தெருப் புழுதியில் புரண்டு புரண்டு எழுந்து காள் காள் என்று கத்தியது ஒரு கழுதை
சிறிது தொலைவில் பற்களில் இருந்த வெட்டுக்கிளிகள் கிரீச் கிரீச் என்று ஒலித்தன.
அந்த ஒலியைக் கேட்ட கழுதை, வெட்டுக் கிளியின் அருகில் சென்றது.
“உன் குரல் மிக இனிமையாக இருக்கிறதே உனக்கு இந்தக் குரல் எப்படி உண்டாயிற்று? உன்னைப் போல் இனிமையான குரல் உண்டாக , எனக்கு ஒரு வழி சொல்லு” என்று கேட்டது கழுதை
வெட்டுக்கிளிக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. “என்னைப் போல் இனிமையான குரல் உனக்கு அமைய வேண்டுமானால், நான் அருந்துவதைப் போல், பனித்துளிகளையே அருந்த வேண்டும் வேறு எந்த உணவையும் தின்னக் கூடாது” என்றது வெட்டுக்கிளி .
கிளி சொன்னதை நம்பியது கழுதை. எப்படியாவது, இனிய குரலை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டது.
வழக்கமான உணவுகளை உண்ணாமல், பனித்துளிகளை மட்டுமே அருந்தத் தொடங்கியது.
கழுதையின் உடல் மெலிந்தது, நடை தளர்ந்தது. சோர்வு மிகுதியாயிற்று. ஆனாலும் பனித்துளிகளையே விடாமல் அருந்தி வந்தது.
கழுதையால் எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் இனிய குரல் ஆசை மட்டும் அதை விட்டு அகலவில்லை.
சில நாட்களில் அந்த மடக் கழுதை செத்துப் போய்விட்டது. அதைக் கண்ட கிளி ஏளனமாக கிரீச் கிரீச் என்று ஒலித்தது.
பிறரைப் பார்த்து பொறாமை கொள்ளக் கூடாது.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்