கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,352 
 

முன்னொரு காலத்தில் துளசிதரன் என்ற பணக்காரர் இருந்தார். அவர் பல நிறுவனங்களின் அதிபர். எவ்வளவோ பேர் அவரிடம் வேலை செய்து வந்தனர். ஆனால், அவர்களது கஷ்ட, நஷ்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் வேலை வாங்கினார். அவர்களும் வேறு வழியின்றி பொறுமையுடன் வேலை செய்தனர். எருதின் புண்ணைப் பற்றி காக்கை கவலைப்படாமல் கொத்திக் கொண்டுதானே இருக்கும். அப்படித்தான் துளசிதரனும். அவரது மனைவி லட்சுமிக்கும், அவரது மகன் மணியனுக்கும் அவரது இந்த குணம் பிடிக்கவில்லை, இருப்பினும் என்ன செய்வது.

Thanneerதுளசிதரனிடம் ஒரு அழகான குதிரை வண்டி இருந்தது. அவர் தினமும் அந்த வண்டியில் ஊருக்கு வெளியே உள்ள தன் அலுவலகத்திற்குப் போய் வருவார். அவர் அந்த வண்டியையும், அதில் பூட்டப்பட்ட குதிரையையும் மிகவும் அக்கரையுடன் கவனித்து வந்தாரேயொழிய அதனைப் பல வருஷங்களாக ஓட்டி வரும் கிழவன் குப்புசாமியைப் பற்றிக் கவலைப் படவே இல்லை.

அவரது வெளிப்புற அலுவலகத்திற்குப் போகும் வழியில் ஒரு பள்ளம் இருந்தது. அடர்ந்த மரங்கள் கொண்ட அந்த இடத்தின் வழியே இருட்டியபின் யாரும் வரமாட்டார்கள். ஏனெனில், அந்தப் பள்ளத்தில் திருடர்கள் வழிப்போக்கர்களைத் தாக்கிக் கொள்ளை அடித்தது பலமுறை நிகழ்ந்தது.

தொலைவிலுள்ள தம் அலுவலகத்தைக் காட்ட ஒருநாள் துளசிதரன் தன் மனைவியையும், மகனையும் தன்னோடு குதிரை வண்டியில் அழைத்துச் சென்றார். காலையில் போய்விட்டுத் திரும்பும் போது, நடுப்பகலாகிவிட்டது. வண்டிக்காரக் கிழவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் வண்டி ஓட்டி வரும்போது, பசிமயக்கத்தில் தலைசுற்றி வண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டான். குதிரை கட்டுக்கடங்காமல் வண்டியோடு ஓடி ஒரு மரத்தில் மோதி நின்றது.

வண்டியிலிருந்து மூவரும் கீழே இறங்கினர். வண்டியில் சில சாமான்கள் வேறு இருந்தன. “”இப்போது என்ன செய்வது?” என்று மணியன் கேட்டான்.

துளசிதரனோ, “”ஆளுக்கு ஒன்றாக நாமே எடுத்துக் கொண்டு நடக்க வேண்டியதுதான். எப்படியாவது இருட்டுவதற்குள் இங்கிருந்து போய்விட வேண்டும்…” என்றார்.

மூவரும் வண்டியில் வைக்கப்பட்டிருந்த அலுவலகச் சாமான்களைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு நடந்தனர்.

கால்மணி நேரம் நடந்தபின் லட்சுமி, “”அடடா! வண்டிக்காரக் குப்புசாமியை கவனிக்காமல் வந்துவிட்டோமே…” என்றாள்.

“”இப்போது அவனைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். நாம் நம் வீட்டை அடைந்த பின் யாரையாவது அனுப்பி அவனைக் கூட்டிவரச் செய்யலாம்…” என்றான் துளசிதரன் சிடுசிடுப்பாய்.

மேலும், கொஞ்ச தூரம் போனதும் சுளீரென்று அடித்த வெயிலால் மூன்று பேர்களும் களைத்துப் போனார்கள். அவர்களால் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கக்கூட முடியவில்லை. துளசிதரன் அங்கேயே உட்கார்ந்து, “”ஒரே தாகமாய் இருக்கிறது. யாராவது தண்ணீர்க் கூஜாவை வண்டியிலிருந்து எடுத்து வந்தீர்களா?” என்று கேட்டான்.

“”இல்லையே!” என்று லட்சுமியும், மணியனும் கூறினர்.

அப்போது தான் அவருக்கு மனக்கண்முன் தான் வேலைக்காரர்களை வெயிலில் வாட்டி வேலை வாங்கிய கொடூரம் தோன்றியது. அப்போதுதான் அவருக்குத் தான் கவனியாமல் விட்டு வந்த குப்புசாமியின் நினைவு வந்தது. உடனே அவர் எழுந்துதன் வண்டி இருந்த இடத்தை நோக்கிச் சென்றார்.

அப்போது மணியன், “”நீங்கள் தண்ணீருக்காக வண்டிக்குப் போக வேண்டாம். நான் போய் கூஜாவை எடுத்து வருகிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள்,” என்றான்.

“”நான் தண்ணீருக்காக அங்கே போகவில்லை. வண்டியிலிருந்து மயக்கமடைந்து கீழே விழுந்த குப்புசாமியைப் பார்க்கவே போகிறேன். நீயும் வா! அவனை எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டு, ஊருக்குள் போய் வைத்தியரிடம் அவனைக் காட்டலாம். இவ்வளவு நாட்களாக நான் பிறரிடம் மனிதாபிமானம் என்பதே இல்லாமல் நடந்து வந்தேன். இன்று நடந்த இந்த சம்பவம் எனக்கு நல்ல ஒரு படிப்பினைத் தந்துவிட்டது,” என்றார் துளசிதரன்.

அவர்கள் கொஞ்ச தூரம் போனதுமே, எதிரே குப்புசாமி குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தனர். “”குப்புசாமி! இப்போது எப்படி இருக்கிறது உன் உடல்நிலை? உடம்பு சரி இல்லாத போது நீ ஏன் வண்டியை ஓட்டிக் கஷ்டப்பட வேண்டும்?” என்று கேட்டார்.

“”என் உடம்புக்கு என்ன? பசிமயக்கத்தில் நினைவு இழந்து விழுந்து விட்டேன். இப்படி நிகழ்வது எனக்கு சகஜமே. இன்றுதான் நான் இப்படி விழுந்ததைக் நீங்கள் நேரில் கண்டீர்கள். என்னால் நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து போகும் சிரமம் ஏற்பட்டு விட்டதே!” என்றான்.

குப்புசாமியின் முதுகில் இலேசாகத் தட்டியவாறே, “”சரி, முதலில் வண்டிக்குள் இருக்கும் கூஜாவை எடு. தண்ணீர் குடிக்க வேண்டும்” என்றார் துளசிதரன்.
குப்புசாமியும் அதனை எடுத்துக் கொடுக்கவே, “மடக் மடக்’கென்று நீர் குடித்தார்.

“”உனக்கு நான் சிரமம் கொடுத்துவிட்டேன். இவ்வளவு நாட்களாக நான் என் வேலையாட்களின் கஷ்ட, நஷ்டங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் இருந்து விட்டேன். இன்று தான் அவை எப்படிப்பட்டவை என்று உணர்ந்தேன்!” என்றார்.

அதன்பிறகு அவர்கள் மூவரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வண்டியும் ஊருக்குள் அவர்களது வீட்டை அடைந்தது. அன்றிலிருந்து துளசிதரன் தன் வேலைக்காரர்களிடம் கனிவுடன் நடந்து, அவர்களுக்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்தார். அவர்களும், “”எங்கள் எஜமானனைப் போலத் தங்கமான மனிதர் இந்த உலகில் எங்கே இருக்கிறார்?” என்று போற்றிப் புகழ்ந்தனர்.

– செப்டம்பர் 10,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *