அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்து சேர்ந்தார். ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரமாக ஒரு சிறிய குடிசைபோட்டுக்கொண்டு தங்கினார். ஊருக்குள் அவரைப் பற்றிய செய்திகள் பலவாறாகப் பரவினஅவரை நாடிப் பலர் போனார்கள்.வந்தவர் களுக்கெல்லாம் அறிவுரை வழங்கினார். அரிய உதவிகள் செய்தார்.
விரைவிலேயே தலைநகரில் இருந்த மன்னனும்அந்த முனிவரைப்பற்றிக் கேள்விப்பட்டான். அவர் பல சித்துக்களைக் கற்றுத் தேர்ந்த பெரும் சித்தர் என்றும், இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களைத் தங்கமாக்கும் ஆற்றல் பெற்ற மூலிகை அவரிடம் இருப்பதாகவும்கூட மன்னன் கேள்விப்பட்டான்.
எனவே, ஒருநாள் மன்னன் தன் வீரர்கள் புடைசூழ பல்லக்கில் ஏறி முனிவரைக் காணச் சென்றான். அவரது குடிசை முன் ஒரே கூட்டம்.. மன்னன், தான் வந்திருப்பதைத் தெரிவித்தும்கூடக் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டிவந்தது.
பிறகு முனிவர் அழைப்பதாகச் செய்தி வர, மன்னன் முனிவரின் சிறிய குடிசைக்குள் முகம் சுழித்தபடியே நுழைந்தான். முனிவர் தரையில் மான்தோல் விரித்து அமர்ந்திருந்தார். சாணம் இட்டு மெழுகி இருந்த வெறும் தரையில் அமரும்படி மன்னனுக்கு முனிவர் கைகாட்டினார். தான் வந்த வேலை கைகூட வேண்டுமே… வேறு வழியில்லாத மன்னன் தரையிலேயே அமர்ந்தான்.
முனிவர் கேட்டார்… ‘‘நாடாளும் மன்னா! என்னை நீ நாடிவந்த காரணம் என்னவோ?’’
மன்னன் நேரடியாகச் செய்திக்கு வந்தான். ‘‘தங்களிடம் இரும்பைப் பொன்னாக்கும் மூலிகை இருப்பது உண்மைதானே?’’
‘‘ஆம், உண்மைதான்.’’
‘‘அப்படியானால் எனக்கு அந்த மூலிகை வேண்டும்’’
‘‘உனக்கு அது எதற்காக?’’
மன்னன் சிரித்தான். ‘‘நாடாளும் எனக்குப் பொன் எதற்காகத் தேவைப்படும் என்பது தங்களுக்குத் தெரியாதா? எங்கள் நாட்டிலே இரும்பு, பித்தளை, வெண்கலம் எல்லாம் நிறையவே கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் தங்கமாக ஆக்கிக்கொண்டால் என் நாட்டின் பொருளாதாரம் உயரும். நாடு நலம்பெறும். மக்கள் நலமாக வாழ்வார்கள்.’’
‘‘அப்படியா? நன்று, நன்று! சற்று நேரம் காத்திரு!’’ என்ற முனிவர் வேறுபுறம் திரும்பிக் குரல் கொடுத்தார்.
கதவருகே நின்றிருந்த அவருடைய சீடன் மற்றவர்களை உள்ளே அனுப்பத் தொடங்கினான்.
நாடாளும் மன்னன் பொறுமையிழந்துத் தவித்தான்.
முனிவரோ அமைதியாகத் தன்னை நாடி வந்த ஏழை எளிய மக்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். பஞ்சம், வறட்சி, வறுமை, பசி, பட்டினி என்று வந்தவர்களுக்கு எல்லாம், தம்மால் ஆன உதவிகளைச் செய்தார்.
மன்னனின் பொறுமை எல்லை மீறியது. ‘‘முனிவரே, என்னைக் காக்கவைத்து அவமானப்படுத்துகிறீரா? நாடாளும் என்னைவிட இந்தப் பிச்சைக்கார மக்கள்தாம் உமக்கு முக்கியமா?’’ என்று உறுமினான்.
முனிவர் மெல்லச் சிரித்தார். ‘‘அமைதி, மன்னா! அமைதி! இந்த ஏழை மக்கள் எல்லாம் உன் குடிமக்கள்தான். அவர்களின் குறைகளைக் களையும் பொறுப்பு என்னைவிட உனக்கே அதிகமாக இருக்க வேண்டும்! ஆனால் நீயோ அவர்களைக் கண்டு முகம் சுழிக்கிறாய். மன்னா!
எனக்கு ஏழை எளியவர்களும் ஒன்றுதான். நாடாளும் மன்னர்களும் ஒன்றுதான். அனைவரும் எனக்குச் சமமே! நான் மக்களில் ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு பார்ப்பது இல்லை!
நாடாளும் மன்னன் ஒருவனும் தன் குடிமக்கள் அனைவரையுமே சமமாக மதிக்க வேண்டும். மன்னா, நீ தேடிவந்தாயே இரும்பைப் பொன்னாக்கும் மூலிகை… அதன் சிறப்பு என்ன தெரியுமா? அந்த மூலிகையால் இரும்பு, பித்தளை, வெண்கலம் என வேறுபட்ட அனைத்து உலோகமும் தங்கமாக மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சமமான பார்வை உனக்கும் வேண்டும்.
மன்னா! உன் மனநிலையை கணிக்கவே உன்னைக் காத்திருக்கச் செய்தேன்! ஏழைகளைப் பற்றித் துளியும் கவலைப்படாத உனக்கு நான் அந்தப் பொன்னாக்கும் மூலிகையைக் கொடுத்தால், அது உன் ஆடம்பர வாழ்க்கைக்கு மட்டுமேதான் பயன்படும்! அதிலே எனக்கு விருப்பம் இல்லை.
எனவே இன்று போய், இன்னொரு நாள் வா! உன் நாட்டு மக்களின் துயர் துடைக்கும் உண்மை மன்னனாகத் திரும்பி வா! அப்போது உனக்கு நான் அந்த மூலிகையைத் தருகிறேன்…’’ என்று கூறிய முனிவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
மன்னன் தலை குனிந்து வெளியேறினான்.
முனிவரால் உண்மையில் இரும்பைத் தங்கமாக்க முடியுமோ என்னவோ… ஆனால், துருப்பிடித்துக் கிடக்கும் ஒரு மன்னனின் மனதைப் பொன்மனமாக ஆக்க அவரால் நிச்சயம் முடியும்.
– வெளியான தேதி: 16 மார்ச் 2006