தன் முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுநிசியில் நீ ஏன் இப்படி சிரமப்படுகிறாய்? உன்னையாராவது ஒரு மந்திரவாதியோ அல்லது முனி வரோதான் இவ்வாறு செய்யத்தூண்டி இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கள் நேரடியாகத்தம் சக்தியை உபயோ கிக்காமல் உன்னைக் கொண்டு பயன் படுத்த எண்ணி இருக்கலாம். இதற்கு உதாரணமாக கோரமுகி என்ற ராட்சஸியைப் பற்றிக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.
வெகு காலத்திற்கு முன் தண்டக *வனப்பகுதியில் கோரமுகி என்ற ராட்சஸி வாழ்ந்து வந்தால். அவளுக்கு மனித மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் வசித்து வந்தது ஒரு பெரிய குகையில், அப்பகுதியில் யாராவது ஒரு மனிதன் வந்து விட் டால் அவனைப் பிடித்து கொன்று விழுங்கி விடுவாள்.
ஒருமுறை அவளுக்கு ஒரே பசி. அவள் உண்ண ஏதாவது கிடைக்குமா வெனக் காட்டில் அலைந்து திரியலா னாள். ஓரிடத்தில் அவள் ஞான சீலர் என்ற முனிவர் ஒரு மரத்தடியே அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டாள்.
கோரமுகி மகிழ்ந்து போய் அவரை அணுகினாள். ஆனால் அவரைச் சுற்றி நெருப்பு வளையம் இருப்பது கண்டு திகைத்து நின்றாள். அப்போது அம் முனிவர் கண்ணைத் திறந்து “கோர முகி! மனிதர்களைக் கொன்று தின்னும் இப்பிறவியை விட்டு விடு. நாளைக்கு நல்ல புனித நாள். சிவராத்திரி. எந்த மனிதனையும் கொன்று தின்னாமல் கடவுளை தியானம் செய். அப்போது ஒரு மனிதனிடமிருந்து எல்லாப் பாவங்களையும் போக்கும் கங்கை நீர் உனக்குக் கிடைக்கும். அதனால் நீ இந்த ராட்சஸப் பிறவியை விட்டு நற்கதி அடைவாய்” என்று கூறினார்.
கோரமுகி முனிவரை வணங்கி “மகாத்மாவே தாங்கள் கூறியபடியே செய்கிறேன்” எனக் கூறி அங்கிருந்து தன் குகைக்குச் சென்று இருக்கலானாள். அப்போதும் அவள் பசியால் துடித்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் சிவராத்திரி. நாகலிங்கம் என்ற பக்காத் திருடன் குதிரை மீது அமர்ந்து வருவதை கோரமுகி கண்டாள். அவள் பசி தாங்க முடியாமல் குகைக்கு வெளியே வந்து அவனைப் பிடித்துக் கொண்டு “யார் நீ?” என்று கேட்டாள். நாகலிங்கமும் “நான் ஒரு பக்காத் திருடன். என் பெயர் நாகலிங்கம். சற்று முன் சென்ற ஒருகல்யாணக் கூட்டத்தினரைத் தாக்கி அவர்களது நகைகளையும் பணத்தையும் பறித்தேன். அவற்றை எல்லாம் உனக்கே கொடுத்து விடுகிறேன். என்னை விட்டு விடு” என்று கெஞ்சிக் கேட்டான்.
அதைக் கேட்டு கோரமுகி பலமாகச் சிரித்து “அடே அற்பனே!, உன் பணமும் நகைகளும் எனக்கு எதற்கு? எனக்கு ஒரே பசி. நான் உன்னை விட மாட்டேன்” என்று கூறி அவனைக் கொன்று தின்று விட்டாள். அப்போது சற்று தூரத்தில் இன்னொரு மனிதன் வருவதைக் கண்டு ஓடி அவனைப் பிடித்துக் கொண்டாள்.
அவனிடம் அவள் “யார் நீ?” என்று கேட்டாள். ராட்சஸியைக் கண்டு நடுநடுங்கிய அவன் “என் பெயர் ரங்கதாசன். நான்கலிங்க மன்னனிடம் சமையல்காரனாக வேலை பார்த்து வந்தேன். திடீரென மன்னர் என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டார். அதனால் வேறு இடத்தில் வேலை கிடைக்குமா என்று போய்க் கொண்டிருக்கிறேன்” என்றான்.
கோரமுகி அவனை ஏற இறங்கப் பார்த்து “மன்னர் உன்னை எந்தக் காரணமும் இல்லாமலா வேலையை விட்டு நீக்கினார்? நீ ஏதாவது தவறு செய்திருப்பாய். உண்மையைச் சொல்” என்று மிரட்டினாள்.
ரங்கநாதன் ‘திரு திரு ‘வென்று விழித்தவாறே “ராட்சஸியே! உண்மையைச் சொல்லி விடுகிறேன். என்னைக் கொல்லாமல் விட்டு விடு. வேற்று நாட்டு மன்னன் எனக்கு நிறையப் பணம் கொடுத்து மன்னரின் உணவில் விஷம் கலக்கச் சொன்னான். நான் விஷத்தை உணவில் கலக்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டேன்” என்றான்.
அது கேட்டு கோரமுகி பலமாகச் சிரித்து “ஓ! அந்த மன்னனின் தண்டனைக்குத் தப்பினாய். ஆனால் என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய்” என்று கூறி அவனைக் கொன்று விழுங்கி விட்டாள்.
அப்போது சௌந்தரியன் என்ற இளைஞன் அவ்வழியே வரவே கோரமுகியும் “அடே பயலே! நில் இன்றோடு உன் ஆயுள் முடிந்தது. தெரிந்ததா?” என்று கத்திக் கொண்டே அவனை நோக்கி ஓடி வந்தாள். சௌந்தர்யனோ ராட்சஸியைக் கண்டு சற்றும் பயப்படாமல் “நான் ஏன் நிற்க வேண்டும்?” என்று கேட்டான். கோரமுகியோ பலமாகச் சிரித்து “உன்னை ஏன் நிற்கச் சொன்னேன் என்று இன்னமும் உனக்குப் புரிய வில்லையா? இதுவரை இரண்டு மனிதர்களைக் கொன்று தின்றும் என் பசி அடங்கவில்லை . அதற்காகத்தான் உன்னை நிற்கச் சொன்னேன்” என்றாள். சௌந்தர்யனும் சற்றும் பயப் படாமல் “அப்படியா? என்னைக் கொன்று தின்று தாராளமாக உன் பசியை அடக்கிக் கொள். என் உடல் யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படும் என்றால் அதற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான் சிரித்துக் கொண்டே.
அதைக் கேட்ட கோரமுகி ஆச்சரியப்பட்டு “உன் உயிர் போகப் போகிறதே என்று நீ சற்றும் பயப்பட வில்லையா?” என்று கேட்டாள். சௌந்தர்யனும் பயமா? பிறந்த எந்த மனிதனும் என்றாவது ஒருநாள் இறக் கத்தானே வேண்டும்? ஏதாவது ஒரு நோய்வாய்ப்பட்டு அவஸ்தைப்பட்டு இறப்பதை விட உனக்கு உணவாகி இறப்பது ஒரு புண்ணியமான செயல் தானே” என்றான்.
அதைக்கேட்ட கோரமுகி அவன் யாரோ ஒரு மகான் என்று எண்ணினான். பிறகு ஏதோ சந்தேகப்பட்டவள் போல அவனைத் தன் இடதுகையால் உயரத் தூக்கினாள். அப்போது அவன் “சற்று நில். என் மனைவி நோயுற்றுப் படுத்த படுக்கையாகக் கிடைக்கிறாள். அவளுக்கு கங்கை நீர் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டு காசிக்குப் போய் விட்டு கங்கை நீருடன் வந்து கொண்டிருக்கிறேன். இந்த நீர் அவளிடம் எப்படியும் சேரப் போவதில்லை. அதனால் நீயாவது இதனால் பயனடை” என்றான்.
உடனே கோரமுகி சௌந்தர்யனைக் கீழே இறக்கிவிட்டு “ஐயா புண்ணிய புருஷரே! இந்தக் கங்கை நீரை உங்கள் மனைவியிடமே சேர்த்து விடுங்கள்” என்று கூறி அவனது கால்களில் விழுந்து வணங்கினாள். அவள் அவளது பாதங்களைத் தொட்டதுமே அவளது உயிர் உடலை விட்டுப் பிரிந்து மோட்சத்தை அடைந்தது.
வேதாளம் இந்தக் கதையைக் கூறி “மன்னனே! ஞானசீல முனிவர் கோரமுகியிடம் சிவராத்திரியன்று எதுவுமே சாப்பிடாமல் கடவுளை தியானம் செய்யச்சொன்னார். ஒரு மனிதன் கொடுக்கும் கங்கை நீரில் அவளது ராட்சஸிப் பிறவி போய் மோட்சம் அடைவாள் என்று கூறினார். ஆனால் கோரமுகி அன்று இரண்டு மனிதர்களைக் கொன்று தின்றாள். சௌந்தர்யனைக் கொல்லாமல் விட்டாலும் அவன் கொண்டு வந்த கங்கை நீரை வாங்கிக் கொள்ளவில்லை. அப்படி இருந்தும் அவளுக்கு மோட்சம் கிடைத்தது. இது எப்படி நிகழ்ந்தது? இதற்குச் சரியான விடை தெரிந்தும் நீ இப்போதே கூறா விட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும்” என்றது.
விக்கிரமனும் “கோரமுகி கொன்ற இருவரில் ஒருவன் பக்காத் திருடன். மற்றவன் தன் எஜமானனுக்கே துரோகம் செய்ய நினைத்தவன். இதனால் அவர்கள் மனிதர்களல்ல. ராட்சஸர்கள் என்றாகி விடுகிறார்கள். அதனால் தான் கோரமுகி அவர்களை சிவராத்திரியன்று கொன்று தின்ற போதிலும் எவ்விதப் பாவமும் அவள் அடையவில்லை. கோரமுகி கங்கை நீரைப் பயன்படுத்தாவிட்டாலும் அவள் மோட்சத்தை அடைந்ததற்குக் காரணம் சௌந்தர்யனின் மனப்பான்மையே. சாவின் பிடிப்பில் இருந்தும் அவன் கோரமுகியை வெறுக்காமல் அவள் மோட்சம் அடைய கங்கை நீரைக் கொடுப்பதாகக் கூறியது அவனை கங்கையை விடப் புனித மானவனாக ஆக்கிவிட்டது. கங்கையிலும் மேலான அவனது பாதங்கள் கோரமுகியின்மீது பட்டதும் அவளது ராட்சஸப் பிறவி நீங்க, அவள் மோட்சத்தை அடைந்தாள். இதுதான் நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்குச் சரியான விடையாகும்” என்று கூறினான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக்கிளம்பி மீண்டும் முருங்க மரத்தின் மீது ஏறிக் கொண்டது.
– ஜனவரி 1996