தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: இளம் எழுத்தாளர்கள் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 211,581 
 
 

ஒரு குட்டிப் பூனை காடு வழியே போய்க் கொண்டிருந்தது.

போகும் வழியில் ஒரு நரியைக் கண்டது.

நரி, பூனையிடம், “”உன் கால்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. எனக்கு அவற்றைத் தருவாயா?” என்று கேட்டது.

குட்டியாக இருந்தாலும் அந்தப் பூனைக்கு புத்திசாலித்தனம் அதிகம்.

குட்டிப் பூனையின் கதைஅது நரியைப் பார்த்து, “”நான் மிகவும் மெல்லியதாக இருக்கிறேன்… அதனால் வீட்டுக்குச் சென்று நன்றாகச் சாப்பிட்டு கொழுகொழு என்று ஆன

பிறகு வருகிறேன். அப்போது நீ கேட்டபடி எனது கால்களை உனக்குத் தருகிறேன்” என்றது.

நரியும் சரியென்று தலையாட்டவே, பூனை தன் வழியே சென்றது.

இதே போல, அந்தக் குட்டிப்பூனை போகும் வழியிலெல்லாம் நிறைய விலங்குகளைச் சந்தித்தது. அவையெல்லாம் பூனையின் உடம்பிலிருந்து ஒவ்வொரு பாகங்களைக் கேட்டன.

பூனை மீண்டும் மீண்டும், “”நான் வீடு சென்று கொழுகொழுவென்று வளர்ந்து, பிறகு வந்து நீங்கள் கேட்ட பாகங்களைத் தருகிறேன்” என்ற பதிலைக் கூறிவிட்டுத் தன் வழியே தொடர்ந்து சென்றது.

பூனை வீட்டுக்குச் சென்றதும், முதல் வேலையாக சுரைக்காய் விதையைத் தேடியெடுத்து நிலத்தில் புதைத்து வைத்தது. அதற்கு நீரும் ஊற்றியது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த தாய்ப்பூனை, “”என்னைக் கூடப் பார்க்காமல் அப்படி என்ன செய்கிறாய்?” என்று கேட்டது.

குட்டிப் பூனை, “”எல்லாம் ஒரு காரணமாகத்தான்…” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு வரும் வழியில் தனக்கு நிகழ்ந்தவற்றையெல்லாம் அம்மாவிடம் விவரமாகக் கூறியது.

ஒருமாதம், அம்மா வீட்டிலிருந்து நன்றாகச் சாப்பிட்டு கொழுகொழுவென்று வளர்ந்தது.

அதே போல பூனை விதைத்த சுரைக்காய் விதையும் முளைத்து பெரிய கொடியாக மாறி நிறையச் சுரைக்காய்கள் காய்த்தன.

அதில் பெரிதாக ஒரு சுரைக்காயை பிடுங்கி எடுத்து, அதைப் பாதியாக வெட்டி அதற்குள் தன்னை வைத்து உருட்டி விடுமாறு தாய்ப்பூனையிடம் கேட்டுக் கொண்டது.

அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லையென்றாலும், குட்டி சொன்னபடி சுரைக்காய்க்குள் அதை வைத்து உருட்டி விட்டது.

காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் பூனைக் குட்டி ஒருமாதமாகியும் வராததைக் கண்டு கோபத்திலிருந்தன.

அப்போது, உருண்டு கொண்டே வந்த சுரைக்காயை அவை கண்டன.

ஏற்கெனவே, கோபத்திலிருந்த விலங்குகள் அந்தச் சுரைக்காயை எட்டி எட்டி உதைத்தன.

இப்படியே உருண்டு கொண்டே வந்த சுரைக்காய் இறுதியில் நரியிடம் வந்து சேர்ந்தது.

பயங்கரக் கோபத்திலிருந்த நரி, அந்தச் சுரைக்காயை ஓங்கி ஒரு உதை விட்டது.

வேகமாக உருண்டோடிய சுரைக்காய், ஒரு பாறையின் மீது மோதி இரண்டாகப் பிளந்தது. பூனைக்குட்டி வெளியே வந்தது.

பூனையைப் பார்த்த, நரி, “”இப்போதுதான் நன்றாக வளர்ந்து விட்டாயே, உனது கால்களை நானே எடுத்துக் கொள்கிறேன்..”

பூனைக்குட்டிக்குப் பயமாகப் போய்விட்டது.

“”இங்கே மண்ணாக இருக்கிறது. புல்வெளிப் பக்கமாகச் சென்றுவிடலாம். அங்கே சென்ற பிறகு எனது கால்களை நீ எடுத்துக் கொள்ளலாம்…” என்று சொல்லி நரியைக் கூட்டிக் கொண்டு சென்றது.

வீடுகள் நிறைந்த பகுதிக்கு வந்ததும், பூனைக்குட்டி, “”நரியண்ணே, நீதான் என் கால்களைச் சாப்பிடப் போகிறாயே, எனக்காக ஒரு பாட்டுப் பாடேன்…” என்று கெஞ்சியது.

நரியும், ஊ..ஊ..வென்று பாட ஆரம்பித்தது.

நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்ட ஊர்

மக்கள், அனைவரும் ஓடி வந்தனர்.

நரியை விரட்டியடித்தனர்.

பூனைக்குட்டித் தன்னுடைய அறிவுத் திறனால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.

வீ.அபிநயா,
7-ஆம் வகுப்பு,
அடிவள்ளி, குடிமங்கலம், திருப்பூர்.
ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *