இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை தினமும் வகுப்பில் திட்டுவார்! நீ எல்லாம் ஏன்டா? படிக்கவர்றே! கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்றார். பயிற்சி நோட்டைத் தூக்கி வீசினார். அப்பவும் அருணாசலம் சிரித்தபடி நின்றான்.
தலைமை ஆசிரியர் சங்கரன் வகுப்புகளைப் பார்வையிட வராந்தாவில் வந்தார். “”இவனைப் போல் 40 கழுதைகளை ஏன் ஐயா, பள்ளியில் சேர்த்தீங்க” எனக் கேட்டார் கனகவல்லி டீச்சர்.
“”இவங்கள்லாம் இலவச சத்துணவுக்காகவும் முட்டைக்காகவும் வர்றாங்க! உங்க அப்பா அம்மாவைக் கூட்டிவாடா, போடா” என்றார் தலைமை ஆசிரியர்.
அப்படியே வீடு சென்றவன், வீட்டு வாசல் படியிலேயே தூங்கிவிட்டான். சலவை வேலைக்குச் சென்ற அவனுடைய பெற்றோர் முன்னிரவு நேரம் வீடு திரும்பினர். அருணாசலம் வாசற்படியில் படுத்திருப்பதைக் கண்டு பதைபதைத்தனர்.
மறுநாள் தந்தை சண்முகம், தாய் வள்ளி இருவருடனும் பள்ளிக்கு வந்தான் அருணாசலம். “”இவனுக்குப் படிப்பு சுத்தமாக வரலே! ஏதாவது வேலைக்கு அனுப்பு” என்றார் தலைமை ஆசிரியர் சங்கரன்.
“”ஆமாம்பா! பரீட்சையில் முட்டைதான் வாங்குறான். ஆண்டுத் தேர்வில் பெயில்தான் ஆவான். இவனெல்லாம் கழுதை மேய்க்கத்தான் லாயக்கு!” என்றார் கனகவல்லி டீச்சர்.
“”கும்பிடுறேன் சாமி! ஊரெல்லாம் சலவை செய்து பிழைக்கிறோம். நாங்கதான் படிக்கலே! பையனாவது படிக்கட்டுமே… பாடப் புத்தகம், நோட்டு, மதிய சத்துணவு, முட்டை எல்லாம் இலவசமாய்க் கொடுக்கிறாங்கன்னு படிக்க அனுப்புறோம்” என்றார் சண்முகம்.
“”ஏன் சாமி! பள்ளி நேரத்தில் பெற்றோரை அழைச்சுட்டு வா என்று அனுப்புறீங்களே! பகல்லே சலவைக்குப் போய்ப் பிழைக்கிறோம். அந்த நேரம் எங்களுக்கு இப்படி வீணாகுது. அதுவே தப்பு! நீங்கள்லாம் படிச்சவங்க. அருணாசலம் வாசல் படியிலே வந்து பசியோட தூங்கிட்டான். இன்னிக்கும் எங்களுக்குப் பொழைப்பு போச்சு!” என்றாள் அம்மா வள்ளி. “”என்ன நீ! இப்படியெல்லாம் எதிர்த்துப் பேசுறே?” கனகவல்லி டீச்சர் கோபித்தார்.
“”கோபிக்காதீங்க டீச்சர். உடம்புக்குச் சரியில்லேன்னு டாக்டரிடம் கூட்டிட்டுப் போறோம். இவன் பொழைக்கமாட்டான்னு சொல்லலாமா? எப்படி மருந்து கொடுக்கலாம், குணப்படுத்தலாம்னு யோசனை பண்ணிப் பிழைக்க வைக்க வேண்டாமா? கைராசியும் முகராசியும் உள்ள டாக்டர்னு எல்லாரும் கும்பிடுவாங்களேம்மா!” என்றாள் வள்ளி.
என்ன காரணமோ? கோபமோ? அருணாசலம் பெயில் ஆனான்… பள்ளிக்குச் செல்லவில்லை. முடிவு –
ஜாபர்கான் பேட்டையில் அருணாசலம் சலவையகம் 10 ஆண்டுகளில் பிரபலமாகியது. பூர்விக ஊர் வண்ணார்பேட்டைப் பெண் அழகு சுந்தரியைக் கல்யாணம் செய்தான்! மாமியார் வீட்டுச் சீதனமாக மாமனார் மூர்த்தி வழங்கிய 40 கழுதைகளுடன் வந்து இறங்கினாள் அழகு சுந்தரி.
தினமும் அதிகாலையில் கழுதைப் பால் வியாபாரம் ஓங்கியது! மகப்பேறு மருத்துவர்கள், பிறந்த குழந்தைகளுக்குக் கழுதைப் பால் கொடுத்தால், நோய் அண்டாது! பேச்சு நன்றாக வரும் எனக் கூறியதால், நீண்ட வரிசையில் அதிகாலைக் குளிரில் நின்று கழுதைப் பால் வாங்கினார்கள் மக்கள். தும்பைப்பூ போன்ற வெண்மை நிறமாகத் துணி வெளுத்தார்கள். வருமானம் பெருகியது.
ஒருநாள் நீண்ட வரிசையில் தலைமை ஆசிரியர் சங்கரன், கனகவல்லி இருவரும் வந்தார்கள். அவர்கள் ஓய்வுபெற்று விட்டார்கள். அருணாசலம் அவர்களைக் கண்டு வணங்கினான்.
“”உங்க புண்ணியத்திலே நல்லா இருக்கிறேன் ஐயா!” என்றான்.
மனைவி அழகு சுந்தரி, “”உங்க பேரை அடிக்கடி சொல்வாருங்க” என்றாள்.
“”நீண்ட வரிசையிலே நீங்க நிற்கணுமா? நாங்களே கொண்டு வந்து கொடுத்திருப்போமே! வாங்க வாங்க, வந்து பாருங்க எங்களுக்கு 40 குழந்தைகள்” என்று சொல்லி இருவரையும் அழைத்துச் சென்றார்கள்.
கழுதை கெட்டா குட்டிச்சுவர்ம்பாங்க! அங்கே 40 கழுதைகளும் “குஷி’யாகக் கத்தின! தலையையும் வாலையும் ஆட்டின!
“”அழுத பிள்ளை சிரிக்குமாம்னு ஆச்சி பாடிய படத்தில் நடிச்சது இது!” என்றான்.
“”மற்ற கழுதைகளும், தெலுங்கு இந்திப் படங்களில் நடிக்குது! அதெல்லாம் அழகு சுந்தரி ஏற்பாடு” என்றான் அருணாசலம்.
வாசலில், அவர்கள் சலவையகத்தின் ஒன்பது கிளைகளுக்கும் சலவைத் துணிகளுடன் கிளம்பிக் கொண்டிருந்தன வேன்கள்! அவரவர் வீடுகளில் விட்டுச் செல்ல ஏற்றி அனுப்பினான் அருணாசலம்.
“”பெற்றவங்க பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்வதுபோல் இரண்டு குழந்தைகளுக்கு உங்க பெயர்களை வச்சிருக்கிறோம்” என்றாள் அழகு சுந்தரி.
2 குழந்தைகள் என்று கூறுவது யாரை? சங்கரனும் கனகவல்லியும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டனர்.
குறள் கருத்து – நமக்குத் தீமை செய்தவர் வெட்கப்படும்படி நாம் நன்மையே செய்ய வேண்டும்.
– நெல்லை ஆ.கணபதி (நவம்பர் 2013)