ஏமாந்த சகோதரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,063 
 

ஒரு ஊரில் இரண்டு வாலிபர்கள் முரட்டுத்தனமாக சச்சரவிட்டு, அடிதடியில் இறங்கி விட்டனர்.

வழியில் சென்ற ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு, ”எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“நாங்கள் இருவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். எங்கள் தந்தை ஒரு முனிவர். அவர், மிகச் சிறப்பு வாய்ந்த மூன்று பொருள்களை வைத்துவிட்டு மறைந்துவிட்டார். அவற்றை யார் எடுத்துக் கொள்வது என்ற சச்சரவில் இப்போது ஈடுபட்டு இருக்கிறோம் என்றனர் வாலிபர்கள்.

”அந்த மூன்று பொருள்களும் என்னென்ன?” என்று கேட்டார் வழிப்போக்கர்.

அவை ” பாதக்குறடு, கைத்தடி, அமுத சுரபிக் கிண்ணி .’ ”பாதக் குறட்டை காலில் மாட்டிக் கொண்டு, எங்கே செல்ல விரும்பினாலும், உடனே போய்ச் சேரலாம்.
“கைத்தடியால் எதை வரைந்தாலும் அது உடனே உருவம் பெற்றுவிடும்”

”அமுத சுரபிக் கிண்ணத்தில் வேண்டும்போது வேண்டிய உணவு நிறைந்திருக்கும்”

இதுதான் அந்தப் பொருள்களின் சிறப்பு என்று இருவரும் கூறினர்.

அந்தப் பொருள்களின் ரகசியத்தை தெரிந்து கொண்ட வழிப்போக்கர் அவர்கள் இருவருக்கும் ஒரு யோசனை கூறினார்.

இருவரும் ஒரு மைல் தொலைவு ஓடி, எவன் முதலில் வெற்றி அடைகிறானோ, அவனே அந்தப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்” என்றார். அதற்குச் சம்மதித்து இருவரும் ஓட முற்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஓடுகையில், வழிப்போக்கர் பாதக் குறடைகாலில் மாட்டிக் கொண்டு, அமுதசுரபிக் கிண்ணத்தையும், கைத்தடியையும் கையில் எடுத்துக் கொண்டு பறந்து போய் விட்டார்.

சகோதரர்கள் இருவரும் தாங்கள் ஏமாந்து போனதை நினைத்து வருந்தினர்.

பாகப் பிரிவினை என்று சச்சரவு ஏற்படும் போது, சிலவற்றை இழக்க நேரிடும்.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *