குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 13,990 
 
 

ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு அப்பத்தை எடுத்தன. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.

இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது.

அப்பத்தை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது.

இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.

இப்படியே அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது.

ஒற்றுமையற்ற பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.

குழந்தைகளே! ஒரு பூனையாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இத்தனை நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? விட்டுக் கொடுத்தல் பிறரிடம் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், இறைவனுக்கும் அதுவே பிடிக்கும்.

1 thought on “குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

  1. திஸ் ஸ்டோரி மூலம் விட்டு கொடுக்கும் மனப்பான்மையை கற்றுக்கொடீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *