ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ‘‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!’’ என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நரியை உங்களுக்கு நினைவிருக்கும். திராட்சைப் பழத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலைந்த அந்த நரி, அது கிடைக்காத ஏக்கத்தால் நோயில் விழுந்தது. நோய் முற்றி இறக்கும் நிலைக்குப் போன அந்த நரி தன் மகனை அருகே அழைத்தது.
‘‘அன்பு மகனே! திராட்சைக் கனிகளை வயிறார உண்ண வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமலேயே நான் இறக்கப் போகிறேன். என் நிறைவேறாத ஆசையை ஈடுசெய்யும் விதமாக நீ நான் கேட்பதைச் செய்யவேண்டும். இந்தக் காட்டிலேயே ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்தை உருவாக்கு. நம் இனத்தவருக்கும் பிற விலங்குகளுக்கும் வேண்டிய அளவுக்கு திராட்சைப் பழங்களை நீ வழங்க வேண்டும்! இதைச் செய்வாயா?’’ என்றது.
‘‘உறுதியாகச் செய்வேன் அப்பா! உங்கள் இறுதி ஆசையை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன்!’’ என்று குட்டி நரி கண்ணீரோடு சொன்னது.
மகனின் கைகளைப் பிடித்தபடி அப்பா நரி இறந்து போனது.
தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற குட்டிநரி கடுமையாக உழைத்தது. அது வளர்ந்து இளைஞனானபோது ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்திற்குச் சொந்தக்காரனாக இருந்தது. பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, ஐதராபாத் திராட்சை, விதையில்லா திராட்சை என அத்தனை வகை திராட்சைகளும் அந்தத் தோட்டத்தில் பழுத்துக் தொங்கின.
அப்பாவைப் போல் இந்த நரியும் குள்ளம்தான். என்றாலும், எட்டாத திராட்சைக் கனிகளை அறுவடை செய்வதற்காக அணில்களை வேலைக்கு வைத்திருந்தது இந்த நரி. எனவே திராட்சைப் பழங்களைப் பறிப்பதற்கு அப்பா நரி பட்ட தொல்லையை இந்த நரி படவில்லை. அணில்களின் உதவியோடு அறுவடை செய்து பழங்களை மலை மலையாய்க் குவித்தது இந்த நரி.
திராட்சைத் தோட்டத்தின் புகழ் காடு முழுக்கப் பரவியது. முயல், மான், யானை, கரடி, நரி, என அனைத்து விலங்குகளும் கூட்டம் கூட்டமாக நரியின் தோட்டத்துக்கு வந்து திராட்சைப் பழங்களை வாங்கிச் சென்றன.
இப்படியாக அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய நரி மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தபோது, அந்தக் காட்டுக்குப் பக்கத்துக் காட்டிலிருந்து ஒரு திருட்டு ஓநாய் வந்து சேர்ந்தது.
திராட்சைத் தோட்டத்து நரியின் புகழையும் செல்வச் செழிப்பையும் கண்ட அந்த ஓநாய், நரியைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பணம் சேர்க்க முடிவு செய்தது.
எனவே அந்த ஓநாய் நரியோடு நட்புகொண்டு பழகியது. எப்போது பார்த்தாலும் நரியைப் புகழ்ந்து பேசியது. அதில் மயங்கிய நரி, ஓநாயை உண்மை நண்பன் என்றே நம்பியது.
ஒரு நாள் நரியைத் தேடி வந்த ஓநாய் ‘‘நண்பா! நீ வெறும் திராட்சைப் பழங்களை விற்பதைவிட, திராட்சைப் பழச்சாற்றிலிருந்து ‘ஒயின்’ எனப்படும் பானத்தைத் தயாரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும். எனக்கு இத்தாலி நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒயின் தயாரிக்கும் முறை தெரியும். நாம் கூட்டாகத் தொழில் செய்வோமா?’’ என்று ஆசை காட்டியது.
நரி அதன் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஓநாய் நரியிடம் பணம் வாங்கிக்கொண்டு பீப்பாய் பீப்பாயாக ஒயின் தயாரித்து வைத்தது.
பிறகு நரியிடம், ‘‘நாம் முதலில் நமது ஒயினை விலங்குகளுக்கு இலவசமாக அறிமுகப்படுத்துவோம். அதன் சுவைக்கு அவர்கள் அடிமையானதும் நம் விருப்பப்படி விலை வைத்து ஒயினை விற்கலாம். கொள்ளை லாபம் பார்க்கலாம்!’’ என்றது ஓநாய்.
அதிகப் பணத்திற்கு ஆசைப்பட்டு நரியும் தலையாட்டியது. ஓநாய் நரியின் திராட்சைத் தோட்டத்தில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தது.
‘இலவசம்… இலவசம்! முற்றிலும் இலவசம்! தேவாமிர்தம் போன்ற புதிய பானம் அறிமுகம்! அனைவரும் வாரீர்! அள்ளி அள்ளிப் பருகுவீர்!’ என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தது. நரி பாடுபட்டுச் சேர்த்த காசை எல்லாம் தன் விருப்பப்படி வாரி இறைத்தது ஓநாய்.
விருந்து நாளன்று மாலை நரியின் திராட்சைத் தோட்டம் விலங்குகளால் நிரம்பி வழிந்தது. ஒயினை சுவைத்த விலங்குகள், ‘‘ஆகா! மிகவும் இனிமை! இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும்!’’ என்று கேட்டுக் கேட்டு வாங்கிக் குடித்தன.
அளவுக்கு மீறி ஒயின் அருந்தியதால் அன்று இரவு விலங்குகள் அனைத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தன. திருட்டு ஓநாயின் தலைமையில் வந்த கொள்ளைக்கார ஓநாய்க் கும்பல் விலங்குகளின் வீடுகளில் புகுந்தது. நகை, பணம் என்று கொள்ளையடித்துக் கொண்டு ஓடி மறைந்தது.
காலையில் கண் விழித்த விலங்குகள் கொள்ளை நடந்ததை அறிந்து திடுக்கிட்டன. எங்கும் ஒரே கூச்சல் குழப்பம். ஒயின் கொடுத்து மயக்கித் தங்களைக் கொள்ளையடித்தது நரியின் சூழ்ச்சிதான் என்று நினைத்தன.
கையில் கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு நரியின் திராட்சைத் தோட்டத்தை நோக்கி எல்லா விலங்குகளும் ஓடின. அதற்குள் நடந்ததையெல்லாம் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட காட்டு அரசர் சிங்கம் வீரர்களை அனுப்பினார். அரசு வீரர்கள் நரியின் தோட்டத்தை முற்றுகை இட்டார்கள். நரியைக் கைது செய்தார்கள்.
தோட்டத்தை அழிக்க வந்த விலங்குகளை எல்லாம் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார்கள். நரியை நீதி விசாரணைக்காக அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள். சிங்க அரசர் விசாரணை செய்தார். நரி கதறி அழுதபடியே நடந்த உண்மைகளைக் கூறியது. நரியின் கூற்றில் உண்மை இருப்பதை உணர்ந்தார் சிங்க அரசர்.
ஓநாய்க் கும்பலைத் தேடிப்பிடிக்கும்படி சிங்க அரசர் ஆணையிட்டார். அரசுப் படை வீரர்கள் சீறிப் பாய்ந்தார்கள். அன்று இரவுக்குள் பக்கத்துக் காட்டில் பதுங்கியிருந்த ஓநாய்க் கும்பல் பிடிபட்டது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. ஓநாய்க் கும்பல் பாதாளச்சிறைக்குள் அடைக்கப்பட்டது.
மக்களை மயக்கி அறிவை இழக்கச் செய்யும் ஒயினைத் தடை செய்தார் சிங்க அரசர். தெரிந்தோ தெரியாமலோ மதுவைத் தயாரிக்க உடந்தையாக இருந்த நரிக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்தார். நரியின் தோட்டத்தில் மிச்சமிருந்த ஒயின் பீப்பாய்கள் அழிக்கப்பட்டன.
இப்போதெல்லாம் யாராவது ஒயினைப் பற்றிப் பேச்செடுத்தாலே, ‘‘சீச்சீ இந்த ஒயின் கசக்கும்!’’ என்று சொல்லிவிட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு அது ஓடிவிடுவதாகக் கேள்வி.
– வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006
very nise