சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு – சி.சு.செல்லப்பா

 

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற பேச்சு எழுகிறது. உருவம் என்றால் ஏதோ ஒரு வரையறை ஏற்படுத்தி இந்த மாதிரி இருந்தால்தான் அது ஒரு சிறுகதை என்று ஒரு ஆரம்ப சட்டம் இட்டு, ஒரு கட்டுப்பாட்டுக்குள், அடாபிடித்தனமாக, இயங்க வைக்கப்பட்ட ஒன்று என்று கொண்டு விட முடியாது. ஆரம்பகாலப் படைப்பு ஒன்று தனக்குள் அடக்கி இருக்கும் ஒரு அமைப்பு முறையைக் கொண்டு, அந்த அமைப்பு முறைக்கு உதவிய சில தன்மைகளை மட்டும் கொண்டு, அதுவேதான் என்றைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை என்று கலைத்துறையில் எந்த ஒரு பிரிவு பற்றியும் அறுதியிட்டுச் சொல்லி விட முடியாது. சங்க காலக் கவிதையிலிருந்து ஆரம்பித்து, சிலப்பதிகாரம் பார்த்து, கம்பராமாயணம் தாண்டி, ஆழ்வார்கள் நாயன்மார்களையும் கடந்து, பாரதிக்கு வந்து அவருக்குப் பின்னும் பார்க்கிறபோது கவிதைத் துறையில் நாம் கணக்கற்ற உருவ வகைகளைப் பார்க்கிறோம். அவரவர் சந்த வேறுபாடும், தளை, சீர் சேர்க்கை அளவு வித்தியாசமும், சொல்லாட்சி மாறுபாடும், வரிக்கணக்கு வித்தியாசமும், ஒலிநயப் போக்கு மாறுதல்களும் நாம் பார்ப்பவை.

தொன்மையான, மரபான இலக்கியத் துறையில் முதலில் தோன்றின வகையான கவிதை பற்றியே இப்படி என்றால் இக்காலத்ததான, நூதனமான, வெகு சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலக்கிய வகையான சிறுகதை பற்றி திட்டவட்டமான ஒரு கோடிட்ட வழி உருவம்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? எனவே எட்கர் அல்லன் போ முதல் வில்லியம் ஸரோயன் வரை வந்து, இன்னும் தள்ளி வந்து, சிறுகதை உருவம் எத்தனை தினுசாகக் கையாளப் பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். இதுக்கு அப்பாலும் உருவம் புதுசாக ஆக்கப்படவும் கூடும். இதை மனதில் கொண்டுதான் தமிழ்ச் சிறுகதை பற்றி நாம் ஆராய முற்பட வேண்டும்.

ஆனால் ஒரு எச்சரிக்கை. இப்படி சொல்வதைக்கொண்டு, சிறுகதைக்குத் திட்டவட்டமான உருவம் கணிக்க முடியாததால் எதையும் சிறுகதையாகக் கருதிவிடலாம் போலத் தோன்றும், சொல்லவும் தோன்றும். அது சரியாகாது. சிறுகதை உருவம் சம்பந்தமாக நல்ல சுதந்திரம் இருந்தாலும் முதன்மையாக அது சிறுகதை என்கிற தன்மை வாய்ந்ததாக, அதுக்கான சில அடிப்படை அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். கவிதை சம்பந்தமாக, அது எந்த விதமான யாப்பு நியதிக்கு உட்பட்டு இருந்தாலும் அது கவிதை என்ற தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது போல, இசைத் துறையில் பாடகனின் கற்பனா சக்திக்கு ஏற்ற ராகங்களை பாணி என்று சொல்லும்படியாக புது விதமாகப் பாடினாலும் குறிப்பிட்ட ராகத்தின் அடிப்படை லட்சணங்களை மீறிப் போகாமல் இருக்க வேண்டும் என்பது போல்.

இந்த எச்சரிக்கைகளை சொல்லக் காரணம், இப்போது தமிழில் எதையும் சிறுகதை என்று சொல்லும் அளவுக்கு ரசிகமனம் அவ்வளவு தாராளத் தன்மையும் அபிமான, அனுதாபப் பார்வையும் கொண்டுவிட்டதுதான். அவ்வப்போது வெளியாகிற சிறுகதைத் தொகுப்புகளில் படைப்பாளியாலும், தொகுப்பை அறிமுகப்படுத்துகிறவர்களாலும், பதிப்பாளர்களாலும் எழுதப்படுகிற முன்னுரைகளையும், பத்திரிகைகளில் வரும் மதிப்புரைகளையும் படிக்கிறபோது இந்த ‘பரந்த மனப்பான்மை’, ‘தயாளம்’ தாராளப் பாராட்டுகளை நாம் ரொம்பப் பார்க்கிறோம். அதோடு இன்னொரு முக்கியமான விஷயம். சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறபோது வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுவது, சமூகத்தின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது, பொருளாதார ஏற்றத் தாழ்வை விண்டு காட்டுவது, மன உளைச்சலை வெளியிடுவது, தத்துவத்தை விளக்குவது இப்படி மதிப்பிடப்படுகிறதே தவிர, முதலில் இவை சிறுகதைகளாக இடம் பெற்றனவா, தரமான சிறுகதைகளா, கலைநயம் காண்கிறதா, அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, அனுபவம் சிலாக்கியமானதா, வெளியீடு திறன்பட உள்ளதா, கற்பனா சக்தி எந்த அளவு காட்டப்பட்டிருக்கிறது, கையாண்ட மொழியானது வேகம், பொருத்தம், சக்தி, புதுமை கொண்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்கப்படுகிறதே இல்லை.

உரைநடை இருந்தால் போதும், ‘நடை’ (ஸ்டைல்) தேவையில்லை, வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம், மனித ஜாதியிடம் ஒரு அக்கறை இருந்தால் போதும் அது அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை, கருத்துச் செழிப்பு இருந்தால் போதும் கலைத்தன்மை பற்றிக் கவலை இல்லை, சமூகவியல் ரீதியாகச் சரியாக இருந்தால் போதும், அழகியல் ரீதியாகப் பார்க்கத் தேவையில்லை, போதனை மதிப்பு இருந்துவிட்டால் போதும், இன்ப மதிப்பு ஒரு பொருட்டில்லை என்றெல்லாம் பொதுவாகக் கருதப்படுகிற அளவுக்குச் – சிறுகதை மட்டும் என்ன – இலக்கியமே கருதப்படுகிற அளவுக்கு இன்று இருக்கிற பரவலான நிலை.

– சி.சு.செல்லப்பா

நன்றி : தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது, எழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *