ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன.
அதில் ஒரு குரங்குக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. ஒரு சிறிய தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னச் சின்ன செடிகளாகப் பார்த்து அவற்றையெல்லாம் பிடுங்கி வந்து தனது தோட்டத்தில் நட்டு வைத்தது.
ஒரு மாதம் ஆயிற்று. செடிகள் வளரவே இல்லை! தாய் குரங்கிடம் போய் கேட்டது, “”இவ்ளோ நாளாச்சு… ஒரு செடிகூட வளரவே இல்லையே ஏன்?”
“”அதுவா, செடிகளை நட்டால் மட்டும் போதாது. அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்!” என்றது தாய்க்குரங்கு.
அவ்வாறே குட்டிக் குரங்கு நிறையத் தண்ணீர் ஊற்றி வந்தது. அதன் பிறகு ஒரு மாதம் கழிந்தது.
“”இப்பவும் செடிகள் முளைக்கவே இல்லையே, அது ஏன்?” என்று தாய்க்குரங்கிடம் போய்க் கேட்டது குட்டிக் குரங்கு.
தாய் சொன்னது, “”நீ செடிகளுக்கு நிறையத் தண்ணீர் ஊற்றுகிறாய்… அதனால் அதன் வேர்கள் தண்ணீரால் அழுகிப் போயிருக்கும்…”
“”அப்படியா, ஒரு வேர்கூட அழுகவில்லையே?” என்றது குட்டி.
“”அது எப்படி உனக்குத் தெரியும்?”
“”ம்ம்…ம்… நான்தான் அந்தச் செடிகளைத் தினமும் பிடுங்கிப் பார்க்கிறேனே!”
“”அடப்பாவி… தினமும் பிடுங்கிப் பிடுங்கி நட்டால் எப்படிச் செடிகள் முளைக்கும்? குழந்தாய்… எதுவும் அளவோடு கொடுத்தால்தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். செடிக்கு மட்டுமல்ல… நமது வாழ்க்கையிலும்தான்… என்ன புரிகிறதா?”
“”புரிகிறது… அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று மானிடர்கள் சொல்வார்கள்… அதுதான் இதுவா?” என்று அம்மாவிடம் கொஞ்சும் குரலில் கேட்டது குரங்கு.
– கலைப்பித்தன், கடலூர். (டிசம்பர் 2012)