கணக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் டெலிபோன் மணி ஒலித்தது. செந்தில்நாயகம் ரிசீவரை எடுத்தார். ரயில்வே ரோடு ஹோட்டலிலிருந்து யாரோ பேசினார்கள்! இரண்டு நிமிடம் எல்லாச் செய்திகளையும் கேட்டார் அவர்; முகம் சிவந்தது; சீற்றம் பொங்கியது.

“என்ன செய்தி… எங்கிருந்து வந்தது?” – நாயுடு கேட்டார்.

“ஆறுமுகம் எத்தனை டசன் கொண்டு போனான்?”

“அரை குரோஸ்.. அதற்கு என்ன?”

“பெரிய சைக்கிள் சாம்பியனில்லே! ரெயில்வே ரோடிலே விழுந்துட்டானாம்… ஹோட்டலிலிருந்து போன் பண்ணியிருக் கிறார்கள். திருட்டுக் கழுதைக்குத் திமிர் அதிகரித்துப் போய் விட்டது. எத்தனை பாட்டில்கள் உடைஞ்சுத் தூளாயினவோ…!”

சீற்றம் அடங்கவில்லை. ஆறுமுகம் என்றாலே அவருக்குப் பிடிக்காது. அவர் மனநிலை அவருக்குத்தான் தெரியும்! சைக்கிளை எடுத்துக் கொண்டு ரெயில்வே ரோடுப் பக்கம் விரைந்தார் நாயுடு. சிலையாக நின்றான் சிங்காரம். எப்பொழுதும் போல் இரங்கியது அவன் மனம்!

***

ஆறுமுகத்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது ஆறு மணிக்கு மேலிருக்கும். நிறைய பாட்டில்கள் உடைந்து போயின. விழுந்த வேகத்தில் சிதறிய கண்ணாடித் துண்டுகள் காலிலும் உடலிலுமாகப் பாய, குருதி கொட்டியது. உடலில் நல்ல அடி: காயும் வெயில்: உருகும் தார்ச்சாலை! விழுந்தவன் விழுந்தவன் தான். பீதியால் மனம் மருள, நினைவிழந்து விட்டான் ஆறுமுகம்.

ஆறுமுகத்தைப் பற்றி யாரும் வருந்தவில்லை. எப்படியாவது போகிறான் என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார் செந்தில்நாயகம், மற்றவர்களும் அப்படியே; சிங்காரத்தின் மனம் மட்டும் கேட்கவில்லை. தீங்கு செய்தவனாயிருந்தால் என்ன? நன்மை செய்யத் தயங்கக் கூடாது!’ இதுதான் அவன் எண்ணம்.

ஆஸ்பத்திரிக்குப் போய் ஆறுமுகத்தைப் பார்த்து வந்தான். ஒரு நாள் மட்டுமல்ல; தினமும் காலையிலும் மாலையிலுந்தான்! ஒரு வாரத்திற்குப் பிறகு குணம் ஏற்பட்டிருந்தது. முன்போல் நன்றாக நடக்க முடியவில்லை. ஆறுமுகம் தவித்தான். அவன் கணக்கில் ஒரு காசுகூட இல்லை. ஆறுமுகத்தின் நிழல் அந்தப் பக்கம் தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டார் செந்தில்நாயகம். இப்பொழுது அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சிங்காரத்தைப் பற்றி எண்ணிப் பார்த்தான் அவன். எத்தனையோ உதவி செய்த அவனிடம் மோசமாக நடந்து கொண்டுவிட்டதாக ஏங்கினான் ஆறுமுகம்.

“என்னை மன்னித்துவிடு… அறியாமல் செய்து விட்டேன், சிங்காரம்!” என்று கலக்கத்தோடு புலம்பினான் ஆறுமுகம். அவனைத் தேற்றினான் சிங்காரம்.

“முதலாளியிடம் சொல்லி எந்த வேலையாவது வாங்கிக்கொடு, சிங்காரம். இப்பொழுது நான் புது ஆறுமுகம்… அத்தோடு…” என்று நீட்டினான்.

ஆமாம். இப்பொழுது அவன் நொண்டி! ஒற்றைக் கால் ஊனம்!

ஆறுமுகம் விந்தி விந்தி நடக்கும் கோலம் சிங்காரத்தின் நெஞ்சிலும் நினைவிலும் நின்றது.

– 1959 – ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *