இளவரசி+மோதிரம்=கல்யாணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,126 
 
 

வெகு காலத்திற்கு முன், ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ளப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்.

Ilavarasi

ஆனால், அரசனோ, “”யார் என் மகளின் கையிலுள்ள மோதிரத்தை அவளுக்கே தெரியாமல் எடுத்து வந்து தருகிறாரோ, அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து வைப்பேன்!” என்றான்.

“இளவரசியின் கையிலுள்ள மோதிரத்தை எப்படி எடுப்பது’ என்று பலரும் சிந்தித்தனர். ஆனால், வழி ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், யாருமே பார்க்க முடியாத வண்ணம், அரண்மனை அந்தப்புரத்தில் பாதுகாவலுடன் தங்கி இருந்தாள் இளவரசி.

அந்நாட்டிலிருந்த எழிலன் என்ற இளைஞன், எப்படியும் இளவரசியை மணப்பது என்று முடிவு செய்தான். தன் நண்பன் ஒருவனின் உதவியை வேண்டினான்.
அதற்கு அவன், “”கவலைப்படாதே! நீ உள்ளே மறைந்து கொள்ளக்கூடிய வகையில் பெரிய கடிகாரம் செய்கிறேன். அரசனும், இளவரசியும் இவ்வழியே வரும்போது, நீ கடிகாரத்தினுள் இருந்து இனிய இசை எழுப்பு. இளவரசி கடிகாரத்தை வாங்குவாள். உன் எண்ணம் ஈடேறும்!” என்றான்.

இதைக் கேட்டு எழிலனும் மகிழ்ந்தான். சில நாட்களுக்குள் கடிகாரம் தயாரானது. வழக்கம் போல் அரசனும், இளவரசியும் வருவதை, கடிகாரத்தினுள் இருந்த இடைவெளி வழியாகப் பார்த்தான் எழிலன். உடனே, இனிய இசை எழுப்பினான். இசையால் ஈர்க்கப்பட்ட இளவரசி, அவர்கள் நினைத்தபடி அந்தக் கடிகாரத்தை வாங்கினாள்.

நான்கு வீரர்கள் அந்த கடிகாரத்தைத் தூக்கிச் சென்று இளவரசியின் அறையில் வைத்தனர். உள்ளிருந்த எழிலனும், நேரத்துக்குத் தக்கபடி இசை எழுப்பிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக்கொண்டே இளவரசி தூங்கி விட்டாள்.
நள்ளிரவு நேரம், கடிகாரத்தைத் திறந்து வெளியே வந்தான் எழிலன். இளவரசி அறியாமல், அவள் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றினான். மீண்டும் பழையபடி கடிகாரத்துக்குள் பதுங்கிக்கொண்டான்.

மறுநாள் காலையில் விழித்த இளவரசி, கடிகாரம் இசை எழுப்பாதது கண்டு வருந்தினாள். அரசனிடம் சென்ற அவள், “”கடிகாரத்தைச் சரி செய்ய வேண்டும். அதைச் செய்தவனை வரவழையுங்கள்!” என்றாள்.

எழிலனின் நண்பன் அங்கே வரவழைக்கப்பட்டான். கடிகாரத்தைச் சோதித்த அவன், “”இதை என் வீட்டிற்குத் தூக்கி வரச் செய்யுங்கள். நான் சரி செய்து, இன்று மாலையே அரண்மனைக்கு அனுப்பி விடுகிறேன்!” என்றான்.

கடிகாரம் வீடு வந்து சேர்ந்தது. அதற்குள் இருந்த எழிலன் வெளியே வந்தான். பின்னர், இயந்திரங்களினாலேயே அதேபோல இசை எழும்பும்படிச் செய்தான் அவன் நண்பன். மாலையில் அங்கு வந்த வீரர்கள், கடிகாரத்தை அரண்மனைக்கு எடுத்துச் சென்றனர்.

மறுநாள் அரசனைச் சந்தித்த எழிலன், இளவரசியின் மோதிரத்தைத் தந்தான். எப்படி இவன் கையில் மோதிரம் கிடைத்திருக்கும் என்று அறியாமல் திகைத்தான் அரசன். நடந்ததை அப்படியே சொன்னான் எழிலன்.

அவனின் அறிவுக் கூர்மையை மெச்சிய அரசன், அவனுக்கும், இளவரசிக்கும், சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைத்தான்.

– ஜூலை 02,2010

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *