இடுக்கண் அழியாமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,330 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

துன்பம்வந்த இடத்தும் மனங்கலங்காமை

எவ்விதகுறையும் இல்லாமல் பலவகை இன்பங் களும் நிறைந்த நிடதநாட்டு வேந்தன் நளனைப் பற்றினால் நெடிதுநாள் வாழலாம் என்று துன்பம் என்னும் கொடியோன் எண்ணி அவனை அடைந் தான். அவன் நாடு இழந்து காடுவந்தான். மனைவி, மக்கள், கட்டிய ஆடை அனைத்தையும் இழந்தான். பாம்புகடித்து, உடல் கருமையாகி, உயிர் இருந்தது. அயோத்தி நகரை அடைந்தான். பசிப்பிணி மேலும் மேலும் துன்பம் செய்யத் தான் துன்பக் கொடியோனுக்கு இடங்கொடுக்காமல் சமையல் தொழில் செய்பவன் ஆனான். பின் இருதுபன்ன னுக்குக் குதிரையோட்டும் தொழிலையும் செய்தான். இவற்றைக் கண்ட துன்பக்கொடியோன் தடை நேர்ந்தபொழுது எல்லாம், வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப்போல தொழிலைப் பலவழிகளி லும் செய்யத்தகுந்த இவனை அடைதல் கூடாது என்று வெறுத்து விலகினான். பின் தானும் தன் மனைவி மக்களுடன் கூடித் தன் நகரை அடைந்து இன்பமாக வாழ்ந்தான்.

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (46)

மடுத்தவாய் எல்லாம் = நன்றாகச் செல்லத் தடைபட்ட இடங்களில் எல்லாம்

பகடு அன்னான் = (வண்டியை இழுத்துச் செல்லும்) எருது போலத் தொழிலைப் பல விதங்களில் நடத்த வல்லவனை

உற்ற இடுக்கண் = அடைந்த துன்பமானது

இடர்ப்பாடு = (தானே) துன்பப்படுதலை

உடைத்து = உடையது ஆகும்.

கருத்து: தொழில் செய்யவல்லவனை அடைந்த துன்ப – மானது தானே துன்பப்படும்.

கேள்வி : எவரை அடைந்த துன்பம் துன்பப்படும்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *