கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 16,506 
 
 

வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை முதல் மதியம் வரை மக்களிடம் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வார். இரவு நேரத்தில் மாற

வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை முதல் மதியம் வரை மக்களிடம் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வார். இரவு நேரத்தில் மாறுவேஷம் பூண்டு நாட்டு நடப்புகளை தெரிந்துக் கொள்வார்.

அப்படி ஒரு நாள் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் ஒரு தெருவில் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கொல்லன் பட்டறையில் ஒருவன் மட்டும் தனியாக வேலை செய்து கொண்டிருந்தான்.

அங்கு சென்ற அரசன், “”இந்த இரவில் நீங்கள் மட்டும் தனியாக வேலை செய்கின்றீர்களே, உதவியாளர் ஒருவரும் இல்லையா?” எனக் கேட்டார்.

“”வேலை நிறைய இருக்கின்றது. ஆனால், உதவியாளர் இன்று வேலைக்கு வரவிலலை. அதனால் நான் மட்டும் வேலைப் பார்க்கிறேன். இந்த வேலையைச் சீக்கிரம் முடித்துக் கொடுக்கிறேன் என்று வேலை கொடுத்தவரிடம் வாக்கு வேறு கொடுத்துவிட்டேன். அதனால் சீக்கிரம் முடிக்க வேண்டும். வேண்டுமானால் நீ இன்று இரவு எனக்கு உதவி செய்கிறாயா? உனக்கு இரண்டு அணா கூலி தருகிறேன்” என்று கொல்லன், வந்தவர் அரசன் என்று தெரியாமல் அவரிடம் கூறினான்.

அரசரும் ஒத்துக் கொண்டு அன்று இரவு அவன் சொன்ன வேலைகளை முடித்துவிட்டு கூலியாகக் கொடுத்த இரண்டு அணாக்களைப் பெற்றுக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். அரசர் தான் உழைத்து சம்பாதித்த காசு என்பதால், அதைப் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி மந்திரியிடம் கூறினார்.

அதே ஊரில் வேதங்களைக் கற்பிக்கும் வேத வித்தகர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் குழந்தைகளை வேதம் கற்பித்து விட்டு அதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

சில சமயங்களில் அந்த வருமானம் அவரது குடும்பத்துக்கு போதாமல் இருந்ததுண்டு. ஒரு சமயம் அவருக்கு அந்த சம்பாதியம் போதவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார். எனவே அரண்மனைக்குச் சென்று பொருளை பெற்று வரலாம் என்று கிளம்பினார்.

வேத வித்தகர் அரண்மனைக்குச் சென்று அரசரிடம், “”அரசே! இன்று என் வருமானம் போதவில்லை. எனவே ஏதாவது தருமம் கொடுங்கள்” என்று கேட்டார்.

அரசரும், மந்திரியை அழைத்து “”நான் நேற்று கொடுத்த இரண்டு அணாவில் ஒரு அணாவை இந்த வித்தகருக்குக் கொடுங்கள்” என்று கட்டளையிட்டார்.

வேதவித்தகரும் அதைப் பெற்றுக் கொண்டு வீதியில் வந்து கொண்டே இருந்தார். அப்பொழுது எதிரில் ஒரு வேடன் ஒரு கிளியை கிளிக் கூண்டில் அடைத்துக் கொண்டு விற்றுக் கொண்டே வந்தான். அதைப் பார்த்த வேத வித்தகருக்கு, கிளி கூண்டில் அடைப்பட்டு இருந்தது பாவமாக இருந்தது.

எனவே,வேடனை அழைத்து “”இந்தக் கிளி என்ன விலை?”என்று கேட்டார். அதற்கு வேடன் “”எப்பொழுதும் 4 அல்லது 5 கிளிகள் கிடைக்கும். அரை அணா என்று விற்பேன். இன்று ஒரே ஒரு கிளி கிடைத்துள்ளதால், இக்கிளி ஒரு அணா” என்று கூறினான்.

வேத வித்தகரும் அந்த ஒரு அணாவை கொடுத்து விட்டு அக்கிளியை வாங்கிச் சென்றார். கிளி கூண்டுக்குள் அமைதியாக இருந்தது. உடனே கூண்டின் கதவை திறந்து கிளியை பறக்க விட்டார். கிளியும் மகிழ்ச்சியுடன் பறந்து சென்றது.

வேத வித்தகருக்கு கிளியை சுதந்திரமாக பறக்க விட்டோமே என்று சந்தோஷப்பட்டார்.

அன்றையப் பொழுது வேத வித்தகரின் குடும்பம் அரைப் பட்டினியாக கழிந்தது.

மறுநாள் வேதவித்தகர் காலையில் எழுந்து சந்தியாவந்தனம் செய்வதற்காக, சொம்பில் நீர் நிரப்பி சந்தியா வந்தனம் செய்துக் கொண்டிருந்தார்.

முதலில் ஒரு மந்திரத்தைக் கூறி ஒரு முறை நீரை தரையில் விட்டார். அப்பொழுது வானில் இருந்து ஒரு விதை, நீர் ஊற்றிக் கொண்டு இருக்கும் இடத்தில் விழுந்தது. இரண்டாவது மந்திரத்தைச் சொல்லி நீர் ஊற்றும் போது, அந்த விதை முளைத்து மூன்று அடியாக வளர்ந்தது. கடைசி மந்திரத்தைச் சொல்லி நீர் ஊற்றியதும், அது பெரிய மரமாகி வளர்ந்தது.

அந்த மரத்திலிருந்து அவர் முன்தினம் பறக்கவிட்ட கிளி அமர்ந்து இருந்தது. கிளியின் குரல் அந்த மரத்திலிருந்து கேட்டது. கிளி பேசத் துவங்கியது.

“”வேதவித்தகரே! நான் தோவலோகத்துக் கிளி. நேற்று நீர் என்னை கூண்டிலிருந்து விடுவித்து சுதந்திரமாகப் பறக்கவிட்டதால், அதற்கு நன்றிக் கடனாக நான் இந்த கற்பகவிருட்ச மரத்தைப் பரிசாகத் தருகிறேன். இந்த மரத்திலிருந்து உனக்குத் தேவையான எல்லா வகை உணவுகளும் கிடைக்கும். நீர் இந்த மரத்தை மூன்று முறை சுற்றிக் கொண்டே பூஜை செய்தால் இது கேட்டதைக் கொடுத்து விடும்” என்று கூறி மறைந்தது.

கிளியின் பேச்சைக் கேட்டதும் வேத வித்தகருக்கு ஆச்சரியமாக இருந்தது. இது கடவுளின் செயல் என்று நினைத்து, கடவுளை வணங்கி அம்மரத்தை மூன்று முறை சுற்றி வந்தார்.

தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் உணவு வேண்டும் என்று கேட்டார். என்ன ஆச்சரியம்! மரத்திலிருந்து நான்கு வகையான காய்கறிகளோடு சாப்பாடு வந்தது.

வேதவித்தகர் தினமும் நூறு பேருக்கு வேண்டிய உணவுகளை மரத்திலிருந்து வரவழைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தார். இதனால், ஏழைகள் அரண்மனைக்குத் தானம் கேட்டு வருவது குறைந்தது. அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது.

இருந்தாலும், மந்திரியிடம் நாட்டு நடப்புகளைத் தெரிந்துக் கொள்ள மந்திரியிடம் சில கேள்விகளைக் கேட்டார். “”நம் நாட்டில் பயிர் விளைச்சல் நன்றாக உள்ளதா? நம் அரண்மனைக்கு தானம் கேட்டு யாரும் வருவதில்லையே. என்ன காரணம்?” என்று கேட்டார்.

“”அரசே! ஒரு மாதம் முன்பு தங்களிடம் ஒரு வேதவித்தகர் தானம் கேட்டு வந்தாரே. அவருக்கு நீங்கள் இரண்டு அணாக்களில் ஒன்றை கொடுக்கச் சொன்னீர்களே. அந்த வித்தகர்தான் தினமும் நூறு பேருக்கு அன்னதானம் செய்து வருகிறார். அதனால் மக்கள் உணவுக்கா அங்கு சென்று விடுகின்றனர். அதிலும், அவர் ஒரு கற்பகவிருட்ச மரத்திலிருந்து உணவுகளை வரவழைத்து எல்லோருக்கும் அன்னதானம் செய்கிறார்” என்று மந்திரி கூறினார்.

உடனே அரசர், “”நான் அவரைப் பார்க்க வேண்டும்” என்று கூறிவிட்டு, மந்திரியுடன் அந்த வேதவித்தகரின் இருப்பிடத்திற்குச் சென்றார்.

வேதவித்தகரும் அரசரை வணங்கி அமரச் செய்து விருந்து உபசாரம் செய்தார்.

அரசர் வித்தகரை நோக்கி, “”ஒரு மாதம் முன்பு என்னிடம் வந்து வருமானம் போதவில்லை என்று ஒரு அணாவை பெற்று வந்தீரே. இப்பொழுது எப்படி உங்களால் இவ்வளவு பேருக்கு தானம் செய்ய முடிகிறது?” என்று கேட்டார்.

“”அரசே! நீங்கள் கொடுத்த ஒரு அணாவில்தான் இந்த அன்னதானம் செய்ய முடிகிறது” என்று கூறி நடந்தவைகளை கூறினார்.

அரசருக்கு வியப்பாக இருந்தது. அரசர் அரண்மனைக்குச் சென்றார். மந்திரியிடம் “”ஒரு அணாவை வித்தகருக்குக் கொடுத்தோம். இன்னொரு அணாவை பெற்றுக் கொண்டவர் என்ன செய்தார்?” என்று அறிந்து வாருங்கள் என்று மந்திரியிடம் கட்டளையிட்டார். மந்திரியும் விசாரணை செய்தார்.

“”அரசே! மறுநாள் கொடுத்த ஒரு அணாவை ஒரு திருடனுக்குக் கொடுத்துள்ளீர்கள். அவன் அன்றே ஒரு கோழியை வாங்கி அவனே தின்றுள்ளான். எனவே, அவனுக்கு ஜீரணம் ஆகாமல் அவஸ்தைப்பட்டுள்ளான்” என்று கூறினார்.

அரசர் அப்பொழுதுதான் ஒரு நல்லவரின் கையில் கிடைத்த காசு பல பேருக்கு உதவுகிறது என்பதையும், ஒரு தீயவரின் கையில் கிடைத்தக் காசு யாருக்கும் உபயோகம் இல்லாமல் போனதே என்று உணர்ந்தார்.

– ஜனவரி 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *