சுகபோக வசதிகளில் நாட்டமுடைய ஒரு மன்னன் நிறைய செலவு செய்து தூய்மையும் மென்மையும் நிறைந்த அழகான பஞ்சணை ஒன்று தயார் செய்தான்.
பஞ்சணை தயார் செய்யப்பட்ட போது ஒரு பெண் சீலைப்பேன் அதில் எப்படியோ ஒட்டிக்கொண்டு பஞ்சணையோடு சேர்ந்து அரண்மனைப் படுக்கையறைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
சீலைப்பேன் எளிதாக மற்றவர்கள் கண்களில் படுவதில்லையாதலால் அன்றாடம் பணியாளர்கள் பஞ்சணையை தட்டிச் சுத்தம் செய்யும் போதுகூட அவர்கள் கண்களில் படாமல் மறைந்து நிரந்தரமாகப் பஞ்சணையிலேயே தங்கிவிட்டது.
மன்னனை அயர்ந்த உறங்கும் சமயமெல்லாம் சீலைப்பேன் தன் மறைவிடத்தைவிட்டு வெளிப்பட்டு வந்து அவன் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை சுவைத்து உறி்சிக் குடிக்கும்.
நல்ல உணவு உண்டு கொழு கொழுவென இருக்கம். மன்னனின் உடல் இரத்தத்தைத் தன் விருப்பம் போல உண்ணும் வாய்ப்பு அடிக்கடி கிட்டியதால் பெண் சீலைப் பேன் நன்கு கொழுத்து தளதளவென்ற உடலைப் பெற்று அழகாகக் காட்சியளித்து.
ஒரு நாள் தற்செயலாக ஒரு மூட்டைப் பூச்சி அந்தப் பஞ்சணையில் வந்து சேர்ந்தது.
பஞ்சணையின் அழகும், மேன்மையும், அதிலிருந்து வீசும் நறுமணமும் மூட்டைப்பூச்சியின் மனத்திலே உல்லாச உவகை உணர்வை ஊட்டியது.
ஆஹா, அற்புதமான இடத்துக்கு வந்துவிட்டேன். சகல சுக போகங்களுடன் வாழும் செழுமையான உடல் வாகுபடைத்த மன்னனின் இரத்தத்தைக் குடித்து மகிழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. இனி நான் இந்த இடத்திலேயே தங்கி சொர்க்க போகத்தை அனுபவிப்பேன் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் தனக்குத்தானே கூறிக் கொண்டு உற்சாகத்துடன் பஞ்சணையில் இங்கு மங்குமாக ஒடித் திரிந்தது.
யாரோ ஒரு புது ஆள் பஞ்சணையில் உலா வருவதைக் கண்டு சீலைப்பேன் திகைப்புடன், அச்சமும் கொண்டது.
உடனே மூட்டைப்பூச்சியைப் பார்த்து, ஐயா, வரக்கூடாத இடத்திற்கு வந்திருக்கும் நீர் யார் இங்கே எனக்கு மட்டும்தான் இருக்க உரிமையுண்டு. நான் மிகவும் சிறிய ஒரு ஜீவன். என்னால் மன்னருக்குப் பெரிய தொந்தரவு ஏதும் நிகழ வழியில்லை. நீரோ பெரிய ஜீவன். சட்டென பிறர் கண்களில் நீர் பட்டுவிடக்கூடும். அப்போது நம் இருவருக்குமே ஆபத்து. ஆதலால் உடனடியாக இந்த இடத்தைவிட்டுப் போய்விடும் என்று கூறிற்று.