அதிர்ஷ்டம் எப்படியும் வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 9,101 
 
 

சித்தூர் என்னும் ஊரில் முனியன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அப்பாவி குடியானவன். எது சொன்னாலும் நம்பி விடுவான். இதனால் நிறைய இடங்களில் ஏமாந்து விடுவான். அவனை பல பேர் ஏமாற்றிவிடுவர்.

முனியனுக்கு விவசாய வேலை மட்டும் தெரியும். அங்குள்ள விவசாய நிலங்களுக்கு விவசாய கூலியாகத்தான் செல்வான். கூட அவன் மனைவியும் வேலைக்கு செல்வாள்.

அவன் மனைவிக்கு நாமும் சின்ன தோட்டம் ஒன்று வாங்கி அதில் விவசாயம் செய்து வாழ வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

அப்பொழுது விவசாயி ஒருவர் தன் மகளுடைய திருமண செலவுகளுக்காக இருபது செண்ட் தோட்டம் ஒன்றை விற்கப்போவதாக மற்றொரு நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அதை கேள்விப்பட்ட முனியனின் மனைவிக்கு எப்படியாவது அதை நாம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசை. அந்த விவசாயிடம் சென்று அந்த இடத்திற்கு எவ்வளவு விலை என்று கேட்டாள். அவர் சொன்ன தொகை அவளிடம் இல்லை.

இருந்தாலும்,அவர்களிடம் பசு மாடு ஒன்று இருந்தது. அதில் பால் கறந்து வரும் வரும்படியை எடுத்து சேமித்து வைத்திருந்தாள். ஆனால்,அந்த தொகை விவசாயி சொன்ன விலைக்கு காணாது.

சரி பசு மாட்டையே விற்று விடலாம், அதன் மூலம் கிடைக்கும் பணத்துக்கு இந்த இடத்தை வாங்கி விடலாம் என்று முடிவு செய்தாள்.

முனியனிடம் பசு மாட்டை கொடுத்து சந்தைக்கு கொண்டு போய் விற்று வரும்படி சொன்னாள்.

மறு நாள் முனியனும் பசு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்கு கிளம்பினான்.

சந்தை மூன்று மைல் தூரம் இருந்தது.

இவன் பசு மாட்டை ஓட்டி செல்வதை பார்த்த ஒருவன், முனியனை ஏமாற்றி விடலாம் என்று முடிவு செய்தான். அவன் ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு இவன் எதிரில் வந்தான்.

என்ன முனியா வத்தலும் தொத்தலுமா இருக்கற மாட்டை ஓட்டிகிட்டு எங்க கிளம்பிட்ட?

முனியனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவன் பசு மாடு நல்ல புஷ்டியாக இருக்கும். தினமும், அவனும், அவன் மனைவியும் வேலை முடிந்து வரும்போது அங்கிருக்கும் தீவன பயிர்களை கொண்டு வந்து பசு மாட்டுக்கு போட்டு வளர்த்து வந்தனர்.

என்ன அண்ணே இப்படி சொல்றீங்க? எங்க பசு மாடு நல்லாத்தானே இருக்கு.

முனியா நல்லா பாரு, உன் பசு மாடு ரொம்ப மெலிஞ்சு போய் இருக்கு, பாரு கால் கூட சூம்பி போன மாதிரி இருக்கு. இதைய கூட்டிகிட்டு சந்தைக்கு கொண்டு போனயின்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்.

முனியனுக்கு கவலையாகி விட்டது. ஐயோ என் சம்சாரம் இதைய வித்துதானே அந்த தோட்ட்த்தை வாங்கறதா சொல்லுச்சு, கவலையுடன் சொன்னான்.

நீ ஒண்ணும் கவலைப்படாதே முனியா, இந்தா இந்த ஆட்டை ஓட்டிகிட்டு போ, மாட்டை எங்கிட்ட கொடுத்துடு. இந்த ஆடு நல்ல விலைக்கு போகும், கொண்டு போய் சந்தையில வித்து உன் சம்சாரத்து கிட்டே கொடு.

இந்த ஆடு நல்லா விலை போகுமா? கவலையுடன் கேட்ட முனியனிடம், நல்லா விலை போகும், தைரியமா வாங்கிக்குக்க,

முனியனும் அவன் சொன்னதை நம்பி தன்னுடைய பசு மாட்டை கொடுத்து விட்டு அவனுடைய ஆட்டை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்

மாட்டை வாங்கியவன் மகிழ்ச்சியுடன் இவனை ஏமாற்றிவிட்ட சந்தோசத்தில் வேக வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.

ஒரு மைல் தூரம் முனியனும் அந்த ஆட்டுடன் நடந்திருப்பான். அப்பொழுது எதிரில் ஒருவன் ஒரு சேவலுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு முனியனை பற்றி தெரியும், முனியனை ஏமாற்றி விடலாம் என்று முடிவு செய்தான்.

என்ன முனியா இவ்வளவு முத்தலான ஆட்டை புடிச்சுகிட்டு எங்க போறே/

முத்தலான ஆடா, நல்ல இளம் ஆடுன்னுதான.யோசனையுடன் முனியன் நின்றான்.

நல்லா பாருங்கண்னே, அது இளம் ஆடுதான், சந்தைக்கு கொண்டு போய்கிட்டு இருக்கேன், என் மனைவி இதைய வித்து தான் ஒரு தோட்டம் வாங்க போறா.

அட என்ன முனியா, இவ்வளவு வயசான ஆட்டை கொண்டு போய் எப்படி வித்து உன் பொண்டாட்டிக்கு தோட்டம் வாங்க பணம் கொடுப்பே, நான் சொல்றதை கேளு, இந்த சேவலை பாரு, நல்ல கட்டு சேவல், இதைய கொண்டு போனியின்னா நிறைய பணம் கிடைக்கும். அதையை கொண்டு போய் உன் சம்சாரத்துகிட்டே கொடுப்பியா?

இவனின் பேச்சால் குழம்பி போனான் முனியன். இது வயசான ஆடா, இது தெரியாம வாங்கிட்டமே, இப்ப என்ன பண்ணுறது, பேசாம இவங்கிட்டே இந்த சேவலை வாங்கி சந்தைக்கு போய் வித்து நிறைய பணம் வாங்கிக்கலாம் முடிவு செய்தவன், சரிண்ணே இந்தாங்க ஆட்டை பிடிங்க, என்று ஆட்டை கொடுத்து விட்டு சேவலை பெற்றுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

. இன்னைக்கு நல்ல இளிச்சவாயன் மாட்டிகிட்டான், என்று நினைத்துக்கொண்டு அந்த ஆட்டை ஓட்டி சென்றான் அந்த ஏமாற்றுக்காரன்.

சந்தைக்கு அரை மைல் தள்ளி கையில் சேவலுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் முனியன். இப்பொழுது எதிரில் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் முனியனை பார்த்த்தும், முடிவு செய்து கொண்டான். இவனை எப்படியும் ஏமாற்றி சேவலை பறித்துக்கொள்ள வேண்டும் என்று.

என்ன முனியா கையில சேவலை புடுச்சிகிட்டு போயிட்டிருக்க?

ஆமாண்ணே இந்த சேவலை கொண்டு போய் சந்தையில வித்து, ஒரு தோட்டம் வாங்க என் சம்சாரத்திகிட்டே பணத்தை கொண்டு போய் கொடுக்கணும்.

என்ன முனியா சொல்றே, ஒரு சேவலை வித்து தோட்டம் வாங்க முடியுமா?

அப்பொழுதுதான் முனியனுக்கு உண்மை புரிகிறது.. ஆமா, சேவலை வித்தா அவ்வளவு பணம் கிடைக்காதே? கவலையுடன் நின்றான் முனியன்.

ஒண்ணும் கவலைப்படாதே, உன் சேவலுக்கு பதிலா இந்த சீட்டை வச்சுக்க, இதைய கொண்டு போய் சந்தையில இருக்கற கடையில காண்பிச்சியின்னா வேணுங்கற பணம் கொடுப்பாங்க, சொல்லி விட்டு தன் சட்டை பையில் வைத்திருந்த ஒரு சீட்டை கொடுத்து விட்டு சேவலை வாங்கிக்கொண்டு, அப்பா ஒரு ரூபா கொடுத்து வாங்கின சீட்டுல ஒரு சேவலை ஏமாத்தி வாங்கிட்டோம்,மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொண்டே அங்கிருந்து விறு விறு வென நடந்து சென்று விட்டான்.

பாவம் முனியன் அந்த சீட்டை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பயத்துடன் சந்தைக்கு சென்று அங்கிருந்த ஒரு கடையில் காண்பித்து அண்ணே இதை காட்டுனா நிறைய பணம் கிடைக்கும்னு சொன்னாங்க. அப்பாவியாய் கேட்டான்.

அந்த சீட்டை வாங்கி பார்த்தவன் ஒரு நிமிசம் இரு, என்று ஒரு பத்திரிக்கையை வாங்கி இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து தம்பி உன் லாட்டரி டிக்கெட்டுக்கு லட்ச ரூபாய் பரிசு விழுந்திருக்கு. வா வா. என்று பக்கத்திலிருந்த வங்கிக்கு அழைத்து சென்றான்.

வங்கியில் அந்த சீட்டை வாங்கி பதிவு செய்து கொண்ட வங்கி அதிகாரி லாட்டரியில் விழுந்த பணத்தை வங்கியில் வைத்துக்கொள்வதாக தெரிவித்தவர், நாளைக்கு உங்கள் மனைவியுடன் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். முனியன் கடைக்காரருக்கும், வங்கி அதிகாரிக்கும் நன்றியை தெரிவித்து விட்டு மீண்டும் தன்னுடைய ஊரூக்கு திரும்பினான்.

வீட்டுக்கு வந்த கணவன் வெறும் கையுடன் வந்திருப்பதை கண்ட முனியனின் மனைவி அவனை திட்டினாலும், அவன் நடந்த விசயங்களை சொல்லி முடித்த பின்னால், மிகவும் மகிழ்ந்து, நாளைக்கே போய் கொஞ்சம் பணம் மட்டும் எடுத்து இந்த தோட்டத்தை வாங்கிக்கலாம். மிச்ச பணம் அந்த வங்கியிலேயே இருக்கட்டும்,வேணுங்கிறபோது எடுத்துக்கலாம்.இப்ப சாப்பிட வாங்க என்று அழைத்து சென்றாள்.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *