கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 2,553 
 
 
Undi

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோமு படிப்பிலே கெட்டிக்காரன். குணத்திலேயும் தங்கக் கம்பியாகத் தான் முன்பு இருந்தான். ஆனால், இப்போது?

சோமுவின் தெருக் கோடியில் வாசு என்று ஒரு பையன். அவன் தினமும் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். ஆனால், அங்கு போய்ச் சேர மாட்டான். வழியில் எங்காவது ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்குவான்; அல்லது, பள்ளிக் கூடம் போகாத பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவான். ஆனால், சாயங்காலம் பள்ளிவிடும் நேரத்திற்குச் சரியாக வீட்டுக்கு வந்து விடுவான்! இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாற்ற முடியும்? அவன் அப்பாவுக்கு இது தெரிந்ததும், அவர் அவனை அடி அடி என்று அடித்தார். அடி அதிகமாக ஆக அவன் பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டான்; ஊர் சுற்றியானான்.

அந்த வாசு, சோமுவை எப்படியோ சிநேகம் பிடித்துவிட்டான். மாலையில் மணி ஐந்தடித்தால் போதும்; அவன் சோமு வீட்டுக்குச் சிறிது தூரத்திலுள்ள அரச மரத்தடியில் வந்து நிற்பான். சோமு அவன் நிற்பதைப் பார்த்ததும், வீட்டிலிருந்து மெதுவாக நழுவி அவன் அருகிலே போவான். இருவரும் ஊருக்குக் கடைசியிலுள்ள மாந்தோப்புக்குப் போய்விடுவார்கள்.

அங்கு போய் மாம்பழங்களைத் திருடித் தின்பார்கள். அத்துடன் அந்தப் பக்கமாகப் பறந்து வரும் பறவைகளையும் குறி பார்த்து அடிப்பான் வாசு. சும்மா அடிக்க மாட்டான். உண்டிவில்லால் அடிப்பான். ஒரு நாளுக்கு ஒன்றிரண்டு பறவைகளையாவது அடிக்காமல் வீடு திரும்ப மாட்டான். இந்த வித்தையை அவன் சோமுவுக்கும் கற்றுக் கொடுக்காமல் இருப்பானா? சோமுவுக்கும், ஓர் உண்டிவில் தயாரித்துக் கொடுத்து, அவனையும் நன்றாகப் பழக்கிவிட்டான்.

காக்கை, குருவி, மைனா, கிளி, கொக்கு இவை களில் தினமும் இரண்டு மூன்று பறவைகளையா வது அடிக்காமல் அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். இது அவர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், பறவைகளுக்கோ? திண்டாட்டம்!

இது எப்படியோ சோமுவின் அப்பாவுக்குத் தெரிந்து விட்டது. “சோமு, நீ நல்லாப் படிக்கிறாய். படிப்பு மட்டும் போதுமா? நல்ல குணமும் வேண்டாமா? அந்த வாசுவோ கெட்ட பையன். படிப்பிலே அக்கறையில்லாதவன். ஊர் சுற்றி. அவனோடே சேர்ந்து பறவைகளை அடிக்கலாமா? உனக்கு அந்தப் பறவைகள் ஒரு கெடுதலும் செய்யாத போது, அவைகளுக்குத் தொல்லை கொடுக்கலாமா? இனி, வாசுவோடு சேராதே. பறவைகளை அடிக்காதே” என்று அடிக்கடி புத்திமதி கூறுவார். அப்பா பேச்சைக் கேட்ட சோமு, அடுத்த இரண்டு மூன்று நாட்கள் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வான்; அப்புறம்?

வாசுவின் பேச்சில் மயங்கி, அவனுடன் மாந்தோப்புக்கு உண்டிவில்லுடன் புறப்பட்டுவிடுவான்!

கோடை விடுமுறை வந்தது. சோமு அந்தக் கிராமத்திலே இருந்தால் கெட்டுப் போய்விடுவான் என்று அவன் அப்பா பயந்தார். ஆகையால், விடுமுறையைக் கழிக்கச் சென்னையிலுள்ள தம்முடைய தம்பி வீட்டுக்கு அவனை அனுப்பி வைத்தார்.

சோமுவின் சித்தப்பா வீடு சென்னை அண்ணா நகரில் இருந்தது. நல்ல பெரிய வீடு. எல்லா வசதிகளும் அங்கே உண்டு.

சோமு சென்னை வருவதை முன்னதாகவே எழுதியிருந்ததால், அவன் சித்தப்பா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, அவனை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டின் முன்புறம் இருந்த பெரிய வரவேற்பு அறையில் அவனை உட்கார வைத்தார். உடனே, அவனுடைய சித்தி வந்து, அவனை வரவேற்று, காப்பி கொடுத்தாள்.

சோமு காப்பி சாப்பிட்டதும் உடம்பு வியர்த்தது. மேலே நிமிர்ந்து பார்த்தான். அங்கிருந்த மின் விசிறியைக் காணோம்! “சித்தப்பா, இந்த ஹாலிலே ஒரு ஃபேன் இருக்குமே! எங்கே காணோம்?” என்று கேட்டான்.

“நீ குளிச்சு சாப்பிடு. அப்புறம் சொல்றேன்” என்றார்.

சோமு குளித்து, சாப்பிட்டு முடிந்ததும், மின் விசிறியைப் பற்றி மீண்டும் கேட்டான்.

சித்தப்பா ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தார்:

“அதோ பார். அந்த முருகன் படத்துக்குப் பின்னாலே ஒரு குருவி போன மாதம் கூடு கட்டியிருந்துச்சு. கொஞ்ச நாளிலே, அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிச்சுது. குஞ்சுகளுக்கு அது தினமும் இரை கொண்டு வந்து கொடுக்கும்.

ஒருநாள் நானும் உன் சித்தியும் இந்த ஹாலிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மேலே ‘டம்’னு ஒரு சத்தம் கேட்டது. மறுவிநாடி கீழே ‘தொப்’னு ஓர் ஓசை கேட்டது.

என்னன்னு பார்த்தோம். குஞ்சுகளுக்கு இரை எடுத்துக்கிட்டு வந்த அம்மாக் குருவிதான் மேலே சுழன்று கொண்டிருந்த விசிறியிலே அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்துச்சு! அதைப் பார்த்து நாங்கள் திடுக்கிட்டோம். உடனே நான் ஓடிப்போய் அதைக் கையிலே எடுத்தேன். உற்றுப் பார்த்தோம். கொஞ்சம் உயிர் இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. உன் சித்தி உடனே ஓடிப் போய்த் தண்ணீர் கொண்டு வந்து, அதன் வாயிலே ஊத்தினாள்; முகத்திலேயும் தெளித்தாள், என்ன செய்தும் அது பிழைக்கல்லே. செத்துப் போச்சு! அப்போதே நான் விசிறியை நிறுத்திவிட்டேன்.

தாய்ப் பறவையைக் காணாமே, குஞ்சுகளெல்லாம் அன்னிக்கு இரவு முழுவதும் ‘கீச் கீச்’னு கத்திக்கிட்டே இருந்தன. அது பரிதாபமாய்க் கத்துறதைக் கேட்கக் கேட்க எங்களுக்கு ரொம்ப வருத்தமாயிருந்துச்சு.

‘நம்ம ஃபேன் அடிச்சுத்தானே தாய்ப் பறவை செத்துப் போச்சு? இந்தப் பாவமெல்லாம் நமக்குத் தானே’ன்னு துக்கப்பட்டோம். அன்றைக்கு நானும் சாப்பிடல்லே. உன் சித்தியும் சாப்பிடல்லே. ராத்திரி வெகு நேரம் விழிச்சிருந்தோம். அப்புறம் அப்படியே ஹாலிலே தூங்கிட்டோம்.

அதிகாலையிலே முழிச்சுப் பார்த்தோம். சத்தத்தைக் காணோம். குருவிக் குஞ்சுகள் கத்திக் கத்தி ஓய்ந்து போச்சோன்னு நினைச்சோம்.

அப்போ, ஒரு பெரிய பறவை படத்துக்குப் பின்னாலேயிருந்து பறந்து வந்ததைப் பார்த்தோம். குஞ்சுகள் கத்துறதைக் கேட்டு, வேறே ஒரு தாய்ப் பறவை இரை கொண்டு வந்து கொடுத்திருக்கணும்னு நினைச்சோம். இரையைத்தான் அது கொடுத்திச்சு; செத்துப் போன அம்மாவைக் கொடுக்க முடியுமா?

தினமும் அந்தப் பெரிய பறவை வந்து குஞ்சு களுக்கு இரை கொடுத்திச்சு. கொஞ்ச நாளிலே குஞ்சுகளுக்கு இறக்கை முளைச்சுப் பறந்து போயிடுச்சு.

அம்மாக் குருவி செத்ததிலேயிருந்து நாங்க ஃபேனைப் போடாமலே இருந்தோம். அந்தக் குஞ்சுகள் பறந்து போனதுக்கப்புறம், வேறொரு குருவி அடிக்கடி வந்து அதே படத்துக்குப் பின்னாலே உட்காருது. அதுவும் அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக் கிட்டோம்.

Undi1

நாங்க ஃபேனைப் போட மாட்டோம். ஆனால், யாரும் புதுசா வருகிறவங்க ஃபேனைப் போட்டுட்டால்…? இந்தக் குருவிக்கும் ஆபத்தாயிடுமே! அதுனாலே ஃபேனைக் கழற்றி உள் அறைக்குள்ளே வச்சுட்டோம்.”

சித்தப்பா சொன்னதைக் கேட்கக் கேட்க, சோமுவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ‘தாய்ப் பறவை இறந்ததும், அந்தக் குஞ்சுகளெல்லாம் என்ன பாடுபட்டிருக்கும்? எப்படிப் பசியாலே, துடி துடிச்சிருக்கும்? அதுகளுக்காக நம்ம சித்தப்பாவும் சித்தியும் எவ்வளவு கவலைப்பட்டிருக்காங்க! அடுத்த குருவி அடிபடக்கூடாதேன்னு ஃபேனையே கழற்றி வச்சிட்டாங்களே!’ என்று நினைத்துப் பார்த்தான் கண்கள் கலங்கின.

சித்தப்பாவின் வீட்டிலே இருந்த இருபது நாட்களும் சோமு, தான் செய்த தப்பை நினைத்து நினைத்து வருத்தப்பட்டான்.

ஊருக்குத் திரும்பினானோ இல்லையோ, முதல் வேலையாக அந்த உண்டி வில்லை எடுத்துக் கொண்டு நேராக வாசு வீட்டுக்கு எதிரிலேயே போய் நின்றான். சோமுவைக் கண்டதும், வாசு அவனைக் குதூகலமாக வரவேற்றான்.

“சீ, பன்றியோடு சேர்ந்த கன்றும் கெடும்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. உன்னோட சேர்ந்து நானும் புத்தி கெட்டுப் போனேன். ஐயோ! எத்தனை பறவைகளைத் துடிதுடிக்கக் கொன்னுட்டேன்! அதுகளுடைய குஞ்சுகள், என்ன பாடுபட்டிருக்கும்? இனிமேல், இந்த உண்டி வில்லுக்கு வேலையில்லை” என்று ஆவேசம் வந்தவன் போல் பேசிவிட்டு அந்த உண்டி வில்லை அங்கே கிடந்த ஒரு கல்லின் மேலே வைத்தான். இன்னொரு கல்லாலே அதைத் தூள் தூளாக உடைத்தான்.

“உண்டிவில் முறிஞ்ச மாதிரி நம்ம சிநேகமும் இன்னியோடு முறிஞ்சுது” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக வீட்டுக்குத் திரும்பினான். பிறகு தான், அவன் மனம் ஓரளவு நிம்மதி அடைந்தது.

– திரும்பி வந்த மான்குட்டி, முதற்பதிப்பு: நவம்பர் 2002, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email
அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *