காகத்தின் அறிவுரை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,148 
 
 

பால்காரர் முருகனிடம் எருமை ஒன்றும் நான்கு பசு மாடுகளும் இருந்தன. அவருடைய கிராமத்திலும், சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களிலும் பாலை விற்றுவந்தார்.

தினமும் அதிகாலையிலேயே எழுந்து தொழுவத்தைச் சுத்தம் செய்வார். மாடு கன்றுகள் குடிப்பதற்குத் தண்ணீரும், சாப்பிட வைக்கோலும் வைப்பார். பாலைக் கறந்தவுடன் குடத்தில் எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பார்.

முருகனின் மனைவி வள்ளியும் அதிகாலையிலிருந்தே தன் கணவனுக்கு உதவி செய்வாள்.

பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையுடன் விற்றுவந்தார் முருகன். அதனால் கிராமத்து மக்கள் முருகனிடம் பால் வாங்குவதையே விரும்பினார்கள்.

பாலை விற்று சம்பாதித்து முருகனும், வள்ளியும், இரு பெண் குழந்தைகளுடன் குடும்பத்தை மகிழ்ச்சியுடன் நடத்தி வந்தார்கள்.

ஒரு நாள் பக்கத்து ஊரில் பால் ஊற்றிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது முனியனைச் சந்தித்தார்.

‘‘என்ன முருகா சௌக்கியமா?’’ என்று நலம் விசாரித்து பேசத் தொடங்கினார் முனியன்.

‘‘என்ன முருகா, பிழைக்கத் தெரியாத வனா இருக்கிறாயே! உன் இடத்தில் நான் இருந் தால் என்ன செய்வேன் தெரியுமா?’’ என்று பீடிகை போட்டார் முனியன்.

முனியனும் பால் ஊற்றுபவர்தான். அவர் பக்கத்து ஊரில் இருக்கிறார். முனியனிடமும் மாடுகளும் எருமைகளும் இருந்தன. ஆனால், பாலில் தண்ணீர் கலக்காமல் விற்கமாட்டார்.அதனால் மக்கள் முனியன் ஊற்றும் பாலை விரும்பவில்லை. முருகனின் பாலைப் பற்றி கேள்விபட்டவர்கள், முனியனின் பாலை நிறுத்திவிட்டு, முருகனிடம் பால் வாங்கத் தொடங்கினார்கள். இதனால் முனியனுக்கு முருகன் மேல் பொறாமை. எப்படியாவது முருகனின் பால் வியாபாரத்தைக் கெடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருந்தார். ஆனால் முருகனுக்கு தன்மேல் முனியன் கொண்டுள்ள தீய எண்ணம் பற்றி எதுவுமே தெரியாது.

‘‘என்ன முனியண்ணே சொல்றீங்க? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே….’’ யதேச்சையாகக் கேட்டார் முருகன்.

‘‘ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு ஒரு குறையும் இல்லாம இருக்கிறேன்’’ என்று மீண்டும் இயல்பாகவே சொன்னார் முருகன்.

‘‘முருகா, உனக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. உன் குழந்தைங்க வளர்ந்துகிட்டிருக்காங்க. அவங்களுக்கு செலவே இனிமேலதான். கையில நாலு காசு இருந்தாத்தான் நல்லது. பால்ல கொஞ்சம் தண்ணி கலந்து ஊத்தினாலும் வாங்கறவங்க வாங்கிகிட்டு தான் இருப்பாங்க. கொஞ்சமா தண்ணி கலந்தா ஒண்ணுமே தெரியாது. நான் சரிக்கு சரி தண்ணி கலந்துதான் ஊத்தறேன். என்கிட்ட வாங்காமலா இருக்காங்க? அதனால புத்தியோட பொழச்சுக்கப்பா. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்’’ சொல்லிவிட்டு முருகனின் முகத்தைப் பார்த்தார் முனியன்.

‘‘என்னமோ, உன் நன்மைக்குத் தான் சொன்னேன். தங்கமா அள்ளிக் கொடுத்தாலும் கிடைக்கிறவரை லாபம்னு வாங்கிட்டுப் போயிடுவாங்க. நஷ்டப்படறது நாமதானே.’’

‘‘சரிண்ணா, நீங்க சொன்னபடி செய்யறேன்’’என்ற முருகன் தன் வழியே நடந்தார்.

முருகனின் மனதில் சபலம் புகுந்தது.

‘முனியண்ணன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைங்க வளர்ந்து கொண்டு இருக்கிறாங்க. இனிமேல் எல்லாமே செலவுதான். ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்து வைத்தால்தானே நாமும் நிம்மதியாக இருக்க முடியும்’ நினைத்துக்கொண்டே முருகன் வீடு வந்து சேர்ந்தார்.

அடுத்தநாள் தண்ணீர் கலந்த பால்குடத்தை சுமந்துகொண்டு அடுத்த கிராமத்துக்குப் புறப்பட்டார். மனதுக்குள் வண்டு புகுந்து துளைப்பது போல இருந்தது. பழைய தெம்பு இல்லை. எதிரே நிற்கும் மரம் கூட பூதம் நிற்பது போலத் தோன்றியது. திடீரென்று தலையில் யாரோ தட்டுவதுபோல இருந்தது. பால்குடத்தைச் சரியாகத் தாங்கிப் பிடிக்க கையை எடுப்பதற்குள், கைதவறி பால்குடம் விழுந்து பால் சிந்திவிட்டது.

‘உன்னை என்ன செய்கிறேன் பார்’, என்று கோபமான முருகன், எறிவதற்கு கல்லை எடுத்தார்.அதற்குள் காகம் பறந்துவிட்டது.

வேறு வழியின்றி வீடு வந்த முருகனுக்கு அன்று மனசே சரியில்லை.

‘இனிமேல் தண்ணீர் கலப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இப்படியெல்லாம் இழப்பு வந்தால், எப்படித்தான் சரிகட்டுவது? இதுவரை இப்படி ஆனதே இல்லை’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தார்.

அடுத்த நாளும் அதே போல தண்ணீர் கலந்த பாலை எடுத்துக் கொண்டு அதே வழியில் சென்றார். முந்திய நாளைவிட மனது இன்னும் பாரமாக இருந்தது. எச்சரிக்கையாக பால்குடத்தைப் பிடித்துக்கொண்டே வந்தார். வழியிலிருந்த அதே மரத்தைத் தாண்டிச் செல்வதற்குள், காகம் தலைக்கு மேலே பறந்து வரத் தொடங்கியது. காகத்தைக் கண்டதும் முருகனின் கால்கள் நின்றன.

‘ஏ காகமே, ஏன் இப்படிச் செய்யறே? என் பிழைப்பையே கெடுக்கறியே’, முருகனின் உதடுகள் முணுமுணுத்தன. மீண்டும் காகம் பால்குடத்தை நோக்கிப் பறந்து வந்தது.

‘‘பணத்தாசை வந்துடுச்சு இல்லையா? இவ்வளவு நாள் இல்லாமல், இப்ப இப்படி தண்ணீர் கலந்து விற்பது தப்பு இல்லையா? அநியாயமா சேர்க்கும் பணம் தங்காதுன்னு தெரியாதா?’

‘காகத்தின் குரல் தானோ, காகம்தான் அறிவுரை சொல்கிறதா?’

‘ஐயோ.. நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன். இவ்வளவு நாள் இல்லாத பணத்தாசை என்னைக் குழியில தள்ளிடுச்சு’

‘முனியண்ணன் என் வியாபாரத்தைக் கெடுத்து நாசம் பண்ண பார்த்திருக்கிறாரே, நல்ல வேளை, கடவுளே காகத்தின் வழியா நமக்கு அறிவுரை வழங்கிட்டாரு’ என்று மனம் தெளிவாகி, மீண்டும் பழையபடி தண்ணீர் கலக்காத பாலை எடுத்துக் கொண்டு நடந்த முருகனின் தலைக்கு மேலே நிழல் கொடுத்து காகமும் பறந்து வந்தது!

நேர்வழியில் செல்பவர்களுக்குத் தெய்வம் துணை நிற்கும் என்பது எவ்வளவு பெரிய உண்மை!

வெளியான தேதி: 01 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *