வெகுண்ட உள்ளங்கள் (குறுநாவல்)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 8,209 
 
 

ஆசிரியர் குறிப்பு:

இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’பத்திரிகையில் தொடராக வெளியானது.98இல் அண்ணரின் முயற்சியில் குமரன் வெளியீடாக ‘வேலிகள்’ என வெளியாகிய சிறுகதைகள் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. என்னுடைய முதலும் முடிவுமான ஒரே புத்தகம் அது தான்! நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.

28 ஆண்டுகளிற்குப் பிறகு உங்கள் தளத்திற்கு அனுப்புவோம் என எடுத்து மீள வாசித்த போதே…. வள்ளம்,படகு என்ற சொற்களை பாவித்ததில் சிறு குழப்பம் இடம் பெற்றிருப்பது தெரிந்தது.அதோடு மேலும் சில குறைகள் இருப்பதும் தெரிந்தன.அவற்றை ஓரளவு சீர் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.

பார்த்தீங்களா ஒன்றை ? பல வருசங்கள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிற எனக்கு ‘இதை பட்டை தீட்டி அனுப்ப வேணும்’ என்று தோன்றாவிட்டால்….இந்த குறைகளுடனே இந்த புத்தகம் கிடந்திருக்கும்.

உங்களுடைய தளத்திற்கு நன்றிகள் பல‌ !

இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது.அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நாலு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம்.அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல்.தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி,அங்காலப் பக்கம் இருப்பது வேலணைத் தீவு.காரைநகர்,பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு,மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும்.

ராஜபட்சா அரசாங்க காலத்தில் அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிற‌து போல இருக்கிறது.கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட் டே விட்டிருப்பதுப் போல வே காட்டுகிறது. ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை.

இந்த இடத்தில் தான் …1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது.50 % …உண்மையும்,50 % …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது.

இந்த கதையிலே ஒவ்வொரு முறையும் கை வைக்கிற போதும் நீண்ட நாள்களை விழுங்கிறது. முதல் தடவை எழுதிய போதும் சரி,இப்ப சிறுகதைகள் இணையத்திற்காக திரும்ப ஒரு தடவை சீர் பார்த்து எழுதுற போதும் சரி போதும், போதும் என்றாகிப் போச்சுது !

இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.

———————————————

தீவையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கிற அந்த சிறிய கடல்பரப்பு ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கனகனின் பூட்டன் காலம் அல்லது அதற்கு முந்தியதாக இருக்கலாம். அங்கே சிறிய துறையிருந்ததற்கு அடையாளமாக உள்ளே சென்ற மேடையொன்று அழிந்து சிதைந்து காணப்பட்டது.

அவன் அப்பன் சிலவேளை “அப்படியே றோட்டு தீவுக்குச் சென்றது. இப்ப கடல் மூடிவிட்டது” என்று கதையளப்பான். ஒருவேளை அப்படி யிருக்குமோ என்று அவனும் நினைப்பதுண்டு. ஏனெனில் தார்ப்பருக்கைகளோடு கூடிய றோட்டு ஒன்று கடலுக்குள்ளே போயிருப்பதையும் யாரும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

அவ்விடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் பாவிக்கிற இடமாகவே அது கனகாலமாக புளங்கி வருகிறது. அவர்கள் தங்குவதற்கான ஒரு நீண்ட வாடி ஒரு புறத்தில் அமைந்திருந்தது.முந்தி ஒலைக்கொட்டகையாக இருந்ததை ஒருமாதிரியாக அரச மானியத்தைப்பெற்று அஸ்பெஸ்டாஸ் கூரையோடு கூடிய சீமெந்துக் கட்டிடமாகக் கட்டியிருந்தார்கள்.

அந்தப்பகுதி பிரபல்யமாகவும், அவசியமானதாகவும் வரும் என்று எந்த மீனவனும் நினைத்திருக்கமாட்டான். சிறிய வள்ளத்தில் சென்று மீன்பிடித்து வருகிற அவர்களை புதிதாக ஒரு பிரச்சினை மூழ்கடிக்கப்போகிறது என்று மூக்குச் சாத்திரமா அவர்களுக்குத் தெரியும்.

கடல் பரப்பு அமைதியாக இருந்தது. மனதில் எரியும் கனலை அடக்க முடியாதவர்களாக அண்ணன் முருகேசு, கோபாலு, தில்லை, சப்பை போன்ற பிரதிநிதிகள் இடுப்பில் ஆயுதத்தைச் சொருகியிருந்த அந்த திக்குவாய்ப் பெடியனை சூழ்ந்திருந்தார்கள்.

கனகன், அன்ரன், நகுலன், நடேசு செட் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரமாக நின்றது.

“தம்பி, இது சரியில்லை. அவங்களை அந்தக் கரையிலிருந்து ஒடுறதுக்கு நீ ஒப்புதல் தந்தாய். இப்ப, ஒரு வள்ளம் இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருக்கிறது. உவங்களுக்கு சரியான பாடம் படிப்பிக்கேலும். நீ ஒப்புதல் தந்திருப்பதால் நாம எல்லாம் பொறுமையாக இருக்கிறம். அவங்களுக்கு நீ திட்டவட்டமாக வரையறை சொல்லி அதைக் கடைப்பிடிக்க வைக்க வேணும்” முருகேசின் கோபப்பேச்சு கனகனை சிறிது கிலி கொள்ள வைத்தது.

இவன் பயம் அறியாதவன். உயர் சாதிப்பெண்ணைக் காதலிச்சு, கூட்டிக்கொண்டு வந்து வாழ்கிறவன். நண்பர்கள் சிலருடன் எளிமையாக ஐயனார் கோவிலில் தாலி கட்டுறபோது அந்த சாதியினர் ஊருக்குள் அட்டகாசம் செய்யவந்தார்கள். திருக்கை வால், மண்டா, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு துணிவாக எதிர் கொண்டவர்கள் .ஆட்தொகை, ஆயுதம் பற்றி எல்லாம் கவலைப் படாத கூட்டம்.

இப்ப,இயக்கப் பெடியன் ஒருத்தனையே காட்டமாக எதிர் கொள்கிறார்கள்.

இவர்கள், சடாரெனச் சுட்டுத்தள்ளி விடுவார்கள். கனகனால் அவனை மறிக்க முடியுமா? தெரியவில்லை. எனவே, பயந்த மனதுடன் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தீவு மக்கள் முன்னர் பண்ணை வழியாலும் காரைநகர் வழியாலுமே சென்று கொண்டிருந்தார்கள். கோட்டையில் அரசபடைகள் குவிக்கப்பட்டு பண்ணைப்பாதையில் ‘மண்டை தீவு முகாம்’ திறக்கப்பட்டபோது, அது அடைபட்டுவிட்டது. காரைநகர் பாதை மாத்திரமே போக்குவரத்துடையதாக இருந்தது. அண்மைக்காலம் தொட்டு அப்பகுதியில் கடற்படையின் அட்டகாசம் அதிகமாக…. இரண்டாவதும் தடைப்பட்டுவிட்டது.இதனால், கவனிப்பாரற்று கிடந்த அராலித்துறை, கரையூர், கொழும்புத்துறை போன்றவையை பயன் படுத்த‌பிரசித்தமடைந்து விட்டன.

இவ்விடத்தில்,சிறிய வள்ளங்களை மட்டும் அதிகமாக கொண்டிருந்த வாலையம்மன் கோவில் பகுதி மீனவர்கள், தலைக்கு இரண்டு மூன்று ரூபா என வசூலித்து மக்களை தீவுப்பகுதியில் கொண்டு போய் விடத் தொடங்கினார்கள்.

இரு கரைகளிலும் மினிபஸ்கள் சிதைந்த தார்றோட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வரத்தொடங்கின. பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்க்கடை, தேத்தண்ணிக்கடை என முளைக்க அத்துறை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அவர்களுடைய தீவுப் பகுதித் தோழன் ஒருத்தன் கூட பீத்தல் தட்டிகளுடன் ஒரு சிறிய மண்ணெண்னெய்க் கடை போட்டு விட்டிருக்கிறான்.”என்னடா,இப்படி போட்டிருக்கிறாய்?மழை வந்தால் தெப்பமாய் நனைத்து விடுவாய்யே?”என்று அன்டன் கேட்க ,”இது தொடக்கம்”என்று சொல்லிச் சிரிக்கிறான்.

கடல் வலயச் சட்டங்களால் மீன் பிடிப்பு அறவே இல்லாதிருந்தது.
கரைவலை போட்டவர்கள் மட்டுமே சிறிதளவு தொழில் செய்தார்கள். அதன் வருவாய் போதவில்லை.பொதுவாக எல்லா மீனவர்களுமே சங்கடத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். இந்த வருவாய் அவர்களது வறுமையை கணிசமான அளவு விரட்டியது எனலாம். பரவாய்யில்லையாய்… இருந்தது.

தொழிலற்றிருந்த நவாலி, ஆனைக்கோட்டை மீனவர்கள் தம் பெரிய வள்ளங்களை உடனடியாக‌ கல்லுண்டாய் கடலினுாடாக ஒட்டி கொண்டு அங்கே வந்தார்கள். அவர்களின் ஒரு வள்ளத்தில் இவர்களுடைய‌ இரு வள்ளங்களை அடக்கலாம். ஒரு ட்ரிப்பிலே வந்தவர்கள் அதிக பணம் காண‌,உழைக்க.இவர்களுக்கு கோபம் உண்டாகியது. கோபம் எப்பவும் நாசம் விளைவிக்கிற ஒன்று தான்.

எங்களுக்குத்தான் முதல் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை தீவுப் பகுதி பொறுப்பாளரான ஒரியக்கத்தின் அந்த திக்குவாய்ப்பெடியன் ஒரளவுக்கு ஏற்றிருந்தான். அதன்படி வாலையம்மன் பகுதியினர் தீவுக்கு ஆட்களை, சாமான்களை கொண்டு போவதென்றும் மற்றவர்கள் தீவுப்பகுதியிலிருந்து வருகிற வரத்தைப் பார்ப்பதென்றும் முடிவாக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே, பெரிய வள்ளம் ஒன்று இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருந்தது. முழுமையான‌ மீறல். எனவே வாலையம்மன் பகுதியினர் வள்ள ஒட்டத்தை நிறுத்திவிட்டு நியாயம் கேட்கத் தொடங்கினர்.

ரவுண் பக்கமிருந்து தீவுப்பகுதியிற்கு உத்தியோகத்திற்குப் போக வந்தவர்களும், ரவுணிற்கு பல்வேறு தேவைகளுக்காக போக வந்த தீவு மக்களும் ….இருபகுதியிலும் குவியத் தொடங்கினார்கள்.

கடற்பரப்பு வள்ள ஒட்டமற்று புயலுக்கு முன்னால் வருகிற அமைதிபோல இருந்தது.அந்தப்பெடியன், அமைதியாயிருக்கச் சொல்லிக் கேட்டிருந்தான்.

‘ஒட்டிய ஆட்கள் யார்’ என அவன் விசாரிக்கையில் அக்கரையிலிருந்து சனத்துடன் ஒரு பெரிய வள்ளம் கரை நோக்கி வந்துகொண்டிருந்தது.

கதைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை விழுந்து போனது “டேய் ஒட்டுறவனிட கையை முறியுங்கடா” கத்தினான் முருகேசு. சிறிய வள்ளத்தில் 5, 6 பேர் தாவி ஏறினார்கள். வள்ளம் நேரே பெரிய வள்ளத்தை நோக்கி ஒடியது. ஒட்டிகள் இருவரையும் பிடித்து இழுத்து வீழ்த்தி பறித் தெடுத்த‌ துடுப்புத்தடி.களால் போட்டு சாம்பித் தள்ளிவிட்டார்கள். ஒருத்தனுக்கு முழங்கால் உடைந்துபோனது. மற்றவனுக்கு பலமான கண்டல்காயங்கள். திரும்ப தமது வள்ளத்தில் ஏற‌ ,அந்த வள்ளம் திரும்ப கரை யை நோக்கி முனங்கிக் கொண்டு நோக்கி ஒடியது.

வெற்றிப் பெருமிதத்துடன் இவர்கள் கரை சேர்ந்தனர்.

பதினைந்து நிமிடம் இருக்கும். அக்கரையிலிருந்து ஐந்தாறு பெடியள்களுடன் நாலைந்து வள்ளங்கள் இக்கரை நோக்கி வேகமாக‌ விரைந்து வந்தன.அவர்களுக்குள் திகில் பரவத் தொடங்கியது.

“வருகிறவர்கள் மற்ற இயக்கத்துப் பெடியள்களடா” என தில்லை கத்தினான்.

“நீதானே ஒப்புதல் தந்தாய்” என்று முருகேசன் தொட்டு பலர் திக்குவாய்யனைச் சூழ்ந்துகொண்டனர்.

நிலைமை சீர் கேடாகிவிட்டது என்று அனைவருக்கும் புரிந்தது. கனகன் அண்ணணை இழுக்க ஒடினான். மற்றவர்களும் தம் உறவினரை இழுத்துக்கொண்டு வர ஒடினார்கள்.அதற்கிடையில் யாரும் எதிர்பாராத‌ நிகழ்வுகள் நடந்துவிட்டன.

வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து ‘மேல்வெடி’ வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்து எடுத்து விட்டார்கள். யாரோ ஒருவன் அவன் மண்டையையும் உடைத்துவிட்டிருந்தான்.இரத்தக்காயத்தோடு அவன் நின்றபோது வள்ளங்கள் கரை சேர்ந்தன.

“எவன்ரா?, எங்கட பெடியள்களை அடிச்சது’ பொறுப்பாளர் போல இருந்தவன் கோபமாக இறங்கினான்.

வடிவேலு நின்ற கோலத்தை பார்த்தபோது அவனுக்கு நிலமை விளங்கவில்லை. பொதுவாக தீவில் எல்லா இயக்கங்கள் மத்தியிலும் ஒரளவு பகைமையற்ற இழைக்கள் காணப்பட்டன.

“தோழர், டொக்டர் யாரிட்டைப் போவோம். காயத்திற்கு இழை பிடிக்கவேண்டியிருக்கும்” என்று கேட்டான்.

“பறித்தவற்றைத் தராதவரைக்கும் நான் உவ்விடத்தை விட்டு நகர மாட்டன்” என்று உறுதியாகத் தெரிவித்தான். சர்வேசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘அவன் பாடு’ என்று விட்டு விட்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தோரணையில் கேட்டான்.

“எவன்ரா, தோழர்ர‌ கையை உடைச்சது?” அவனுடைய அதிகாரத் தோரணையைப் பார்த்து சூழ இருந்த‌வர்கள் திக்பிரமைப் பிடித்து பயத்துடன் நின்றார்கள்.

வடிவேலனின் தோழர்களும் வானில் வந்து சேர்ந்தார்கள். தலைவர் போல இருந்தவர் அவனை வானில் ஏறச்சொன்னார். அவன் மறுக்கவே, இழுத்து வானில் ஏற்றி விட்டு “யாருமே வள்ளம் ஒடவேண்டாம்” என்று அறிவித்தான்.

‘வோக்கியை’ எடுத்து யாரோடேயோ சிறிதுநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பிறகு, வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து “இனிமே இயக்கங்கள் வள்ளங்களை ஒட்டும்’ என தெரிவித்துவிட்டு வானில் ஏறிப் பறந்தான்.

கனகனுக்கு நாசமாய்ப் போன படகு ஒட்டம் என்றிருந்தது. இவர்கள் அனைவரு மே மரவள்ளங்களையே ஓட்டினர் .ஒரு சிலரிடமே அவுட்புட் மோட்டர்கள் இருந்தன‌ . அவர்கள் பின் பகுதியில் பொறுத்தி வள்ளத்தைச் செலுத்தினார்கள். பலர் தடிகளால் தான் வலித்தார்கள்.வறிய நிலையில் இருந்த மீனவர்கள்,. வளப்பம் பெறுவதென்பது மிக மெதுவாக நடக்கிற ஒன்று .இந்த கடலில் தொழில் செய்ய வட்டுக் கோட்டை,வடக்கராலி மீனவர்கள் கூட வ ருகிறவர்கள் .கடல்ப் போக்குவரத்தை மேற்கொண்டவர்கள் இந்த கரையில் இருந்த தெற்கராலி மீனவர்கள் மாத்திரமே.இவர்கள் எவரிடமுமே பைபர்கிளாஸ் படகுகள் இருக்கவில்லை.

ஒருகாலத்தில், ஓடிய ரோலர் எனப்படுற பெரிய மரவள்ளம் ஒன்றும்,ஓட்டமற்று ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.கடற்படையினரின் அட்டகாசம் அதிகரித்த பிறகு அதனை ஓட்ட முடியவில்லை போல இருக்கிறது . அரச படையினரின் கொடூரக்குணம் பிரசித்தமே. தமிழும் தெரியாத சிங்களவர்கள் வடக்கு,கிழக்கை ஆட்டிப் படைக்க அடங்கா ஆசை கொண்டிருந்தார்கள் . அவர்கள், பழைய அரச ராஜ துரோகச் சட்டத்தை அப்படியே ஜனநாயகத்தில், பயங்கரவாதச் சட்டமாக்கி விட்டு, இந்த படையினரூடாகத் தான் சொல்ல அஞ்சுகிற குரூரமான செயல்களை எல்லாம் புரிந்து கொண்டிருந்தார்கள்.அவர்களின் முதல் இலக்கு மீனவர்கள் தான் .

இந்தியத் தமிழர் என்றில்லை,எல்லாத் தமிழர்களையும் பிடிக்காது மீனவர்களைச்…. சுட்டே கொன்று விடுவார்கள். வசமாக அகப்பட்டால் கசாப்புத் தனமாக வெட்டிக் கொல்றதையும் செய்து வந்தார்கள். ஆழம் குறைவான கடல் என்றபடியால் கடற்படையினரின் பைபர்கிளாஸ் படகுகள்,பாரம் கூடிய ரோந்துப் படகுகள் இப்பகுதிகளில் பிரவேசிக்க முடியவில்லை. அதனாலே ஓரளவு தப்பிப் பிழைத்து தொழில் செய்து கொண்டிருந்தார்கள்.

கடலில் ஓடிய பாதைகள் கண்டு வேறு ஓட வேண்டும். பெரும்பாலும் இருட்டிலே தொழில் நடந்தது.மேலே கெலிகப்டர்கள் வெளிச்சம் அடித்துப் பறக்கிற போது சிக்கல் தான். அதிலிருந்து யந்திர துப்பாக்கியிலிருந்து பறக்கிற குண்டுகளிலிருந்து தப்ப வேண்டும்.அவை வார போது சாக்குகளால் மூடி மறைத்து விடுவார்கள் . கடலம்மாவும் காப்பாற்றி வந்தாள். ஆழமான பண்ணைக்கடல் சற்று தூரத்தில் தான் இருந்தது.கடலிலே பிறந்து வளர்ந்தவனால் ஆழக் கடலில் மீன் பிடிக்காமலும் இருக்க முடியாது .

அடங்கிக் கிடப்பவர்களா மீனவர்கள்?

சங்க இலக்கியங்களில் கப்பலை ‘திமில் என ‘அழைத்தார்கள் என அறியப்படுகிறது,ஒரு காலத்தில் கடலைக் கலக்கி ஓடிய முன்னோர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களோ, இவர்கள்? என்ற ஐயமும் இருக்கிறது.இங்கே தொழில் செய்பவர்களை திமிலர்கள் என அழைக்கிறார்கள். அந்த பழைய வீரமும் ரத்தில் கலந்திருந்தது.

அதே போல சுளிபுரத்தைச் சேர்ந்தவர்கள் முக்குவர்கள் என வும் அழைக்கப்ப ட்டார்கள்.அதாவது, கடலில் பிடிப்பவற்றை பல வேறு ஊர்களிற்குக் எடுத்துச் சென்று விற்கிற வணிகர்கள்.இவர்களுக்கிடையில் இடையில் ஏதாவது வரலாற்றுத் தொடர்பு இருக்கிறதோ தெரியவில்லை?ஒரு காலத்தில் சிறப்புற்ற மீனவ சமூகமாக இங்குள்ள மக்கள் இருந்திருக்க வேண்டும். இலங்கை ஒரு இறமை உள்ள நாடு இல்லை.அது இன்னமும் காலனி ஆட்சியைத் தான் புரிந்து கொண்டிருக்கிறது .எசமானர்கள் தான் மாறி விட்டிருக்கிறார்கள். அஸ்தமிக்காத திமிரைக் கொண்ட பிரித்தானியரிடமிருந்து காலம் பல நாடுகளை விடுவித்தது போல தமிழர்களையும்,காலம் இவர்களின் நுகத் தடியிலிருந்தும் ஒரு நாள் விடுவிக்கும்.

கோட்டையிலும் ,மண்டை தீவுக்காம்பிலும் இருந்த படையினரின் கண்ணில் ஒருமுறை பட்டு விட்ட நாவாந்துறை,குருநகர்,கரையூர்,பாசையூர்…மீனவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டது காலகாலமாக அந்த மீனவர்க் குடும்பங்களை பாதித்துக் கொண்டிருக்கிற ஒரு வரலாற்றுத் துயரம். அவர்களிற்கான நினைச் சின்னத்தை,குருநகர் பகுதியில் காணலாம். தமிழாராட்சி மாநாட்டில் இறந்தவர்களிற்கான நினைவுச் சின்னத்தை கோட்டைப் பகுதியில் கட்டியது போன்ற …இன்னொரு …. சின்னம்.

அச்சம்பவம், 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்ததாக இருக்க வேண்டும்.

கழுகு இயக்கம் அரசியல் அமைப்புகளைக் கட்டிக் கொண்டு இயங்கிற ஒர் இயக்கமாக இருக்கவில்லை.அவர்களுடைய பிரதேச முகாம்களே இராணுவ முகாம்க ளாகத் தான் இருந்தன.முறைக்கு இரண்டு சாரர்களையும் கூட்டி,” இனி மீறக் கூடாது” எனச் சொல்லி அவர்களையே ஓட வைத்திருக்க ஒரு அரசியல் அமைப்பு அவசியம் . அதைக் கட்டிக் கொள்ள‌ அவர்களிற்கு நேரம் இல்லை.தவிர அவர்களுடைய தீவுப் பொறுப்பாளரை காயப்ப்படுத்தியது இல்லாமல் ஆயுதங்களையும் பறித்திருத்திருக்கிறார்கள். எனவே
மக்களை தண்டிக்க விரும்பினார்கள்.அது தான் இயக்கங்கள் ஓடும் என்ற ஓரேயடியாய் புரட்டிப் போட்ட‌ உத்தரவு.

கனகனின் நண்பர்களின் இயக்கமும் பெரிதாக இருந்தது தான்.ஆனால்,பல்வேறுப் பிரச்சனைகளால் பலவீனமானதாகவே இருந்தது.அதனால் கழுகின் உத்தரவுக்கு எதிர் உத்தரவு போட்டு …இயக்க முடியவில்லை.

மக்களின் தோல்வி இயக்கங்களின் தோல்வி தான்! அதை புரிந்து கொள்கிற‌ நிலையில் இயக்கங்கள் இருக்கவில்லை என்ற‌ படுகிற‌து.இவர்கள், தங்களை ‘’மக்கள் இயக்கம்’ என்று வேறு சொல்லிக் கொள்கிறவர்கள் .ஒன்றிருந்தால்,ஒன்றில்லை…என்ற கதை தான். இப்படியான நிலைகளால் தான் இன்று எங்களுடைய தமிழீழத்தை சிங்கள நாடு ஆண்டு கொண்டிருக்கிறது.

எப்பவும்,பிழையான நகர்வுகள் மேற் கொள்ளப் பட்டால்,அதன் வழியே செல்லவும் கூடாது,செல்ல விடவும் கூடாது.சொல்வது இலகு.நடைமுறையில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாத நிலை. மக்களின் உழைப்பைப் பறித்துக் கொண்ட போது ,அதை எதிர்த்துக் கதைக்காமல் நாவடைத்துப் போய் இருந்தார்கள்.கதைத்தாலும் சீராக மாட்டாது என்றாலும் கூட கதைக்கப்பட வேண்டும் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்தது.அதற்குத் தான், படித்தவன் வேண்டும் ,ஆங்கிலம் தெரிந்தவன்,பேசக் கூடியவன் வேண்டும் என்று எல்லாம் சொல்கிறோமா? தாழ்வுச் சிக்கல்களில் சிக்கிய சமூகம் முன்னேற முடியாததில்லை. முன்னேற முடியும்.அதற்கு அவர்கள் ‘அரசியல்’ படிக்க வேண்டும். அவர்கள் ஒற்றுமை படாத நிலைக் கண்டு தான் பாரதி “வாய் வீச்சில் வீரரடி”என துயரம் பொங்க பாடுகிறான்.

குமையும் ஏலாமைச் சூழலில்,அதிகார துப்பாக்கிகளின் கீழ் நசியும் அடிமைச் சூழலில் நியாயத்தை எடுத்துச் சொல்வதையும் விட்டு விடக் கூடாது.ஈழத்தமிழரின் நசிந்த வாழ்க்கையில்,காலத்திற்கு காலம் தலைவர்களும்,மக்களும்,மதத் தலைவர்களும் நியாயத்தை அதிகாரத் தோரணையில் இல்லாமல் நட்பு வழியில் பல தடவைகள் சொல்லிக் களைத்திருக்கிறார்கள் தான். இதெல்லாம் தெரியாதவர்களாகத் தான் நம் வையித்தியர்களும்,பொறியியலாளரும் படித்து வாரதாக நம் கல்வி கிடக்கிறது.

அவை குப்பையோடு குப்பையாக சேர்ந்து கலந்து கூலாப்பாணியாகி, சீர் தூக்கிப் பார்த்து சொல்ல முடியாமல் ஒவ்வொன்றாக அழிகிறதாக‌….,ஒவ்வொன்றாக குப்பையைக் கிளறுற பொறுமையும் நமக்கில்லை,சந்ததிகளுக்கு அவற்றை எல்லாம் எடுத்து ஒளிப்பாக, உரத்துச் சொல்லுறதும் இல்லாத சோம்பேறிகளாகவும் நாம் போய்க் கொண்டு இருக்கிறோம்?

எல்லாவற்றையுமே யாரும் சொல்லித் தான் நாமும்,நமது சந்ததிகளும் அறிய வேண்டியவர்களா? என்ன‌?,நாமாகவே ஒருவித தேடலுடன் அவற்றை எல்லாம் அறிய முயலக் கூடாதா? என்ன‌ ! சுய நம்பிக்கையும் ,சுய முயற்சியும் இ ல்லாத என்ன ஜென்மங்கள் நாம் !

இதற்கெல்லாம் அறிவதற்கு தடையாய் பிரித்தானியக் கல்வி முறை தான்… இருக்கிறது என எனக்குப் படுகிறது.எமக்கென்று ஒரு கல்வி முறை இருந்தது.அதைப் போல எமக்கென்று இருந்த பழயவற்றை …பலவற்றையும் தூசி தட்டி பார்க்க …வேண்டிய அவசியங்களும் எமக்கு இருக்கின்றன என்றே எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கின்றன 1500, 1600 ம் ஆண்டு காலங்கள் வரையில் பாய்மரக் கப்பல்கள் வடகடலில் பயணித்திருக்கின்றன என்று சொல்லப்படுகின்றன‌.எமது மண் மட்டுமில்லை கடலும் கூட விடுதலை பெற வேண்டும்.நாவாய்த் துறை,நாவாந்துறையாகி அழைக்கப்படுற இடங்கலெல்லாம் இன்றும் இருக்கின்றன.இவ்விடங்கள் எல்லாம் திரும்பவும் உயிர்ப் பெற்றெழ வெண்டும்.எமது கனவுகளை நாம் இழந்து விடக் கூடாது;தொலைத்தும் விடக் கூடாது..ஒருத்தனுக்குத் தோன்றி மட்டும் என்ன பிரயோசனம்?,எல்லாருக்கும் தோன்ற வேண்டும். அப்துல்கலாம் சொன்னது போல எல்லோரும் கனவு காணுங்கள்

அந்த காலத்தைப் போல நமது கடலில் ந‌ம் வள்ளங்கள்,பாய்மரக் கப்பல்கள்,படகுகள்…நிறைய இல்லாட்டிலும் நாலு,ஐந்தாவது நந்திக் கொடிகளுடன் மிதக்க வேண்டும். முழுமையான அதிகாரம் படைத்தாக‌ மாகாணவரசாக நா மும் நெஞ்சை நிமிர்த்தி நிமிர்ந்து நிற்க வேண்டும். நீண்ட பெருமூச்சுகள் தான் சூடாக‌ வெளியேறுகின்றன‌.

ஒட்டிகள் எல்லோரும் சோர்ந்த முகத்துடன் கலையத் தொடங்கினார்கள்.

தாமரையையும்,கழுகையும் சேர்ந்த இயக்கப்பெடியள்கள் எல்லார்ர மரவள்ளங்களையும் எடுத்தனர். ஒரு நுனியில் கயிறைக்கட்டி அவற்றை மூன்று, நான்கு பெடியளுடன் நீரில் தள்ளினார்கள்.

குவிந்திருந்த சனம் இடித்துத் தள்ளிக் கொண்டு ஏறியது. நிறைந்ததும் கயிறை வைத்திருந்தவன் கடலில் நனைந்தபடி முன்னால் இழுக்க, பக்கப்பகுதிகளில் இருவர் நின்று ஒருவன் தள்ள, பின்பகுதியில் ஒருத்தன் தள்ள, வள்ளங்கள் நகரத் தொடங்கின. முக்கால் மைல் நீளமான அந்தக் கடல் ஆழமற்ற அலைகளற்ற தன்மையைக் கொண்டிருந்ததால் ஒட்டிகளின் உதவி இல்லாமலே …சமாளிக்க முடிந்தது.

அன்று, மக்களுக்கு …இலவச சேவை !

‘உவங்கள் எதற்கும் துணிந்தவர்கள்’ என்ற வியப்பு கண்களில் படர கனகன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

வாலையம்மன் கோவில் வாசிகசாலை அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் பயத்துடன் நின்றிருந்தனர்.

அவர்கள் சார்பில் வாசிகசாலைக் கமிட்டி இயக்கக்காம்புக்குப் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்தார்கள்.

ஆனால், இரண்டு இயக்கங்களையும் உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு …இருக்குமோ? தெரியாது .அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாகிவிடும். எனவே கட்டாயமும் இருந்தது.

அவர்கள் பயந்தது நடந்தே விட்டது. வடிவேலின் இயக்கம் வானில் வந்திறங்கியது. கமிட்டி ஆட்களை, தலைவர் பரமேஸ், உபதலைவர் பிரகாசம், காரியதரிசி சரவணன், உபகாரியதரிசி பாலன், பொருளாளர் குமார், கமிட்டி உறுப்பினர் சுமன், மனோகரன் அகிலன் என்று எட்டுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போனார்கள். கூட்டத்திலிருக்கிற மற்றவர்களுக்கு …வயிற்றைக் கலக்கியது.
தலைவரையே கைது செய்தது அவர்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கிவிட்டது.

இனி, மற்றதின் தாக்குதல் எப்படியிருக்கப்போகிறதோ? எனவும் பயந்தார்கள். அவர்கள் மத்தியில் இக்கரையைச் சேர்ந்த அவ்வியக்கத்தைச் சேர்ந்த அன்டன், நகுலன் என இரண்டு பெடியள் இருந்த போதும் அவர்களுக்கு சிறிதும் அக்கரையோடு தொடர்புகள் இருக்கவில்லை.

தீவுப்பகுதி இன்னொரு ,எ.ஜி.எ அமைப்பு. இவர்கள்,எ.ஜி.எ யிலே இருக்கிற சிறு ஜி.எஸ் …பிரிவு.

வீட்டில், விளக்கேற்றியபிறகும் துயரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி என்ன செய்யலாம் எனக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.அன்டன், நகுலன், நடேசன் ஆகியோர் கனகன் வீட்டு மணலிலே உட்கார்ந்திருந்தார்கள். முருகேசு, பஞ்சன், தில்லை கோஷ்டி ரோட்டிலேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தது. செல்லன், தியாகப்பு போன்ற பழசுகளின் வட்டம் கோவிலடியில் இருந்தது.

அன்றைக்கு யாருமே நித்திரை கொள்ளமாட்டார்கள் போலத் தோன்றியது.

கமிட்டியில் வயசானவர்கள், ஒ.லெவல் வரைபடித்த பெடியள்கள், ஒரிருவர் அரச வேலையில் இருப்பவர்கள் … என‌ ஆகியோர்கள் இருந்தனர். விசயம் அறிந்து நிதானமாக நடக்கிற அதையே அரஸ்ட் பண்ணி விட்டதால் போனவர்களுக்காக யார் கதைப்பது? எனப் புரிய வில்லை. கடைசியில், பழசுகளின் கோஷ்டி அண்டனைத் தேடி வந்தது. “தம்பி, நாளைக்கு காலையில் ஒருக்காய் போய் எப்படி, என்ன மாதிரி நடந்தது என்பதை உங்கடயாட்களிற்கு அறிவிச்சு விடு. வாசகிசாலைக்குழு மன்னிப்புக் கேட்க இருந்ததையும் சொல்லிவிடு” என்றார் தியாகப்பு.

“சரி அப்பு “என்றான்

கனகனுக்கு எல்லாரையும் பார்க்கப் பாவமாய் இருந்தது.

ஆளுக்காள் கலைய, பன்னிரண்டு ஒரு மணி இருக்கும். நித்திரையில் ஆழ்கிற நேரம் திடும் என வீடுகளில் அல்லோகலம் ஏற்படத் தொடங்கியது.

யாரோ பெடியள் அணி ஆயுதத்தோட வந்து சூழ்ந்துவிட்டார்களாம். அடுத்த இயக்க மும் வந்துவிட்டது என்று அவனுக்குப் புரிந்தது.

அண்ணன்ரை சேதி என்னவாக இருக்குமோ என மனம் பதற‌ அண்ணர்ர வீட்ட‌ விழுந்தடி ச்சு ஒடினான்.அண்ணன் உட்பட அடிசவையளை அவர்கள் அரெஸ்ட் பண்ணிவிட்டார்கள். எப்படி, அவர்களிற்கு அடிச்சவயள் வீடுகள் சொல்லி வைச்சது மாதிரித் தெரிந்தன?.அவர்கள் மத்தியில் பின் தளத்தில் பயிற்சி பெற்ற பட்சி தோழரும்,அம்மன் கோவிலடியில் பண்டா தோழரும் இருக்கவே செய்தனர்.அவர்கள் அவ்வளவாக அமைப்புத் தோழர்களுடன் திரிவதில்லை.லிங்கனை அவர்கள் சந்திக்கிறவர்கள் தான்.ராணுவப் பிரிவுடனும் தொடர்பு பட்டிருக்கிறவர்கள். சாமத்திற்குப் பிறகு யாரிடமும் கேட்பதற்கு.. வாய்ப்பும் இல்லை. இருளைக் கிழித்தபடி வாகனம் கரையை நோக்கி பறந்தது.அவர்கள் வள்ளத்தில் ஏற்றப்பட்டு அக்கரைக்கு கொண்டு போக, பீதியில் குழம்பிய நிலை இன்னும் அதிகமானது. அன்டனுக்கும் நகுலனுக்கும் வந்தவர்களைத் தெரிந்திருக்கவில்லை.

தனியாயிருக்கப் பயந்து அண்ணி கலாவையும் பாபுவையும் இழுத்துக்கொண்டு அவன்ர‌ வீட்டுக்கு வந்திருந்தார். மற்ற வீடுகளிலும் இதே நிலை தான். தனிக்கட்டையாக இருந்தவர்கள் வீடுகளி லும் சோகம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் குமைந்தன. சகோதரங்கள் ஆளுக்காள் மூஞ்சிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

விடிந்தபிறகு, முதிர்ந்த பெண்களை காம்புக்கு அனுப்பி கதைத்துப் பார்ப்போமா என்று இளைஞர் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்க.வயதானவர்கள் மறுத்துவிட்டார்கள். பெரிசுகளிற்கு தம் பொண்டாட்டி மேல் பாசம் அதிகம் தான்.தவிர,அவர்களிற்கு வெளி அனுபவம் ,படிப்பறிவும் குறைவு தான்.தைரியம் பத்தாது.

கனகன் வீட்டு வலைக் குவியலில் நித்திரையில் கிடந்த‌ அன்டனையும் நகுலனையுமே அதிகாலையிலே எழுப்பி விரட்டினார்கள்.

கனகன், பாரில் அன்டனை ஏற்ற, நகுலன் தனிய வர சைக்கிள்கள் அயற்கிராமத்தை நோக்கி விரைந்தன. தேத்தண்ணி ஒரு வாய் குடித்த கையோட வெளிக்கிட்டிருந்தார்கள். பிடிபட்டவர்களுக்கு அடி விழாமல் காப்பாற்றி விட வேண்டும் என்ற அந்தரம் அவர்களுக்கும் இருந்தது. அயல் கிராமத்தில் இருக்கிற‌அவர்களின் பொறுப்பாளரையும் எழுப்பிக் கொண்டு ஒட வேண்டும்.

பொதுமக்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் போல ஒரு கமிட்டி அமைப்பை அவ்வியக்கமும் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யை சந்திக்க முதல் விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்கவேண்டும். பிறகே அவர்கள் ஏ.ஜி.ஏ.யைச் சந்திக்க வேண்டும். ஏ.ஜி.ஏ.களுக்கு மத்தியிலே கூட்டம் நடைபெறும். தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ.கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால். சாதாரண விதானையார் பிரிவுகளுக்கு அயலில் இருந்த மானிப்பாய் விதானையாருடன் இருந்தளவு பழக்கம் கூட‌அவர்களோடு நிலவவில்லை.

பெரிய பிரச்சனைகளை ஏ.ஜி.ஏ.மட்டத்தின ரே கதைத்து தீர்த்துக் கொள்வர். முடியவில்லை என்றால் அவர்களிற்கு மேலே இருக்கிற‌ தலைமையாயிருக்கிற ஜி.ஏ.(அரசாங்க அதிபரு)க்கு கொண்டு போவார்கள்.எல்லா அமைப்புகளையு மே பொதுமக்கள் சந்தித்துக் கதைக்கக் கூடியதாகவே அமைக்கப்பட்டிருந்தது. விதானையார், ஏ.ஜி.ஏ. தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாகவும் ஜி.ஏ. அமைப் பில் போய்க் கதைக்கலாம். இது தான் நடைமுறை.ஆனால்,அதற்கு முதல் அமைப்புகள் சாம,தான,தண்ட முறைகளை எல்லாம் பாவித்து விடுவார்கள்.”அடியாத மாடு பணியாது”என்ற பழமொழியே எங்களிடையே இருக்கிறது அல்லவா? கிராமப் பொருப்பாளர் லிங்கன்,கிராமத்தில் எழுகிற சமூகப் பிரச்சனைகளை அறிய கிராமத்து தோழர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நேரிலே சந்தித்து தனித்தனியாகக் கதைத்து அடி நுனிகளை அறிய முயற்சிப்பான்.பிறகு ,பொதுவான நியாயம் எனப்படுறதுக்கு ஒத்துப் போகச் சொல்லி கேட்டுக் கொள்வான்.வீணாக கிராமத்து மக்களை எ.ஜி.எ க்கு கொண்டு போய் அடி வாங்கிக் கொடுக்க விரும்புவதில்லை. அவனை குட்டி எம்.ஜி.ஆர் என வைத்துக் கொள்ளலாம். தோழர்கள் பிரச்சனைப் பட்டால், ‘மன்னிப்பு கேட்க’வைத்து சமாதானப்படுத்தி விடுவான். இப்படி நடப்பதால் தோழர்களிற்கு எல்லாம் லிங்கனை நன்கு பிடிக்கும்.

முதலில் விதானையாரைச் சந்திக்கப் போய்க் கொண்டிருந்தார்கள்.

மற்ற இயக்கத்தைப் போய்ச் சந்திப்பதென்றால் அவர்களுடைய பிரதேசக் காம்புக்கு நேரடியாகப் போக வேண்டும். அவர்களுடைய நடைமுறைகளே வேற மாதிரி. அவர்கள் ஆயுதங்களோட எந்த நேரமும் புழங்குவதால், இளைஞர்களை அனுப்பப் பயப்பட்டார்கள். இயக்கப் பகைமை யும் அதிகம் காணப்படுவதால் மற்ற இயக்கத்தின் பெடியளும் வாரவயளில் கலந்திருப்பார்களோ என சந்தேகித்து அவர்க ளும் கடுமையாக அணுகுவார்கள். எனவே, கடைசியில் கிழடு கட்டைகளை அதற்கு அனுப்புவதென முடிவெடுத்திருந்தனர்.

காலையிலே வெளிக்கிட்டு விட்டதால், சாமிக்கிழவர், அல்லது தியாகப்பு தலைமையில் போனார்களா என்பது பெடியள்களிற்குத் தெரிந்திருக்கவில்லை. இருவருமே ஒரளவு விசயங்களை புரிந்து கொள்கிற அனுபவஸ்தர்கள் . முந்தி எல்லாம் அடி பிடி, சண்டை, ஆதரவின்மை என்பவற்றால் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்திருந்தார்கள். இப்ப, இவர்கள் தலையிட்ட பிறகே ஒரே குழுவாக ஐக்கியப்பட்டு, பலம் பொருந்தியதாக இயங்கி வருகிறது. அவர்களின் ஆதரவாலே வாசிகசாலைக் குழு நல்ல முறையில் இயங்குகிறது.

இயக்கப்பிரச்சினை என்பதால் கையாளுவதில் எல்லாருக்கு மே பிரச்சனை. பெடியள்கள், விதானையார் லிங்கனை தேட, அவன் வீட்டார் “அவன் தலைமைக் காம்புக்குப் போயிருக்கிறான்” என்ற தெரிவித்தார்கள். நேற்று போய் இருக்க வேண்டும்,அங்கேயே தங்கி விட்டான் போல இருக்கிறது. அப்படியே தலைமைக் காம்பை நோக்கி விரைந்தார்கள். குறைந்தது மூன்று,நாலு மைலாவது சைக்கிள் ஓட வேண்டும். அன்டன் குறுக்குப் பாதைகளினூடாக விட்டு விரைந்த போதும். தூரம், தூரம் தான் ! போய்ச் சேர்ந்த போது எட்டரை ஒன்பதாகி விட்டது.

நல்ல காலம் லிங்கனும் அவர்களுடன் அந்த வலக்க‌ம்பறை தேர்முட்டியி லே இருந்தான். அது கோயிலின் தேர் நிறுத்தக் கட்டியிருக்கும் படிகளோடு கூடிய மேடை. பெரிய திறந்த வளவுடன் அமைந்த கோயிலுக்கு முன்னால் உள்ள அந்த மேடையையே இலகுவாக மக்கள் சந்திப்பதற்காக அவர்களுடைய இயக்கம் தெரிந்திருந்தது.

லிங்கனைத் தனியே கூட்டிக்கொண்டு போய் அன்டன் விசயத்தைச் சொன்னான். தீவுப்பகுதிப் பெடியனின் கை முறிந்த செய்தி அவர்களுக்கு முதலே வந்திருந்தது. ஆனால் அவன் பகுதி ஆட்களால் நடந்தது என்று அப்பவே தெரிய வர‌, அவன் அவர்களைக் கூட்டிக்கொண்டு பிரபாவைச் சந்திக்க சென்றான்.

“பிரபா தெற்குப் பகுதியிலும் பொறுப்பாளன் ஒருத்தனை கட்டாயம் நியமிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பக்கத்தில் போய் அமர்ந்தான். கனகன், அன்டன், நகுலன் ஆகியோரும் பக்கத்தில் போய் அமர்ந்தார்கள்.

“இவயள் பகுதியில் இருக்கிறவயள் இயக்கப்பெடியள் என்று தெரியாமல் கையை உடைத்து விட்டார்களாம். இரவு போல் தீவு அமைப்பு வந்து இவர்களில் ஆறு பேரை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போய்விட்டது” என்று தெரிவித்தான்.

பிரபாவுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இன்னொரு ஏ.ஜி.ஏ. அமைப்பு அனுமதியில்லாமல் அவர்களுடைய ஏ.ஜி.ஏ.பிரிவுக்குள் நுழைந்தது ஒருமாதிரியாக இருந்தது. இத ஜி.ஏயோட கட்டாயம் கதைக்க வேண்டும். ஆனால் எங்களின்ரை பெடியளின்ரை கையை முறித்திருக்கிறார்கள். மண்டை தீவுப்பக்கம் சென்றியில் நிற்கிற பெடியள். எங்களோட சொல்லிப் போட்டுச் செய்திருக்கலாம் தான்” என்றான். மண்டைத் தீவுக்காம்ப், இலங்கைப் படையினரால் பண்ணைக் கடலைக் கடந்து ஏறுகிற பாதை மூன்றாகப் பிரிந்துபோகும் பகுதியில் உள்ள கணிசமான பரப்பில் வீதியை மறித்து போடப்பட்டிருந்தது.

கனகனுக்குத் திகிர் என்றது. அண்ணனைப் போட்டு அடிச்சிருப்பாங்களோ? ஆனால், இவயள்ட பிரச்சனைகள் வேறு பட்டவை விட்டுக் கொடாமல் கதைத்தாலும் பிரபா உடனே நடவடிக்கை எடுத்தான். லிங்கனை இன்னொருத்தனோடு மோட்டார் சைக்கிளில் தீவுப் பக்கம் அனுப்பினான். இன்னுமிருவரை ஜி.ஏ.யிடமும் அனுப்பினான். லிங்கன், அண்டனைப் பிறகு சந்திப்பதாகக் கூறி விடைபெற்றான்.

பிரபா அவர்களைப் பார்த்து ஆதரவாகச் சொன்னான். “உண்மை தெரிந்தால் எங்கட பெடியள் சும்மா அடிக்கமாட்டினம். போய் வாருங்கோ” வெறும் தேத்தண்ணியோட வெளிக்கிட்டதால் மூவருக்கும் பசி வயிற்றைக் குடைந்தது.

அருகில் உள்ள தேத்தண்ணிக் கடையில் புகுந்து வடையும் தேத்தண்ணியும் வெட்டி விட்டு வெளிக்கிட்டார்கள். தேர்முட்டியில் கூட்டம் அதிகமாகியது. “அவர்களின் சட்டசபை கூடிவிட்டது” என்று அன்டன் கூறினான். “கனகு, இண்டைக்கு நிலவரம் எப்படியும் தெரிந்துவிடும்.தீவுப் பகுதி ஆட்கள் அடிக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன். ஆனால் எங்கட ஆட்கள் வடிவேலனோடு மட்டும் தான் கதைச்சவங்கள். எங்கட‌ இயக்க த்தோடு கதைக்கவில்லை. ஒரியக்கம் மற்ற இயக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாது. அது பிரச்சினை தான்” என்றான் சிந்தனை வயப்பட்டு.

பகல் 1.30 மணி போல் லிங்கன் வாசிகசாலைக்கு வந்தான். “இண்டைக்கு பின்னேரம் மூன்றரை நான்கு மணி போல எல்லாரையும் விட்டு விடுவினம். அந்த இயக்கத்தோட‌ கதைத்தது போதும் என ஒரு சிலர் உளறியதால் அடி கொஞ்சம் விழுந்து விட்டது. எல்லா இயக்கங்களும் இன்னமும் ஒரு பொதுவான ஐக்கியப்பாட்டுக்கு.வரவில்லை. அதனாலும் நீங்கள் பிரச்சனைப்பட வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனான்.லிங்கன் போன கொஞ்ச நேரத்திற்கு பிறகு மற்ற இயக்கத்தின் வான் வாசகிசாலையில் வந்து நின்றது. அதிலிருந்து கமிட்டி யும் இறங்கியது. உருட்டல், மிரட்டல்கள் அவர்களை வாயடைக்க வைத்திருந்தது. “ரிவால்வரை, மகசீனை, கிரனேட்டை 8 மணிக்குள்ள கமிட்டி வாங்கிவிட வேண்டும்” என்று அதிகாரமாக கெடு விதித்து விட்டு போனார்கள்.

மற்றவர்களையும் பிடித்தது அவர்களுக்கு அப்பவே தெரிந்தது. லிங்கன் போய் சந்தித்ததையும் பின்னேரம் விடப்படுவார்கள் என்ற செய்தியையும் அறிந்து கொண்டார்கள். எல்லாமே குழுவை மீறிய விசயங்கள். நடப்பதை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது.

4 மணிபோல் மற்றவர்கள் வள்ளத்தில் வந்து. கரையி ல் இறங்கி, ஒரு மினி பஸ்ஸில் ஏற்றப்பட்டு வாசிகசாலைக்கு கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள்.

பொதுவாக எல்லாருக்குமே அடி விழுந்திருந்தது. சிலருக்கு உள்நோவு. குமாருக்கும் பஞ்சனுக்கும் புக்கை கட்டவேண்டியிருந்தது. முருகேசனிடம் ஒரு களைத்த முகத்தோற்றம் காணபப ட்டது.இயக்கங்களோடு சும்மாவேனும் பிரச்சனைக்கு போகக்கூடாது என்ற நினைப்பு எல்லாருக்கும் ஏற்பட்டிருந்தது.

மெளன மே எங்கும் கனத்தது .

கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தபோது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “மீட்டிங்குக்கு உங்களை உடனடியாக வரட்டாம்” அண்டனுக்கும் நகுலனுக்கும் செய்தியை தெரிவித்தான்.

“கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத் தாரியோ” என்று அன்டன் கேட்டான். நகுலனிடமும் சைக்கிள் இருக்கவில்லை. வாசிகசாலைக் குழு அடிபட்ட பிறகு இயக்கத்துக்கு உதவுவதை வெறுப்பாகப் பார்த்தது. “கொண்டு போ என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்தான்’ முந்தினமாதிரி இருந்தால் வளர்ந்தவனாயிருந்தாலும் கோபத்தோடு தடுத்திருப்பான். அல்லது ஏதாவது சொல்லி இருப்பான் .இப்ப, எதிலேயும் பற்றற்றவன் போல ஈழநாடு பேப்பரில் கவனத்தை பதித்திருந்தான். சனமும் தீவிரமாக வாசிப்பது போல் மெளனமாக இருந்தது. இந்தச் சூழல் கனகனின் மனதையும் நோகச் செய்தது.

அவனைப் பிடிச்சுக்கொண்டு போன போது அழுது கொண்டு அண்ணியும் பிள்ளைகளும் ஒடி வந்தது ஞாபகம் வந்தது. அண்ணன் ஒரு வித்தியாசமான பிறவி முன்னர் அண்ணியின் ஊர்ப் பக்கமிருந்த செல்லாச்சி மாமி வீட்ட அடிக்கடி போய் வந்தான். மாமிட மகள் வதனியில் ஒரு பிடிப்பு இருப்பதாக.அவன் கூட நினைத்திருந்தான். ஆனால் பக்கத்து வீட்டிலே இருந்த
அண்ணியைப் பார்க்கத் தான் போனான் என்பது யாருக்குமே தெரியாது. இருவருக்குமிடையில் எப்படி காதல் ஏற்பட்டது?அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.யாழ்ப்பாணத்தில் கலப்பு மணம் என்றால் இலேசிலே எத்தரப்பினரும் அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்குள் செய்யவே கட்டுப் படுத்தினார்கள். முருகேசன் அண்ணியைக் கூட்டிக் கொண்டு வந்தபோது கத்தி, பொல் சகிதம் தொடர்ந்து வந்திறங்கிய அவர்களை தனியனாக திருக்கைவாளோடு துணிஞ்சு எதிர் கொண்டவன். பிறகு மண்டா, மீன் முள்ளு, தடி என கையில் பட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பஞ்சன், தியாகு, அவன் என அவன் செட் திரண்டு வர ஒடிவிட்டார்கள்.

வாசிகசாலைக்குழு நிலைமையை கவனத்தில் எடுத்துச் சமாளித்தது. “எல்லாரும் கட்டாயம் அமைதி காக்கவேண்டும்” என கட்டுப்பாட்டை விதித்தது. அங்குள்ள வாசிகசாலை (சனசமூக நிலையம்) குழுவுடன் நேரே சென்று பேச்சு நடத்தியது. “புனிதம் அவனோடயே வாழவிரும்புவதால் இப்படியே விடுறதுதான் நல்லது” எனக் கேட்டுக்கொண்டது. “உங்கள் பேச்சை நம்ப மாட்டன்” என்று சத்தம் போட்டுக்கொண்டு அவளுடைய அண்ணன் குழுவோடு அங்கே வந்தான். அந்த நேரம் “நான் வரமாட்டேன்” என மன்னி அவர்கள் மத்தியில் ஒடிஒளிந்தது எல்லார் மனதையும் கரைத்தது.

பிறகு அண்ணன் மன்னி வாழ்வு நல்லபடிவாயே ஒடியது. வெளிநாடு போற ஆசை அண்ணனுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கிடையில் காசு போதியளவு கிடைக்காமையால் பூசல்கள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. ‘என்னடாப்பா வீட்டில் சத்தம் கேட்கிறது’ என்று அவனுடைய நண்பர்கள் கேட்க.ஒரளவு அடங்கிப் போயிருந்தான்.

இயக்கம் அவனை பிடிச்சபோது மன்னி “விடமாட்டேன்” என குழறி அழுதார்.அப்படியும் கொண்டுபோய் விடவே, வீட்டையே ஒடிவந்தார்கள்.

திரும்பிய பிறகு அடிவாங்கியவர்கள் இரண்டு மூன்று நாள்.நோவால் வேலைக்கு போகமுடியாமல் தவித்தார்கள்.

கனகனை, அண்டனை, நகுலனைக் கண்டால் விட்டார்கள். அண்ணனோடு
நேற்றுவந்த பஞ்சன் அவனைப்பார்த்து-விட்டு “உங்கட ஆட்கள் மோசமில்லையடா, ஆனா, அடி வாங்கினால் 2,3 நாளைக்கு கட்டாயம் புக்கை கட்டவேணும்” என்றான்.

அவனுக்கு சிரிப்பு வந்தது. அண்டனும் நகுலனும் நண்பர்களாகவிருப்பதால் அவனையும் இயக்கமாக கருதி முறைப்பாடு தெரிவிக்கிறார்கள்.

அண்ணனும் மெளனமாக இருப்பது சங்கடமாக இருக்கிறது. அவனைக்குறித்து புறுபுறுத்தாவது இருக்கலாம். ஆனால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறவர்கள் என்ற மரியாதையும் அவர்களுக்கு இருக்கவே செய்தன.

எனவே இயக்கத்தோடு இழுபடுகிறவர்களையும், சப்போட் பண்ணுறவர்களையும் அவர்கள் தடுக்க முயல‌வில்லை.

ஏ.ஜி.ஏ கூட்டத்திலே, புதிதாய் ஒருத்தனை அறிமுகப் படுத்தினார்கள். இருவருக்கும் அவனை முன்னமே தெரியும்.

“இவன், தற்காலிகமாக தெற்கு அராலிப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்படுகிறான்” என அறிவித்தார்கள்.

சங்கானை உப அரசாங்கப் பிரிவில், அராலியும் ஒரு கிராமம். மற்ற 12 கிராமங்களைப்போல இல்லாமல் பெரிய கிராமமாக இருந்தது. அதன் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒவ்வொன்றுமே நிலப்பரப்பில் ,சாதிப்பிரிப்பில் தனி தனிக்கிராமத்துக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருந்தன.

முழு கிராமத்துக்கு ஒரு கிராமசேவகரையே இலங்கை அரச பிரிவால் நியமிக்கப்பட்டதால் அவ்விடத்து மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். அதை ஒட்டியே இவர்களும் வடக்கைச் சேர்ந்த லிங்கனை ஜி.எஸ்.ஆக நியமித்து விட்டிருந்தனர். ஆனால், தெற்குக்கு இன்னொரு ஜி.எஸ்.ஐ நியமிக்க வேண்டிய தேவையிருந்தது.

தற்காலிகமான திலகனின் தெரிவு நல்லது தான் . ஆனால் வாலையம்மன் பகுதி ஆட்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமளிக்கப் போகிறது. மற்றைய கிராம ங்களிலிருந்து இரண்டு , இரண்டு அங்கத்தவர்கள் வந்திருந்தார்கள். லிங்கன் ,தன்னுடைய தோழர்களிற்கு அரசியல் தெரிய வேணும் என்பதற்காக எப்பவும் இரண்டு தோழர்களை கூட்டத்திற்கு அழைத்து வாரவன். தெற்குக்கு புதியவர் நியமிக்கப் படுவதால் இவ்விருவரையும் அழைத்திருந்தான்.அடுத்த கூட்டத்திற்கு வடக்கிலிருந்து இருவர் வருவார்கள்.அவனுக்கும் கூட‌ பெரிதாக அரசியல் தெரியாது தான்.ஆனால் இவர்களிற்கு எல்லாம் அவன் மூத்த பட்ஜ்.எனவே கிராமத்திற்கும்,மேலிடத்திற்குமிடையில் இருக்கிற‌ ஒரு தபால்கார னாக‌ தன்னை வைத்திருந்தான்.எப்பவும் தொடர்பையும் பே ணி வந்தான்.

புதிய தோழர், அந்த இடத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அவர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தான்.

“இவன், மானிப்பாய் ஏ.ஜி.ஏ. பிரிவைச் சேர்ந்தவன். எங்கட பிரிவிலே இயங்க வந்திருக்கிறான்” அவனைப் பார்த்து “உனக்கும் அந்தப் பகுதி பிரச்சனையாயிராது” என்றான் பிரபா. எல்லாரையும் பார்த்து “தெற்கராலியில், பலர் பேர் பதிந்து வேலை செய்யவில்லை. ஆதரவாளர் என்ற முறையி லே இயங்குகிறார்கள். அதனாலே நாங்கள் இவனை நியமிக்கிறோம்.” எனப் பகிடியாகச் சொன்னான். தொடர்ந்தான். “அவ்விடத்து துறை முக்கிய கேந்திரமாக இருப்பதால் சில செயற்பாடுகளை நாம் செய்யவேண்டியிருக்கிறது. கூடிய சீக்கிரம் உங்களில் ஒருவனை ஜி.எஸ்.ஆக நியமிப்போம்” அன்டன் ஆட்கள் இருந்த பகுதியைப் பார்த்து பிரபா பேசுவதை எல்லோரும் கேட்டு கொண்டிருந்தார்கள். ‘ஈடுபட இருக்கும் செயற்பாடு’களை அவன் விவரித்தான்.

“கரையில் வாலையம்மன் பகுதி நடத்திய வள்ளச் சேவையை இனி இயக்கங்கள் செய்வதாக முடிவெடுத்ததால் எம் சார்பில் படகு சேவையை நடத்தத் திர்மானித்திருக்கிறோம்” கூட்டம் அன்று முடிய லேட்டாகியது.

இருவருக்கும் பசித்தது. கடையிற்கு ஏறி பசியாற கையில் காசிருக்கவில்லை. சைக்கிளைக் கொடுக்க கனகனின் வீட்டுக்கு வந்தார்கள். இயக்கம் என அலைந்து திரிய வெளிக்கிட்டபிறகு அவர்கள் பொதுவாக சரியாக சாப்பிடுவதில்லை. “டேய் பசிக்குதடா.மீன் குழம்பு ஏதும் இருக்கிறதா?” என்று அன்டன் கேட்டான். “நில்லு பார்த்துச் சொல்லிறன்” என்றுவிட்டு உள்ள போனவன் குழம்புச் சட்டியோடு பாணையும் எடுத்துவந்தான். “டேய் கையை கழுவிப்போட்டு வாங்கடா” என்று பாணை தட்டில் வைத்து குழம்பை ஊத்தி வைத்தான். தண்ணியை ஊத்தி அம்மா அடுப்பில் வைத்தார். “என்னடா சேதி? கூட்டத்தில் என்ன சொன்னாங்கடா” கனகன் அவசரமாகக் கேட்டான். “கொஞ்சம் பொறடா. சாப்பிட்டுவிட்டு கதைக்கிறோம். ஆனா, பெரிய ஆச்சரியம். எல்லாம் காத்திருக்கடா” என்றான் அன்டன், “எங்க பகுதிக்கு புதிதாய் ஜி.எஸ்.ஒருத்தன் நியமிக்கப்பட்டிருக்கிறான்.
யார் தெரியுமா?” என்று நகுலன் கேட்டான்.

“எனக்கென்னடா மூக்குச் சாத்திரமா தெரியும்? யாரும் பொதுவான ஆளாய் இருப்பான்.ம்.யார்? அந்த நரேனையா நியமிச்சிருக்கிறாங்கள்’

நரேன் சாதி அபிமானம் அற்றவன். சமயத்தில் சென்றியால் வரும்போது அன்டனை வாசிகசாலையில் இறக்கி விட்டுப்போறவன். பழக இனிமையானவன். ஆனால் அங்கே நிலவுகிற சமூகக் கட்டமைப்பால் அவன் மாற்றுச் சாதிக்காரன்’ அவர்கள் மட்டுமே எல்லாரையும் தோழர்களாக ஏற்றிருக்கிறார்கள். சாதி முறை நீண்ட காலம் நிலவிய தன்மையாலும், விழிப்புணர்ச்சி இளைஞர் மட்டத்திலே நின்றுவிட்டதாலும் சமூக மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் தென்படவில்லை. அவனை என்ன, வேறு அவ்விடத்து ஆட்களைக் கேட்டாலும் நரேனையே நினைப்பார்கள். ஒரு இயக்கத்துக்கு எல்லாப்பக்கமும் வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கவேண்டும். சமயங்களில் உதவிகள் திரட்டக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். மளமளவென இருவரும் சாப்பிட்டார்கள்.

கனகன்ரை அம்மா போட்டுத் தந்த தேத்தண்ணியை குடிச்சபிறகு அவர்களுக்கு களைப்பு பறந்திருந்தது.இயக்க கெடுபிடிகளால் இரண்டு மூன்று நாட்களாக அப்பனும் தொழிலுக்குப் போகாதிருந்ததால் ஒருபுறம் வைத்திருந்த உலர்ந்த வலைக் குவியலில் போய் மூவரும் படுத்திருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். காற்று குளிமையாக வீச அப்படியே தூக்கம் வந்துவிடும் போலிருந்தது.

உடுப்புகள் காயப்போட அங்கே வந்த அம்மா “உங்கம்மாமார் தேடி வரப் போகினம், வீட்டப் போங்கடா” என்று ஞாபகமூட்டினார்.

“இயக்கத்திற்கு ஒடிய பிறகு… எங்களைப் பற்றி கவலைப்ப படுகிறதை விட்டிட்டினமக்கா” என்றான் அன்டன். திடீரென அப்பகுதியில் இருவரும் ரெயினிங் என்று போனதும் உடனே அவர்களின் அம்மாமார் இருவரும் அந்த வீட்டுக்கே ஒடி வந்தார்கள். கனகன் இருப்பதைப் பார்த்துவிட்டு “தம்பி உனக்குத் தெரியாமல் இருக்காது. எங்கே தம்பி போயிருக்கிறார்கள்” என்று தவித்துக் கேட்டது அவருக்கு ஞாபகம் வந்தது. பிறகு கனகனே தபால்காரனாக அவர்களுக்கிடையில் வேலை பார்த்தான். ஒன்றரை மாதம் கழிய இருவரும் திரும்பி வந்தார்கள். லிங்கன் மற்றும் பலர் அப்பகுதிக்கு பரிச்சயமானார்கள்.

“யாரடா வரப் போகிறான். வேறு ஊரைச் சேர்ந்தவனா?” என்று நக்கலாக அவன் கேட்டான்.

“லிங்கன்ரை சொந்தக்காரப் பெடியனடா” என்று அன்டன் சொல்ல நகுலன் சிரித்தான். ‘அதிலே ஒன்றும் ஆச்சரியமில்லையே என்ற கனகனுக்கு அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள் போலப் பட்டது.

லிங்கனும் நரேனும் அன்டனையும் நகுலனையும் தேடி வாசிகசாலைக்கு வந்தார்கள். இருவரின் சைக்கிள் பாரிலும் ஆளுக்காள் ஏறினர். லிங்கன் கையில் வைத்திருந்த புத்தகக் கட்டை அன்டன் வாங்கிக் கொண்டான்.

“அதிரடி நடவடிக்கை ஏதுமா? கனகன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு கேட்டான்.

சைக்கிள்கள் விரைந்தன.

சந்தியில் அவர்களுடன் இன்னும் பலர் சேர்ந்து கொண்டார்கள்.

தெற்குப்பக்கமாகவிருந்த ஒழுங்கையில் இறங்கி விரைந்த அந்தப் பட்டாளம் பூட்டிக் கிடந்த ஒரு பழைய வீட்டை அடைந்தது. நூறு வருடங்களை கடந்துவிட்டிருக்கிற மூப்பின் அடையாளங்கள் வீட்டில் காணப்பட்டன. பூச்சு கழன்று உப்பு சிறிது பூத்த சுவர். சுண்ணாம்புக் கல் அதிகமாகப் பாவிக்கப்பட்டு கட்டப்பட்ட உறுதியான பழைய வீடு.

அவ்வீட்டை நரேன் தெரிந்திருந்தான். முன்னாலுள்ள பாதை. அயலிலுள்ள இரண்டொரு வீட்டைக் கடந்தால் கரையை நாடியே போகிறது. பனை மரங்களும் நெல் வயல்களும் இருமருங்கிலும் கணிசமாக இருந்தன.

நரேன். அண்டன், குமார் மூவரும் பக்கத்திலிருந்து வீட்டுப் பக்கம் நடந்தார்கள். அவ்வீட்டுக்காரர்“யார் தம்பி நரேனா வா. வா” என வரவேற்றார். அவன் அவருக்கு தூரத்து உறவு. அவனைப் பற்றி முன்னமே தெரிந்து வைத்திருந்தார்.

“பழைய வீட்டை எடுக்கிறோம். அதன் திறப்பை தரமுடியுமா?” என்று அவன் கேட்டான்.

“குறை நினைக்க வேண்டாம் தம்பி அவயள் கொழும்பிலிருந்து வரவிருக்கினம்” தர மாட்டேன் என்பதை நாசூக்காக தெரிவித்தார். “அவயள் வரேக்கை எழும்பி விடுறம். நீங்க பயப்படத் தேவையில்லை. வீட்டைப் பொறுத்த வரை சேதம் ஏற்படாது. தாங்கோ” என்று நரேன் சிறிது நக்கல் தொனிக்க கேட்டான். அவர் மசிவதாகத் தெரியவில்லை. தட்டிக் கழிக்கவே அவர் முயன்றார் “உனக்குத் தெரியாததா? தரக்கூடியதாக இருந்தால் தராமல் இருப்பேனா?” தொடர்ந்தும் முரண்டு பிடிக்க நரேன் அன்டனை லிங்கனைக் கூட்டி வா’ என்று சொல்லி அனுப்பினான்.

அவர்கள் வீட்டை திறந்து விட்டிருந்தார்கள். ‘எங்கே நரேன்’ என்று லிங்கன் கேட்டான். நிலைமையைச் சொன்னான். “தெரிஞ்சவையளா, அப்படியென்றால் வேற ஆளை அனுப்பியிருக்கலாம். சரி வா. நீங்க வீட்டை ஒதுக்கி துப்புரவாக்குங்கள். கவனம். சாமான்களை ஒரு அறையில் போட்டு பூட்டி விடுங்கள். கண்டிப்பாய் அதிலை ஜாக்கிரதையாயிருங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தான்.

“நரேன் நீ போ” என்று அனுப்பி விட்டு வீட்டுக்காரனுடன் கதைத்தான்.

“எங்கட தோழர்கள் தங்கி போறதுக்கு வீடு தேவைப்படுகிறது. சும்மா பூட்டிக்கிடக்கிற வீடு என்று எங்களுக்கு நல்லாய் தெரியும். திறப்பை தந்தீங்க என்றால் நன்றாயிருக்கும்” என்று கேட்டான்.

“அதில்லை தம்பி.அவயள் கொழும்பிலேயிருந்து வரவிருக்கினம்” வீட்டுக்காரர் நரேனுடன் கதைத்தது போல முயன்றார். “பரவாயில்லை. நாங்க வீட்டை திறந்து விட்டோம். நீங்க ஒருக்கா வந்து வீடு ஒதுக்கிறதை பார்த்தால் மட்டும் போதும். உங்க பொறுப்பிலே இருக்கிறதாலை கேட்கிறோம். எங்கேயோ இருக்கிற வீட்டுக்காரர் ஒருவேளை உங்களை கேட்டால் நீங்கள்.இயக்கம் மிரட்டி சாவியை வாங்கி விட்டது என்று சொல்லலாம். உங்க பாதுகாப்புக்காக தான். இனி உங்க இஷ்டம்.” லிங்கனின் முடிவான பேச்சு அவரை கலக்கி விட்டது. பேசாமல் திறப்பை எடுத்துக் கொடுத்தார். அவர்களோட கூட வந்தார். முக்கிய சாமான்களை தனியறையில் வைத்து பூட்டிவிட்டு அந்த ரூம் சாவியை நரேன் அவரிடம் கொடுத்தான்.

“உங்களுக்கு பிரச்சனை வார போது எங்கட பெடியளிடம் கூறுங்கள். உடனே நடவடிக்கை எடுப்போம். கொஞ்ச காலம் மட்டுமே தேவைப்படும் என நினைக்கிறேன்” என்று லிங்கன் ஆதரவாக சொன்னான். அவர் வீட்டிலேயிருந்து அவர்களுக்கு டீ வந்தது. நரேனுக்காக செய்வதுபோல அனுப்பினார்.

“ஆள் பரவாயில்லை அன்டன்” என்று லிங்கன் சொல்லிச் சிரித்தான்.

“டேய் வீடு ஒன்று எடுத்துவிட்டோம்” என்று வந்த அன்டனைப் பார்த்து கனகன் சிரித்தான். அவனுக்கு அந்த விசயம் தெரிந்ததேயிருந்தது. “வா, அண்ணன் வீட்ட போவம்” என்று கூட்டிக் கொண்டு போனான். அங்கே பாபுவோடும் லதாவோடும் விளையாடுற ஆளைப் பார்த்த போது இருவருக்கும் விசயம் விளங்கிவிட்டது.

“மன்னி, அடுப்பிலே தண்ணி வைத்திருந்தா தேத்தண்ணி ஊத்துங்கோ” என்றான். “இண்டைக்கு, சமையல் மூக்கை துளைக்கிறதே” என்று கேட்டான்.
“உங்க வீட்டை விட என்ன புதிதாய் இருக்கப் போகிறது தம்பி” என்றார். அண்ணன் கறிக்கு கொண்டு வாரபோது அவன் வீட்டயும் குடுத்து அனுப்பி விடுவான். அப்பன் கரையிலிருந்து மிச்சத்தை விற்றுவிட்டு வருவான். தண்ணியை எடுத்து அடுப்பிலே வைச்சவர். “தம்பி கொதிச்சதும் கூப்பிடுறேன்” என்றார். கனகன் அவர்களிடம் வந்தான்.

“திலகன், சரியான ஆளடா இவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தனும் என்று நினைச்சோம். நீ இங்க வந்து குட்டை உடைச்சுவிட்டாய்” என்றான் நகுலன்.

“நீ பொடி போட்டு கதைத்த போதே எனக்கு ஒரு சந்தேகம். ஆனால், நான் இவனை எதிர்பார்க்கவில்லை” என்றான் கனகன். கதைத்துக் கொண்டிருக்கையில் மன்னி “குரல் கொடுத்தார். “இதோ வாரோம் வாங்கடா எல்லோரும்” என்று சொல்ல.போய் ஆளுக்காள் தேத்தண்ணியை எடுத்து வந்தார்கள்.
அவ்விடத்திலே எல்லோருங்குமே ஆச்சரியம் தான். மன்னியிட தம்பிக்காரன் அப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்பட்டிருக்கிறான் என்றால்.? பொதுவாக பலர் வரவேற்ற போதும் முருகேசனைப் பொறுத்தவரையில் பற்றற்ற நிலையில் இருந்தான்.

கல்யாணம் கட்டிய போது, மனிசியை திரும்பிப் பாராது இருந்தவயள். அதுவே வீட்டிலே பிரச்சனையாகி தினமும் சண்டையாய் வளர்ந்தது. ஏதேதோ எல்லாம் நடந்த பிறகு அவன் அவயள் வீட்டை ஏறி கேட்டதுக்காக மட்டும் முதல் தடவையாக படியேறி வந்தவன் ‘எப்ப இவன் இயக்கத்திற்குப்போனான்?

தங்கிறதுக்கு சனம் இருக்கிறது. உவனுக்கு படகு ஒட்டம் பற்றி எல்லாம் என்ன தெரியும்? ஆனால் என்னத்தைக் கதைக்க முடியும்? அவள் சந்தோசமாயிருக்கிறாள் என்பதால் ஒன்றும் பேசாமல் இருந்தான்.

தம்பி முதலே இவர்களோட சேர்ந்தவன்.திலகனுக்கு படகு ஒட்டம் பற்றி தெரியாத போதும், “மேலிடம் சொன்னதைக் கடைப்பிடித்தான். படகுச் சொந்தக்காரனையும் அவுட்போட் மோட்டார் கொண்டு வந்தவனையும் ஒட்டிகளாக அனுமதித்தான். இரண்டிற்கும் ஒருத்தனே உரித்தவனாய் இருந்ததால்.அவன் மற்றவனை தெரிவு செய்யலாம் அவ்விடத்திற்கு பரிச்சயமானவர்களை போடாத போது, படகுக்கு சேதாரம் கூடுதலாக ஏற்பட்டன. ஆழமற்ற கடலாததால் ஒடி ஒடி அழமான பாதை கண்டு ஒடவேண்டும்.

இல்லாது போகிறபோது படகு தரை தட்டி அதன் சீமெந்து ஏர் உடைய நேர்ந்தது. கல் பகுதியில் ஏறுகிறபோது பக்கப் பகுதியில் ஒட்டைகள் ஏற்பட்டன. அடிக்கடி பைபர் லேயர் வைத்து ஒட்டுற செலவுகள் ஏற்பட்டன. அதனால் அனுபவமிக்க பெடியளையும் சேர்த்து படகுச் சேவையை நடத்த வேண்டியிருந்தது.

ஒருநாள் சம்பளமாக அவன் ஒட்டிக்கு 75 ரூபா கொடுத்தான். இருவருக்கும் 150. வள்ள ஒட்டம் சீராக, நடைபெற்றது.

அன்டனும் நகுலனும் அவனுக்கு வலதுகரமாக நின்றார்கள். ஒரு அவுட்போட் எஞ்சின் அன்று பழுதுபடவே, அவர்கள் வலுவாகக் கஷ்டப்பட்டு விட்டார்கள். காரைநகரைச் சேர்ந்த படகுக்காரன் மட்டுமே ஒடினான்.

அன்டன் அணியத்தில் இருந்து பாதை காட்ட நகுலன் காசைச் சேர்த்தான். அந்தப் பிரச்சினையைக் கதைக்க திலகன் ஏ.ஜி.ஏ.யிடம் போயிருந்தான். கரைப்பக்கம் வார லிங்கனிடம் சேர்ந்த பணத்தை கொடுக்க சொல்லி வைத்தான். ஒட்டியின் சம்பளம், சாப்பாட்டுச் செலவு போக மீதியை கொடுத்துவிட்டு கனகனிடம் வந்தார்கள்.

“வந்திட்டாங்கள் வெட்டிப்பொழுதைக் கழிக்க” அவனது அப்பரின் வழமைக்கு மாறான‌ பேச்சு இருவருக்கும் ஒருமாதிரியாக இருந்தது. இயக்கம் என தாம் சீரழிவது போலப்பட்டது. இவர்களால் எங்களைப் புரிந்துகொள்ள முடியாதா? களைப்பு வேறு அவர்களை மூட் அவுட்டாக்கியது. இன்னும், எத்தனை பெடியள்கள் எல்லாம் ஏன் சீரழிகிறார்கள்? சிந்திக்கவே மாட்டார்களா?

இயக்கம், இவர்களைப் பிடித்து அடிச்சதுக்காக பழகிய முகங்களையே முறிக்கிறார்கள். புரிந்தது. இனிக் கனகனிட்டயும் முன்னை மாதிரி வரமுடியாதோ? என சிந்தனை தலையை அழுத்தியது. “அப்ப, நாங்கள் போயிட்டு வாறம்” வந்த கையோடு கிளம்பினார்கள்.

“நில்லுங்கடா தம்பி. அது தண்ணி குடிச்சுவிட்டு விவரம் இல்லாமல் உளறும்.” அம்மா அவர்களை மறித்தார். அதில் இழைந்த வாஞ்சையை மீற முடியாமல் உள்ளே வந்தார்கள்.

‘உழைக்காமல் வீட்டில் இருப்பதாலே.அப்பன் இப்படிக் கதைக்கிறான்’ எனக் கனகன் நினைத்தான். நெடுக இப்படியே இருக்கிறது. நல்லதாகப் படவில்லை. அண்ணன் அப்பனோடு தொழிலுக்குப் போவதால் அவனுக்குப் புதிதாக யாரையும் தெரிந்ததாக வேணும். “டேய் உங்களுக்குத் தெரிந்து தொழிலுக்குப் கேட்கிறவர் யாராவது இருக்கினமடா” என்று கேட்டான்.

‘வள்ளம் ‘ஒன்றை அவிழ்க்கப்போவதாக சொல்லித் திரிந்த செல்லண்ணையின் ஞாபகம் அன்டனுக்கு வந்தது. அவர் முந்தி மூத்தியப்புவோடு தொழில் பார்த்தவர். அப்புட பேரன் வளர்ந்து விடவே தொழிலுக்குள் இழுக்க விரும்பினார். அதை அப்பு செல்லனுக்கு தெரியப்படுத்தினார்.

அவர் நவாலி பக்கத்திலே சிறிய வள்ளத்திற்கும் வலைக்கும் பேசி க் கொண்டிருக்கிறார். உதவிக்கு அன்டனைக் கேட்டிருந்தார்.

“டேய் எல்லாம் வெல்லலாமடா” என்றான் உற்சாகத்துடன்.

வென்று தான் விட்டிருக்கிறான்.

செல்லனும் வள்ளத்தை அவிழ்த்து விட்டிருந்தான். கனகனின் அப்பாவில் அவனுக்கு நிரம்ப மரியாதை இருந்தது. அன்டன் கேட்ட போது உடனேயே சேர்த்துக் கொண்டான்.

கனகனை வலைப் பொத்தல்களை தைக்கச் சொல்லி விட்டு செல்லன் காய்வெட்டிக் கொண்டு கள்ளடிக்கப் போயிருந்தான். த‌ன் தலைவிதியை நொந்தபடி தனியக் கிடந்து போராடிக் கொண்டிருந்த போது திலகன் அண்ணி வீட்டுப் பக்கம் இருந்து வருவது தெரிந்தது.பட்லையைத் திறந்து கொண்டு வந்த அவன் “டேய் அன்டனைக் கண்டனியா?” என்று விசாரித்தான்.

அன்டனோடயே கனகனும் ஒரேயடியாய் வீட்டிலேயிருந்து வெளிக்கிட்டு வந்தவன் “ஒரே அலைச்சலப்பா?”இப்படி ஏதேதோ வளவளத்துவிட்டு, கனகன் செல்லனின்ரை வளவுக்குள்ள நுழைய அவன் காம்ப்பிற்கு விடைபெற்றுப்போயிருந்தான்.

“ஒ, இண்டைக்கு வெள்ளை மோட்டார், திருத்த வாரன் என்றவன், மறந்துபோனன்” எனச் சொன்னவன் “எப்படி உன்ரை தொழில் போகிறது?’ என்று கேட்டான்.உந்த ஒட்டை வலையிலும் சின்ன வள்ளத்திலும் என்னத்தை பெரிதாய் எதிர் பார்க்க முடியும்”?என‌” என்று கனகன் பகிடியாக பதில் அளித்தான்.

தனது மனதில் இருந்த குமுறலையும் சொன்னான்.”நீங்களும் கடைசிலே முட்டாளாய் தானே இருக்கிறீர்கள்?”என்றான்.”நீ சொல்றது புரியிறது கனகு.நீங்க‌ வள்ளம் ஓடக்கே இந்த ஏர் உடையிறதும்,பக்கப் பாட்டிலே ஓட்டை விழுகிறதும் இல்லை.உங்கட கடல்.உங்கள் ஒவ்வொருவருக்கும் பாதை தெளிவாகத் தெரியும்.தவிர மர வள்ளத்தில் பாதுகாப்பு கூட‌ தான்.எங்களிற்கு ஏற்படுற பைபர் கிளாஸ் இழைகள் ஒட்டுறதும்,திருத்துறதுமான‌…வீண் செலவுகள் துப்பரவாக‌ இல்லை.இந்த சிறிலங்கா அரசு அரசாங்கம் நடத்துவது போல.மாகாணவரசு இருக்கிறது.நகராபைகள் இருக்கின்றன.எதற்கு இந்த ஜி.எ, எ.ஜி.எ ,ஜி.எ என்கிற ஏஜென்ன்ட் அமைப்புகள்.ஒரு தொகை வாரிப் பேர்கள் அதில் இருக்க மாட்டினமா?எல்லாருக்கும் அரச படிகளுடன் கூடிய‌ சம்பளம்.அந்த பணத்தில் முதல் தரமாக பாலங்கள் ,வீதிகள் எல்லாம் அமைக்கலாமே.இந்த மக்கட் தொகையை க் கொண்டு தீவின் முக்கிய பொருளாதார துறைகளான விவசாயத்திலும்,மீன் பிடியிலும் ஈடுபட வைத்து…வளப்பைத்தை அதிகரித்திருக்கலாம்.எம்மைப் போல உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தைப் பறித்து ,நாமாவது சுகப்படுறமோ?என்றால் அதுவுமில்லை. தவிர ,எங்கையெங்கோ இருந்தெல்லாம் பைபர்கிளாஸ் படகு வைத்திருப்பவர்கள் ட்ராக்டரில் கட்டிக் கொண்டு வாரார்கள்.உறவுக்காரப் பெடியன் ஒருத்தனையும் கூட்டி வாரார்கள்.தொழில் இல்லாத நிலமை.அவர்களிற்கு இங்கிருக்கிற பெடியன் சேர்ந்து பயணித்து ஒரு நாள் ‘பாதையை’ காட்டி புரிய வைத்தாலும்….அவர்களால் சரிவர படித்துக் கொள்ள முடியிறதில்லை. திருத்தச் செலவுகள் என விரயமாக இறைத்துக் கொண்டிருக்கிறோம். வைக்கோல் பட்டறை நாய்கள் போல‌, அதே சிங்கள ஊதாரித் தனம் தான் “என்றான் திலகன்.

கனகன் அசந்து போனான் !

“எங்களுடைய‌ போக்குவரத்துச் சேவை நட்டமாக ஒடுகிற தால் அங்கால அமைப்பிடமே கொடுத்து ஒன்றாக ஒடுகிறது நல்லது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இங்கால காம்பை எடுத்து விட்டால் காம் செலவு இல்லை தானே .அதனால் செல வு குறையப் போகிறது. ” இருவரும் கதைத்துக் கொண்டிருக்க மாலை மங்கியது. செல்லனின் இருபுதல்விகளான கமலமும், செல்வமணியும் சேர வந்தார்கள். அவ்விடத்தில் உள்ளவர்களைப் போல் சுமாரான அழகு பெற்றவர்கள்.அவர்களைப் பார்த்துவிட்டு திலகன் “பரவாயில்லையே, உனக்கு பொழுது நல்லாய்ப் போகும்” என கண்ணைச் சிமிட்டியபடி பகிடியாகச் சொன்னான்.

தாய்க்காரி இருவருக்கும் தேனீர் போட்டு மணி மூலமாக அனுப்பினாள்.

அவனை பொதுவாக அவ்விடத்தில் எல்லாருக்கும் தெரியும். எனவே அவனைக் குறிப்பாகப் பார்த்து முறுவலித்தாள். அவள் பார்வையில் வேறு சாதிப் பெடியன் என்ற ஆச்சரியமும் இயக்கத்தில் சீரழியிறவன் என்ற அனுதாபமும் கலந்து இருந்தன. செல்லன் வரவே.விடைபெற எழும்பினான். “எப்படியிருக்கிறாய் ?” என விசாரித்தவர் “தம்பி, கருவாடு இருக்கிறது; காம்ப்பில் சமைச்சுச் சாப்பிடுங்களன்” என்றார்.

உள் பக்கம் திரும்பி “எடியே, புள்ள கருவாடு கொஞ்சம் பையில போட்டு தம்பிட்ட குடு” என குரல் கொடுத்தார். அன்டனும் நகுலனும் அவனை மதிப்பதால் உதவி செய்ய நினைத்தார்போலும்.

காம்ப்பிலே, ஆறு ஏழுபேராவது இரவில் தங்குவது வழக்கம். ஒருதடவை அன்டனோடு போன கனகன் அங்கே கருவாட்டுக் குழம்புடன் சோற்றை ஒரு கை பார்த்திருந்தான். யாருடைய கைவண்ணமோ ருசியாக இருந்தது. அங்கேயே திலகன் அதிகமாய் தங்கிறவன். சமயங்களில் மன்னி வீட்டு விராந்தையில் பாயை விரித்து படுத்திருப்பான். காற்று நேரங்களில் கனகனோடு இருந்து விட்டு அவன் வீட்டு மணலில் படுக்கை விரித்து விடுவான்.

அன்டன் நகுலனைப்போல் இப்ப திலகனையும் அவனோடு காணக் கூடியதாக இருந்தது.செல்லன் வீட்டை அண்ணியும் அடிக்கடி தம்பியைத் தேடி வந்து அவனை விசாரிப்பார்.

இந்த திலகன் எப்படி இயக்கத்திற்குப் போனான் என்றது கனகனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதோடு அண்ணிக்கு ஏற்பட்ட அந்த சம்பவம்? அண்ணி பாவம்!, அது அவன் மனதையும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது..

ஊரிலுள்ளவர்களைப் போல அப்ப, அண்ணனுக்கும் வெளிநாடு போகிற ஆசை பிடித்திருந்தது. அதற்காக காசுக்காக இழுபறிப்பட்டது ஒரு பெரும் சோகக் கதை. கை கூடாது என்று நிச்சயமாகத் தெரிந்தபோது அண்ணன் குடியில் விழுந்தான். பாபும் லதாவும் பிறந்த போதும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அறவே இல்லை.

அண்ணியின் சகோதரங்கள் வந்து பாராதது வேறு அவரை வெகுவாகப் பாதித்தது. சண்டையும் பூசலும் இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. அண்ணன் அவருக்கு அடிக்கவே தொடங்கியிருந்தான். யாருடனும் அதிகமாக பழகியிராத அண்ணிக்கு கமலம் ஒருத்தியே சினேகிதியாக இருந்தாள். அவளை பின்னேரங்களில் பிள்ளைகளோடு அங்கே வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்படியிருக்கிற ஒருநாள் லதா கத்தியால் விரலைச் சீவிக் கொண்டாள். சதையில் ஆழமாக வெட்டு விழுந்திருந்தது. சிறிது தொங்கியது. அண்ணியோட கமலமே தொலைவிலிருந்து கொட்டக் காடு ஆஸ்பத்திரிக்கு …ஒடினாள். தொடர்ந்த நாட்களில் அண்ணனோடு அவளுக்குப் பிரச்சனை முற்றிவிட்டது.அதனால் அடி கூட வாங்கினாள். அயலவர்களுக்குத் தெரிந்த போதும் யாரும் தலையிட முடியவில்லை. கடைசியில் அம்மா அண்ணனைக் கூப்பிட்டுக் கண்டித்தாள்.

“பாவம் புள்ள, அவளுக்கு நாங்க தாண்டா துணையாயிருக்க வேணும் !”

அடுத்த இரு நாட்களுக்கு பிறகு பாபு நெருப்பிலே கை வைத்து விட்டான். அதுவும் பெரிதாக கொந்தளித்து அடங்கியது. உடன்பிறப்புகளின், புருசனின் புறக்கணிப்பால் அவர் வெகுவாகப் பாதிக்கப் பட்டார். மாரிகாலம் வேறு சூழலைச் சேறாக்கியது.

ஊர்மனையில் ஏற்பட்ட வெள்ளம் வாய்க்கால் வழிய ஒடி குளங்குட்டைகளை எல்லாம் நிரம்பி வழியச் செய்தன. ஒரு மாலைப் பொழுதில் கமலத்தோடு கதைத்துக் கொண்டிருந்த அண்ணி“கொல்லைக்குப் போயிட்டு வரேண்டி பிள்ளைகளை ஒருக்காய்ப் பார்த்துக்கொள்” என்று காய் வெட்டிக் கொண்டு பின்புறமாக கிழக்கு வயல் குளத்தை நாடிச் சென்று விட்டார். நீச்சல் தெரியாது என்ற துணிச்சல் அவர் நடையை வேகப் படுத்தி இருக்க வேண்டும். நீர் நிறைஞ்சு வழிஞ்சு பார்க்க‌ பயங்கரமாக இருந்தது. அக் குளத்தில் இறங்கினார்.

அவ்விடத்தாலே தற்செயலாக வந்த அன்டனின் அப்பா தத்தளித்துக் கொண்டிருந்த அண்ணியைக் காப்பாற்றினார். கடவுள்மனித ரூபத்தில் வருகிறது என்பது உன்மை தான். பிறகே, அண்ணன் திருந்தினான். கெளரவத்தைக் கைவிட்டு அவளிட ஊர்ப் பக்கம் போய் ஆறுதலுக்கு யாரும் ஒருத்தராவது வந்து பார்க்கச் சொல்லி இரந்து கேட்டு விட்டு வந்தான்.

அப்பதான் முதல் தடவையாக நம்ம திலகன் அங்கே வந்தான்.

அவன் வந்த போது கனகனுக்கு கூட வரவேற்பளிக்கிற மனநிலை இருக்கவில்லை. அங்கே நடந்த களேபரங்கள் அவன் மனதைப் பாதித்திருந்தன. சாதித் திமிரில் வந்தவயள், என்ற ஆவேசம் அவனுள்ளும் பற்றியிருந்தது. முன்னம் அம்மா மளிகைச் சாமான்களை அவன் மூலமாக அண்ணிக்கு அனுப்பும் போதெல்லாம் ‘அவர், திலகனை நினைத்து வாரப்பாடாக ஏதாவது
சொல்வார்.“தம்பி, உன்னைப் பார்க்கையில் தம்பி ஞாபகம் வருகுதடா”
என்பார். “உன்வயசு தான் அவனுக்கும் இருக்கும்” என்பார். “நான் உங்கண்ணாவோடு வரும்போது அவன் விபரம் தெரியாதவன்”கரைவார். இருந்த போதும், வெறுக்கவே செய்தான்.

அப்ப, திலகன் வந்ததால் அதிகம் மகிழ்ந்தவர் அவர் ஒருத்தர் தான். அவன் அங்கே ஒருநாள் பகற்பொழுது முழுவதும் இருந்து விட்டுப் போனான். அது அவருக்குப் பெரும் மன ஆறுதலை அளித்திருந்தது. அதற்குப் பிறகு அவனைப் பற்றி கதைப்பது இன்னமும் கூடி விட்டிருந்தது.

இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு !

இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக, இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாகவே இருந்தன. இளைஞர்கள் பழைய பிற் போக்குத் தனங்களை கட்டியழ விரும்பாமல் வீட்டை விட்டு , விட்டு, ஒடி, ஒடி ச் சேர்ந்தார்கள். அதனால் பொதுவாக எல்லாரும் அவர்களை மரியாதை உணர்வுடன் பார்த்தார்கள்.

இவன் எப்ப? எப்படி? போனான். நிச்சயம் அறிய வேண்டும் என்று தீர்மானித்தான் தன்னை சிறிது அவனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் செய்தான். தனக்கு அரசியல் தெரியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் அவனால் இயக்கத்திற்கு போய்ச் சேர முடியும் போலவும் படவில்லை.

வலையில் உள்ள பொத்தல்கள் எரிச்சலூட்டின‌,அலுப்பூட்டின. வேலையை அவனிடம் பொறிஞ்சு விட்டு செல்லன் ஊர்வம்புக்கு போய் விட்டிருந்தான். அனேகமாக வளவில் தனிமை அவனைச் சிந்திக்க வைக்கும்.போற வாற சமயங்களில் நண்பர்களில் யாராவது ஒருவன்.வலைக் குவியலில் கொஞ்ச நேரம் இருந்து கதைத்து விட்டுப் போவான்.அவனுக்கு ஆறுதல் அளிக்கிற பொழுதுகள் அவையே.

இயக்கச்செய்திகள், நாட்டு நடப்புகள், ஆமியின் செல்லடிகள், அவர்கள் பேச்சில் இடம் பெறும். காம்ப்புக்கு வரும் துண்டுப் பிரசுரம் புத்தகங்கள் எல்லாம் அவனுக்கு முதலில் வந்து விடுகின்றன. “நீயும் வாசியன்”என திலகன் கொடுத்து விடுகிறான்.

செல்லன் வீட்டு விராந்தையில் ஒருபக்கம் வைத்திருக்கிற ஒரு காட்போட் பெட்டியில் அவை கணிசமாக சேர்ந்திருந்தன.

அவனுக்கும் அந்த வீட்டுக்குமுள்ள பிணைப்பைப் பார்த்து விட்டு, அயலுக்குள்ள இருக்கிற பஞ்சன் அண்ணை முருகேசனோடு வீதியால் வருகிற போது வேலியால் எட்டி ப் பார்த்து “மாப்பிள்ளை எப்படி சுகம்’என்று கேட்கிறான்.

‘பாரன் !, செல்லன் தன்ரை மூத்தவளை இவனுக்கே கட்டிவிடப் போறான்’ என்று பகிடியாகச் சொல்லி விட்டுப் போகிறான்.

அவனுக்கு சிரிப்பு வருகிறது அவன் வேலையில் மூழ்கி விடுகிறான். அவன் மனநிலை,அன்டனுக்கும் நகுலனுக்கும் தான் தெரியும். அவர்களை இப்பவெல்லாம் போர்ட் ஒட்ட மும்முரத்தில் மூழ்கி விட்டதால் காண்பது அரிதாக இருந்தன. பெரும்பாலும் காம்ப்பிலே தங்கி விடுகிறார்கள்.

அண்ணி அவனைக் காண்கிற போதெல்லாம் “தம்பியைக் கண்டனியா?” என்று விசாரிக்கிறார். அவனும் “கண்டால் சொல்கிறேன் அண்ணி” என ஆறுதலுக்குச் சொல்கிறான்.

அவனே அவர்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறான். வசந்திக்கு எழுதிய கடிதம் பொக்கட்டில் கனநாளாக உறங்கிக் கொண்டு கிடக்கிறது. அவளுடைய அண்ணன் ஊர்ச் சண்டியனாக வேறு இருந்ததால் யாருமே பகிரங்கமாக அவளை நெருங்க முடியாமல் இருந்தது. அன்டன் அவர்களுடைய உறவுக்காரன். அவள் வீட்டில் சகஜமாகப் பழகும் பேர்வழி அவர்களுக்கிடையில் தூது வேலை பார்ப்பவன்.

அராலிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்த பழைய நாட்களிலே அவனுக்கு அவள் மேல் கண் விழுந்து விட்டது. அவள் அடுத்த வகுப்பில் படித்தவள். ஒரு துடிப்பான அழகு அவளிடம் எப்பவும் குடி கொண்டிருந்தது. வயல் வரம்பிலே அவளிட செட் முதலில் போக.அவனின் செட் பின் தொடரும்.

அவளைக் குறித்து பகிடி பண்ணுவான். பிறகு “டேய் உன்ரை மச்சியைச் சொல்லலையடா’ என்று அண்டனுக்கு சமாதானம் வேறு சொல்லி ஏமாற்றுவான். இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெட்டையைப் பற்றி அளந்து கொண்டு வருவார்கள். அன்டனும் தன் பங்குக்கு ‘சிவப்பி எப்படியடா’ என்று கேட்பான்.

குறைந்த பட்சம் அந்தப் பெட்டைகளுக்குக் கூடத் தெரியப் படுத்தாமலே பள்ளி வாழ்க்கை முடிந்தது.

பிறகு, அன்டன் இயக்கத்திற்கு வேலை செய்யத் தொடங்கி விட்டான். நகுலனோடு அவனும் ரெயினிங் எனப் போய் வந்த போது கோயிலடியில் சபா வைக்கிறது மட்டும் மிஞ்சியிருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கனகன் வசந்தி மேலுள்ள தன் ஒரு தலைக் காதலை வெளிப் படுத்தினான்.

அந்த வருட ஐயனார் திருவிழாவின்போது கோயிலில் சனம் குவிந்திருந்தது. பிரதான கோவில் வீதி ஒரமெல்லாம் கடை கண்ணிகள் முளைத்து கலகலப்பை மூட்டின. “உன்னை அம்மா கூப்பிடுறா” என சினேகிதி செட்டோடு வந்த வசந்தி அன்டனைக் கண்டு விட்டுக் கூப்பிட, நண்பர்கள் அவளை வளைத்துக் கொண்டார்கள்.

“கனகு சொல்லன்ரா.”எனப் பேசி அவனை பேச வைத்து விட்டார்கள். அவன் ‘விரும்புறதை திக்குத் திணறிச் சொன்னான்.

அவளுக்கு அன்டனின் கூட்டாளி என்தால் நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஒரளவு பழகிய முகம். அவள் விரும்புவதற்கு தடையிருக்கவில்லை.
“இரண்டு பேரும் கதையுங்கோ. நாங்க போயிட்டு வாறோம்” என அன்டன் கிளம்பி நண்பர்களைப் போங்கடா என்று துரத்தினான். பிறகு, தான் இருவருக்குமிடையில் தபால்காரனாக இருக்கிறான்.

‘எழுத்தில் தான் என்னமா எழுதுகிறாள்.ஒவ்வொரு தடவையும் அவள் கடிதத்தை பெறும்போது கனகனின் மனம் சிட்டுக் குருவியாய் பறக்கிறது. இவன் எங்கே போய் தொலைந்தான்? இப்ப எல்லாம் இவயளைப் பிடிக்கேலாது. அவளிடம் கடிதம் கொடுத்து வாங்கவில்லை என்பதே அவனுக்குப் பெரிய கவலையாக இருந்தது.

அவர்களில் திலகனே முதலில் களைத்து விழுந்து வந்தான்.வலைக் குவியலில் அலுப்புடன் அமர்ந்து கதை அளந்தான். “ஒட்டத்தை மறுகரைக்கு கொடுத்துவிட முடிவாகிவிட்டது” என்றான். “என்ன விசயம்” என அவன் விளக்கம் கேட்டான்.

“பண விரையம் தான்” என்றவன் “எங்கட ஒட்டம் வாய்க்கலை” என பகிடியாக வருத்தத்துடன் சொல்லித் தொடர்ந்தான். “சேர்ற காசு எங்களிட காம்ப் செலவுக்கும் ஒட்டிகளின் சம்பளத்திற்கும் தான் மற்ற இயக்க போட்டியாலை அதிகமாக அலைய வேண்டியிருக்கிறது. அலைச்சல் அதிகம். – ஒரே கரையாகச் செயல்பட்டால் ஒரளவு செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று ஜி. எ. , இன் பழைய முடிவை அமுல் படுத்துகிறது.”

தீவுப்பகுதி எ.ஜி. எ. அமைப்பு புத்திசாலித்தனமாக ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்களடா. வெல்டிங் பெடியன் சுந்தரத்தின் ஐடியாவுக்கு அந்த எ.ஜி. எ.அமைப்பு ஒத்துழைப்புக் கொடுத்து செயற்படுத்தியது. அவனோடு சேர்ந்து செயல்பட ஏழெட்டுப் பேரை சர்வேசன் நியமித்தான். காம்பிற்கு பின்னாலுள்ள பெரிய‌ வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப் பகுதி களை மூடி வெல்ட் பண்ணினார்கள்.

காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி , அதன் மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள்.

மூன்று நான்கு நாட்களாக முழு மூச்சாக செயல் பட்ட அவர்கள் கடைசியில் வெற்றியடைந்திருந்தனர். அது முதல் தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள பெரிக்கு இணையாக செயற் படுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு எல்லாம் இருந்தது.

ட்ராக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு போய் கடலில் இறக்கப்பட்ட போது பெடியள்கள் கரகோசம் செய்தார்கள்.

தச்சுவேலை தெரிந்த ஒரு பெடியன் ஒருவன், கம்பிச் சட்டத்தின் மேல் கையோடு கொண்டு வந்த பலகைகளை வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக் கொடுத்தபடி பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை இரண்டு மணித்தியாலத்தி லேயே முடிந்தது.

ஆழமற்ற கடலாகையால் மிதவை பாரம் ஏற்ற கணிசமான அளவு தாழும். பாதை கண்டு இதை ஒட்ட முடியாது. அவுட்போட் மோட்டார் பூட்டுறது வேறு கஷ்டம், வலிக்கிறது தான் ஒரே வழி”என்று ஒட்டிமார் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

ஒரிரண்டு பிரச்சனைகள் இருந்த போதும் தீவுப் பெடியளுக்கு சந்தோசமாகவே இருந்தன. எங்கட பெடியள் கை வண்ணம் என திலகனுக்கு கூட சந்தோசம் பற்றியிருந்தது.அதை அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டு போக ஏழெட்டுப் பெடியள்கள் தேவைப் பட்டார்கள். பெரும்பாலும் மார்பளவுத் தண்ணிர் இருந்ததால் அவர்கள் தண்ணில் நனைவது பற்றி அக்கறைப் படவில்லை.

அந்த மிதவை படைத்த சரித்திரம் பெரியது. “சுய மூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட், மோட்டார்கள், ஷெல்கள் இந்த வரிசையில் இதுவும் ஒன்று. தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயம் தான். றால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, இயற்கை வாயு உற்பத்தி இவற்றோடு கூட எண்ணப் படக்கூடியவையே.

அதிலே, பெரிய மினிபஸ், கார், ட்ராக்டர் போன்ற வாகனங்கள் எல்லாம் இலகுவாக ஏற்றப்பட்டு இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்கள் வர்த்தக நோக்கில் தீவுப்பக்கமிருந்து கொண்டு வரப்பட்டன.

அவர்களுக்கு வேண்டிய சகல உணவு வகைகளும் நீரில் சிறிதும் நனையாமல் பத்திரமாகக்கொண்டு செல்ல உதவியது.சாமான் செட்டுக்கள் கொண்டு செல்வதற்குரிய ஒரே மிதவையாக அது இருந்ததால், ஒரே நேரத்தில் எத்தனையோ தொன்களை கொண்டு சென்றதால் மக்கள் பெடியள் பரவாயில்லை என தட்டிக் கொடுத்தார்கள். தம்பிமார் திலகங்கள் தாம்’ என்று சிலர் சிலாகித்தனர். தீவு அமைப்பு இதன்மூலம் கணிசமாக உழைத்தது.

“பகைமை இயக்கத்திற்கு வழமை போல் இது பொறுக்காத விடயம். அவர்களும் இதைப் போல் ஒன்றைத் தாமும் தயாரிக்க முற்பட்டார்கள் .ஆயுத இருப்பு இருப்பதால், எல்லாம் மிஞ்சப் போனால் இயக்க மோதலை தொடங்கி விடுகிற, சேட்டைகளைப் புரிவதாக அது மாற்றம் பெற்று விடும். நெருக்கடியான காலகட்டம்.

அதனாலை எல்லா ஏ.ஜி.ஏ. அமைப்புகளுக்கும் கணிசமாக‌ பணம் தேவையாயிருக்கிறது. குறைந்த பட்சம் ஒரிரு ஏ.ஜி.ஏ அமைப்புகளையாவது பலமானதாக வைத்திருப்பது நல்லது என்று ஜி.ஏ. கருதியது.

அனைத்து இயக்கங்களுக்கும் கடை விற்பனை முகவர் நிலையங்களில் எல்லாம் பொருட்களுக்கு வரி விதித்ததால் மக்களிடமிருந்து முன்னைய மாதிரி உதவியை எதிர்பார்க்க முடியாது. எனவே இப்படி சேரும் பணமே இயக்கத்தை இயக்க உதவியது.”

திலகன் விபரித்துக்கொண்டு போனான்.

செல்வமணி அவளர்களிருவரையும் அம்மா கூப்பிடுவதாக வந்து சொன்னாள். அவளை கள்ளமாக அளவிடுகிற திலகனின் பார்வை.கனகனுக்குப் புரிந்தது. இவன் விரும்புகிறான்.மனதில் பச்சாத்தாபம் எழுந்தது. இவனைப் பற்றி நான் சரிவர அறியவில்லை எனவும் தோன்றியது.

கூழ் காய்ச்சியிருந்தார்கள். இருவருக்கும் மணி சிறிய குண்டாளக் கோப்பையில் ஊத்திக் கொடுத்தாள். கமலம் ஏதோ தையல் வேலையில் மண்குந்திலிருந்து மும்முரமாக மூழ்கியிருந்தாள்.
சென்னை வானொலியில் அன்று காற்றாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்கள். அதிகமாக அப்படியான அறிவிப்பு அந்தப் பகுதிக்கும் சரியாக இருப்பது வழக்கம். அதனால் யாரும் தொழிலுக்குப் போகவில்லை. லிங்கன் வந்து அன்டனையும் நகுலனையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான். அவன் பாடுபட்டு எழுதிய கடிதம் அன்டனோடு போய் விட்டிருந்தது. நாலைந்து நாட்களுக்கு முன் எழுதியது. அவளிடம் போய் சேராமல் இழுபடவே அவனுக்கு அந்தரமாக இருந்தது. இருளத் தொடங்கியிருந்தது.

“வாவன்ரா.காம்பில தமிழன் சிந்திய ரத்தம் வீடியோ கசட் இருக்கு. சுந்தரம் வீட்டு ரிவில போட கேட்டிருக்கிறம். ஒம் என்றவையள்’ என்று அவனை திலகன் கூப்பிட்டான். அவளின் நினைவை விரட்ட உதவியாயிருக்கும் என்று புறப்பட்டான்.
காம்பில் யாரும் இருக்கவில்லை. சுவரோடு அகன்ற இரு வாங்குகள் போடப்பட்டிருந்தன. ஆளுக்காள் ஒவ்வொன்றில் ஃபிரியாக ஏறி கால்களை நீட்டினார்கள். படுத்துக் கிடந்தபடி கதையளப்பில் ஈடுபட்டார்கள்.

வாங்கில் கிடந்த புத்தகங்களை அவன் கிளறிப் பார்த்தான். சமூக விஞ்ஞான வெளியீடு மனதைக் கவர்ந்தது. உதைப் போல் நிறையப் புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்று நினைத்தான். புத்தகங்களை புரட்டியபோது அவன் எதிர்பார்த்தது போல் சாதி பற்றிய கட்டுரை ஒன்றும் இருந்தது.

திலகன் எழும்பி ரூ இன் வண் கசட்டில் இதயக்கோவில் கசட்டைச் செருகினான். காம்ப் முழுவதையும் சோகத்தோடு கூடிய பாட்டுக்கள் ஆக்கிரமித்தன. அவன் மனநிலையில் கேட்க நல்லாயிருந்தது.

“இந்த வீடியோவை முன்னம் பார்த்திருக்கிறாயா?” என்று திலகன் கேட்டான்.பெரும்பாலும் உள்ளுக்க ஒடின படம் என அன்டன் சொல்லியது ஞாபகம் வந்தது. இல்லை என தலையாட்டினான்.

“இந்த முறை கலவரத்தால் கொழும்பிலயிருந்து பல கப்பல்கள் அகதித் தமிழர்களை நிறைத்துக் கொண்டு வந்தன. லங்காராணி, மேரி இப்படி கடைசியாக இந்திய சுற்றுலா சிதம்பரக் கப்பலும் வந்திருந்தன.

கே.கே.எஸ்.துறைமுகத்தில் அவர்கள் இறக்கப்பட்டதையும் அயலிலுள்ள நடேஸ்வராக் கல்லூரி காயப்பட்டவர்களை பராமரிக்கும் ஆஸ்பத்திரியாக‌ செயற்பட்டதையும், அவர்களின் சிறிய பேட்டிகளும் வீடியோவாக்கப் பட்டிருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் முழுமையாக பங்களித்திருந்தார்கள். அதோடு பழைய கலவர புள்ளி விவரங்களை இணைத்து’மிதவாத அரசியல் செயற் பாட்டை விபரித்ததும்.இப்பிரச்சனைகளின் காரணிகள் எவை என்பது பற்றி விளக்கம் கொடுத்ததுமாக. நல்லமுறையில் படமாக்கியிருக்கிறார்கள்” என்று சிறிய விளக்கமே கொடுத்தான்.

“நீ அருளர் எழுதிய ‘லங்காராணி’ புத்தகம் வாசித்திருக்கிறாயா?” என்று மேலும் அவன் கேட்டான். அவன் அப்புத்தகம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறானே தவிர, காணவில்லை. “இல்லை” என்றான்.

திலகனுக்கும், தானும் இயக்கத்தில் இழுபடா விட்டால் வாசித்திருக்க மாட்டேன் என்பது சட்டென புரிய, தவறை உணர்ந்து கொண்டான்.

“77 கலவரத்தின் போது கொழும்பிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் லங்காராணி. அந்த கப்பலில் வந்தவர்களில் ஒருவராக இந்த அருளர் இருக்க வேண்டும். அந்த கப்பலில் இருந்தவர்களைக் கொண்டு எமது மக்களின் அபிலாஷைகளையும் ஊசலாட்டங்களையும் இளைய மட்டத்தினரின் குமுறல்களையும் தத்ரூபமாகவும் அழகாகவும் படைத்திருந்தார்” என‌ பெரிய விளக்கமே கொடுத்தான்.

“அந்தக் கதை ஒரு சாம்பிள்’ அதைவிட மோசமான இம்முறை அவலத்தையும் களஞ்சியப்படுத்தும் முயற்சியாக தமிழன் சிந்திய ரத்தம் வீடியோவை எடுத்திருக்கிறார்கள்” என்று மேலும் சொன்னான். “உனக்குப் படம் பார்த்தா விளங்கும்” என்றவன் பாட்டுக் கசட் ஒரு பக்கம் முடிந்திருக்கவே மாற்றிப் போட எழும்பினான்.

“டீ ஏதும் குடிக்கப்போறியோ. எனக் கேட்டான்.

“போட்டால் குடிக்கிறதுக்கு என்ன” என்றான் கனகன். திலகன், “நீயும் என்ர கேஸ் தான்”சொல்லி சிரித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு அந்தப் பெரிய கட்டுரையை வாசித்து முடிக்க முடியாது என்று பட்டது. மூடி பழைய இடத்தில் வைத்தான்.

அலுப்படிக்கவே, அவனும் எழும்பி உள்ளே போனான். ஹோலின் ஒரு மூலையில் ஒன்றிரண்டு கிரனேட்டுக்கள், எம் 80 பிளேட்டுகளுடன் கூடிய தகரக்கூடுகள், சிறிய வயர்க்குவியல், சற்றுத் தள்ளி பேப்பர் புத்தகக் கட்டுகள், சுவரில் பல நோட்டீஸ் படங்கள் என இருந்தன.

கனகன் வியப்புடன் அவற்றைப் பார்த்தவாறு நின்றான். ஒருவித அறியும் ஆர்வம் அவனுள் எழுந்தது. டீயுடன் வந்த திலகன் ஒரு படத்தைக் காட்டி “இவனை உனக்குத் தெரியுமா” என்று கேட்டான்.தெரியாது என அவன் தலையை ஆட்டினான். “ஒரு தடவை இங்கிருக்கும் அகதி முகாம் ஒன்றுக்கு இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களை படகில் ஏற்றி வந்த போது நேவியால் சுட்டுக் கொல்லப் பட்டு விட்டான்”.

அவனோடு கூட இறந்தவர்கள் படங்களும் அந்த நோட்டீசில் இருந்தன. “சிறந்த ஒட்டி. அவனுடைய இழப்பு எங்களுக்கு எல்லாம் பெரிய பாதிப்பு” என்றான்.

அவர்களின் வாழ்க்கை இன்னொரு விதமானது என்பது கனகனுக்குப் புரிந்தது. அதில் பெருமைப் படுவது, கல்யாணம் கட்டி வாழ்வதில்லை. அரசியல் பிரச்சனைகளுக்கு உயிரைத் துறப்பது தான். சாதாரணமாக எல்லாருக்கும் உள்ள கடமைகளை மறந்து விட்டதால் இப்படி ஒரு சிலரின் மேல் போராட்டம் பொறிந்து விட்டது.

முன் விராந்தைப் பக்கம் பழையபடி இருவரும் வந்தமர்ந்தார்கள்.

பனை மரங்களிலிருந்து இதமான காற்று தவழ்ந்து வந்தது.
“எப்படியடா.உன்ரை ஆள்? என்ன சொல்றாளடா?” என்று திலகன் நக்கல் சிரிப்புடன் கேட்டான்.அவனுக்கு ஒட்டை வாயன்’ என்று அன்டனைத் திட்டவேண்டும் போல் தோன்றியது.

‘எந்த விதமாக இயக்கத்துக்குப் போனான்’ என்பதை அறிய நல்ல சந்தர்ப்பம் என கனகனுக்குப் பட்டது.“என்னை விடடா.உனக்கு எப்படியடா இதில் இன்ரரஸ்ட் வந்தது” என்று கேட்டான்.

“எதைக் கேட்கிறாய்” என விளங்காமல் திலகன் அவனைப் பார்த்தான். மணியைப் பற்றிக் கேட்கிறானோ என்று நினைத்தான்.

கனகன், “இயக்கத்துக்குப் போனதைக் கேட்கிறேன்” என்ற போது மூச்சு வந்தது.

ஒ! அதுவா.ஒருவிதத்தில் உங்க நடந்த பிரச்சனைதான் காரணம் என்று சொல்லலாம்” தொடர்ந்தான்.”அக்கா தற்கொலை செய்ய முயற்சித்ததை அறிந்த போது வீட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சின்னக்கா அண்ணனை ஏசினாள். கடைசியில் என்னைப் போகச் சொன்னார்கள். சாதியைத் தூக்கி பிடிப்பதும் அதன் காரணமாக அக்காவை வெறுப்பதும் எனக்குப் பிடிக்காமல் இருந்தது. இங்க வந்த போது எனக்கு உங்கள் எல்லாரையும் பிடிச்சுப் போச்சு. திரும்பிய போது எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டு ஆவலாக செய்திகள் கேட்டார்கள். இருந்தாலும் சின்னக்கா அடிக்கடி போறதை விரும்பவில்லை.

அண்ணன் ஏன் அப்படி மாறினானோ தெரியவில்லை. துப்பரவாக போவதை விரும்பவில்லை. சின்னதுகள் அக்காவைப்பற்றிக் கேட்க ஆசைப்பட்டதுகள். அடுத்த கிழமை நானாகவே இங்கு வர வெளிக்கிட்டேன். அக்காவை பார்க்கப் போகிறேன், ஏதாவது சொல்ல வேணுமா என்று விசமத்துக்குக் கேட்டேன். அண்ணன் என்னை அடிச்சு அறையில் பூட்டி வச்சுட்டான்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த குமார் என் பள்ளி நண்பன். என் பிரச்சினையை அவனோடு ஏற்கனவே கதைத்திருந்தேன். அவன் ஒரு ஐடியா தெரிவித்தான். “டேய் நீ வந்து எங்க காம்ப்பிலே இரண்டு நாள் நிண்டிட்டுப் போ. உன்னை இயக்கத்திற்குப் போனவன் என்று நினைப்பினம். பிறகு உன்னோட யாரும் சோலிக்கு வரமாட்டினம்’ என்றான்.

தம்பி மூலமாக அவனுக்கு செய்தி அனுப்பினேன்.

அவன் வீட்டில் வந்து என்னைக் கூப்பிட்டான். அண்ணனுக்கு இயக்கம் என்றால் சிறிதுபயம். பேசாமல் கதவைத் திறந்து விட்டான். எங்கட ஏ.ஜி.ஏ. பிரிவில் வேலை செய்வது நல்லதில்லை என பட்டதால் இங்கே வந்தேன். இப்ப என் மனசுக்கு ஆறுதல். அக்காவை வெறுக்கிறதுக்கு சரியான காரணமில்லை. சாதி கெளரவப் பிரச்சினைகளை எவ்வளவு காலம் வைத்திருப்பார்கள் பார்க்கலாம்.”

கனகனுக்கு கேட்க படு ஆச்சரியமாக இருந்தது.

மாலை எட்டு மணிக்கு பெடியள் செட் காம்பிற்குள் புகுந்தது. சுந்தரத்தின் வீட்டில் வீடியோ போட்டுப் பார்க்கும் போது அன்டனும் நகுலனும் வந்து விட்டார்கள்.

படம், யாழ்ப்பாண மக்களுக்கு உண்மைகளை சிறிதளவாவது உணரவைக்கும் தன்மை படைத்ததாக இருந்தது. அரசாங்கமும் தமிழ் தலைவர்களும் ஏமாற்றியதை கோர்வைப்படுத்தி விளக்கமாக தெரியப் படுத்தினார்கள்.
“இந்த வகைப் படங்களையும் செய்திகளையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்பதால் தான் எங்களுக்கு ஒரளவு மக்களைப் பற்றி அறிய முடிகிறது. சிந்திக்க முடிகிறது. மக்கள் நல ஆய்வுத் திட்டங்களை வரையறுத்து செயல் படுத்த ஊக்கம் பெறுகிறோம்”.திலகனின் பேச்சு சிறிது அசர தான் வைத்தது. இயக்கம் ஒரு தாய்யாய் ‘இரு கை நீட்டி கூப்பிடுவது’ போல் பிரேமை தோன்றியது. விலங்கிடப் பட்ட தமிழன்னை விடுதலைக்காக கூப்பிடுவது போலப்பட்டது.

படம் முடிந்தபிறகு பெடியள் கலைய அவர்கள் காம்ப்பிற்கு திரும்பினார்கள்.

வீடியோக் கசட்டை வைத்து விட்டு பொறுப்பாக நிற்கிற ரவியோட கதைத்துக் கொண்டு சமையலுக்கு உதவி செய்தார்கள். அங்கேயே சாப்பாட்டையும் முடித்துக் கொண்டார்கள். கருவாட்டுக் குழம்பும் சோறும் ருசியாக இருந்தது. புழுக்கமாக இருக்க.”ரவி, நாங்க போயிட்டு நாளை வாறம். அக்கா வீட்ட தங்கியிடு வேன்’ என்று விடை பெற்றான். திலகன் வரும் போது காற்று அடங்கி விட்டிருந்தது.

மன்னி வீட்டு வளவில் சாக்கையும் பாயையும் போட்டு படுக்கை விரித்தார்கள். கனகனும் அவர்களோட வந்திருந்தான். வசந்தி கடிதம் தர அந்தரப்பட்டதையும் வேலை அலைச்சலில் பிறகு வருகிறேன் என காய் வெட்டிப் போனதையும் அன்டன் தெரிவித்தான். திலகன் சிரித்தான். “இதை நீ …சொல்லாமலே விட்டிருக்கலாம்” என்றான்.

“ஏன் கனகு நீ அவயள் வீட்டில் நேரே போய் கேட்டுக் கட்டிக் கொள்ளன். எங்களைப் போல நீ இயக்கமில்லையே” என்று நகுலன் கேட்டான். திலகனுக்கு அப்பவே அன்டனின் நிலைமை புரிந்தது. பாசறை வகுப்புகள் நடைபெறும் போது சுயவிமர்சனம் கடைசியாக நடைபெறும் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய பல விசயங்களை அதிலே தெரிவிப்பார்கள். தம்மைப் பாதித்த சாதி, சுய, பெண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் கணிசமான அளவு சொல்வார்கள். அன்டனும் தன்னுள் மறைத்து வைத்திருந்த வசந்தி மேலுள்ள காதலைத் தெரிவித்திருந்தான்.

காலம் வர தெரியப்படுத்தலாம் என காத்திருந்தான். இயக்கம் என வெளிக்கிட்ட பிறகு, காதலாவது,குடும்பமாவது?? அவனில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆபத்தை முதலில் எதிர்நோக்கிப் போகிறவர்களாக இருப்பதால் வாழ்வைப் பற்றி திடமாக நினைக்க முடியாதிருந்தது. கனகன் அவளை விரும்பிய போது உதவி செய்திருக்கிறான்.

திலகனுக்கு அன்டன் மேல் அனுதாப உணர்வு பிறந்தது. யார்யார் மேல் அனுதாபப் படுவது. வெறுப்புடன் சிரித்துக்கொண்டான்.

“டேய், நகுலன் சொல்றது சரிதான். காலத்தைக் கடத்தாமல் வீட்டில் நேரே போய் கதைத்துப் பார். இல்லாவிட்டால் நாங்கள் கதைக்கிறமடா” திலகன் கூறினான்.

ஆச்சரியத்துடன் கனகன் அவர்களைப் பார்த்தான். ‘இயக்கம் பொதுவாக பலரை மாற்றி விட்டது. சிந்தனை வீச்சையும் செயல் துடிப்பையும் சிறிது கூட்டி விட்டது. புரிந்தது.

சிறியவர்களை பெரியவர்களாக்கி விட்டது .பெடியள் அணியில் திலகனைத் தவிர மற்றவர்கள் உள்ளூர். அவன் சம்பந்தப்படுவதை நல்லபடியாகப் பார்க்க மாட்டார்கள். அண்ணா உட்பட பலர் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்தி விடுவார்கள்.

பாவம் அண்ணி.அவட ஒரே இரத்த உறவாய் வந்து நிற்பவன் இவன். தன் விடயத்தால் அக்கா தம்பியின் உறவு பாதிக்கப்பட வேண்டாம். கணநேரத்தில் ஒடிய சிந்தனையால் “மச்சான் நேரம் வரேக்கை நானே கேட்கிறேன்” என்றான்.

ஐயனார் திருவிழா அங்கு விசேசமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று ஆடு வெட்டும் வேள்வி சிறப்பாக நடை பெறும். எல்லாரையும் மகிழ்ச்சி பற்றிக் கொள்ளும். ஆண்பகுதியினர் வீட்டிலே கசிப்பு. கள் போத்தல்களைச் சேர்ப்பார்கள். பெண்கள் வீடு மணக்க ஆட்டுக்கறி சமைப்பார்கள்.

ஒவ்வொரு வள்ளக்காரர்களும் இரவில் தம்மொடு தொழிலுக்கு வந்தவர்களை. வருபவர்களை, நண்பர்களை விருந்துக்கு அழைப்பார்கள்.

செல்லன் அப்படி கனகனைக் கூப்பிட்டிருந்தான். வீட்டுக்குள் நுழைகிற போது ருசியான மணம் அவனை மயக்கியது. அவன் வயசு மட்டத்தில் ராஜன், குகன், சபேசன் போன்ற பெடியளும் செல்லன் வயசு மட்ட ஆட்களுமாக பலர் இருந்தனர்.

ராஜன் அண்மைக்காலமாக ஊரால் விமர்சிக்கப்பட்டு வருபவன். குலனைப் பகுதியில் மணம் முடித்தவன். மனைவியைத் தினமும் அடித்துத் துன்புறுத்துவதாக அவனைப்பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. வதந்திகள் பல. அதனால் பொதுவாக அவனை பலருக்குப் பிடிக்காதிருந்தது.

வெறியில் இருந்த அவன் கனகனை விமர்சிக்க வெளிக்கிட்டான். “பெரிய‌ இயக்கப்பிரபு வந்திட்டார்’ நீ அவனின் (திலகனின்) கையாள்தானேடா” என சேட்டைப் பற்றினான். “என்னைப் பற்றிக் கதைக்க உனக்கு என்னடா இருக்கிறது. பொத்தடா வாயை” என அவனைப் பிடித்துத் தள்ளினான். அவன் தொடர்ந்து தாக்க முயற்சிக்கவே.கனகனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. உருட்டித் தள்ளினான். பலருக்கு இவன் அவர்களுடன் சேர்வது பிடிக்காமல் இருந்தது. அந்த நினைப்பினாலும் மறிக்க வந்தவர்களையும் உதைத்துத் தள்ளினான். செல்லன் பாய்ந்து இவன் திமிரப் பிடித்தான். மற்றவர்கள் ராஜனை அமுக்கினார்கள்.

“வளர்ந்து விட்டவன்’ என்ற நினைப்பு செல்லனுக்கு உறைத்தது. தனியாளாக தொழில் செய்யக்கூடிய வல்லமை படைத்தவன். ராஜனைப் பார்த்தான். அவன் சிறிது மோடன்.

மருண்டு நின்ற கமலத்தையும் செல்லமணியையும் பார்த்தான். அவனுள் ஏதோ யோசனைகள் எழுந்தன. ஒருமாதிரி இருவரையும் சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தான். பரிமாறுகிற போது கமலம் கனகனை அனுதாபத்துடன் பார்த்தான்.

கை கழுவியதோடு அவன் விடைபெற்றுக்கொண்டு போய் விட்டான்.

மனசு குழம்பியிருந்தது. நேரே வீட்டை போய் சேர்ந்தான். நேரம் சாமத்தை எட்டுவதாக இருந்தது. கதவு சாத்தியிருந்தது.

தட்டி எழுப்ப மனம் இல்லாததால் முன்னால் இருந்த மண் விராந்தையில் காலை நீட்டிப் படுத்தான். குளிர் தரை மனசுக்கும் இதமாக இருந்தது. முகிற் கூட்டங்களின் அசைவும் நட்சத்திரங்களின் மினுமினுப்பும் சிந்தனை ஒட்டத்தைத் தீவிரப்படுத்தியது.கூடுதலாக உழைப்பைப் பெற வழிபார்க்க வேண்டும். எப்படி முயலலாம். தற்போதைய நிலையில் வீட்டுச் செலவுக்கு முப்பது முப்பதைந்தே வருகிறது. அதோடு கொஞ்சம் கறிக்கும் வருகிறது. சிறிய வள்ளங்களில் தொழில் நடப்பதால் அங்கே வளப்பம் நிலவவில்லை. பெரிய வள்ளம் இல்லாதிருந்தும்,கடல் வலயச் சட்டங்களும் அவர்களைப் பெரிதாகப் பாதித்திருந்தன.

‘சுயமான தொழில் ஒரளவு பரவாயில்லை போல பட்டது. பகலிலே கடையும் ஒன்று போட்டால் ஒரளவு சமாளிக்கலாம் என நினைப்பு திடப்பட்டது.

அப்படியே கிடந்தவன் தூங்கிப் போனான்.

அடுத்தநாள் தொழிலுக்குப் போக அலுப்பாக இருந்தது. வாசிகசாலைக்குப் போய் பேப்பரைப் பார்த்து விட்டு.செல்லன் வீட்டுக்குப் போனான். விருந்தின் குப்பைகள் துப்புரவாக்கப் படாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன. வலையை எடுத்துப் போட்டு சரி பார்க்கத் தொடங்கினான். திருவிழாவின் போதும் நண்பர் செட்டைக் காணவில்லை. பிறகும் கண்ணில் படவில்லை. ‘எங்கே போய் தொலைந்துவிட்டார்கள்?” அவனால் யோசிக்க முடியவில்லை.

அண்ணி வீட்ட போகாமல் வந்திருந்தான். கமலம் தேத்தண்ணி கொண்டு வந்து வைத்தாள். அவளுடன் கதைத்துப் பார்த்தால் என்ன? என்று தோன்றியது. மன்னியிட சினேகிதி . இவளுக்கு திலகனைப் பற்றி எதுவாச்சும் தெரிந்திருக்கும்.

“மச்சான் ஆட்களை காணவில்லை. உனக்கும் ஏதும் தெரியுமா” என்று கேட்டான். அவள் அவனைப் பார்த்து முறுவல் பூத்தாள். நேற்று நடந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.

“அவயள் காம்பை வீட்டை திரும்ப கொடுத்திட்டினமாம் என்றாள். மேற் கொண்டு கேட்க தயக்கமாக இருந்தது. மன்னியிட்ட ஒருக்கா போய் வருவது நல்லது போலப்பட்டது. “அப்பா வந்தால் சொல்லு. மன்னி வீட்டை நிற்கிறேன்” என்று விட்டு கப்பை அவளிடம் கொடுத்து விட்டு எழும்பினான்.

அங்கே. அண்ணி சமைத்துக் கொண்டிருந்தார். “உன்ரை கொண்ணரை காணலை. இண்டைக்கும் ஏதும் புதுப் பார்ட்டி நடக்கிறதோ?” என்று கேட்டார். அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. செல்லனையும் காணவில்லை. ஒருவேளை இருக்குமோ என்று நினைத்தான். தெரியவில்லை என பதிலளித்தான்.

, இண்டைக்கு தொழில் இருக்காது போல தோன்றியது. “மச்சான் ஆட்கள் எல்லாம் எங்கே அண்ணி” என்று விசாரித்தான். “போட் ஒட்டத்தை கையளிக்கினம்’ என்றான். ‘நீ காணலையா?” என்றார். “அப்பா வந்திட்டார். உன்னை வரட்டாம்” என்றாள் அண்ணியிடம் வந்த‌ கமலம். தொழிலுக்குப் போகப் போறார் என்று புரிந்தது. படலையைத் திறந்து கொண்டு உள்ளே போகிற போது செல்லன் வலையை ஒழுங்கு பண்ணுவதில் மும்முரமாக இருந்தான்.

தொழிலில் ஈடுபடுற போது.சுயநினைப்புகள் பறந்து போகிறது.

வலையை இழுத்து கடலில் போட்ட பிறகு சிறிது ஒய்வு கிடைத்திருந்தது.செல்லன் பீடி ஒன்றை எடுத்து பத்த வைச்சான். கனகன் அவனிடமிருந்து வெத்திலை பாக்கை வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். நிலா வெளிச்சம் இரவை பகலாக்கியது. கோட்டைப் பக்கமிருந்து அடிக்கப்பட்ட ஒரு குண்டு எங்கேயோ விழுந்து வெடிக்கிற சத்தம் கேட்டது. கடற்கரைப் பக்கமிருக்கிற அந்தக் கோட்டையால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அயலில் இருந்த குடியிருப்புகளும் கடை கண்ணிகளும் அதிகமாகக் கதி கலங்கின. “சரிதான். இவங்கட கொட்டத்தை அடக்கினால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்” செல்லன் அலுப்புடன் பெருமூச்சு விட்டான்.

சத்தம் அடங்கிவிட இயல்பான போக்கில் கதைக்கத் தொடங்கினார்கள்.

ராஜனைப் பற்றிப் பேச்சு வந்தது. இவனைப்பற்றிய விமர்சனம் வாலையம்மன் பகுதி முழுதும் பரவியிருந்தது. ‘இவயள்ட பெடியன் இன்னொரு பகுதியில் முடிச்சுவிட்டு தலைகீழா நிற்கிறான்’ என்ற போது ஊரே திட்டியது. குலனைக்கும் இவர்களுக்கும் இரத்தத் தொடர்பு இருந்தது. அங்கே.அவர்களின் ஒரு வேர்ப்பகுதி (சகோதரர்களின்
பிள்ளைகள் என) வேரூன்றி படிப்பு உத்தியோகம் என‌ இவற்றில் வெகுவாக முன்னேற்றம் அடைந்துவிட்டிருந்தது. எழுபது எழுபத்தைந்து குடும்பங்கள் இருந்தபோதும் பார்க்கிறபோது எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் படித்தவர்களாக இருந்தார்கள்.

தொழில் செய்பவர்கள் ஒன்றிரண்டு பேராக அருகிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது .அந்த அருகிற வீதத்தில் அகப்பட்ட ஒரு குடும்பம். அவளுடைய அப்பன் கடலுக்குப் போய் வந்து கொண்டிருந்தவன்.அவனுக்கு புத்தியும் சிலவேளை சுகமில்லாது போய் விடும். அவளின் சித்தப்பன்.அண்ணனின் போக்கைக் கவனித்து விட்டு நல்ல பெடியன் என்று ராஜனுக்கு கட்டி வைத்திருந்தார். படிப்பறிவுக்கு வாலையம்மன் பகுதி , அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. அதனால் அவன் உடம்பு வளர்ந்திருந்த காட்டு மனிதன் போல இலகுவில் பொறுமையிழப்பவனாய் இருந்தான்.தொழில் செய்கிறவன் மகள் என்பதால் அவளை முடித்திருந்தான். இளவயதிலே தாய் இறந்து போனதும், தகப்பன் தாய் மேல் வைத்திருந்த அளவுக்கு அதிகமான அன்பும் வேறு அப்பனைக் குடிகாரனாக்கி விட்டிருந்தது. விதி, அவளை மோசமான நிலைக்குத் தள்ளி விட்டது. அதனால் அவள் பிரச்சனைக்குள்ளான போது அனாதரவானாள்.

.
அவள் பெட்டையாய் வேறு இருந்தாள். வயசு வித்தியாசம் கூட‌ அதிகம்.இவன் எதிர்பார்ப்புக்கும் அவளுக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அதை அறியும் வயசும் அவளுக்கு இருக்கவில்லை.அது இருவர் வாழ்வையும் குட்டிச் சுவராக்கி விட்டது.

“உவன் மனிசியைப் போட்டு அடிக்கிறானாம்” கனகனின் பேச்சைக்கேட்டு விட்டு செல்லன் சிரித்தான்.

“ஊர் உலகத்தில் நடக்காததா?” உனக்கு அவன் மேல் ஆத்திரம்” என்றான். தொடர்ந்து “குடும்ப விசயம் பாரு. மோசமானாலும் யாரும் கதைக்கேலாது” என்றான்.

“வாசிகசாலைக்குழு தலையிடலாம் தானே” என்றான் அவன். “தம்பி உவயளோட சேர்ந்து இப்படிக் கதைக்கிறாய்” என்றான். இப்படித் தர்க்கித்துக் கொண்டிருக்கிறபோது பிளாஸ்டிக் படகு ஒன்று தீவுப்பக்கமாக நோக்கி இரைந்துகொண்டு வந்தது.

கூப்பிடு தொலைவில் வந்தபோது அன்டன் மோட்டரைப் பிடித்திருப்பது தெரிந்தது.அவன் ‘அன்டன்’ என்று கத்திக் குரல் கொடுத்தான். அவனும் சிலோ பண்ணி.திருப்பிக் கொண்டு வள்ளத்திற்க கிட்ட ஒட்டி வந்தான். அவனோடு நகுலனும் திலகனும் இருப்பது தெரிந்தது. “என்னடாப்பா விசயம் பெரியவர் ஒருத்தரையும் ஊர்ப்பக்கம் காணலையே’ என்று கேட்டான்.

“அக்கா சொல்லியிருப்பாவே’ என்றான் திலகன்.

“கொடுத்துவிட்டாச்சா?” என்று கேட்டான்.

ஒம்” என்ற திலகன் இவனும், அவனும் இனி அக்கரையிலிருந்து போர்ட் அன்டன் சோகமாக.செல்லனுக்கும் திலகன் மேல் அனுதாபம் பிறந்தது. “தம்பி அக்காவைப் பார்க்க அடிக்கடி வருவியோ?” என்று கேட்டார். “வராமல் அண்ணை.கிழமையிலே ஒரிரு நாள் வரக்கூடியதாகயிருக்கும். இந்த ஏ.ஜி.ஏ.யிலே தொடர்ந்து வேலை செய்யக் கேட்டிருக்கிறேன். ஒம் என்றவர்கள்’ என்று விளக்கமளித்தான்.

“எங்களை எல்லாம் மறந்து விடுவியோ?” கனகு கேட்டான். “எப்படி மறக்க முடியும்?” என கண்கலங்க பதிலளித்தான்.

“சரி, கனகு நாங்கள் தீவு ஏ.ஜி.ஏ.யை சந்தித்து விட்டு திரும்பவும் வேண்டும். பிறகு சந்திக்கிறோம்” என்று விடைபெற்றான். கையசைவோடு பிரிந்து சென்றார்கள்.
நட்பை சுமந்த அவர்களின் நடத்தைகளை சூழவுள்ளவர்கள் எப்படி விமர்சித்தாலும் தொடரவே செய்யும்.

படகு விரைந்தது.

மூன்றுநாள் கழித்து திலகன் வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. “என்னடாப்பா!அவனைக் கொன்று போட்டார்களாம்’ என்றான்.

“நீ என்ன புதிதாய் அறிந்தாய்” என்று கனகன் கேட்டான்.

ஒவ்வொரு பெரிய மரணங்களின் போது பலவித கதைகள் உலவுவது வழக்கம். “பெரிய” என்றது ஒரளவு அநியாயத் தன்மை கொண்டதைக் குறிக்கும்.
“கரையில்.பறிகொடுத்தது.பற்றிய விசாரணைதான் அவனை சாவில் தள்ள விட்டதுபோல் படுகிறதடா.” என்றான்.

வடிவேலுக்கும் யாழ் பிரதேசப்பொறுப்பாளர்க்கும் மத்தியில் முன்னமே கசப்புகள் இருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் விசாரணை, அது இது என அவமானப் படுத்தி அவனை வெகுவாக வெருளச் செய்து விட்டார்கள். அதிருப்தியுற்ற அவன் விலகல் லெட்டரை கையளித்திருக்கிறான். அவன் அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக உழைத்தவன். ஒருமுறை இவர்களுக்கு போட்டியாக முளைக்க முயன்ற சிறுகுழுவோடு முழுக்க டீல் பண்ணியவன் இவன் என்பர். போஸ்ட் ஒஃபீஸ், வங்கிக் கொள்ளை, சிவில் நிர்வாகம் குழப்பல் இவற்றில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த குழுக்களில் குமரனின் குழுவும் ஒன்று.அவன் வடிவேலனின் இயக்கத்தை குரு பீடத்தில் வைத்து மரியாதை செலுத்தி வந்தவன்.

ஐக்கியமின்மையால் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் தன் குழுப் போக்கிலே இயங்கி வந்தான். வளர்ச்சியின் ஒரு கட்டமாக அரச படைகள் வருகிற பாதையில் கண்ணிவெடி வைத்து விட்டு அருகிலிருந்து பனங்காணியில் பல நாளாய் காத்துக் கிடந்தான். ஊர் அவன் முயற்சியை அறிந்திருந்தது. மோதிரக்கையால் குட்டு வாங்கணும் என்ற விசித்திர‌ ஆசை அவனைப் பிடித்திருந்தது. நிலக் கண்ணி வெடிப்பில் சாதனை படைத்த அவ்வியக்கத்திற்கு அழைப்பு அனுப்பினான். ‘வந்து வெடி ஏற்பாடுகளை பார்வையிட்டுக் குறைந்திருந்தால் தெரிவிக்க’ச் சொல்லி கேட்டான்.

அந்த நேரம் இந்த வடிவேலின் தலைமையி லே ஒரு குழுவை இயக்கம் அனுப்பியது. எல்லாவற்றையும் சரி பார்த்தது. “திறமாக வைத்திருக்கிறீர்கள்” என்ற கருத்து தெரிவித்தவன், எதிர்பாராத தருணத்தில் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து குமரனை, நேரே சுட்டு விட்டு அகன்றான். சினிமாப் பட உலகம் போல இங்கையும் ….நடக்கிறது.

அவனை காம்பிலே வந்து பதிலளிக்கச் சொல்லி பொறுப்பாளர் கட்டாயப்படுத்திய போது அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் அந்த பொருப்பாளர் சேர முதலே இவன் இயக்கத்தில் சேர்ந்தவன்,சீனியரிட்டி. அவனை தோழர்கள் நெருங்கிய போது சயனைட்டைக் கடித்து செய்தியாகி விட்டான். அதன் எதிரொலியாக அப்பகுதியிலிருந்து பல நண்பர்கள் விலகல் லெட்டரைக் கையளித்தார்கள். ஒரு வாரத்திலே கோட்டையாக இருந்த அப்பகுதி மறுப்பைக் காட்டி நிற்கிறது.

எல்லா இயக்கங்களிலும் உள்ளுக்குள் இப்படி நடக்கும் குழப்பங்களை தடுத்து நிறுத்த ஒரு பலமான மேல் அல்லது ஐக்கிய அமைப்பு கட்டப்படாமலே…. இருந்தது. எனவே கட்டுப்பாடற்ற போக்கில் நிகழும் குழப்பங்கள் தொடர்ந்தன. விடுதலைக்கான நம்பிக்கையை அது பெருமளவில் சிதைத்தது.

மணி இருவருக்கும் தேத்தண்ணி கொண்டு வந்தாள். வெளிய வந்த அவளின் அம்மா, “தம்பியைக் கண்டு கனகாலம்” என்று முகமன் விசாரித்தார்.

“இங்காலை அவ்வளவாக அலுவல் இருக்கவில்லையக்கா” என்று மரியாதையாகப் பதிலளித்தான். மணியை அவன் ஏக்கத்தோடு பார்ப்பதை கனகன் பார்த்தான்.

அவள் அழகு திலகனை மயக்கியது. கழுத்தில் முடிச்சுப் போட்டு வாழும் காலம் வருமா? என்ற எண்ணம் அவனை வாட்டியது.

வலையில்,நாட்கள் போவது வேகமாகப் பட்டது.

அவன் வலையை கிளறிக் கொண்டிருந்த போது செல்வமணியும் தாயும் வாசிகசாலையில் படம் ஒடினம் என கிளம்பினார்கள். கமலம் அண்ணி விட்டை போயிருப்பாள் என நினைத்தான்.

வீடு அமைதியாகவிருந்தது. உல்லாசமாக வாய் காதல் பாட்டொன்றை முணுமுணுத்தது. செல்லன் சிறிது தள்ளாட்டத்தோடு வந்தான். நிறைய‌ ‘கள் அடித்திருக்க வேண்டும்’“தம்பி இண்டைக்கு சிறிது உள்ள போய் (ஆழ்கடல்) போடணும். சுறுக்காய் முடி’ என அவனும் குந்தி வலையை இழுத்து செக் பண்ணினான். சாகப் போறானா? கடல் மனிதன் இல்லையா?எவ்வளவு அடித்தாலும் கம்பு போலவும் (நிமிர்ந்து) நிற்கிறான்.“அட பெரிய ஒட்டையாய் கிழிந்திருக்கிறதே” என்றவன் “நூல் முடிஞ்து ‘தம்பி, உள்ளுக்க போய் யன்னல் கட்டிலே வைச்சிருக்கிற நூலை ஒருக்கா எடுத்துவா” என்று கூறினான்.

‘ஒருவேளை கமலம் இருப்பாளோ? என்ற சந்தேகம் எழ, கால்கள் தயங்க நின்றான்.“யாருமில்லை போய் வா தம்பி” என்று அவன் வற்புறுத்த உள்ளே சென்றான். யன்னல் கட்டை தடவுற போது வெளிக் கதவை செல்லன் அறைந்து பூட்டியது கேட்டது. சடாரெனத் திரும்பியவன் “என்ன வேணும்” என்ற கமலத்தின் குரலைக் கேட்டான். அவள் சட்டை ஒன்றைத் தைத்துக் கொண்டிருந்தாள். ‘கர்மம் பிடிச்சவள், இருட்டிலே இருந்து என்னத்தைத் தைத்துக் கொண்டிருக்கிறாள்? அவளிலே கோபமும் வந்தது. வெளியில் அவளுடைய அப்பனின் கூப்பாடும் கேட்டது. “முருகேசு, சுப்பன், தியாகு, நடேசு, ஒடிவாருங்கள். உவனெல்லோ கதவை அடைச்சுப்போட்டு என்ரை வீட்டில் இருக்கிறான்” உடனே, சனம் கூடி விட்டது. கனகன் அவமானத்தோடு கதவைத் திறந்து வெளியே வந்து நின்றான். பின்னாடி கமலமும் வெளியே வந்தாள்.

இப்படி ஒரு சிலர் தம் மகளை கரை சேர்ப்பது அங்கே வழக்கமாக இருந்தது. “சீ என்னை இப்படி மாட்டி வைச்சு விட்டினமே மனசடிப்புடன் வாயடைத்து நின்றான். அவனுடைய நண்பர்கள் இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. மச்சான் சொன்ன போது ‘உண்டு இல்லையா’ என வசந்தி விடயத்திலே அணுகியிருக்க வேணும். பாழாய் போன நிதானம். இப்ப மண்டையை உடைக்க வைக்கும் போல இருந்தது.

கமலம் கண்கள் கலங்க விழித்தபடி நின்றாள். ‘அப்பன் இப்படி ஒரு பிளான் வைச்சிருக்கிறான்’ என்று அவள் எதிர்பார்க்கவில்லை. புனிதம் வளவுக்குள் நின்றபடி அவளை

அனுதாபத்தோடு பார்த்தாள். ‘அக்கா’ என ஒடிப்போய் அணுக முடியாது என்பது புரிந்தது. அம்மாவும், தங்கச்சியும் படத்திற்கு போனதற்கு உள்ளுக்குள் திட்டித்தீர்த்தாள்.

வாசிகசாலைக் குழு அடுத்தநாள் விசாரிப்பதாக அறிவித்தது. அன்றிரவு அவனும் செல்லனும் தொழிலுக்குப் போகவில்லை.அடுத்த நாள் விசாரணையின் போது அன்ரன், நகுலன் எல்லோரும் கூட்டத்தில் இருந்தார்கள். நண்பனை அநியாயமாக செல்லண்ணை மாட்டி விட்டிருந்தது அவர்களுக்குப் புரிந்தது.
நெடுக அங்கேயே இருந்து வலை சிக்கெடுப்பது, செப்பனிடுவது என்று இருக்கிறவன். விரும்பக்கூடிய சாத்தியங்களே வெளியில் தெரிந்தன.“நீ என்ன சொல்கிறாய்?” பரமேஷ் அவனைக் கேட்டான்.

அவள் கழுத்தில் ஐயனார் கோவிலில் வைத்து தாலியைக் கட்ட வைச்சு விட்டார்கள். அவனுள் பூகம்பம் வெடித்தது. ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’ என அவளை வெறுப்புடன் பார்த்தான்.

பிரேமைக் காதலி.வசந்தியின் ஒவியம் அவனுள் அழிய முடியாமல் கிடந்து படபடத்தது. அவன் உள்ளுக்குள் அழுத அழுகை எழுத்தில் வடிக்க முடியாது.
செல்லன் கோயில் பக்கமிருந்த தனது நான்கு பரப்பு வளவில் வாசிகசாலைப் பெடியள் உதவியுடன் மண்வீடு ஒன்ற கட்டி ஒலையால் வேய்ந்து கொடுத்தான். கனகனின் நிலைமை புரிந்ததால் அன்டனும், நகுலனும் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். சோகத்தில் மிதக்கவே கனகன் வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்குப் போனான். திரும்பும் போது நிறையக் கள்ளைக் குடித்து விட்டு போனான்.

கன நேரத்திற்கு பிறகே சுய நினைவு வர தானும் ஒரு மிருகம்’ என்பதை உணர்ந்தான். அவனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போயிற்று. அவளை ஏறெடுத்து பார்க்கவே வெட்கப்பட்டான்.

அடுத்தநாள் அண்ணியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள்.

அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக் கொள்” என்று அவர் தேற்றினார்.

உள்ளே இருவரும் சென்ற போது அவள் தன்னையறியாமல் அண்ணியின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். அவன் அண்ணனோடு கதைத்துக்கொண்டு வெளியில் இருந்தான். ‘அண்ணி’ என உள்ளே வந்தபோது அவள் அழுதது அவனை குற்றவுணர்வில் தள்ளியது. ‘டீ வைச்சுக் கொண்டு வா’ என்று அவளிடம் சொல்ல வந்தவன் “ஒன்றுமில்லை அண்ணி, சும்மா வந்தேன்” என்று விட்டு வெளியேறினான். அண்ணி இருவருக்கும் தேநீர் ஊற்றிக் கொண்டு வந்தார்.

இவர்கள் இருவரையும் பகிடி பண்ணி கதைத்து விட்டு விடைபெற்ற போது “அக்கா” என கமலம் அவர் கையைப் பற்றினாள். “எடியே, என்னடி விசயம்” என்று அவளை இழுத்தனைத்து ரகசியமாக அவள் கண்களில் உருண்டு வந்த கண்ணிரை துடைத்துவிட்டார். அவருக்கு உதவியாக நின்ற அவளின் பழைய ஞாபகங்கள் வந்தன.

“சீ என்னடா வாழ்வு’ என அவனுக்கு மனம் வெந்து போய் கிடந்தது.

செல்லனோடு தொழில் பார்ப்பதை விட்டு விட்டான். அவளுடன் முகம் கொடுக்க முடியாமையால் நேரம் சுமையாய் பொறிந்தது. நண்பர்களைப் பார்க்க கரைப் பக்கம் வெளிக்கிட்டான்.

அன்டன் போர்ட்டிலே ஆட்களை நிறைத்துக் கொண்டு நின்றான். நகுலன் அவுட்போட் மோட்டரோடு இருந்தான். அவன் கனகனையும் போர்ட்டில் ஏறச்சொல்லி கையசைத்தான்.சிறிய அலைகளைக் கிழித்துக் கொண்டு லாவகமாக போர்ட் விரைந்தது. இதமான காற்று வீச கனகன் பண்ணைப் பக்க நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்.

டிக்கட் காசை சேர்த்தபிறகு அன்டன் அவனுக்கு பக்கத்தில் வந்தமர்ந்தான்.

“என்னடா விசயம்” என்று விசாரித்தான்.

‘டேய் கடையொன்று போட விரும்புறன். நீங்க தான் உதவி செய்யணும்” அவன் கேட்டான். அன்ரனுக்கு கண்கள் கலங்கின. எங்கோ பார்த்துச் சமாளித்துவிட்டு ‘அவனை நேரில் பார்த்துச்சொன்னான். “டேய் உனக்கில்லாததாடா மச்சான்” என்று அவன் தோள் மீது கையை வைத்தான். “ஞாயிற்றுக் கிழமை நேரம் வருமடா, அப்ப வாறமடா” என்றான். அரசியல் பற்றியும் திலகன் பற்றியும் கதைத்துவிட்டு அவன் விடைபெற்றான்.

வீட்டே வந்தவன் “தொழில் இல்லாது நெடுக இருக்க முடியாது’ என்று பலமாக யோசித்தான். ‘நண்பர்களிடமோ உறவுகளிடமோ கடன் வாங்கியாவது …சமாளிக்க வேண்டும்.அவனைக் கண்டால் சிறிது பயத்துடன் ஏறெடுத்துப் பார்க்கிற அவளிடமும் நேரடியாக மன்னிப்புக் கேட்கிறது நல்லது போல் கேட்டது.கமலம் என்று கூப்பிட்டான். அவன் குரல் கம்மியிருந்தது. விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்களைக் கொஞ்ச நேரம் பார்த்தான்.

“உங்கப்பாவோட இனிமே தொழில் பார்க்கப் போறலை” என்றான். அவளுக்கு அக்கரையில்லாத விசயம் போல குசினிப் பக்கம் போக முயன்றாள். “அப்ப, எனக்கிருந்த குழப்பத்தில் கண்மண் தெரியாமல் குடித்துப் போட்டு வந்து .என்னை மன்னித்து விடு’ என்று எங்கோ பார்த்துச் சொன்னான்.மிருகம் என நிரூபித்த பின் மனிதன் என்று சொல்கிறான். அவளுக்கு வேடிக்கையாகப் பட்டது . அவள் எழுந்து போனாள். சாப்பிட்ட போதும் அருகருகே படுத்திருந்த போதும் அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதிகள் என்ற நினைவு நிலவவில்லை. மாறாக பெரிய திரையே விழுந்து கிடந்தது.

வீட்டின் முன்புற வேலியோடு சேர்த்து சிறிய கொட்டில் ஒன்றை நண்பர் உதவியுடன் போட்டான். தாலியை கட்டச் சொல்லி மும்முரமாக நின்ற வாசிகசாலையோ மற்றவர்களோ உதவிக்கு முன் வரவில்லை. கசப்பு சூழ்ந்திருந்தது.அன்டன் வீட்டினர் கொஞ்சம் பணம் மாறி கடனாகக் கொடுத்தனர். முருகேசும், செல்லனும் கூட உதவினார்கள்.

அவன் நவாலி ஆட்களிடம் இருந்து சிறிய வள்ளமும் வலையும் வாங்கினான். கடையையும் ஒரே நேரத்தில் திறந்தான். மாப்பிள்ளை தன்னோடு சரிப்படா விட்டாலும் சூரன் என்று செல்லன் பெருமையோடு சொல்லிக் கொண்டான். அவனின் இடத்திற்கு ராஜனை புதிதாக சேர்த்துக் கொண்டான். அன்ரனின் தம்பி நடேசன் கனகனோடு உதவிக்கு வந்தான். கூலியாக இருக்காமல் பங்காளியாக இருக்கலாம்’ என்று அவன் விருப்பம் தெரிவிக்கவே, அவர்கள் கடனாகக் கொடுத்ததை பங்காக எடுக்கச் சொன்னார்கள். பிடிபடும் மீனில் அரைவாசியாக இருவரும் பிரித்தார்கள். வியாபாரம் ஒரளவு நடக்க அவன் ஒரு புள்ளியானான்.

காலையிலேயே தொழிலால் வந்த கையோடு குளித்துவிட்டு சங்கானைச் சந்தைக்கு ஒடினான்.ஒவ்வொரு நாளும் மரக்கறிகள், மற்றும் மளிகைச் சாமான்களை வாங்கி சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்தான். பத்து மணிக்கெல்லாம் அவன் கடையில் புதிய மரக்கறிகள் வாங்கலாம் என்று கடைக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

ஒருநாள் அண்ணி சாமான் வாங்க கடைக்கு வந்த போது திலகனும் கூட வந்தான். இரவில் தொழில் பார்த்த அசதியோடு சந்தையில் இருந்து வந்த கையோடு வீட்டில் குந்து போல் கட்டப்பட்டிருந்த மண் விராந்தையில் படுத்துக் கிடந்தான். கடையில் சனம் குறைந்திருந்தது. அண்ணி “எடியே கமலம், எப்படியடி வாழ்க்கை?” என்று கேட்டாள். அவள் முகமலர்ச்சியற்றிருக்கவே “ஏதும் பிரச்சினையோ” என்று ஆதரவாக கேட்டாள். அவளால் என்ன சொல்ல முடியும்? வெறுமனே சிரித்தாள்.

கனகன் ஒரு மிருகம் என்றால் நம்புவாளா? அவளே கூட நம்ப எப்படிக் கஷ்டப் பட்டாள்? உவன் இப்படி நடந்துகொள்வான் என்று யாரும் முன்னர் சொல்லியிருந்தால் அவளும்கூட கடைசிவரை நம்பியிருக்க மாட்டாள்.

திலகன் அவனோடு கதைத்த போது “என்னடாப்பா. நானும் உங்களைப் போல் வந்திருக்கலாம்” என வருத்தத்துடன் சொன்னான். “உன்ரை மகனை வளர்த்து எங்களிட்ட அனுப்பன்” என்று திலகன் சிரித்தான். அவனோட கதைத்த பிறகு கனகனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. விடைபெற்ற பிறகு யோசித்தான். மனதில் குழப்பம் அதிகமாகிக்கொண்டுபோவதை விட எல்லாவற்றையும் அவளிடம் கொட்டி விடுகிறதே நல்லது. விசயங்களை தெரிந்தே வெறுக்கட்டும்.

தொழிலால் வருகிற அவனை அணைக்க வேண்டியதில்லை. ஒரளவாவது முகம் கொடுத்து பேசினால் போதும். இருக்கிற விடுமுறை நாளிலும் குழப்பம் அதிகமானால் அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

காற்று அன்று பலமாக வீசவே.வந்த நடேசனையும் திருப்பி அனுப்பியிருந்தான். பொதுவாக யாருமே தொழிலுக்கு போகவில்லை. வேளைக்கே கடையைப் பூட்டி விட்டு கமலமும் வந்தாள். தேநீர் வைத்துக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்தாள். அதை எடுத்து அவன் ஒரு புறமாக வைத்தான்.

“கமலம்” என கூப்பிட்டான். என்ன? என்று கிட்டே வந்து அவள் நின்ற போது கையைப் பிடித்து இழுத்தான். அவள் அவன் மேல் சரிந்து விழுந்தாள். ‘கள்ளு மணம் வீசுகிறதா?” என மூச்சை கவனமாக இழுத்து கவனித்தாள்.

“கமலம் உனக்கு நான் என்ரை நிலையைச் சொல்லப்போறன் அதற்குப் பிறகு உன் இஷ்டம். உன்னை உன் விருப்பமில்லாமல் வற்புறுத்த மாட்டன்” அவள் அவனை சிறிது வியப்புடன் பார்த்தாள்.“உன்னை பிடிக்காமல் பேச முடியும். ஆனால் நான் சொல்ற முழுதையும் கேளாமல் ஒடி விடுவாய் என்றதாலை பிடித்திருக்கிறன். உனக்குத் தெரிய நியாயமில்லை. நான் ஒரு பெண்ணை விரும்பினனான். அவளும் என்னை விரும்பினாள். அவள் எழுதிய கடிதங்களை எரிப்பதற்காய் எடுத்து வச்சிருக்கிறன். உனக்கு விருப்பமென்றால் நீயே எரிச்சு விடு”. அவன் மூலையில் கிடந்த சிறிய பிரவுண் பேப்பர் பையைக் காட்டினான். “உன்னை திடீரென கட்டி வைச்சு விட்டார்கள்.மனக் குழப்பத்தில் குடிச்சுப் போட்டு வந்து பழிவாங்குறது போல் நடந்திட்டன். என்னைப் பொறுத்த வரையில் இனி நீ தான் எல்லாம்!, ஆறுதலாக இருக்க வேணும்” அவளை விடு வித்தான்.

அவள் அந்தப் பையை ஒரு தடவை பார்த்தாள். கடல் மனிதர்கள் ஒன்றில் முரடர்களாயிருக்கிறார்கள். அல்லது பலவீனர்களாயிருக்கிறார்கள். ஒரளவு படிப்பறிவு பெற்றவர்கள் கூட விதிவிலக்கில்லை. அவன் மார்பின் மேல் அவள் சாய்ந்து கொண்டாள். அவன் கண்களில் சூடான கண்ணிர் வந்தது.

சமூகத்தை மேம்பாடாக்கணும். அல்லது ஒரு இயக்கத்திற்கு ஒடி சமூகத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.அவள், அணைப்பில் இருந்து விடுபடாது அப்படியே கிடந்தாள். அவன் மனம் சிறிது ஆறுதல்பட தூங்கிப் போனான்.

அவன் அண்ணி வீட்டபோனபோது மச்சானும் இருந்தான். வளவு வேலிக்கு மேலாக அவனைக் கண்டு விட்டு செல்லமணி ஒடி வந்தாள். “அத்தான் அக்கா எப்படியிருக்கிறார்? வயிறு ஊதியா?” எனப் பகிடியாக கேட்டாள். பாபுவோடு இருந்த திலகனையும் அவள் கடைக் கண்ணால் பார்த்தாள்.‘இருவரையும் எப்படிச் சேர்த்து வைப்பது? என்று கனகன் யோசித்தான். கமலம் தான் சரியானவள்.

“நல்லாய் இருக்கிறாள்” என்றவன் ‘அண்ணி, மச்சானையும் குடும்பமாக பார்க்கவேண்டாமா?” என்று கேட்டான். தொடர்ந்து “இவளைப்போல ஒரு குட்டியைப் பார்த்து” என்று சொன்ன போது மணி “அக்கா வாறன்” என ஒடிவிட்டாள். தம்பியும் இவளை விரும்புகிறானோ? என்று சந்தேகத்துடன் புனிதம் அவனைப் பார்த்தாள்.

திலகன் சோகமாக சிரித்தவன் ‘உன்ரை வாழ்க்கை எப்படியடா போகிறது?” என்றான்.

“என்னத்தைச் சொல்லிறது?” அவன் அலுத்துக் கொண்டான்.

“பரவாயில்லை. நீயும் குடும்பக் காரன் மாதிரி கதைக்கப் பழகி விட்டாய்” என்று சொல்லி அண்ணி சிரித்தாள். அண்ணன் வர கொஞ்ச நேரம் இருக்க கதைத்துவிட்டு விடைபெற்றான்.

கடையை மூடி விட்டு கமலம் சமையலில் ஈடுபட்டிருந்தாள். அவள் மூன்று மணிக்கு பின்பே கடையைத் திறப்பாள். அந்த நேரம் கடையில் அவனும் உதவியாய் இருந்து விட்டு வலைக்கு வந்து விடுவான். சில சமயம் வாசிகசாலைப் பக்கம் போய் வருவான். பிறகு நடேசனோடு சிக்கலெடுப்பதிலும் பொத்தல்கள் அடைப்பதிலும் நேரம் சரியாகி விடும்.

சாப்பிட்டபிறகு அவளை அணைத்துக்கொண்டு படுத்தவன் மச்சான் விசயத்தை சொல்ல விரும்பினான்.“கமலம்’ என்றான். இப்ப அவளுக்கு அவன் மேல் வெறுப்பு அவ்வளவாக வரவில்லை.

“மணியை மச்சான் விரும்புகிறான். எப்படி காரியத்தை வெல்லலாம் என்று தான் தெரியவில்லை” என்றான். அவள் சிறிது எழும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். “அவயள் வேற சாதி. ஒத்துக்கொள்ள மாட்டினம்” என்றாள் தயக்கத்துடன். “அண்ணியும் எங்கண்ணாவும் வாழவில்லையா?” என்று அவன் கேட்டான்.

‘எப்படி? அவளுக்கும் குழப்பமாக இருந்தது.”உங்க நண்பர்கள் இயக்கத்தை விட்டு வெளிய‌ வர முடியுமா?” என்று கேட்டாள்.‘சந்தேகம்’ எனப்பட்டது. “கேட்டுப்பார்க்க வேணும்” என்றான். அன்ரன், நகுலன் கூடவும் கதைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.

கனகன் கடலால் வந்து குளிக்கிறபோத பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடிவந்தாள். “அண்ணை தெரியுமே சுலோ செத்திட்டாளாம்” என்று கத்திவிட்டு “கமலம், கமலம்” என்று உள்ளே ஒடினாள்.

அவனுக்கு அந்தரமாக இருந்தது. பரபரவென சைக்கிளை ஒழுங்கு படுத்தி விட்டு காசையும் எடுத்துக் கொண்டு ஒடினான்.அவன் சந்தைக்கு போற வழியில் குவனை இருந்தது. சுந்தரம் மாஸ்டரின் தோட்டக் காணியில் இருந்த பாழுங்கிணற்றில் இருந்து பிரேதத்தை எடுத்து அருகில் வைத்திருந்தார்கள். காலைப் போதில், தண்ணிர் இறைக்க வந்த மாஸ்ரரின் மக்களே முதலில் கண்டு விட்டு ஆட்களைக் கூட்டினார்கள். அவர்களுக்கு அதிர்ச்சியில், செத்து மிதக்கிறாள் என்பது புரியவேயில்லை. ‘தத்தளிக்கிறாள்’ என்று நினைத்தார்கள். பிறகு தான் இறந்து விட்டது தெரிந்தது.

அக்கிணற்றிலிருந்து உடலை எடுக்க சிறிது தயக்கம் நிலவியது. முன்பும் யாரோ ஒருவன் அதில் விழுந்து தற்கொலை செய்திருந்தான். அதனால் ‘பேய்க்கிணறு’ என்று சொல்லப்பட்டது. மாஸ்ட்ரும் வேறு ஒரு கிணறு பக்கத்தில் தோண்டியிருந்தார். அப்பகுதியில் நல்ல தண்ணிர் வந்ததால் ஊரார் குளிப்பதற்கு அங்கே வருவது வழக்கமாக இருந்தது. பழைய குளிக்கிற கிணற்றில்.என செய்தி பரவிய போது சனம் அங்கே திரண்டு விட்டது.

அக்கின்ணற்றில் யாரோ ஒருத்தன் இறங்கி அவள் இடுப்பில் உருகுதடம் மாட்டி, அவளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வர மனிதத்தனம் செத்துவிட்டது வெளியே எடுத்தார்கள்.

எதிர்ப்புறத்தில் தன்னுடைய மரவள்ளிப் பாத்தியில் இருந்து சிவகாமியம்மா கத்தினாள். “இங்கே இரத்தக்கறை, தடிகள் முறிந்து கிடக்கு. எடியே விசாலாட்சி உவங்கள் பிள்ளையை இங்கை போட்டு மல்லுக் கட்டியே இழுத்துக் கொண்டு போய் கிணற்றில் போட்டிருக்கிறாங்கள்” விசாலாட்சியும் “ஓமணை, பெடிச்சியை கொன்றுதான் போட்டாங்கள்” என்றாள்.

சுலோவின் அயல்வீட்டுக்காரி சரசம்மா முணுமுணுக்கிற மாதிரி தெரிவித்தாள். “நேற்றிரவு பிந்தியே இவன் வந்தான். ஒரு பன்னிரண்டரை ஒண்டு இருக்கும். சண்டை நடந்தது. பெட்டைச்சி அழுது கொண்டிருந்தாள். பாண் வாங்கியாடி என்று அவன் சத்தம் போட்டான். அர்த்த சாமத்தில் மூர்த்தி கடைக்கு வெளிக்கிட்டவள் இப்படிக் கிடக்கிறாள்” வருத்தப் பட்டாள்.

மூர்த்தி அவ்விடத்தாள் தான். சிறிய வயல் வெளியைக் கடக்கிற அடுத்த கிராமத்தில் வீடு ஒன்று மலிவாகக் கிடைக்க வாங்கி குடியிருப்பை மாற்றிக் கொண்டவர். அதிலேயே சிறிய கடையும் வைத்திருந்தார். சிகரெட், மற்றும் இரவில்,அவசரத்திற்கு சாமான் வாங்க அவர் கடைக்கே குலனை ஆட்கள் ஒடுவார்கள். ஒரளவு நியாயமாய் விற்றதால் கடைக்கும் நல்ல பேர். பெரிதாக லாபம் வைத்து விற்காததால் கடை வருமானம் போதியதாக இருக்கவில்லை. எனவே பகலில் பலரைப் போல் அவரும் மேசன் வேலைக்குப் போய் வருவார். குண்டு வீச்சு நடக்கும் போது மேசன் வேலை எங்கே நடக்கும்? கடையில் தான் பெரும்பாலும் நின்றார். தமது கடைப் பெயர் அடிபட “பெட்டைச்சி என்ரை கடைக்கு சாமத்தில் வரவில்லை” என்றார். “அதற்கிடையில் தான் கொன்று விட்டார்கள்” என்று சரசம்மா தளதளத்தாள்.

ராஜன் தலையைக் கவிழ்த்திருந்தான். ராணி, “என்ரை சுலோ, ஐயோ.சுலோ. என்னடியம்மா இப்படிச் செய்து விட்டாய்” என்று கரைந்து அழுது கொண்டிருந்தாள். கனகனுக்கும் துயரமாக இருந்தது.’கொலை, கொலை என்று ஊர் அழுத்திச் சொல்லிற்று. அதில் அவர்களுக்கு இருந்த ஆத்திரம் தெரிந்தது.

ராணியின் புருசன் பஞ்சன் செய்தியை விஜயனுக்குத் தெரியப்படுத்தினான். வானிலே பெடியளுடன் வந்திறங்கிய அவன் முன்னெச்சரிக்கையாக வாசிகசாலைக் குழுவை அணுகினான். அவன் இன்னொரு இயக்கப் பிரதிநிதி.

“நாங்க பிரேதபரிசோதனை செய்ய விரும்புறம் அனுமதி தரவேணும்” தலைவர் வாயைப்பொத்திக்கொண்டு அழுதார். “எங்களை மீறின விசயங்கள்” என்றார்.
“இரண்டு இரண்டரைக்கிடையில் திருப்பி ஒப்படைப்பம்” என்றவன் “டேய் வானில் ஏற்றுங்கடா” என கட்டளையிட்டவன். ராஜனைம் கைது செய்து முன் சீட்டில் ஏத்தினான். சனம் கலையத் தொடங்கி விட்டது.

கனகன் அப்படியே சந்தைக்கு போய்விட்டான். “சீ என்ன கொடூரம்? அவனுக்கு கமலம் மேல் இனம்புரியாத காதல் வந்தது.

சாமான் வாங்க வந்தபோது நகுலனைக் கண்டான். அவனும் அண்ணன்ர‌ கடைக்கு சாமான்கள் வாங்க வந்திருந்தான். சைக்கிளில் வைத்துக் கட்டிக் கொண்டு இருவரும் திரும்பினார்கள். வழியில் “டேய், நீ யாரையும் விரும்பிரியா? என்று கேட்டான். அவன் சிரிக்க, “ டேய் யாரையும் காதலிச்சிடாதை பிறகு கஷ்டம்” என்றான் கனகன்.

“டேய் உன்ர மாமன் வீட்டில் கசிப்பு பார்ட்டி நடந்ததாக கதைக்கினம். உண்மையோ?” என்று நகுலன் கேட்டான். ஃப்ரெண்ட் ஆனாலும் அவன் இயக்கத்தில் இருப்பவன். அவன் கடமைகள் வேறு என்றது கண நேரத்தில் நினைப்பு வர, “தெரியலையே” என்று பதிலளித்தான்.

வீட்டுக்கு வந்தபின் “கமலம் நேற்று உங்கப்பன் தொழிலுக்குப் போகலையா?” என்று கேட்டான்.‘போயிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். நான் சொன்ன போதே. உங்க நண்பர்களிட்ட சொல்லியிருக்கலாம். ராஜன் அங்கே தான் இருந்திருப்பான்” என்றாள்.

நாட்டு அரசியலை விட குடும்ப அரசியல் மோசமானதாகப் பட்டது. ஒருவேளை நகுலனுக்குச் சொல்லியிருந்தால் சுலோ தப்பியிருப்பாளோ? அல்லது அவள் அப்பாவியாக தானே போய் அந்த முடிவைத் தேடிக் கொண்டாளோ?

விஜயனும் அச்செய்தி அறிந்து அவர்கள் வாசிகசாலைக்கு வந்தான். “யார் வீட்டில் இருந்து கசிப்படித்தவன் என்று தெரியுமோ?” எனக் கேட்டான். “தெரியாது” என்று குழு சொன்னது.

“டேய், உங்களுக்காவது ஏதாவது தெரியுமா” என கனகன் தொட்டு நின்ற பெடியள் செற்றைப் பார்த்துக் கேட்டான். அவர்களும் துப்புக் கொடுக்க விரும்பவில்லை. அவன் மெளனமாக இருந்துவிட்டு வீட்டே வந்தான்.

பெண் பிரதிநிதி போல் கமலம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கனகனால் சொல்லமுடியவில்லை. “உண்மையில் அவள் கொல்லப்பட்டால் எவரும் ஒன்றும் செய்யப்போவதில்லையா?” சமூகக் கட்டுப்பாடுகளை என்னால் மீறமுடியவில்லை என கழிவிரக்கமாக நினைத்தான்.

“பெண்கள் அமைப்பு என்று ஏதாவது அமைத்து வழக்கு மன்றம் நடத்தாத வரைக்கும் உடந்தையாக இருப்பது தொடரப் போகிறது” என்றான் அவன். அவள் துயரத்துடன் சிரித்தாள்.

பின்னேரம், சவம் வந்துவிட்டதாக செய்தி வந்தது. மனம் கேளாமல் அவனும் செத்த வீட்டுக்கு போனான். ராஜனை கிரியைகள் செய்ய அனுமதித்திருந்தார்கள். அங்கே நகுலன், திலகன், லிங்கன் என நண்பர்களைப் பார்த்தபோது அந்த விசயம் எல்லோரையும் பாதித்துவிட்டது தெரிந்தது.

“மச்சான், அண்ணி உன்னைக் கூப்பிட்டவ. போகேக்கை வந்திட்டுப்போ” என்றான் கனகன்.

புனிதத்துக்கு தம்பியை கனநாளைக்குப்பிறகு கண்டபோது கண்ணிர் வந்தது. அவன் வீட்டுக்கு துப்புரவாகப் போறதில்லை, என்று அறிந்தபோது அவளுக்குத் துயரமாக இருந்தது. “நீயும் என்னைப் போலாகிவிட்டாய்” என்று கரைந்தாள்.

அவன் என்ன பதில் சொல்வான்? கனகனைப்பார்த்து மெல்லச் சிரித்தான். அவர் குசினிக்குள் நுழைந்து தண்ணிரை அடுப்பில் வைத்தார்.

அவர்கள் திறந்த மண்விராந்தையில் இருந்தார்கள். பாபு அவன் மேல் ஏறி பிச்சுப் பிடுங்கிக்கொண்டு இருந்தான். கலாவை கனகன் தூக்கி சமாளித்தான்.

படலையடியில் செல்வமணி அவர்களை அனுதாபத்தோடு பார்த்துவிட்டு கடந்துபோனாள். தொழிலுக்கு ஆயத்தம் செய்திருந்த முருகேசு “தம்பி இண்டைக்கு கடலுக்குப் போகலையோ?” என்று கேட்டான்.”மனசு சரியில்லை அண்ணை, போகேலை” என்றான். அவன் திலகனை ஆதரத்துடன் பார்த்தான் ‘தம்பி தீவுப்பக்கமோ இப்போ?” என்று விசாரித்தான். ‘ஓம்’ என்று தலையாட்டியவன் பார்வை செல்வமணியைத் தொடர்ந்து போவதைப் பார்த்து கனகன் பெருமூச்சு விட்டான்.

முருகேசு போன பிறகும் கனநேரமாய் அங்கே கதைத்துக்கொண்டிருந்தஈர்கள். அவர்களுக்கிடையில் ஏதும் தனிப்பட கதைக்க விரும்பலாம் என்ற நினைப்பு வர “அப்ப திலகன் நான் வாறன்’ என்று விடைபெற்றான்.

அடுப்படி அலுவல்களை முடித்துவிட்டு வந்த கமலம் “அக்காவும், தம்பியும் என்னவாம்?” என்று கேட்டாள். “வேறென்ன அவவுக்கு அவன் மேல் பாசம் கூட!” என்றான்.

“இயக்கத்தைவிட்டு இவயளால் விலக முடியாதா?” என்ற பழைய கேள்வியைத் திரும்பக் கேட்டாள். “அவயள், விலகிறதை ‘பிழை’ என அரசியல் ரீதியாக விளக்கம் குடுக்கிறாங்கள். அப்படி வந்தாலும், சூழல் நல்ல படியாய்யா இருக்கிறது? என்ன?, சரியான முறையில் போராடா விட்டாலும் எதிரியால் சாகமுன், இவங்கள் ஒருத்தருக்கொருத்தர் அடிபட்டே செத்துப் போயிடுவாங்கள்” என்றான். “’சமூக விரோதிகள்’ என்று ஆயுதப் பலம் மிக்க , ஒன்று ‘குற்றச்சாட்டை’ வேறு வைத்து அடிக்கத் தொடங்கும். கள்ளர்,பல்வேறு ,குற்றக்காரர்கள் , பிடிக்காதவர்கள்,மற்ற இயக்கக்காரர்கள் எல்லோரையும் ஒருமட்டையிலே “சமூகவிரோதி இவர் என்றும், ஒரு பட்டியலையும் எழுதி… மட்டையிலே எழுதி ,தொங்கப் போட்டு விட்டு பரவலாகச் சுட்டு கொல்றது தான் நடை பெறுகின்றன . ‘இயக்கம்’ என்றால் எதிர் வினையாற்றும் என்ற சிறிய தடங்கல் இருக்கிறது.விலகினால் அதுவும் இல்லை. ஏன்? தான் இப்படி பகை மை யை பாராட்டுறாங்களோ தெரியவில்லை ? இதனால், மக்கள், பெடியள் உறவுகள் முறிகின்றன. சனங்கள் முற்போக்காக செயற்படாட்டி… சீரழிவு தான்” . அட,நான் கூட அரசியல் பேசுகிறேனே? என்றும் நினைத்தான்.அவன் பேசுவது ஒன்றுமே விளங்காததால் அவள் அவன் அணைப்பில் உறங்கிப் போனாள்.

அடுத்தநாள், அயலுக்குள் ஒரே களேபரமாக இருந்தது. இரபுபோல, தீவுச் சென்றிக்கு சென்ற திலகன் எம் 80 கண்ணிவெடியை செக் பண்ணும்போது தற்செயலாக ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்திருந்தான். அவனோடு நின்ற ஒருத்தன் இறந்துபோனான்.சீரியசான அவனை அவசர அவசரமாக பெரியாஸ்பத்திரிக்கு கொண்டோடினார்கள். தீவுப்பெடியள் சிலர் திரும்பும் போது புனிதத்துக்கு செய்தியை தெரியப்படுத்தினார்கள்.

அண்ணி அழுதுகொண்டிருந்தாள். வாசிகசாலையும் முருகேசுவும் காரைப் பிடித்துக் கொண்டு அவளை ஏற்றிக் கொண்டு விரைந்தார்கள். கனகன், அன்டன், நகுலன் இன்னும் பலர் சைக்கிளில் பறந்தார்கள். அந்தப் பகுதி முழுவதுமே பரபரப்பாகி இருந்தது.

ஆஸ்பத்திரியிலும் அண்ணி அழுதது பலருக்கு துயரமாக இருந்தது.

வார்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட திலகனை பார்க்க அனுமதித்தார்கள்.

மெல்ல கண் திறந்த அவன் “அக்கா, நீசந்தோசமாயிருக்கணும்” என்றான். கனகனைப் பார்த்தான். “மச்சான் உனக்கு மகன் பிறந்தால் என்ரை பெயரை வையடா?” என்று கேட்டவன் பதிலை எதிர்பாராமல் முருகேசுவை நோக்கினான். அன்டன் கையைப் பிடிச்சுக் கொண்டவன் அப்படியே கண்கன் செருக மூச்சடங்கிப் போனான்.

செத்த வீட்டை வாலையம்மன் பகுதியில் நடத்த அனுமதித்தார்கள். மற்ற சகோதரர்கள் எல்லோரும் வந்தார்கள். ரத்தப் பாசம் சாதியங்களை எல்லாம் மீறியது.

வாசிகசாலையும் பெடியளும் தோரணம் கட்டி விமரிசையாக நடைபெறச் செய்தார்கள்.மணியைப் பார்க்கும்போது கனகனுக்கு துக்கம் வந்தது. அவளுக்குத் தெரியாமலே ஒரு காதல் புதைந்து போனது. சிலவேளை, அவளுக்கும் சாடை மாடையாக புரிந்தும் இருக்கலாம்.

லிங்கன், அன்டன் எல்லோரும் கனகன் வீட்டிலே கனநேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் விடைபெற்ற போதும் துயரச்சூழல் குமைந்தேயிருந்தது. தெரிந்தவர்,அறிந்தவர்,உறவினர், இறந்தால் அந்த வலி லேசிலே மறைவதில்லை.

சுலோவின் கொலையை துப்புத் துலக்க எந்த அமைப்பும் முன் வராததால் விஜயனுக்கு ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. ‘சந்தர்ப்பம் வரும்போது கவனிக்கிறமடா’ என்று ராஜனைக் குறித்து ஆத்திரப்பட்டான், கறுவிக் கொண்டான்.

அநியாயத்தை அறிந்தோ அறியாமலோ வாசிகசாலை அமைப்புகள் ஆதரிக்கும் வரையில் சந்தர்ப்பங்களும் லேசில் வரப்போவதில்லை. மற்றத் தோழர்கள் ராஜனை அடியாமல் தடுக்க, அவன் ‘கண்டிப்பை’ வேறு கையாளவேண்டியிருந்தது.

இரண்டு மூன்று நாள் கழிய ராஜனை விட்டுவிட்டார்கள்.

ராஜன் குலனையை விட்டு வாலையம்மன் பகுதிக்கே வந்து விட்டான்.

பின்னேரம் போல, கரைப்பக்கமிருந்து வேறு ஒரு களேபரம் ஏற்பட்டது. அக்கரையிலிருந்து இயக்கப் பெடியள் சிலர் ஆயுதங்களுடன் தனிபோர்ட்டில் ஏறினார்கள். தூரத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஹெலி அவர்களைக் கவனித்து விட்டு …விர்ரென்று விரைந்து வந்தது.

மாலை, மங்கி வருகிற நேரத்தில்… அது, அராலித்துறையில் நெருப்பு மழையைப் பொழிந்தது. கூட்டம் விழுந்தடித்து ஒடியது.யாரோ ஒருவன் நிலத்தில் படுத்ததைப் பார்த்துவிட்டு பலர் நிலத்தில் படுத்தார்கள். மினிபஸ் ஒன்று ரிவேர்சில் குடிமனைப் பக்கம் வந்து நின்றது. ‘போட்டில் வந்த பெடியள் மினிபஸ்ஸில் ஏறி தப்பிவிட்டார்கள். வாடிப்பக்கம் பதுங்கிய வர்த்தகர் ஒருவரின் மகன் வயிற்றில் சூடுபட்டு இறந்தான். இருவர் காயமடைந்தார்கள். இந்த சம்பவங்களால் இரவு கடலில் தொழிலுக்கு யாரும் செல்லவில்லை.

‘மணியை ராஜனுக்கு கட்டிக்கொடுக்க இருக்கினம்’ என்ற செய்தியை கமலம் கொண்டு வந்தாள். “அவள் என்ன சொல்கிறாள்?” என்று முட்டாள் தனமாக கேட்டான். கமலம் நூதனமாகப் பார்த்தாள். “அவளும் கழுத்தை நீட்டுறாள்” என்றாள்.

அவர்களுக்கு அறிவிக்காமலே ஊருக்கும் பரவலாகத் தெரியாமல் ஒரு சிலரோடு ஐயனார் கோவிலில் தாலி கட்டல் நடந்தது. கனகனுக்கு சொல்வதை வேண்டு மென்றே தவிர்த்துவிட்டார்கள்.

‘வாசிகசாலை இளிச்சவாயாய் இருக்கிறதால தான் இப்படி எல்லாம் நடக்கிறது’ என்று நினைத்தான். ஒவ்வொரு செயலிலும் முற்போக்கைக் கடைப்பிடிக்கிற முறையில் வாசிகசாலையை பலமான அமைப்பாக மாற்ற வேண்டும். அது நியாயமற்ற செயல்களுக்கு காவடி தூக்கிறதை அறவே ஒழிக்கவேணும். “நானும் பொதுச்சேவையில் ஈடுபட்டால் தான் இதெல்லாம் முடியும்!..” எனப் பட்டது.

தலைவர் பரமேசிலும் ஒரளவு அநியாயத்தை எதிர்க்கிறபோக்கு இருந்தது. இங்கிருக்கும் வாசிகசாலை குலனை வாசிகசாலை மற்றும் தொழில் பார்க்கிற இடத்திலுள்ள வாசிகசாலை எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி ஒரு இணைப்பைக் கண்டாகவேண்டும். ஒரு ‘பொதுவான கமிட்டி’யை உருவாக்கவேண்டும். ஆதவைத் திரட்டுவதன்மூலமே அதை சாதிக்கமுடியும் என்று நம்பினான்.

அன்டனும் நகுலனும் தமக்கு தெரிந்த நண்பர், உறவினர் என கதைத்து ஆதரவைத் திரட்டினர். அவனும் சந்தைக்கு வருபவர்கள் மூலமாக முயன்றான். தொடர்புகளை செப்பனிட்டான்.பரமேசுடன் கதைத்தபோது ஆச்சரியப்பட்டான். அவனுக்கும் அவன்ரை நண்பர்களுக்கும் கல்யாணத் தொடர்புகள் பரவலாக இருந்தன. அவர்கள் முயற்சிக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக கூறினான்.

நாடகம், கடல் பாடல்களை சேகரிப்பது, வாசிகசாலையில் பெண்கள் தையல் வகுப்பு, கயிறு திரித்தல் போன்ற வேலை வாய்ப்புகள் வைப்பதுமாக. அவர்கள் திட்டம் விரிவாகவிருந்தன.

கூடவே, அயலிலிருந்த பள்ளிக்கூடத்திற்கு சிறுவர்களை அனுப்பிவைக்கும் போராட்டம் இவையெல்லாம் நடைபெறலாயின. முன்னர் சாதுரியமான வழிமுறைகளைக் கடைப்பிடித்த சாதியினர் இவர்களின் எதிர்ப்பின் முன்னால் பின்வாங்க வேண்டியிருந்தது.

இனிவரும் சந்ததி, பழைய கஷ்டங்கள் சிலவற்றைப் பெறாதுபோல் படுகிறது. பல நம்பிக்கை விதைகள் உரமாக விதைக்கப்பட இருவரின் மரணங்கள் காரணமாகின.

சுலோவின் படத்தை குலனை, வாசிகசாலையில் மாட்டியது. மலர் மாலையுடன் அப்படம் பேப்பர் வாசிக்கும் பகுதியில் பார்வையில் படக்கூடிய முறையில் இருந்தது. இதில் பிறந்த திகதி, கொலையுண்ட திகதி, என குறிப்பிட்டிருந்தது. ‘ஆண் பெண் வாதத்தை கடைப்பிடியாது வாசிகசாலை அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும்’ என்ற இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்த்திருந்தது.

‘சாதித்தன்மையை வெறுத்தவன்’ என்பதால் திலகன்ரை படத்தை இவர்கள் வாசிகசாலையில் மாட்ட வைத்திருந்தான்.

அந்தப் படங்களைப் பார்க்கிறபோது அவனுக்கு பழைய ஞாபகங்கள்…. மீண்டன! உடலில் அஞ்சலிக்கும் பரவசம் ஒடி மறைந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *