சீமாட்டி காதலீன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 1,911 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல்லாண்டுகளுக்கு முன்னே, அயர்லாந்து தேசத்தில், எங்கிருந்தோ இரண்டு வணிகர்கள் வந்து குடியேறினார்கள். அவர்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவர்கள் அந்நாட்டு மொழியாகிய ‘கெயிலிக்’ மொழியை நன்றாகப் பேசினார்கள். அபூர்வமான விலையுயர்ந்த உடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள்.

அவர்கள் பெருஞ்செல்வர்கள். இருவரும் ஒரே வயதுடையவர்களாகத் தோன்றினார்கள்; இருவருக்கும் சுமார் ஐம்பது வயதிருக்கும். நெற்றியிலே படர்ந்த இரேகைகளையும் சுருக்கங்களையும் நரைத்த தாடியையும் பார்த்தாலே அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்பது தெரிந்துவிடும்.

அவர்கள் தங்கியிருந்த சத்திரத்திலே அவர்களைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்க ளுடைய நோக்கம் என்ன, தொழில் என்ன, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் அவ்வளவு ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அங்கே அவர்கள் தங்கியிருந்த காலத்தில், நாள் தோறும் தங்களுடைய பண மூட்டைகளை அவிழ்த்துத் தங்க நாணயங்களை எண்ணி எண்ணி மீண்டும் கட்டி வைப்பதே அவர்களுடைய வேலை. வெளியிலே இருந்து கொண்டு சாளரங்களின் வழியாகப் பார்த்தாலே உள்ளேயிருந்த பொற்காசுகளின் மஞ்சள் நிறமான ஒளி வீசுவதைக் கண்டுகொள்ளலாம்.

Seematti

சத்திரத்து நிர்வாகியான சீமாட்டி அவர்களிடம் ஒரு நாள் பேசிப் பார்த்தாள் : “இவ்வளவு பணக்காரர்களா யிருக்கும் நீங்கள் ஏழை மக்களின் துன்பத்தை நீக்க ஓர் உதவியும் செய்வதில்லையே! தான தர்மங்கள் எதுவும் செய்வது உங்களுக்கு வழக்கமில்லையோ?” என்று அவள் கேட்டாள்.

“பலர் ஏழைகளைப் போல வேடம் தரித்து வந்து ஏமாற்றிவிடுவார்கள். அதனால்தான் நாங்கள் உண்மை யான ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாமலிருக்கிறது. உதவி தேவையுள்ளவர்கள் வந்து எங்கள் கதவைத் தட்டினால், நாங்கள் அதைத் திறக்கத் தயங்குவதில்லை !” என்று அவர்களுள் ஒருவன் பதிலளித்தான்.

இது நிகழ்ந்த மறுநாள், இரண்டு வணிகர்களும் மக்களுக்குப் பொன்னாக வாரி இறைக்கிறார்கள் என்ற வதந்தி வெளியே எங்கும் பரவிவிட்டது. அவர்கள் தங்கியிருந்த இடத்தைப் பெருங்கூட்டமாக ஜனங்கள் சூழ்ந்துகொண்டனர். ஆனால், உள்ளே சென்று வெளி வந்தவர்களுள் சிலரே கௌரவத்துடன் தலைநிமிர்ந்து சென்றார்கள்; பலர் அவமானத்தால் முகம் சிறுத்து வாடியிருந்தார்கள்.

இரண்டு வியாபாரிகளும் என்ன வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்? சயித்தானுக்காக* ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார்கள்! இதுதான் அவர்களுடைய தொழில். வயது முதிர்ந்தவர்களின் ஆன்மா ஒன்றுக்கு இருபது பொற்காசுகள் விலை; ஒரு பைசா கூடுதலாகக் கொடுக்கமாட்டார்கள். விவாகமான ஸ்திரீகளின் ஆன்மாவுக்கு மதிப்பு ஐம்பது பொற்காசுகள். அவர்களிலே விகாரமான தோற்றமுடையவர்களின் ஆன்மாவுக்கு நூறு பொற்காசுகள். இளவயது மங்கையரின் ஆன்மாக்களுக்கு மதிப்பு மிக அதிகம். பரிசுத்தமான புது மலர்களுக்குக் கிராக்கி அதிகமல்லவா!

அந்தக் காலத்தில், அந்த நகரிலே, பேரழகும் பெருந்தன்மையும் வாய்ந்த காதலீன் ஓ’ஹீ என்ற சீமாட்டி ஒருத்தி இருந்தாள். மக்களெல்லோரும் அவளிடம் அன்பு கொண்டு அவளைப் போற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு அவள் உற்ற துணையாக விளங்கினாள். வணிகர்கள், மக்களின் துயரங்களைப் பயன்படுத்திக்கொண்டு ஆண்டவனை அவர்கள் மறக்கும்படி செய்து வந்ததை இறுமாப்புள்ள இளவரசி அவள் அறிந்ததும், அவள் தன் கணக்குப்பிள்ளையை அழைத்தாள்.

“கணக்குப்பிள்ளை! நம்முடைய இரும்புப் பெட்டியில் பொற்காசுகள் எவ்வளவு இருக்கின்றன?”

“நூறாயிரம்.”

“நகைகள்?” .

“அவைகளும் நூறாயிரம் பொற்காசுகள் பெறும்.”

“மாளிகைகள், நிலங்கள், காடுகள் – எல்லாம் எவ்வளவு பெறும்?”

“நான்கு இலட்சம் பொற்காசுகள்.”

“சரிதான், தங்கமாயில்லாதவைகளையெல்லாம் உடனே விற்றுத் தங்கம் வாங்கிவிடுங்கள். வாங்கிய பின் கணக்கை என்னிடம் கொண்டுவந்து காட்டுங்கள். இந்த மாளிகையையும் இதைச் சுற்றியிருக்கும் நிலத்தையும் மட்டும் விற்காமல் வைத்துக்கொள்வோம்!

இரண்டு நாள்களிலே அவளுடைய கட்டளை நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பொற்காசுகள் குவிந்து விட்டன. அந்தப் புனிதவதி, ஏழை மக்களை அழைத்து, அவர்களுடைய தேவைகளை அறிந்து, அவற்றிற்குத் தக்கபடி பொருள் கொடுத்து உதவினாள். இதனால் நகரில் ஆன்மாக்களை விற்பதற்கு ஆள்கள் போகவில்லை. சயித்தான் தன் காரியம் தடைப்படுவதைக் கண்டு, உண்மையை ஆராய்ந்து தெரிந்துகொண்டான். சீமாட்டியின் செல்வமே தனக்கு இடையூறாயிருந்ததால், அதைக் கவர்வதற்கு அவன் ஏற்பாடு செய்தான். அவளுடைய மாளிகையிலே வேலை பார்த்து வந்த ஒரு துரோகியின் உதவியால், சீமாட்டி காதலீனின் பொருள் அனைத்தும் திருடர்களால் கொள்ளையிடப்பட்டது. அவள் எவ்வளவு தடுத்துப் பார்த்தும் பயனில்லாது போய்விட்டது. அவள் தன் கைகள் இரண்டையும் சிலுவை* போல் சேர்த்து வைத்துக்கொள்ள வாய்ப்புக் கிடைத்திருந்தால், திருடர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆனால், அவர்கள் அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தனர். கொள்ளையும் நடந்து முடிந்துவிட்டது.

பின்னால், ஏழைகள் காதலீனிடம் சென்று துயரங்களைக் களையும்படி வேண்டிய பொழுது அவளால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை . அவள் குடியிருந்த மாளிகையைக்கூட ஏழைகளுக்குக் கொடுத்திருந்தாள்.

இடையில் மக்களின் நிலை மிகவும் அவலமாய்ப் போய்விட்டது. ஊரிலே போதுமான தானியங்களும் உணவுப் பொருள்களும் இல்லை. மேலை நாடுகளிலிருந்து அவை வந்து சேர எட்டு நாள்கள் செல்லுமென்று சொல்லப்பட்டது. அந்த எட்டு நாள்களும் எட்டு யுகங்கள் தாம்! அந்த நாள்களைக் கழிப்பது எப்படியென்று சாதாரண மக்கள் எல்லோரும் தயங்கித் தவித்தார்கள். அவர்கள் பட்டினி கிடந்து மடிய வேண்டும், அல்லது வேதப் புத்தகம் அறிவித்துள்ள நேர்மை, நீதிகளை யெல்லாம் காற்றிலே பறக்கவிட்டுத் தங்களுடைய ஆன்மாக்களை விற்றுவிட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது. ஆண்டவன் அளித்த பேறுகளுள் ஆன்மாக் களுக்கு இணையானவை எவை? அத்தகைய கிடைத்தற்கரிய ஆன்மாக்களையும் மக்கள் விற்றுவிடும்படி நேர்ந்ததைக் கண்டு சீமாட்டி காதலீன் கண்ணீர் வடித்தாள். தன் கூந்தலைப் பிய்த்துக்கொண்டு கதறினாள். மலர் போன்ற தன் மார்பிலே அடித்துக் காயப்படுத்திக்கொண்டாள். பிறகு, திடீரென்று அவள் எழுந்திருந்தாள். அவள் நெஞ்சிலே ஓர் உறுதி தோன்றிவிட்டது.

அவள் நேராக ஆன்மாக்களை விலைக்கு வாங்கும் இரு வியாபாரிகளையும் நாடிச் சென்றாள்.

“தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

“நீங்கள் ஆன்மாக்களை விலைக்கு வாங்குகிறீர்களா?”

“ஆம், இன்னும் சில ஆன்மாக்கள் கிடைத்தால் வாங்கலாம். அதிகமாக வாங்க முடியாதபடி நீங்களே செய்துவிட்டீர்களே!”

“இன்று உங்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்படி செய்வதற்காக நான் வந்திருக்கிறேன்!”

“என்ன?”

“நான் ஓர் ஆன்மாவை விற்க வந்திருக்கிறேன். ஆனால், அதன் மதிப்பு அதிகம்!”

“மதிப்பு அதிகமென்றால் என்ன? வயிரத்தின் மதிப்பு அதன் பளபளப்பைப் பொறுத்தது, அது போலத்தான் ஆன்மாவும்.”

“என்னுடைய ஆன்மாதான் அது!”

சயித்தானின் பிரதிநிதிகள் இருவரும் திடுக்கிட்டுப் போயினர். அவர்களுடைய சாம்பல் நிறக் கண்களில் ஒளி வீசிற்று. அப்பழுக்கற்ற பரிசுத்தமான கன்னி காதலீனின் ஆன்மா – அதற்கு ஈடான பொக்கிஷம் வேறு என்ன இருக்கிறது என்று கருதி அவர்கள் திகைத்தார்கள்.

“அழகு மிகுந்த அம்மையே, தங்களுக்கு எவ்வளவு பொருள் வேண்டும்?”

“ஒன்றரை இலட்சம் பொற்காசுகள்.”

“அப்படியே வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றனர். இரு வணிகர்களும், உடனே ஆன்ம விக்கிரயப் பத்திரம் ஒன்றை அவளிடம் நீட்டினார்கள். அவள் துணுக்கத்தோடு பதறிக் கொண்டே அதில் கையெழுத்திட்டாள்.

தொகை முழுதும் அவளிடம் எண்ணி ஒப்படைக்கப் பட்டது.

அவள், மாளிகைக்குத் திரும்பியதும் கணக்குப் பிள்ளையை அழைத்து, “இதைப் பகிர்ந்து தானமாகக் கொடும்! இந்தப் பணத்தைக்கொண்டு ஏழைகள் எட்டு நாள்களைக் கழித்து விட முடியும். அவர்களுடைய ஆன்மாக்களுள் ஒன்றைக்கூட விற்கவேண்டிய அவசியம் ஏற்படாது” என்று கூறினாள்.

இதற்கப்பால் அவள் தன்னுடைய அறைக்குள்ளே சென்று கதவை அடைத்துக்கொண்டாள். எவரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாதென்று அவள் முன்னதாகவே எல்லோர்க்கும் சொல்லி வைத்திருந்தாள்.

மூன்று நாள்கள் கழிந்தன; அவள் வெளியில் வரவேயில்லை, எவரையும் அழைக்கவுமில்லை.

கதவைத் திறந்து பார்த்த பொழுது, அவள் சோகத்தால் மரணமடைந்து விறைத்துக் கிடந்தாள்!

ஆனால், அவளுடைய ஆன்ம விக்கிரயப் பத்திரம் செல்லாது என்று ஆண்டவன் முடிவு செய்துவிட்டான். தர்மத்திலே தலைசிறந்த அவளுடைய ஆன்மா, ஆயிரக் கணக்கான ஆன்மாக்களை முடிவில்லாத மரணத்திலிருந்து காப்பாற்றிய அந்தப் பரிசுத்த ஆன்மா சயித்தானுக்குச் சொந்தமில்லையென்பது ஆண்டவன் தீர்ப்பு.

மேலே குறித்த எட்டு நாள்களும் கழிந்த பிறகு கப்பல்களில் ஏராளமான உணவுப்பொருள்கள் நாட்டிலே வந்து குவிந்தன. பசியும் பட்டினியும் மறைந்துவிட்டன. சத்திரத்திலே தங்கியிருந்த இரு வணிகர்களும் தங்கள் கடையைக் கட்டிக்கொண்டு எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.

– இறுமாப்புள்ள இளவரசி (அயர்லாந்து நாட்டுக்கு கதைகள்), முதற் பதிப்பு: 14-11-1979 (குழந்தைகள் தின வெளியீடு), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *