கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 20, 2013
பார்வையிட்டோர்: 24,184 
 

போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு ஆசி வாங்க அழைத்தார். அனுமதி இலவசம் என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தது. யார் மீது கோபப்படுவது என்று தெரியாமல் பொதுவாக கோபப்பட்டான் விசாகன் .

விசாகனும் கல்பனாவும் திருச்சியிலிருந்து இன்று காலை தான் சென்னை வந்தார்கள். இன்று ஜட்ஜ்மென்ட் டே. பெயில் எடுத்ததிலிருந்து ஆறு மாசத்தில் கோர்ட்டுக்கு இது பதினேழாவது விசிட். தத்கல் மூலமாக இந்தியன் ரயில்வேக்கு இந்த மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து முப்பதாயிரம் நிகர லாபம். எல்லாம்
இந்த பாழாய்போன கல்யாணத்தால்.

சைதாப்பேட்டை ப்ரிட்ஜை பின்னுக்குத் தள்ளிகொண்டிருந்தது ஆட்டோ. பக்கத்து வீட்டு கிரிஜாவிடம் அபிலாஷ் சமர்த்தாக சாப்பிட்டிருப்பானோ என்று கவலைப்பட்டாள் கல்பனா. ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தினால் இந்த கொடுமை நடப்பதாக நம்பினாள். விசாகனைப்போல் எல்லோர் மேலேயும் கோபமில்லை கல்பனாவுக்கு. விசாகனுக்கு கோபத்தை விட பயமே அதிகமிருப்பதாக அவளுக்குப்பட்டது. ‘யூ ஆர் அண்டர் அரஸ்ட்’ என்று ஒரு மீசைக்கார போலீஸ் விசாகனை கனவில் தள்ளிக்கொண்டு போனான். ‘நைட் மேர்’ என்று வேர்த்து எழுந்தவனை ஆசுவாசப்படுத்துவதற்குள் விடிந்து விட்டது.

சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் இறங்கினார்கள். டாக்குமண்ட்ஸுடன் வக்கீல் சீதாராமனை தேடினான் விசாகன் .

செங்கல் சிகப்பு கட்டிடம், ஆல மரம், காக்கைக் கூட்டம் போல் வக்கீல்கள், வக்கீல்கள் ஓய்வறை,பார்க்கிங்கில் டாடா சுமோவில் லோக்கல் தாதாக்கள் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ‘ என் உச்சி மண்டைல சுர்றுங்குது ‘ , டீ வண்டியை சுற்றி போலீசும் அக்யுஸ்டும் சகோதர பாவத்துடன் சிங்கிள் டீ என்று கோர்ட் வளாகம் களை கட்டியது. அப்பா, அம்மா, விபூதி பூசிய புஷ்டியான பையன் என்று டவுரி கேசில் சிக்கிய ஒரு மைலாப்பூர் குடும்பம் நியாயம் கேட்க வந்திருந்தது. டைபிங் மெஷின் ஒன்று இடமும் வலமுமாக லோல் பட்டுக்கொண்டிருந்தது.

‘நோட்டரி சர்டிபிகேட் வேணுமா பிரதர்’ என்று விசாகனிடம் கேட்ட ஒரு கத்துக்குட்டி வக்கீலிடம், ” இந்த நரகத்திலிருந்து விடுதலை வேண்டும், தர முடியுமா?” என்றான். அவன் விசாகனை வினோதமாக பார்த்துக்கொண்டே நகர்ந்தான்.

“அவா வரலையா?” என்ற கல்பனாவிடம் ஒரு ஓரத்தில் சிமெண்டு பலகையில் குடும்பமாக உட்கார்ந்திருந்த அப்பா, அம்மா, சேகரை அடையாளம் காட்டினான். கல்பனா அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். விசாகன் மொபைலில் வக்கீல் சீதாராமனை தேடினான். ஸ்விட்ச் ஆப் செய்திருப்பதாக தகவல் சொன்னது.

” எப்பவும் சீக்கிரம் வந்துருவாரே ” என்று அப்பா ஈனஸ்வரமாக கருத்து தெரிவித்தார்.

அப்போது விசாகன் வீசிய பார்வைக்குப்பின் யாரும் எதுவும் பேசுவதில்லை என்ற தீர்மானத்துடன் இடம் பெயர்ந்தனர்.

***

சீதாராமன் சிரித்துக்கொண்டே வந்தார். ‘ அவருக்கென்ன, ” கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு. இதுக்கு மேல ஓண்ணும் பண்றதுக்கில்லை ” என்று கழண்டுக்கலாம். என் வருங்காலம் ஜெயிலிலா ? சேச்சே, இருக்காது. நான் நாலாவது அக்யூஸ்டுதான்.’

” சார், ஜெயில்ல பானெல்லாம் உண்டா? ” என்று வக்கீல் சீதாராமனிடம் முதல் அக்யூஸ்டான அப்பிராணி சேகர் யதார்த்தமாக கேட்டான்.

“ஓ. டிவி, ஏசி,ப்ரிட்ஜ் எல்லாம் ஏற்பாடு பண்ணி ஜமாய்ச்சுடலாம்”

” என்ன சார், வெவரம் பத்தாம கேக்கறான், நீங்க என்னடான்னா நிஜமாவே ஜெயிலுக்கு அனுப்பிடுவீங்க போல்ருக்கு?” அப்பா வக்காலத்து வாங்கினார்.

” பின்ன என்ன சார், டவுரி கேசு, முள்ளுல விழுந்த சேலையா எடுத்துண்டிருக்கேன். நம்பிக்கையில்லாம பேசினா?” என்றார் சீதாராமன்.

” பிரமாதமா என்ன பண்ணிட்டேள்? பத்து லட்சம் பேசறது. மனையை வித்திருக்கேன்.”

“நீங்க இப்படி வாங்க சார். ஆக வேண்டியதை பார்ப்போம்” என்றான் விசாகன்.

” பீபீ கிட்ட பேசிட்டேன். ஜட்ஜம்மா ஜெயிலுக்கு ரவுண்ட்ஸ் போயிருக்காங்களாம். தீர்ப்பு வாசிக்கறதுக்கு மதியம் ரெண்டாயிடுமாம். நீங்க வேணா ரிலாக்ஸ் பண்ணிண்டு ஓட்டல்ல லன்ச்சை முடிச்சுண்டு வாங்கோ”.

“அப்பா, எனக்கு மீல்ஸ் வேண்டாம். மசால் தோசை, அப்பறம்…….ரோஸ் மில்க்”. ஆர்டர் கொடுத்தான் சேகர்.

சேகரின் கல்யாண ரிசப்ஷனுக்கு ஐஸ்கிரீமுக்கு பதில் ரோஸ் மில்க் சொல்லியிருந்தார் சந்தானம். ஐஸ்கிரீம் இல்லாம ரிசப்ஷனா என்று கேட்டதற்கு,

‘ என்ன பண்றதுனு எனக்கு தெரியும்.’

சேகருக்கு நிச்சயம் பண்ணியதிலிருந்து இந்த வாக்கியத்தை குறைந்தது இருபது முறை கேட்டிருப்பான் விசாகன்.

***

நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் ரெண்டாம் தேதி. கொழந்தை அபிலாஷையும் அழச்சுண்டு ரெண்டு நாள் முன்னாடியே வந்துருங்கோ.” போனில் அப்பா சந்தானம் அழைத்தார்.

” என்ன அவசரம். ஒரு வருஷமாவது வேலைல நின்னு காட்டட்டுமே…”

” நாங்க முடிவு பண்ணியாச்சு. கஷ்டப்படற குடும்பம். அதனால பொண்ணு அட்ஜஸ்ட் பண்ணிண்டு இருப்பா. ஊரு செங்கோட்டை. அப்பா கிடையாது. இவ மூத்தவ. இன்னம் மூணு தங்கைகள் கல்யாணத்துக்கு இருக்கா. சேகர் வேலைக்கு போவான். நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்.”

” சேகர் ஓகே சொல்லிட்டானா? ”

” அவனுக்கு என்ன தெரியும்? நாம தான் சொல்லி புரிய வைக்கணும். நீ அவனை கலச்சுராத ”

” சேச்சே, அதுக்கில்ல. ஒரு வேலைலயும் செட்டில் ஆகல. அதான் ஒரு வருஷம் பாத்துட்டு பண்ணலாமேங்கறேன்.”

” மேல பேச வேண்டாம். வந்து சேருங்கோ ”

***

சேகருக்கு பிரமாதமான படிப்பு கிடையாது. ‘அவனுக்கு போறாது, காலேஜுக்கு எல்லாம் போகவேண்டாம்’ என்று சந்தானம் தீர்மானித்து, ஒரு போஸ்டல் டிகிரியோடு சேகரின் படிப்பு பரண் ஏறியது. நாலு வருஷத்தில் பனிரண்டு வேலை மாறினான்… இல்லை, மாற்றப்பட்டான்.’ ரொம்ப ஸ்லோ, சீரியஸ்னஸ் இல்லை’ என்று பல காரணங்கள். ” ஒரு கால் கட்டு போட்டால் தானா சரியாப்போயிடும்” என்று அது நாள் வரை ‘உதவாக்கரை’ லிஸ்ட்டில் இருந்த சந்தானத்தின் மைத்துனன் மூர்த்தி எதேச்சையாக சொல்ல, ‘மூர்த்தியே சொல்லிவிட்டான்’ என்று கல்யாண கோதாவில் இறங்கினார் சந்தானம்.

பெண் பார்த்து, நிச்சயம் பண்ணி, அதுவும் முடிந்தது.

ஸ்ரீரங்கத்துப் பெருமாளும், மலைக்கோட்டையும், முக்கொம்பும், ‘குறிஞ்சி’யில் ரவா ரோஸ்ட்டுமாக இருந்த விசாகன், கோர்ட்டுக்கும் போலீசுக்கும் லோல்பட வேண்டியிருக்குக்குமென்று அப்போது எதிர்பார்க்கவில்லை.

***

ல்யாணம் முடிந்து முதல் மாசம். கல்பனா முதல் தகவல் சொன்னாள்.

” சுதா ஏதோ பிரச்சனை பண்றாளாம், உங்கம்மா போன் பண்ணினா ”

” நீ தலயக்கொடுக்காதே. அவா பாடு. என்ன பண்றாளாம்?”

“வந்து ஒரு மாசம் ஆகலை. செங்கோட்டைக்குப்போய் அம்மாவோட ரெண்டு வாரம் இருந்துட்டு வருவாளாம்.”

“இருந்துட்டு வரட்டுமே.”

“ஒரு வாரம் போறாதாங்கறா.”

“நீ என்ன சொன்ன?”

“அவ இஷ்டப்படி விடுங்கோன்னேன். ஒத்துக்கலை.”

***

மூன்றாவது மாதம்…

” சுதாவும் சேகரும் பேசிக்கறதில்லையாம்.”

“ஏன்?”

” சேகர் வேலையை விட்டாச்சாம். அதனால இருக்கலாம்.”

” இது ரொட்டீனாக நடக்கறதுதானே. எல்லாம் சொல்லித்தானே கல்யாணம் பண்ணது.”

“சுதாவுக்கு கார்ல பீச், ஷாப்பிங் மால் எல்லாம் போகணும்னு ஆசையாம்.”

” லோயர் மிடில் கிளாசுக்கு இது கொஞ்சம் ஓவர்தான்.”

***

றவது மாதம்…

“சுதா ஐயாயிரத்துக்கு வேலைக்கு போறளாம்.”

” நல்லதுதானே”

” டூ வீலர் வேணுமாம். ஆனால் அவ சம்பளத்தில இன்ஸ்டால்மென்ட் கட்ட மாட்டாளாம்”

“நியாயந்தானே. சேகர் கட்டட்டும்.”

“அவ சம்பளத்தை அப்படியே செங்கோட்டைக்கு அனுப்பறாளாம்.”

“கஷ்டப்படறா. அனுப்பினா தப்பில்லை.”

” அவா ரெண்டு பேருக்குள்ள ஒண்ணுமே நடக்கலயாம். ரெண்டு பேருக்குமே அது பிடிக்கலையாம். ”

” என்னது? பிடிக்கலயா?”

” ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் மாதிரி ஒரே ரூம்ல இருக்காளாம். ”

” எதுக்கு கல்யாணம் பண்ணிண்டாளாம்?”

***

தீபாவளி…

” சுதாவுக்கு பட்டுப்புடவை, சுடிதார்னு நெறைய வாங்கி கொடுத்து தலை தீபாவளிக்கு சேகரோட செங்கோட்டைக்கு அனுப்பி இருக்காளாம்.”

“சந்தோஷமா கொண்டாடட்டும்.”

“சேகரை நெனச்சு பயப்படறா.”

“ஏன்?”

” செங்கோட்டைல ஏதாவது தத்து பித்துனு பேசிடுவானோன்னு.”

“அவன் ஒண்ணும் கொழந்தை இல்லை, பயப்படறதுக்கு.”

***

ரு வருடம் முடிந்து ….

” சுதாவுக்கு ஹிஸ்டீரியாவாம்”

” உளறாத.”

” பாத்திரத்தை பறக்க விடறாளாம். ஏக வசனத்தில பேசறாளாம். மரியாதையே போயிடுத்தாம்.”

” இது கொஞ்சம் சீரியசா போறதே. நான் அம்மா கிட்ட பேசறேன்.”

***

ன்றரை வருடம் முடிந்து….

“சுதா தனியா சமச்சுக்கறாளாம். டீவி பார்க்க கூட ஹால் பக்கம் வர்றதில்லையாம். பெட்ரூமே கதினு இருக்காளாம்”

” நாம பேசலாம்னா பிடி கொடுக்க மாட்டேங்கறா.”

” போறும், போன மாசம் நீங்க அவளண்ட பேசி அவமானப்பட்டது போறும்.”

இரண்டு வருடம் முடிந்து….

” சுதா எதுக்கெடுத்தாலும் போலீசுக்கு போவேங்கறாளாம். அவ ஆபீஸ்ல யாரோ தூண்டி விடறாளாம்.”

“இது டேஞ்சராச்சே. சட்டம் பொம்மனாட்டிக்கு சாதகமான்னா இருக்கு.”

” மூர்த்தி மாமா லீகல் ஒபீனியன் வாங்கிக்க சொல்றாராம் ”

“அதுக்கெல்லாம் அவசியமில்லை. அவாத்தில பெரியவாளை கூப்பிட்டு பேசி சரி பண்ணிடலாம்”

” போன வாரம் இவா செங்கோட்டைக்கு போய் பேசியாச்சு. சுதாவுக்கு இஷ்டமில்லாமத்தான் கல்யாணம் பண்ணினாளாம். அவ அப்படித்தான் இருப்பாளாம். நாம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமாம்.”

***

ம்மா ஒரு நாள் போனில் பரபரத்தாள்.

” விசாகா…எங்களால இவள சமாளிக்க முடியல. மழை கொட்டப்போறது, துணியெடுக்க மாடிக்கு வானு கூப்பிட்டா ரூமுக்குள்ள போய் கதவ சாத்திண்டுட்டா. ஏன்னு கேட்டா போலீஸ்ல சொல்லி கம்பி
எண்ண வச்சுருவேன்னு மெரட்டறா. அம்மாவும் பொண்ணோட சேர்ந்துண்டு பேசறா. வீட்டை சுதா பேர்ல எழுதிக்கொடுங்கோ. இல்லாட்டி டார்ச்சர் பண்றதா போலீஸ்ல கம்ப்ளைன் பண்ணிடுவேன்னு போன்ல மிரட்டறா. எங்க காலத்துக்கப்புறம் ஒங்க பொண்ணு தான எல்லாத்தயும் அனுபவிக்கப்போறான்னு கேட்டா, மூத்தவன் பங்குக்கு வரமாட்டான்னு என்ன நிச்சயம்னு கேக்கறா.”

” நான் வேணும்னா இப்பவே எழுதிக்கொடுத்துடறேனே.”

” பிரயோஜனமில்லை. எங்க காலத்துக்கப்புறம் இவ சேகரை பாத்துப்பாங்கற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. பெரிய தப்பு பண்ணிட்டோம். அப்பா மூர்த்தியோட வக்கீலை பாக்கலாம்னு கிளம்பி போயிருக்கார்.”

” வக்கீலண்ட போகவேண்டாம்னு சொன்னேனே. லீகல் ரூட்ல போனா சிக்கலாயிடும். நமக்கு தான் கஷ்டம் ”

” அவ போலீசுக்கு போயிட்டா?”

” போனா பாத்துக்கலாம்.”

***

போனாள். சேகரும் அப்பாவும் டவுரி கேட்டதாக போலீசில் ப்ஐஆர் பதிவு செய்து போலீஸ் சந்தானத்தின் வீட்டுக்கதவை தட்டியது.

” ……… குற்றம் சாட்டப்பட்டுள்ள நீங்கள் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகும்படி……”

தபாலில் வந்த சம்மனை பார்த்து அதிர்ந்தான் விசாகன். பேரத்தில் ஜெயிக்க வக்கீல் பேச்சைக் கேட்டு குடும்பத்தையே இழுத்திருந்தாள். கோர்ட்டு, போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் சினிமாவோடு என்றிருந்தவனுக்கு ஃபர்ஸ்ட் ஹாண்ட் அனுபவம் தந்தாள் சுதா. அபிலாஷை தூக்கிக் கொஞ்சிய சுதா.

” எதுக்கும் ஆன்டிசிபேடரி பெயில் எடுத்துருங்கோ.” என்றார் வக்கீல் சீதாரமன்.

” பெயிலா? எதுக்கு?”

” ஒரு பாதுகப்புக்குத்தான்.” என்று ஆரம்பித்து,

கூப்பிட்ட போதெல்லாம் ஆஜராகி, அக்யூஸ்டுகளோடு தோள் உரசி, கூண்டிலேறி, வக்கீல் சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்து, எதிர் தரப்பு வக்கீலிடம் பேரம் பேசி பத்து லட்சத்துக்கு ஒத்துக்கொண்டு, பேமிலி கோர்ட்டில் டிவோர்ஸ் வாங்கி, வேளச்சேரி கிரவுண்டை விற்று, பத்து லட்சம் டிடி எடுத்து……

***

ணி மூன்று.

” சேகர், சந்தானம், பார்வதி, விசாகன், கல்பனா ” என்று அழைப்பு வர, ஒருத்தர் பின் ஒருத்தராக கூண்டுக்குள் ஏறினார்கள்.

” ……… குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.”

விசாகனுக்கு வலித்தது. பந்தம் முறிந்த வலி.

” இனிமே கோர்ட்டுக்கு வர வேண்டாம் இல்ல?” என்று சேகர் கேட்டபோது விசாகனுக்கு கோபம் வரவில்லை.

பத்து லட்சம் டிடியை கையில் வாங்கியதும் சுதா முகத்தில் நிகழ்ந்த பூரிப்பு தந்த ஆச்சரியம் போகவேயில்லை.

‘ நடந்தது நன்றாகவே நடந்தது ‘ என்று தோன்றியது.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த விசாகனுக்கு சென்னையின் நாலு மணி வெயில் இளஞ்சூட்டுடன் இதமாகப்பட்டது.

வானம் தெளிந்து இருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “வானவில் கல்யாணம்

  1. நல்ல கதை. அனுபவப் பட்டவர்களுக்கு நன்றாகவே புரியும்.
    இன்றைய கால கட்டத்தில், பொய் வழக்குகளை சாதாரணமாக மொத்த குடும்பத்தின் மேலும் தொடுக்கும் வழக்கம் இந்த திருமணத் தகராறு வழக்குகளில் அதிகமாகி வருகிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக் கொள்கிறது.
    உண்மையாகக் கஷ்டப்படும் பெண்கள் பலர் இன்னமும் இந்த சட்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்க பொய் வழக்கு போட்டு பணம் பிடுங்கும் கும்பல்கள் சந்தோசமாக இந்த சட்டங்களை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
    “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *