வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர்.
இவர்கள் இப்படியே இருந்தால், குடும்பம் சிதறிப் போகுமே என்று வருந்தினார் வயதான தந்தை.
அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர்.
ஒருநாள் மக்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை. அவர்கள் வந்து கட்டிலைச் சுற்றி நின்றனர்.
தன் காலடியில் கிடந்த மூங்கில் கட்டு ஒன்றை மூத்த மகனிடம் கொடுத்து, “இதை முறி” என்றார்.
தன் பலம் முழுவதையும் பயன்படுத்தினான் ஆனால், முறிக்க முடியவில்லை .
அடுத்து இரண்டாவது மகன், மூன்றாவது மகன், நான்காவது மகன், மூவரும் முயன்று பார்த்தனர் , ஒருவராலும் முறிக்க இயலவில்லை .
பிறகு, கட்டைப் பிரித்து ஆளுக்கு ஒரு குச்சியைக் கொடுத்தார்.
நால்வரும் சுலபமாக முறித்து விட்டு நின்றனர்.
“இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும், நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை உறுதியாக விளங்கும். எவரும் உங்களை ஏமாற்ற முடியாது. சண்டை சச்சரவு செய்து, தனித்தனியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பீர்களானால், சிதறிப் போவீர்கள். ஒற்றுமையே வலிமை அளிக்கும்” என்றார் தந்தை.
நாட்டுக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் இது பொருந்தும்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்