சினிமாப் பாம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 970 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மஞ்சளும் சிவப்பும் மயங்கிய நிறத்தில் ஈச்சங்குலை பளபளத்தது. பவழப்பா ஈச்சம்பழத்தைச் சுவைத்துக் கொண் டிருந்தான். கவனம் எங்கேயோ சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தது. பின்னி முடித்த மூங்கில் கூடை அருகேயிருந்தது.

பவழப்பா சின்னச் சின்ன மூங்கில் கம்புகளை வைத்து அழகாகக் கூடை முடைவான்; பெட்டி செய்வான். எல்லாம். அம்மா கற்றுக் கொடுத்ததுதான். சொர்ணத்துக்கு அவன் ஒரே மகன். பவழப்பா கலங்காமல் இருக்க வேண்டும் என்பது தான் அம்மாவின் ஆசை. ஓலைப்பாய் முடைவதில் காசு பணம் கிடைக்கும். கூடை முறம் கட்டுவதற்குத் தெருத் தெருவாகப் போய் வருவாள். அம்மாவிடம் பவழப்பாவுக்கு இயல்பாகவே அச்சம் உண்டு.

எதையோ நினைத்தவாறு எழுந்தான் பவழப்பா மூலையில் ஒரு பழைய மரப்பெட்டி. அம்மா அதைத் திறந்து பார்க்கவே மாட்டாள். சொர்ணம் இப்பொழுது வீட்டில் இல்லை. மெல்லப் பெட்டியருகே வந்து, அதைத் திறந்து பார்த்தான். துணிமணிகள் இருந்தன. வேறு என்னென்னவோ கிடந்தன. ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடந்த மகுடி அவன் கண்ணைப் பறித்தது. ஆசையோடு கையில் எடுத்தான். அப்புறம் பெட்டியைத் துருவிப் பார்க்க வில்லை.

மகுடியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். அழகான மகுடி. பளபளப்புக் குன்றாமல் இருந்தது. துடைத்துவிட்டு உதட்டில் பொருத்தினான். ஒலி எழுந்தது. உள்ளமெல்லாம் மகிழ்ச்சி! மகுடியும் புல்லாங்குழலும் ஊதுவதில் கொள்ளை இன்பம் அவனுக்கு. மடைத் தலையில் உட்கார்ந்து எத்தனையோ முறை தன்னை மறந்து சூழல் ஊதியிருக்கிறான். சேரிக்காரர்கள் இதை அறிவார்கள்.

மெல்ல மெல்ல மகுடியை ஊதினான் பவழப்பா. அம்மா வீட்டில் இல்லை என்ற துணிவு.

கதவை யாரோ தட்டினார்கள். பவழப்பா திடுக்கிட்டுப் போனான். இதழிலிருந்து பிரிந்தது. மகுடி அம்மா வந்துவிட்டாளோ? அச்சத்தோடு கதவைத் திறந்தான் பவழப்பா. வாசலைப் பார்த்தபோது அவனுக்கு நல்ல மூச்சு வந்தது. கரிச்சட்டி நின்றிருந்தான்.

“யாரு… மாரியா… என்னடா பயலே சேதி?’ என்றான் பவழப்பா. மாரி புன்னகை செய்தான்.

“இங்கிட்டு எப்படா வந்தே… சங்கதி என்னமாச்சும் இருக்கா?” என்றவாறு மாரியை உள்ளே அழைத்து வந்தான் பவழப்பா.

மாரிக்கு அவன் வயதுதான் இருக்கும். குறுகுறுத்த முகம், காது குத்தி வளையம் போட்டிருந்தான். கரிச்சட்டி மாதிரி நிறம். கரிச்சட்டி என்று அவனைக் கிண்டலாகச் சிலபேர் கூப்பிடுவார்கள். பவழப்பாவும் மாரியும் நெருக்கமான நண்பர்கள். மாரி அடிக்கடி வெளியூருக்குப் போய் வருவான். உறவுச் சனங்கள் சுற்றுக் கிராமங்களில் இருந்தார்கள். நாலைந்து நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் மாரி ஓலைச்சேரிக்கு வந்திருந்தான்.

“அங்கிட்டுப்போயி ஒரேமுட்டா தங்கிப் பூட்டியே… புது விசயம் என்னமாச்சும் கண்டுச்சா?”

“இல்லே பவளம்… முதல் வேட்டைக்குப் போனேன். ரொம்ப சந்தோசமாயிருந்துச்சி, பவளம்…” என்று இரண்டு பேரும் என்னென்னவோ பேசிக் கொண்டார்கள்.

“இந்தாலே பாரு, பவளம்! ஊரிலேந்து கொணாந்தேன்.”

மாரி துணி மடிப்பைப் பிரித்தான். பவழப்பா ஆவலோடு உதட்டை விரித்தான். ஐந்தாறு பனங் கிழங்குகளை அவனிடம் நீட்டினான் மாரி.

“விசயம் தெரியுமா?” என்று மூச்சுமுட்டக் கேட்டான் மாரி.

“என்னடா பயலே, மூச்சு பறக்குதே… கானாங்கோழி யாட்டம் கழுத்தே ஆட்டுறியே… பணிஞ்சு சொல்லுடா!”

“நம்ம ஊரண்டை பிடிக்கப் போறாகளாம்?”

“என்னத்தை? பாம்பையா, பன்னிக் குட்டியையா?”

“என்னா பவளம், எங்கிட்டியே பாய் மொடையப் பாக்கிறியே” என்றான் மாரி, அசட்டுச் சிரிப்பாக.

“நீதான் தேவாங்கு மாதிரி முளிக்கிறியே…”

“இல்லே பவளம், சினிமாப்படம் இருக்குதில்லே…”

“ஆமா… அதுக்கு என்ன வந்திச்சு?”

“நம்ம ஊரண்டெ படம் புடிக்கப் போறாகளாம்.”

“நெசமாத்தான் வெளம்புறியா, மாரி?”

“எதுக்குப் பதுக்கப் போறேன்? பொறவு நீனே தெரிஞ்சுப்பே.’ பாதிப் பனங்கிழங்கு கையில் இருந்தது; பாதி வாயில் இருந்தது. சினிமா என்றதும் பவழப்பாவின் நினைப்பெல்லாம் அசை போடுவதை மறந்துவிட்டது.

சினிமாக் கம்பெனிக்காரர்கள் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். பிரசித்திபெற்ற கோயில் இருந்தது. வெளிப்புறக் காட்சிகளைப் படமெடுத்துப் போக நட்சத்திரங்களோடு வந்திருந்தார்கள். ஊருக்குக் கிழக்கே ஏரிக்கரை காடு மாதிரி மரங்கள் மண்டிக் கிடக்கும். அந்த இடத்தில் சில காட்சிகளைப் பிடிக்கப் போகிறார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்டான் பவழப்பா.

தலை கால் புரியவில்லை. ஓணான் மாதிரி தலையசைத்தான் பவழப்பா. பக்கத்துக் கிராமங்களில், ‘டூரிங் சினிமா’ வரும். அம்மாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பவழப்பா படம் பார்க்கப் போவான். சினிமா என்றால் பைத்தியம். அதிலும் சண்டைப் படங்கள் என்றால் கொள்ளை ஆசை. சினிமா எடுக்கிறவர்களே ஊர்ப்பக்கம் வந்திருக்கிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும்!

“மாரி… மாரி…!”

“என்னா பவளம்?”

“எப்படிப் படம் பிடிக்கிறாகன்னு. பாக்கணும்… எளுந்திரு…”

“ரொம்ப வெயிலா இருக்கே.. பொறவு போவலாம். பவளம்.”

“பாத்துட்டுச் சுருக்கா ஓடியாரலாங்கிறேன்… ம் பொறப்படு.”

இரண்டு பேரும் எழுந்தார்கள்.

சரசரப்புக் கேட்டது. பார்த்தான் பவழப்பா. கொல்லைப் புறத்திலிருந்து அது வந்து கொண்டிருந்தது. ஆமாம்; பாம்புதான்! இத்தனை பெரிய பாம்பா? வேகமாக வந்து அது உத்தரத்தில் ஏறிச் சுற்றிக் கொண்டது. கதவை இழுத்துச் சாத்தியவாறு பவழப்பா புறப்பட்டான். கரிச்சட்டி தொடர்ந்து போனான்.

சொர்ணத்துக்கு ஆத்திரமாய் வந்தது. வெளியே எங்கும் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தும் பொறுப்பில்லாத பையனாக இருக்கிறானே! நாலுபக்கமும் பார்த்தாள் சொர்ணம். பனங்கிழங்கு உரித்ததும் உரிக்காததுமாகக் கிடந்தது. பவளத்துக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? சரி தான்; மாரி வந்திருப்பான்! கண்ட சோமாறிப் பயல்களோடு சுற்றுவதா? கண்டிக்க வேண்டும் என்று நினைத்தாள் சொர்ணம். சொர்ணத்துக்கு வெயிலில் வந்த களைப்பு. உட்கார்ந்தாள். அரிசியும் சில்லறைக் காசும் கிடைத்தன. வழக்கமாகக் கிடைக்கக் கூடியவைதான்!

மேலே பார்த்தாள். உத்தரத்தைத் தொற்றிக் கொண்டிருந்த பாம்பு கீழே விழுந்தது. சொர்ணத்தருகே வந்து சுருட்டி மடக்கிக் கொண்டு கிடந்தது. சின்னக் கண்களால் அந்தத் தாயைப் பார்க்கிறதோ! இலேசாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஓலைக் கட்டைக் கையில் எடுத்தாள் சொர்ணம், ஓலைப்பாய்க்கு அடி முடைவதில் ஈடுபட்டாள்.

பாம்பு பேசாமல் கிடந்தது. இன்று நேற்றா அது வீட்டில் இருக்கிறது? பவளம் பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த விஷப் பாம்பு மனையில் இருந்து வருகிறது. சொர்ணத்துக்குப் பிள்ளை மாதிரி அது. ஆச்சரியந்தான்! அதற்கு எல்லாம் தெரியும் அம்மாவுக்கும் மகனுக்கும் கட்டுப்பட்டது. சைகை செய்தால் போதும். எப்படித்தான் அதனால் புரிந்து கொள்ள முடிகிறதோ!

அடி முடைந்து ஓலையைச் சேர்த்துக் கொண்டிருந்தாள் சொர்ணம்.வாசலில் குரல் கேட்டது.

“யார் கூப்பிடறது?”

“….நான்தான்!”

புதிய குரலாக இருந்தது. பாம்பு தலை தூக்கியது சொர்ணம் வாசல் பக்கம் வந்தாள். தேவர் நின்றிருந்தார். தங்கப் பல்லைக் காட்டியவாறு.

“என்னாங்க ஐயா,விஷயம்?”

“ஒரு முக்கியமான சேதி!”

தங்கப்பல் மின்னியது. சோமுத் தேவரை சுற்றுப்புறம் அறியும். ‘ஏஜண்டுத் தேவர்’ என்றால் போதும். தரகு வேலையில் சமர்த்தர். நிலபுலன்கள் உண்டு. என்றாலும் காசின்மேல் குறி.

“அதிர்ஷ்டம் தேடி வருது, சொர்ணம்!”

“என்னா சங்கதின்னு சொல்லுங்க ஐயா!”

“பாம்பு இருக்குதில்லே. அதைப்பத்தித்தான்.”

“அதுக்கு என்னா வந்திச்சு?”

“கொஞ்ச நேரம் அதைக் கொடுக்கணும்…”

“எப்படி முடியும்?”

“என்னமோ சொர்ணம்… சினிமாக்காரங்க வந்திருக் காங்க. ஒரு கட்டத்திலே படம் பிடிக்கணுமாம் பாம்பை. அதுக்குத்தான் தேடிக்கிட்டு வந்திருக்கேன். கைநிறையக் காசு கிடைக்கும்.”

ஒரு நிமிஷம் எதையோ நினைத்தவாறு நின்றாள் சொர்ணம். தேவர் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார். படப்பிடிப்புக்குப் பாம்பு வேண்டும். அவசரத் தேவை.

“என்னாது யோசிக்கிறே? காசுன்னா கசப்பாக்கும். நூறு ரூபாய் வேணுமா? தரச் சொல்றேன்.”

“புண்ணியமாப் போவட்டும். போயி வாங்க. காசும் வேணாம்; பணமும் வேணாம்.”

“நிசமாத்தான் சொல்றியா?”

அப்புறம் ஒன்றிரண்டு வார்த்தை. தேவரின் முகம் கறுத்தது. திரும்பி அடியெடுத்து வைத்தார். பவழப்பா நின்றிருந்தான்.

பவழப்பா படப்பிடிப்பு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய்விட்டுத்தான் திரும்பினான். கரிச்சட்டி வழியிலேயே குடிசைக்குப் போய்விட்டான். தேவர் சொல்லிவிட்டுப் போனது அவன் நினைவில் சுழன்றது.

நாகமுத்து என்றால் போதும். அவன் நாலும் தெரிந்தவன். கூடை முடைவதில். கூண்டு பின்னுவதில் அவனைப்போல்

தேர்ந்தவர்களைப் பார்க்க முடியாது. சீப்புகள் செய்து விற்பான். காசு பணத்துக்குக் கவலையே யில்லை. பனங்காட்டுப் பக்கம் அடிக்கடி வேட்டைக்குப் போவதுண்டு. அங்கே முயல் பிரசித்தம். ஓலைச்சேரியில் பதினைந்து குடிசைக்காரர்களுக்கு அவன்தான் நாட்டாண்மை,

நாகமுத்துக்குப் பாம்போடு ஏற்பட்ட உறவுதான் ஆச்சரியமானது. எத்தனையோ பாம்புகளைப் பிடித்திருக் கிறான். பனங்காட்டுப் பக்கம் மகுடியை எடுத்துக் கொண்டு போனால் போதும். அவனுடைய அதிர்ஷ்டமோ என்னவோ. அநாயாசமாகப் பாம்பைப் பிடித்து வருவான். பாம்பாட்டிகள் அவனைப் பார்க்க அடிக்கடி வருவதுண்டு. பல்லைப் பிடுங்கிவிட்டு விற்றுவிடுவான். அவனுடைய பாம்பு ராசிதான் கோரமாக விளையாடிவிட்டது. மூன்று வருஷங்களுக்கு மேலாகிவிட்டன.

ஒரு நாள் நாகமுத்து புன்னகையோடு வந்தான். சொர்ணத்திடம் செய்தியைச் சொன்னான். சினிமாக்காரர்களுக்குப் பாம்பு வேண்டும். கொடுத்தால் நிறைப் பணம் கிடைக்கும். அதைத்தான் நாகமுத்து சொன்னான் சொர்ணம் மறுத்துவிட்டாள். மலைப் பாம்பு இருக்கிறது படம் எடுத்த பிறகு அவர்களிடமே வந்துவிடும். பிள்ளை மாதிரி வளரும் பாம்பு அது. சொர்ணம் முடியாது என்று திட்டமாகச் சொல்லிவிட்டாள்.

நாகமுத்து யோசித்துப் பார்த்தான். பண ஆசை விடவில்லை. வலிய வருகிற வாய்ப்பை உதறித்தள்ள மனம் இல்லை, இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும். யார் யாருக்கோ பாம்பு பிடித்துக் கொடுத்திருக்கிறான். அவனுடைய தேவைக்கு இல்லையென்றால் –

மகுடியை எடுத்தான் நாகமுத்து பனங்காட்டுக்குப் புறப்பட்டான். மூன்று நாழிகைக்குப் பிறகு அழகான பாம்போடு திரும்பினான். கருநாகமோ. கட்டுவிரியனோ…அது நாகமுத்துவுக்குத்தான் தெரியும். விஷப்பாம்பு என்றாலும் எத்தனை அழகாக இருக்கிறது! பல்லைப் பிடுங்கிவிட்டு எடுத்துப் போக வேண்டும். அதற்கு நேரமில்லை. நெஞ்சிலேதான் துணிச்சல் இருக்கிறதே! பாம்பை எடுத்துக் கொண்டு

கிளம்பினான் நாகமுத்து. இரண்டு நாழிகைக்குப் பிறகு ஓலைச்சேரியே ஒப்பாரி வைத்தது. வெட்டுண்ட பாம்பாகப் பதறினாள் சொர்ணம். அடிபட்ட குட்டிப் பாம்பாகத் துவண்டு பாய்ந்தான் பவளம். நாகமுத்துவின் கதை முடிந்துவிட்டது. பண ஆசை அவனைப் பலி கொண்டுவிட்டது.

சோமுத் தேவர் இப்பொழுது ஆசை காட்ட வந்திருக்கிறார். பாம்பு வேண்டுமாம். யார் உயிரைப் பலிவாங்கவோ?

பவளம் அப்பாவை நினைத்துக் கொண்டான் வருத்தமாக இருந்தது. சினிமா நினைப்பு வநதது. அச்சத்தையும் மீறி ஆசையாக இருந்தது.

மடைத் தலையருகே நாவல் மரத்தடியில் உட்கார்ந் திருந்தான் பவழப்பா, கால்வாயில் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. சற்று அப்பால் சாலை. கூப்பிடு தூரத்தில் ஓலைச்சேரி. பவழப்பாவின் கையில் பழைய புல்லாங்குழல் இருந்தது. மனத்தைக் கவரும் இடம். கரிச்சட்டியும் உட்கார்ந்திருந்தான்.

மெல்லக் கனைத்தான் கரிச்சட்டி.

இன்னுமாங் காட்டியும் மழங்குறே… ? வெட்டிப் போடுவியாம் வெசயத்தை…” என்றான் அவன்.

பவழப்பாவின் கையிலிருந்த புல்லாங்குழல் கரிச்சட்டியின் கரத்திற்கு மாறியது. குழலை இதழில் வைத்தான். காற்றை இழுத்தான். அவனுக்கும் நன்றாக ஊதவரும்.

‘சாமி யாண்டவரே!” என்று நெடு மூச்சுவிட்டான் பவளம். ஒருவித அசட்டுத் துணிவு எல்லாம் மாரியின் தூண்டுதல்தான். சோமுத்தேவர் சொல்லிவிட்டுப் போன செய்தியைப் பற்றித்தான் நினைப்பெல்லாம்: அம்மா சும்மா விடமாட்டாளே என்ற அச்சமுந்தான்.

படப்பிடிப்பு கொஞ்ச நேரம் இருக்கும். அதற்குப் பாம்பைக் கொடுத்தால் என்னவாம்? கை நிறைக் காசு தருவார்களே! ஆசை அவனை விடவில்லை. வீட்டிலேயே இருக்கிறது பாம்பு. எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம். நன்றியுள்ள பாம்பு! அப்படித்தான் பவளம் நினைத்தான். அம்மாதான் குறுக்கே நிற்கிறாள். பாம்பைக் கொண்டு போனால் அவனையும் கூடச் சினிமாவில் படம் பிடித்துக் கொள்ளக்கூடும் இப்படி ஒரு நினைப்பு. பவழப்பாவுக்கு.

கரிச்சட்டி குழல் ஊதிக் கொண்டிருந்தான். இனிமையாக இருந்தது. பவளத்தின் மனம் ஒரு நிலைக்கு வந்தது. ஊதிக் கொண்டிருந்த கரிச்சட்டி திடீரென்று நிறுத்தினான்.

“பவளம்…!”

“ஏண்டா நிறுத்திப் போட்டே?”

“அந்தாலே பாரு… தேவரய்யா வராப்போல காணுது…”

“ஆமா, இங்கனே எதுக்கு வருவாரு?” என்றான் பவளம்.

தேவர் அருகில் வந்தார்.

“டே. பவளம்!”

“என்னா எசமான்!”

“போவட்டும், ஒரு சேதிடா பயலே செய்ய முடியுமாடா?”

“சொல்லுவீங்களாம்…”

“ஒரு பாம்பு வேணும். நெறையக் காசு கிடைக்கும்.”

“எதுக்குங்க சாமி?”-தெரியாதவன்போல் கேட்டான் பவளம்.

“ஏரி மண்டபத்திலே சினிமாக்காரங்க வந்திருக்காங்க, இல்லே? அவங்க படம் எடுக்கப் போறாங்க. படத்திலே ஒரு பாம்பு வரணும். நீ கொண்டாருவியா? கொஞ்ச நேரத்து வேலைதான்.”

தேவர் ஆசை காட்டினார். சினிமாவில் சேர்த்து விடுவேன் என்று கூடச் சொன்னார். தங்கப்பல் சிரிப்புக்குத் தனியாற்றல்! இல்லையென்றால் இவ்வளவு பெரிய தரகராக அவர் பெயர் சொல்ல முடியுமா? இரண்டு பொடியன்களும் தஞ்சாவூர்ப் பொம்மையானார்கள். சீக்கிரம் பாம்போடு வந்து சேர வேண்டும் என்றார். போய்விட்டார் தேவர்.

“மாரி… என்னடா பண்றது?”

“ஏன் முளிக்கிறே. ஊட்லே தங்கமாட்டம் சர்ப்பத்தை வச்சிக்கிட்டு?”

“அம்மாவை நெனைச்சா, பயம் உசிரைப் போக்குதுடா;”

“இந்தப் பாரு, ஆத்தா மனையிலே யில்லா நேரம் பாத்துப் பொட்டியிலே எடுத்துட்டுப் போனாப் போச்சு… நான் எல்லாம் பாக்கறேங்காட்டியும். ஏந்திரு சுறுசுறுப்பா… இப்பவே போவணும்.” – பவளத்தைத் தட்டிக் கொடுத்தான் கரிச்சட்டி.

பவழப்பாவுக்குப் படபடப்பு. இதயம் ஏன் இத்தனை வேகமாக அடித்துக் கொள்கிறது? அப்பாவைப் பற்றிய நினைப்பு வந்துவிட்டதோ? சூனியமான மனத்தோடு பவளம் நின்றிருந்தாள்.

அதையும் மீறிய மலர்ச்சி ஒவ்வொரு கணம். சினிமா மயக்கமா? அசட்டுத் துணிவு! அம்மாதான் வீட்டில் இல்லேயே!

“சாமியாண்டவரே. நீ தான் காப்பாத்தணும்” என்று மகுடியை எடுத்தான் பவளம். அதுவே பாம்பாக அவன் கண்முன் நெளிந்தது. மனப்பிராந்திதான் எல்லாம். பாம்புப் பெட்டி ஒன்று பரண்மேல் கிடந்தது. பழையதுதான். நாகமுத்து வைத்திருந்தது. அதைத்தேடி எடுத்தான். மகுடியை வாயருகே கொண்டு போனான். கை நடுங்கியது. மெல்ல ஊதினான்.

சரசரப்பு! பார்த்தான். அருகே வந்தது பாம்பு. திறந்து கிடந்த பெட்டியைச் சாய்த்தான், வாலையழுத்திச் சுருட்டிக் கொண்டு. பெட்டிக்குள் வந்தது பாம்பு.

“பவளம். பவளம்…” – கரிச்சட்டி மாரியின் குரல்.

“எல்லாம் முடிஞ்சுதா, பவளம்?”

“ஆமடா!”

வாசலில் சைக்கிள் மணியோசை! தேவர் தான் நின்றிருந்தார்.

“ம்… சீக்கிரம்… ஏரி மண்டபத்திலே எல்லாருமா காத்துக்கிட்டு இருக்காங்க… சுருக்கா பொறப்படு.”

தேவர் சைக்கிளில் பறந்தார்.

ஓலைச்சேரி ஓய்ந்து போயிருந்தது. அம்மா வரும் நேரமல்ல அது. எப்படியோ இரண்டு பேரும் நடந்தார்கள். பவளத்துக்கு மகிழ்ச்சியோடு மயக்கமும் இல்லாமலில்லை.

ஏரிக்கரை கண்ணுக்குத் தோன்றும் இடமெல்லாம் தாழம்புதர்கள். குவளை மலர்கள்; தாமரைப் பூக்கள்! நீர்ப் பறவைகள்! கலவையொலிகள்! அழகான இடம். ஆள் நடமாட்டம் குறைவு, பளிங்கு மாதிரித் தெளிந்த நீர். இரண்டு மூன்று பெரிய பெரிய படித்துறைகள் உண்டு. முதலைகள் உண்டு என்றுகூடப் புரளி. இப்பொழுது அந்த இடத்தில் கலகலப்பு, சினிமாக்காரர்கள் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக் கிறார்கள்.

பவழப்பாவைச் சுற்றிக் கூட்டம். பட டைரக்டர். காமிராக்காரர். மற்ற மற்ற ஆசாமிகள்… பெரிய பெரிய மனிதர்கள். பவழப்பாவுக்கு என்னவோ போல் இருந்தது. என்றாலும் ஒரு பெருமை. எல்லோரும் அவனைப் பார்க்கிறார்களே!

“பாம்பு எப்படி, நன்றாக இருக்கிறதா?”-டைரக்டர் கேட்டார்.

“ஆமாம்; பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இந்த மாதிரிப் பாம்பெல்லாம் அற்றுப்போய்விட்டன இப்போது…” சோமுத் தேவருக்குப் பேசவா தெரியாது?

“பிரகாஷ்” என்றார் டைரக்டர்.

பிரகாஷ் என்ற அந்தச் சிறுவன் செக்கச் செவேலென்று அழகாக இருந்தான். கரிச்சட்டிக்கு நேர் எதிர். கட்டான. களையான முகம். அந்தப் பையன்தான் பாம்புக் காட்சியில் நடிக்க வேண்டும். ஏரிக்கரையருகே படுத்திருக்கும்போது பாம்பு வரும். அவன்மேல் ஊர்ந்து வரும்… இப்படி ஒரு விதமாகக் கதை செல்லும்.

“பாம்பைப் பார்க்கிறாயா?”

“பார்க்கலாம், ஸார்” என்றான் பிரகாஷ்.

பெட்டியைத் திறக்கச் சொன்னார் தேவர். பரபரப்போடு திறந்தான் பவளம். சுருட்டி மடக்கிக் கொண்டு கிடந்த நாகம் அசைந்தது.

டைரக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு பெரிய பாம்பா? பிரகாஷ் நடுங்கிப் போனான்.

“பிரகாஷ், பாம்பு எப்படி இருக்கிறது?”

மிரள மிரள விழித்தான் பிஞ்சு நடிகன்.

“பயமா இருக்கு. ஸார்…”

“இவ்வளவு பெரிய பாம்பைப் பார்த்ததேயில்லை… விஷப் பாம்பாக இருக்கும் போல் தெரியுது.”

ஒரு கணம் யோசித்தார் டைரக்டர்.

“என்னாப்பா… பல் பிடுங்கின பாம்புதானே?”

பவளம் தயங்கினான்.

“இல்லீங்க…”

“அப்படீன்னா என்னால் முடியாது ஸார்” என்றான் பிரகாஷ்.

“நல்ல பாம்பு… ஒண்ணுமே செய்யாதுங்க” என்றான் பவளம்.

கொஞ்ச நேரம் அமைதி!

டைரக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பிரகாஷிடம் ஏதோ கேட்டுப் பார்த்தார். மறுத்து விட்டான். வேறு வழி…? சோமுத் தேவரிடம் காதைக் கடித்தார் டைரக்டர்.

“பவளம்…” என்றார் தேவர்.

“என்னாங்க?”

“இந்தா பாரு… பல் பிடுங்காத பாம்புன்னு இந்தத் தம்பி பயப்படுது. அதனாலே… அந்தக் கட்டத்திலே நீதான் வரணும். சரிதானே?”

பவளம் கரிச்சட்டியைப் பார்த்தான். கரிச்சட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டான். பவழப்பாவுக்கு உடம்பெல்லாம் ஏனோ நடுங்கியது.

“நேரமாச்சு; ரெண்டு நிமிஷ வேலைதான். சட்டுன்னு சொல்லு…”

டைரக்டர் குரல் எழுப்பினார். பவளத்தையே அத்தனை கண்களும் பார்த்தன. பரிதாபமாக நின்றிருந் தான். பீதி! இரவல் நடிப்பு. எப்படியோ ஒப்புக் கொண்டான். நாகமுத்துவின் உருவம் கண்ணில் வந்து சுழன்றது.

இரண்டு நிமிஷத்தில் ஏற்பாடுகள் முடிந்தன. பவளம் படுத்தவுடன் பாம்பு நெளிந்து வந்து அவன் மேல் புரள வேண்டும். இன்னும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள்!

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது பாம்பு. பவளம் மண்டபத்தில், ஏரிக்கரையில் படுத்திருந்தான். காமிராக்காரர் கவனத்தோடு நின்றிருந்தார்.

மரத்திலிருந்து பாம்பு கீழே விழுந்தது. பவளத்தை நோக்கிச் சரசரவென்று வந்தது.

“கட்…கட்…” என்ற ஒலி.

அருகே வந்தது பாம்பு. தலையைத் தூக்கியது. எட்டி நின்றவர்கள் படபடப்போடு பார்த்தார்கள். இத்தனை பெரிய பாம்பா? பழகிய பாம்பு என்றாலும் எப்படி நம்புவது? பாம்பு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.

“கட்… கட்” என்ற ஒலி.

பவழப்பாவின் உடம்பில் புரண்டது. ஒரு கணம். இரண்டு மூன்று என முறிந்தன. சற்றுப் புறத்தைத் தலைதூக்கிப் பார்த்தபோது எதிரே நின்ற அத்தனை பேரையும் சின்னக் கண்ணால் படம் பிடித்தது பாம்பு. இவ்வளவு அழகான பாம்பா? எவ்வளவு பெரிய பாம்பு! இத்தனை பெரிய படமா? எல்லோரும் வியந்து போய் நின்றார்கள். கண்ணைப் பிடுங்கி வைத்துவிட்டார்களே!

என்ன உணர்வு ஏற்பட்டதோ. பாம்பு சீறியது. பயந்து பயந்து புரண்டது. படமெடுத்து ஓங்கி ஓங்கித் தரையை அடித்தது. “கட் கட்” என்ற ஒலி மீண்டும்.

ஒரு கணம்..தலையைப் போட்டது அவன் மேல். கொத்திப் பிடுங்கியது போன்ற சீற்றம், ‘ஐயோ பவளம்!” என்று அலறினான் கரிச்சட்டி. துள்ளிக் குதித்த அவன் கையிலிருந்து மகுடி எட்டிப் பாய்ந்தது. அதிர்ச்சி; படபடப்பு : மண்டபப் பாறையில் விழுந்து, துண்டுபட்டுச் சிதறியது பவளத்தின் அழகு மகுடி!

பாம்பு வெறியோடு சீறிப் பாய்ந்தது. சரசரப்போடு மறைந்தது.

“கட்…கட்” ஒலிக்குப் பிறகு வெற்றிப் புன்னகை செய்தார் டைரக்டர். சோமுத் தேவரின் உடம்பு ஆடியது. பவழப்பா அசையாமல் கிடந்தான்.

பாம்பு நன்றாகப் போட்டுத்தீர்த்துவிட்டதோ? கரிச்சட்டிக்குப் பொறுக்கவில்லை.

“மோசம் நடந்து போச்சுங்க. என்னமோ பண்ணிப் போட்டது சர்ப்பம்…” என்று ஒப்பாரி வைத்தான் கரிச்சட்டி மாரி. பவளத்தை நெருங்கிப் போய்ப் பார்த் தார்கள். முத்து முத்தாக வேர்த்திருந்தது. உடம்பு மட்டும் அசையவில்லை. சோமுத் தேவர் கண்கொட்டவில்லை.

“என்னங்க, பாம்பு போட்டுட்டுதா?”

“தெரியல்லை. ரெண்டு நிமிஷம் போகஸம்” என்றார் தேவர்.

விபரீதமா எதுவும் நடந்திடக் கூடாது. பாவம் சின்னப் பையன்!’ – அனுதாபக் குரல்கள்.

“சார். ரெயிலுக்கு நேரமாச்சு. ஸ்டேஷனுக்குச் சீக்கிரமாப் போனால் தான் வண்டியைப் பிடிக்க முடியும்.” – டைரக்டரிடம் நினைவுபடுத்தினார் ஒருவர்.

“ஆமாம்… இன்னும் பத்து நிமிஷந்தான். புறப்படணும்… ஸார். இந்தப் பையனைப் பார்த்துக் கொள்ளுங்கள் இதோ இருக்கிறது பணம்” என்றார் டைரக்டர்.

சோமுத் தேவர் கை நீட்டினார்.

அவ்வளவுதான்; அடுத்த கணம் தேவர். கரிச்சட்டி, பவழப்பாவைத் தவிர யாருமே நிற்கவில்லை. சோமுத் தேவருக்கு முகம் வெளுத்துப் போயிருந்தது. கரிச்சட்டிப் பயல் ஊரெல்லாம் தமுக்குப் போட்டு விடுவானே! பயம், ஒரே பயம். தரகரின் பாடு அப்புறம் என்னாவது? ஓலைச்சேரியே படையாகத் திரண்டு வந்துவிடுமே!

“டேய், மாரி…!”

“என்னங்க?”

“கொஞ்ச நேரம் இங்கேயே நில். வைத்தியரைக் கூட்டியாறேன். இந்தப் பணத்தைக் கையிலே பிடி. ரெண்டு நிமிசத்திலே காத்தாப் பறந்து வந்துடறேன்…”

தேவர் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான் தெரியும். தலை தப்பியது என்றவாறு ஒரு கும்பிடு போட்டு விட்டுப் பறந்து போனார். அந்தப் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்க்க அவருக்கு என்ன, பைத்தியமா?

கரிச்சட்டிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பவளத்தின் மேல் அவனுக்கு ஆசை கொஞ்சமா? அவன் உடம்பெல்லாம் நடுங்கியது. கையிலிருந்த பணத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பவளத்தையே வெறித்துப் பார்த்தான். உடலில் மாறுதல் இல்லை. விஷப் பாம்பு கடித்தால் உடம்பு நீலம் பூத்துப் போகுமே! அப்படி ஏதும் இல்லை. அதனால்…அதனால்! என்ன நினைத்தானோ. மாரி! பாசிப் படித்துறைக்கு ஓடினான். தாமரை இலையில் தண்ணீரை முகந்து வந்தான்.

பவழப்பாவின் முகத்தில் நீரைத் தெளித்தான். ஒரு நிமிஷம் ஆகியிருக்கும். மெல்ல அசைவு, மேனியில்! புரண்டான் பவளம். இமைகள் மெதுவாகத் திறந்தன. விழித்துப் பார்த்தான் பவழப்பா!

“பவளம்…!”

“என்ன, மாரி?”

“இப்பத்தான் உசுரு வந்திச்சு. பவளம்… என்னமாங் காட்டியும் பயந்து செத்தேன்… ஆண்டவரு புண்ணியம்!”

“என்னா நடந்திச்சு, மாரி?”

“சர்ப்பம் தீண்டிப் போட்டதுன்னே அல்லாருமா நெனைச்சுப் போட்டாங்க… நல்ல காலம்!”

“இல்லே, மாரி… மசங்கிப் போனேன். அப்பாரு. நெனைப்பு வந்திச்சு. தலை சுத்திச்சு…”

“போவுது. அந்த சினிமாக்காரங்க பஞ்சாப் பறந்து போயிட்டாங்க… தேவரும் ஓடிட்டாரு… பாம்பு கடிச்சிட்டதுன்னு நெனச்சித்தான் இப்பிடி…”

பவளம் எழுந்து உட்கார்ந்தான்.

“இப்ப என்ன பண்றது மாரி? பாம்பு எங்ஙனே போச்சு?”

“களேபரத்திலே நாலு பாச்சல்லே ஓடிப் போச்சுது, பாம்பு” என்றான் கரிச்சட்டி.

உடைந்து கிடந்த மகுடி அவன் கண்ணைக் கொத்திப் பிடுங்கியது. அம்மாவின் நினைப்பு அவனை ஆட்டியது. செய்தி தெரிந்தால் என்னவெல்லாம் செய்வாளோ என்ற நடுக்கம். மனம் மருள நடந்தான். பவளம். கரிச்சட்டி தந்த பணம் கால் சட்டைப் பையில் இருந்தது. முகத்தில் சவக்களை!

வாசலில் அடியெடுத்து வைத்தான் பவழப்பா. நெஞ்சு நடுங்கியது. அம்மா இருந்தாள். மெல்ல உள்ளே வந்தான். அம்மா இதை அறிவாளா? பணத்தை எப்படிக் கொடுப்பது? தயக்கம்: மயக்கம்: நடுக்கம்: ஓடுங்கியது உள்ளம்.

அம்மா தூண் மாதிரி நின்றிருந்தாள்.

“அம்மா!” என்றான் பவளம்.

சொர்ணம் பேசவில்லை. திரும்பிப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் மூட்டம். துடிதுடிப்போடு அம்மாவின் அருகே வந்தான். நிலத்தைப் பார்த்தான். தீயை மிதித்தது போல் துள்ளினான்.

“ஐயோ. அம்மா!” என்று அலறத்தான் அவனால் முடிந்தது. மின்னல் கண்ணைப் பறித்ததுபோல் கலங்கித் தவித்தான்.

அங்கே – பாம்பு! ஆமாம், அவர்களின் பாம்புதான்! சுருண்டு கிடந்தது. அசைவேயில்லை. செத்துப்போய் … செத்துப்போய் விட்டதா?

விக்கி விக்கியழுதான் பவழப்பா.

சினிமாப் பணம், செத்த பிணமாகப் பையில் இருந்தது.

– 1960 – ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *