ஒரு ஊரில், ஆண்டிக் கோலத்தில் இருவர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து உண்டு, ஒரு சத்திரத்தில் படுத்துக் கொள்வார்கள்.
உடல் உழைப்பு எதுவும் இல்லாததால், அவர்களின் உடல் கொழுத்துப் பருத்துக் காணப்பட்டது.
அந்த ஆண்டிகளை தினந்தோறும் பார்த்த இரண்டு தொழிலாளர்களில் ஒருவன், “இந்த ஆண்டிகளால் சமுதாயத்துக்கு என்ன நன்மை? உடல் ஊனம் அடைந்தவர்கள் கூட, ஏதேனும் வேலை செய்து பிழைக்கிறார்களே! இவர்கள் ஏன் பிச்சை எடுத்து உண்டு திரிகிறார்கள்?” என்று கேட்டான்.
மற்றொருவன், “அவர்களைக் குற்றம் சொல்லக் கூடாது, நாடு முழுவதிலும் இப்படி சடை முடிகளுடன் ஆண்டிக் கோலத்தில் திரிகிறவர்களுக்கு எல்லாம் வணக்கம் தெரிவித்து, சோறு போடுகிறார்களே அவர்கள் தான் காரணம். உழைப்பவனுக்குத் தகுந்த கூலி கொடுக்க மாட்டார்கள், ஆனால், இவர்களைப் போன்ற சோம்பேறித் தடியர்களுக்கு உணவு அளித்து, கொழுக்க வைக்கின்றனர்’ என்று ஆத்திரத்தோடு சொன்னான்.
ஒரு நாள், மேற்படி ஆண்டிகள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துப் போய், அறுசுவையுடன் உணவு அளித்தான், அந்தத் தொழிலாளி.
ஆண்டிகள் இருவரும் அம்மாதிரியான உணவை, அதற்கு முன் சாப்பிட்டதே இல்லை. மிகவும் சுவைத்து, மகிழ்ந்து வயிறு முட்ட உண்டு, திக்கு முக்காடிப் போய் படுத்து உறங்கினார்கள்.
அம்மாதிரியான உணவு தினமும் கிடைக்காதா என ஏங்கி, தவித்தனர்.
அந்த ஆண்டிகளுக்குப் பிச்சை எடுத்து உண்பதில் சலிப்புத் தோன்றியது.
பிறகு என்ன செய்வது பசியைத் தணிக்க மீண்டும் பிச்சை எடுத்தனர். சில நாட்களில் ஆண்டிகள் இருவரும் ஏக்கத்தால் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆனார்கள்.
“பார்த்தாயா? அவர்கள் உடம்பை? எவன் ஒருவன் உழைத்து அதனால் கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு கொள்கிறானோ அவனே திடகாத்திரத்தோடு வாழ்வான்!” என்றான் தொழிலாளர்களில் ஒருவன்.
சோம்பேறியாகத் திரிந்து பிச்சை எடுப்பதும், அப்படிப்பட்டவர்களுக்கு இரக்கம் கொண்டு பிச்சை இடுவதும் தவறு என்பதை உணரவேண்டும்.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.