(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நல்ல வெயில் காலம். வழிப்போக்கர் இருவர் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள் நடைக் களைப்பும் வெயில் கொதிப்பும் அவர் களுக்குத் தண்ணீர்த் தவிப்பை உண்டுபண்ணின.
சுற்றிலும் ஒரே பொட்டல். அருகில் வீடு வாசல் தோப்புத் துரவு ஒன்றும் கிடையாது. என்ன செய்வ தென்று தெரியாமல் திகைத்தார்கள்.
திடீரென்று அவர்களில் ஒருவர் மகிழ்ச்சியோடு பேசினார் “அண்ணா, இப்போதுதான் நினைப்பு வருகிறது. வலதுகைப் புறமாக கூப்பிடு தூரம் சென்றால் அங்கே ஓர் ஆறு இருக்கிறது. அங்கே சென்று தண்ணீர் குடித்துக் களைப்பாறியபின் திரும்பலாம்.”
அவர் கூறிய செய்தி கூடவந்தவருக்கும் இன்பம் தந்தது.
இருவரும் வலது புறமாகத் திரும்பினார்கள். சிறிது தூரம் நடந்தபின், ஆற்று மணல் பரந்து கிடப்பதைக் கண்டார்கள்.
ஆற்றைக் கண்டுவிட்ட குதூகலத்துடன், கொதிக்கும் மணற்சூட்டையும் பொருட்படுத்தாமல் விரைந்து நடந்தார்கள்.
ஆனால் என்ன ஏமாற்றம்! அந்த ஆறு வற்றி வறண்டுபோய்க் கிடந்தது. இக்கரையிலிருந்து அக் கரைவரை எங்கும் ஒரே மணல்வெளிதான் கண் ணுக்குத் தோன்றியது. தூரத்தில் கானல்தான் தெரிந்தது.
இருவரும் மனமுடைந்து போனார்கள். சிறிது நேரத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால் மயங்கிச் சோர்ந்து விழ வேண்டியதுதான்! அவர்கள் நம்பிக்கை இழந்து சோர்ந்து நின்றபோது ஆடு மேய்க்கும் பையன் ஒருவன் அங்கே வந்தான். ஆற்று மணலைத் தோண்டினான்.இரண்டடி ஆழம் தோண்டிய பின் அடியிலிருந்து தண்ணீர் ஊறி வந்தது. இரு கைகளாலும் அள்ளிக் குடித்து விட்டுச் சென்றான். அதைப் பார்த்த வழிப் போக்கர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே மணலைத் தோண்டினார்கள். அங்கேயும் அடியில் நீர் ஊறியது. அவர்கள் தூய்மையான அந்த நீரைப் பருகித் துன்பம் தீர்த்தார்கள் ஆற்றுத் தாயைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்து சென்றார்கள்.
கருத்துரை :- தான் வறண்டு போனாலும் ஆறு தன் ஊற்று நீரை வழங்கி நாடி வந்தவர்களை நலமடையச் செய்யும். அதுபோல நல்ல குடியில் பிறந்த பெரியோர் தாங்கள் துன்பமடைந்த காலத்தும் நாடி வந்தவர்க்கு நன்மை செய்வார்கள்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.