கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,068 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

கேட்டு அறியவேண்டியவைகளைக் கற்றவரிடம் கேட்டல்

திருப்பூவணம் என்ற ஊரில் புஷ்பவனக் குருக்கள் என்பவர் அவ்வூரில் உள்ள ஆலத்தில் விளங்கும் தெய்வத்தைப் பூசைசெய்து வந்தார். இவர் கல்வி கற்கவில்லை. ஆயினும், தம் தந்தை யார் கூறும் மந்திர மொழிகளையும் தந்திரச்சொற் களையும் கேட்டவர். இவ்வூர் சிவகங்கை சமஸ்தான ஆட்சியைச் சேர்ந்திருந்தது. அச் சமஸ்தானத் தலைவர் மருதபாண்டியர். இப்பாண்டியர் தாம் காளையார் கோவிலுக்குச் செய்யும் தேர் அச்சு மரத் திற்காக இக் குருக்கள் பூசை செய்யும் கோயிலுக்கு எதிரில் உள்ள மருதமரத்தை வெட்டிவரச் சொன்னார். ஆள் சென்று வெட்டப்போகும்போது குருக் கள் போய், “அரசன் மேல் ஆணையாக வெட்டக் கூடாது” என்றார். வெட்டவந்த ஆட்கள் அர சரிடம் போய்ச் சொல்ல, அரசன் தம்படையுடன் புறப்பட்டு மரமுள்ள இடத்திற்கு வந்தார். வந்து குருக்களைக் கண்டு, “அரசன் ஆணையை மீறிய ஆணை உண்டா? என்றார். குருக்கள், “அரசனுடைய கோபத்திற்கு ஆளாகி விட்டோம்” தண்டனை அடையும் இந்த ஆபத்து சமயத்தில் தந்தை “வழி படவந்த பிறரைக் கண்டபோது தாங்கள் இன்ப மாகவாழ நான் பூசைசெய்து வருகிறேன்” என்று சொல்லிய தந்திரமொழியைத் தவிர வேறு மந்திரம் இல்லை என்று தெளிந்து, “மகாராஜாவே! தங்கள் ஆணைக்கு மீறிய ஆணை எந்த உலகிலும் இல்லை. இந்தமரம், பலமக்களுடைய தாபத்தைப் போக்கி அவர் உள்ளம் குளிரச்செய்து நிழலளித்து மகா ராஜாவைப்போல் விளங்கி நிற்கின்றது. மேலும் இந்த அருமையான மரம் மகாராஜாவுடைய பெய ரைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. நிற்கும் இந்த மரம் தங்களை எந்நேரமும் ஞாபகப் படுத்துவதால் தங்கள் க்ஷேமத்தையே குறித்து இறைவனிடம் எந்நேரமும் என் பிரார்த்தனை நடந்துகொண்டிருக் கிறது. இத் தன்மையுள்ளதை வெட்டலாமா?” என்று குருக்கள் கூறி நிறுத்தினார். மருத பாண்டி யர் கோபம் நீங்கி, என்மீதுள்ள உண்மை அன்பே என் பெயர் தாங்கிய மரத்தை வெட்டத் தடுக்கச் செய்தது; நீர் செய்தது சரியே! இம்மரத்தை வெட்ட வேண்டாம் என்று சொல்லிச் சென்றனர். பின் வரும் குறளிலும் இக்கருத்து உள்ளது.

நுணங்கிய கேள்வியர் அல்லார்
வணங்கிய வாயினர் ஆதல் அரிது.

நுணங்கிய = நுட்பமாகிய
கேள்வியர் அல்லார் = கேட்டலால்வரும் அறிவு இல்லாதவர்
வணங்கிய = பணிவைக் காட்டுகின்ற
வாயின ராதல் = சொல்லை உடையவராகுதல்
அரிது = முடியாது.

கருத்து: நுட்பமான கேள்வி அறிவுள்ளவர் பணிந்த மொழிகளைப் பேசுவர்.

கேள்வி: பணிந்த சொல்லையுடையவர் எவர்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *