கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,929 
 

“இவர் ஒரு பேராசை பிடித்த துறவி!’ என்றுதான் எல்லாரும் அந்தத் துறவியைப் பற்றி நினைத்தனர். ஆனால், அந்த புத்தத் துறவி கெஸ்னா, தன்னைப் பற்றிக் கூறப்படும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

துறவி என்பவரோ, ஆசைகளைத் துறந்தவர். இவரோ பேராசை படைத்தவர். இவர் எப்படித் துறவியாக முடியும்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தனர் பலரும்.

“”இவர் துறவி தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், இவருக்குப் பொருள் மீது ஆசை மட்டும் உண்டு. இவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர். இவரிடம் ஓவியம் வரைந்து தரச் சொல்லிக் கேட்பவர்களிடம் நிறையப் பணம் கறந்து விடுவார். அதுவும், அதற்கு முன்பணமாகவே பெருந்தொகை கேட்பார். அது கைக்கு வந்த பிறகுதான், தூரிகையையே கையால் தொடுவார்!” என்றனர்.

ஆடிப் பிழைக்கும் ஒரு நடன மங்கை, இவர்கள் சொல்வதை சோதித்தறிய எண்ணினாள். துறவி கெஸ்னாவிடம் சென்று, ஓர் அழகிய ஓவியம் வரைந்து தரச் சொல்லிக் கேட்டாள் அவள். அதற்கு அந்த புத்தத் துறவியோ, எல்லா ஓவியர்களும் கேட்கும் விலையைவிட, பல மடங்கு அதிகத் தொகை கேட்டார்.
அதனால் எரிச்சல் அடைந்த அந்த நடன மாது, “”நீங்கள் கேட்பதைவிட அதிகம் தருகிறேன். ஆனால், இப்போதே, என் எதிரிலேயே நீங்கள் வரைய வேண்டும்!” என்று ஒரு நிபந்தனை விதித்தாள்.

“”ஆஹா!” என்றபடியே அதற்குத் தயாரானார் கெஸ்னா. எந்த ஓவியனையும் எரிச்சல் ஊட்டக்கூடிய நிபந்தனைக்குச் சர்வ சாதாரணமாக அவர் சம்மதித்தது, மேலும் வெறுப்பைக் கொடுத்தது அந்த நடன மாதுவுக்கு.

உடனிருந்தவரிடம், “”இவரெல்லாம் ஒரு துறவியா? அவ்வளவு ஏன், ஓர் ஓவியக் கலைஞர் என்பதற்குக் கூட அருகதையற்றவர் இவர். பேராசையுடையவர் இவர். காவி அணிந்துகொண்டு அந்தத் துறவி உடையையே அவமானப் படுத்துபவர். புத்த மதத்திற்கே இவர் ஒரு களங்கம்!” என்று பலபடி வசைபாடினாள்.

கெஸ்னா துறவி, அதுபற்றிச் சற்றும் கவலைப்படாமல், ஓவியத்தை முடித்துவிட்டுப் பொருள் கேட்டுக் கை நீட்டினார். அவர் கேட்ட பொருளைக் கொடுத்த பெண்மணி, “”உமது ஓவியங்கள் மக்கள் பார்வைக்கு மாட்டக்கூடத் தகுதியற்றவை. அவற்றை உள்ளாடைகளாக வேண்டுமானால் பயன்படுத்தலாம்!” என்று கூறியவள், தனது உள்பாவாடையை நீட்டி அதிலும் ஓவியம் வரையச் சொன்னாள்.

கெஸ்னா குரு அதற்காகக் கோபப்படவில்லை. அதற்கும் நிறையத் தொகையைக் கேட்டு பெற்றுக் கொண்டார். அவள் கேட்டபடி வரைந்தும் கொடுத்தார். அவரைக் கண்டபடி திட்டிவிட்டுப் புறப்பட்டாள் அந்த நாட்டியப் பெண்மணி.
பின்னாளில்தான் தெரிய வந்தது, குரு எதற்கு அவ்வளவு பணம் சேர்த்தார் என்ற விவரம் அனைவருக்கும். அந்தப் பகுதியில் நீடித்த பஞ்சம் நிலவியதால், ஏராளமான களஞ்சியங்களைக் கட்டித் தானியம் நிறையச் சேகரித்து வைத்திருந்தார் துறவி. அவர்தான் அனுப்புகிறவர் என்பது தெரியாமலேயே, அவை ஏழைகளைப் போய் சேர்ந்தன, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள். அதேபோல், அவருடைய கிராமத்திலிருந்து நகரத்திற்குச் செல்லச் சாலை வசதிகள் இல்லாது, வண்டிமாடுகள் பெரும் துன்பமடைந்தன.
வயோதிகர்களும், நோயாளிகள் ரொம்பக் கஷ்டப்பட்டனர். அழகிய பாதை போட அவரது பணம் செலவாயிற்று. கெஸ்னாவின் குரு, அந்நாளில் ஒரு தியானக் கூடம் கட்ட நினைத்தார். அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் உயிர் நீத்தார். அவரது நினைவாக, கெஸ்னா கோவிலுடன் சேர்ந்து தியான மண்டபமும் கட்டினார்.

இம்மூன்றும் நிறைவேறியதும், கெஸ்னா தமது வண்ணங்களையும், தூரிகையையும் தூக்கி எறிந்துவிட்டார். பிறகு அவர் ஓர் ஓவியம் கூட வரையவில்லை என்பதுடன், மலைப் பகுதிக்குச் சென்று தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

சிலரின் பிறப்பு புனிதமானது. சிலர் பிறந்த பின் புனிதம் வந்து சேர்கிறது. சிலர் மீது புனிதம் திணிக்கப்படுகிறது. மக்களுக்காகச் செய்யப்படும் எல்லாமே இறைத்தன்மை மிக்கவைதாம். பசி போக்கும் செயல், சமுதாய நலன் கருதும் தொண்டு. இவை தவத்தினும் உயர்ந்தவை.

– ஜூலை 02,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *