இளநீர் குடித்த இளைஞன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 26, 2024
பார்வையிட்டோர்: 380 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மகன் கிணற்றடியிலே குளித்துக் கொண்டிருந்தான். அவன் குளித்த நீர் நாலா பக்கமும் ஓடிக் கொண்டிருந்தது. பயனின்றிப் பரவிச் செல்லும் அந்த நீரை அவன் தந்தை பார்த்தார். 

“தம்பீ, அதோ அந்தப் பக்கத்தில் நிற்கும் தென்னங் கன்றுக்குப் பாயும்படி ஒரு வாய்க்கால் வெட்டிவிடு” என்று சொன்னார், தந்தை. 

‘இதென்ன வெட்டி வேலை!’ என்று மகன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான். ஆனால், தந்தையின் சொல்லை மீற முடியாமல், கிணற்றடி நீர் தென்னங் கன்றுக்குப் பாயும்படி வாய்க்கால் வெட்டி விட்டான். 

அன்று முதல் நாள்தோறும் அவர்கள் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியாக ஓடி தென்னங் கன்றுக்குப் பாய்ந்து கொண்டிருந்தது. தென்னங் கன்றும் நன்றாக வளர்ந்து வந்தது. 

மகன் வெளியூருக்குப் படிக்கப் போய்விட்டான். பள்ளியைச் சேர்ந்த விடுதியிலேயே தங்கிப் படித்தான். பத்தாண்டுகளாக அவன் வெளியூரி லேயே தங்கியிருந்தான். இடையிடையே விடுமுறைக்கு வருவான். வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கிச் சென்று விடுவான். பெரிய விடுமுறைகளில் அவன் வீட்டில் பத்து இருபது நாட்கள் தங்கினாலும், நாள்தோறும் கிணற்றடியிலேயே குளித்தாலும், தென்னங் கன்றின் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை. 

பத்தாண்டுகளுக்குப் பிறகு, பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, ஊருக்குத் திரும்பி வந்தான். 

கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண் டிருந்தது. எங்கும் ஒரே வறட்சி. ஒரு நாள் பக்கத்து ஊரைச் சேர்ந்த அவனுடைய பள்ளித் தோழன் ஒருவன் அவனைப் பார்க்க வந்திருந்தான். அவன் ஏதோ ஓர் உதவி கேட்பதற்காக வந்திருந் தான். வந்தவன், வெயிலில் வந்த களைப்பால் நா வறண்டு போயிருந்ததால், தண்ணீர் கேட்டான். 

இளைஞன், தண்ணீர் மொண்டு வர அடுக்களைக்குச் சென்றான். 

“வந்த விருந்தாளிக்கு வெறுந் தண்ணீரையா கொடுப்பது? அதோ கொல்லைப் புறத்தில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு இளநீர் பறித்துக் கொண்டு வா. நண்பனுக்குக் கொடுத்து நீயும் சாப்பிடு!” என்றாள் தாய். 

இளைஞன் அவ்வாறே மரத்தில் ஏறி இரண்டு இளநீர் பறித்துக்கொண்டு இறங்கினான். அவற்றைச் சீவி நண்பனுக்கு ஒன்று கொடுத்தான்; ஒன்றைப் பருகினான். 

“ஆகா! என்ன இனிப்பு! நண்பா, இந்தக் கோடை வெப்பத்துக்கு, இந்தக் குளிர்ந்த இளநீர் எவ்வளவு இன்பமாக இருக்கிறது !” என்று நண்பன் பாராட்டிப் பேசினான். 

உள்ளபடியே இளநீர் மிக இனிப்பாக இருந்தது. 

அப்போது இளைஞன் மனதில் பத்தாண்டு களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நினைவில் தோன்றி யது. தந்தையின் கட்டாயத்தின் பேரில் தான் கால் வாய் வெட்டிய காட்சி மனக்கண் முன் தோன்றியது. 

என்றோ ஒரு நாள் பலனை எதிர்பாராமல் அவன் அந்தத் தென்னை மரத்திற்குத் தண்ணீர் பாயச் செய்தான். அத் தென்னை மரம் தன் தாளிலே பெற்ற நீரைத் தலையிலே தாங்கித் தந்தது. அந்த நீர்தான் எவ்வளவு சுவையாக இருக்கிறது! 

ஒருவருக்குச் செய்கின்ற உதவி வீண் போவ தில்லை உதவி செய்யும்போது ஒருவருடைய துன்பத்தைத் தீர்த்தோம் என்ற மன நிறைவு ஏற்படு கிறது. அதைத் திரும்பப் பெறும்போதோ, இள நீரின் இனிமை போல், அது இன்பமாக இருக்கும் என் பதில் ஐயமுண்டோ! 

இப்படி யெல்லாம் எண்ணிப் பார்த்த அந்த ளைஞன் தன்னைத் தேடி வந்த தோழனுக்கு அவன் வேண்டிய உதவியைச் செய்தான். அந்த நண்பனும் மன மகிழ்ச்சியோடு தன் ஊருக்குத் திரும்பிச் சென்றான். 

கருத்துரை:- பலனை எதிர்பாராமல் செய்கின்ற உதவி வீண் போகாது. 

– நல்வழிச் சிறுகதைகள் – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *