ஓர் ஊரில் நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் எல்லாருக்கும் உதவி செய்யும் இயல்புள்ளவன்.
ஒருநாள், கடைத் தெருவில் பார்வையற்ற ஒருவன் வழி தெரியாமல் தடுமாறுவதைக் கண்டு, அவனை தன் வீட்டிற்கு அழைத்து வந்தான். சில நாட்கள் தன் வீட்டில் தங்கிவிட்டுப் போகுமாறு அன்புடன் அவனை வேண்டினான். பார்வையற்ற பிச்சைக்காரன் அதற்கு சம்மதித்தான். சில நாட்கள் சென்றன. பிச்சைக்காரனுக்குத் தொடர்ந்து அப்படி தங்குவதற்குச் சங்கடமாயிருந்தது. தான் கிளம்புவதாகக் கூறினான்.
“”இன்னும் சிறிது நாள் தங்கிச் செல்லலாமே!” என்றான் அந்த நல்லவன்.
“”இல்லை ஐயா! நானோ வறியவன். என் பிழைப்புக்கான வழியையும் நான் பார்க்க வேண்டும். நெடுங்காலம் இந்த இடத்தில் தங்குவதால், உங்களுக்கும் என்னால் வீண் சுமை. எனக்கும் வீண் சோம்பல் வந்துவிடும். யாராயிருந்தாலும், பிழைப்புக்காக அவரவருக்குத் தெரிந்ததைச் செய்ய வேண்டுமே தவிர, பிறர் மீது சவாரி செய்யக் கூடாது.”
இதைக் கேட்ட நல்லவன் மகிழ்ந்தான். பிச்சைக்காரனின் தத்துவப் பேச்சு அவனை மிகவும் புளகாங்கிதமடையச் செய்தது.
“”சரி! இப்போது இருட்டிவிட்டது. அதனால், இன்று இரவு மட்டும் இங்கே தங்கிவிட்டு, நாளைக் காலையில் புறப்பட்டுப் போ!” என்றான். பிச்சைக்காரன் இதைக் கேட்டு வெறுமையாகச் சிரித்தான்.
“”நானோ பிச்சைக்காரன். பிறவியிலேயே என் பார்வையை இழந்தவன். அப்படியிருக்க, இரவுக்கும், பகலுக்கும் எனக்கு என்ன வேறுபாடு தெரியப் போகிறது?” என்றான். பிச்சைக்காரனின் தெளிவைக் கண்டு வியந்த நல்லவன்,
“”சரி! இந்த விளக்கையாவது வழித் துணைக்கு எடுத்துக் கொண்டு போ!” என்று வேண்டினான்.
“”கண் தெரியாதவனுக்கு விளக்கினால் என்ன பயன்?” என்று மறுத்தான் பிச்சைக்காரன்.
“”உண்மை. ஆனால், விளக்கு உனக்கு உபயோகப்படாவிட்டாலும், இதனால், உன் எதிரே வருபவர்களுக்கு நீ வருவது தெரியுமல்லவா?” என்று கூறி, விடாப்பிடியாக ஒரு விளக்கை அவனிடம் கொடுத்தனுப்பினான் நல்லவன்.
அதற்கு மேல் மறுக்காமல் விளக்கைக் கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் சென்ற பின், எதிரே வந்த ஒருவன், மடேலென்று பிச்சைக்காரன் மீது மோதிக் கொண்டான்.
“”யாரவன்! கண் மண் தெரியாமல் வந்து மோதுவது?” என்று பிச்சைக்காரன் கத்தினான்.
“”மன்னிக்க வேண்டும். நான் நேராகத்தான் வந்தேன். தாங்கள் தான் என் மீது வந்து மோதினீர்கள்!” என்றான் அந்த ஆள்.
“”சரி! எனக்குத்தான் கண் தெரியாது. உங்களுக்குமா தெரியாது?” சீறினான் பிச்சைக்காரன்.
“”நள்ளிரவு என்பது அனைவருக்குமே பொதுவானதுதானே நண்பரே! இரவு நேர இருட்டில் எனக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரியும்?” என்றான் வந்தவன்.
“”அது சரிதான். ஆனால், என் கையில் உள்ள விளக்கு கூடவா உங்கள் கண்களுக்குத் தென்படவில்லை?” என்றான் பிச்சைக்காரன் இன்னும் காட்டமாக.
“”உண்மைதான். தாங்கள் விளக்கை ஏந்தியிருக்கிறீர்கள். ஆனால், அது அணைந்து அல்லவா போயிருக்கிறது!” என்றான்.
“”தவறு என்னுடையது தான். அவரவரும் தன் சுய அறிவைத்தான் பயன்படுத்த வேண்டும். இரவல் ஞானத்தால் எந்தப் பயனும் இல்லை!” என்றபடியே விளக்கைத் தூக்கியெறிந்துவிட்டு, தன் கைக் கோலை ஊன்றியபடியே நடந்தான். இப்போது அவனால் சிரமமின்றி நடக்க முடிந்தது. ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், அவரவர் சொந்த புத்தியை உபயோகிப்பது நல்லது.
– ஜூலை 30,2010