கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 10,550 
 

ஏங்க, பஞ்சாங்கய்யர் வர்றாரான்னு பாருங்க, ஹரிஷ¤ பக்கத்து வீட்டுக்கு போயி கொஞ்சம் கோமயம் வாங்கிட்டு வாடா. ஸஹா செல்லம் கொல்லைலேசெம்பருத்தியும் அருகம்புல்லும் பறிச்சிட்டு வாடிகண்ணு.

அம்மா கோமயம்னா என்னம்மா,

ஹரிஷ் போடா போய் வாங்கிட்டு வாடான்னா,

சொன்னாதான் போவேன்.

அது கவ் யூரின்டா, என்னது மாட்டு உச்சாவா, ச்சேய் நான் போமாட்டேன்பா.

டேய் அது கிருமி நாசினிடா, டெட்டால் மாதிரி,

அப்படின்னா டெட்டால் பாட்டிலெல்லாம் உச்சாவத்தான் அடைச்சு வச்சிருக்காங்களா?

ஏங்க இவன் படுத்தல் தாங்கலை, பேப்பரை மடிச்சு வச்சிட்டு இவனை துரத்தி விடுங்க.

பத்மாவிடம் எனக்கு பிடிச்சதே இந்த முன்னேற்பாடுகள்தான். பாலு அய்யர் என் வகுப்புத் தோழன்தான், சற்று தாமதமானாலும் கோபப்பட போவதில்லை, இருந்தாலும் இவள் எல்லாவற்றையும் தயார் படுத்தி வைத்தால்தான் நிம்மதிபடுவாள்.

பாலு போன தடவைக்கு இம்முறை இளைப்பாயிருந்தான், நிறம் மங்கிய சைக்கிளில் “பாலு ஐயர்” என புதிதாய் எழுதியிருந்தான். உடைச்ச கருப்புளுந்து போல் தலைமுடி மாறிவிட்டிருந்தது. இருபது வருடத்திற்கு முன் அவன் தகப்பனார் வைத்திருந்த அதே பிளாஸ்டிக் கூடை. சைக்கிளை மர நிழலில் பூட்டிக்கொண்டெ எப்ப வந்தாப்ளெ என்றான்.
நேத்துதான், நல்லாயிருக்கியா? ம்ம் இருக்கேன், நீ எப்படியிருக்கே என்றான்.

தோப்பனார் போய் ஒரு வருஷம் ஓடுனதே தெரியலை. வாங்க என்ற என் மனைவிக்கு, நமஸ்காரம் என்றபடி உள்ளே வந்தான். தெவச பொருள்கள் ஒருபுறமும், தான பொருள்கள் மறுபுறமும் வரிசையாய் இருப்பதை சரி பார்த்தான், காபியை டமராவில் ஊற்றி இடவலமாய் இரண்டு சுற்று சுற்றி அன்னாத்தி வாயிலூற்றிக் கொண்டான். ஏன்டா இத்தினி தான சாமான் வாங்கிருக்கே, மத்தவாளுக்கெல்லாம் சொல்லிட்டியா? சொல்லிட்டேன், தெவசம் முடியும்போது வந்து வாங்கிட்டு போவாங்க.

இப்பெல்லாம், இருக்கிறவா கூட இப்படி தானம் பன்றதில்லைடா.

எல்லாம் முடிந்த போது, சூரியன் உச்சத்திலிருந்தார், உஷ் உஷ் என துண்டால் விசிறிக்கொண்டு ஏன்டா வீட்டை ஏசி பண்ணிடேன் என்றவாறு வெளியில் வந்தான். ஏசி எதுக்குடா, ·பேன் போதும் நமக்கு என்றதற்கு, செட்டி கெட்டியென்று சிரித்தான். சரி சரி சாப்பிட்டுட்டு ஆத்துக்கு வா என்றான்.

இதெல்லாம் நான் கொண்டு வந்து தர்றேனே, வேணாம் வேணாம் வெயில் கொளுத்தறது நீ உள்ளே போ.

இந்த ஒரு வருடத்துக்குள் இவனிடம் இப்படியொரு மாற்றம், முன்பிருந்த சுறுசுறுப்பு இல்லை. மர நிழல் மறைந்து வண்டி சூடாகியிருந்தது, பொருள்களை கேரியரில் வைத்துக் கட்டி, தள்ளிக்கொண்டே ஓடி ஏறினான். இன்னும் இந்த பழக்கம் மாறவில்லை. தெருமுனையில் வளையும்போது மதியம் பார்போமென்றான்.

டேய் காக்கைக்கு வச்சுட்டு வாடா, போம்மா, அப்பாவை வைக்கச் சொல்லும்மா. நிறைய கா..கா.. அழைப்பிற்கு பின் வந்த இரண்டு காகங்களும் தென்னை மட்டையில் தத்திக்கொண்டு என்னை வேவு பார்த்தன. அப்பா ஆச்சா என்றவனின் குரலுக்கு ஒன்று பறந்து விட்டது. மற்றது வரும்ம்ம் ஆனா வராது என்பதுபோல் ஆட்டம் காட்டியவாறு வடையை கொத்திக் கொண்டு பறந்தது. ஒரு பந்தில் நான்கு ரன் எடுத்தால் வெற்றி என்றநிலையில் ஆறு ரன் அடித்த சந்தோஷம். முன்பெல்லாம் காக்காவை கூப்பிட்டால் போதும் குடும்பத்தோடு வந்து, ப்பூ இத்துனூன்டு சாப்பாட்டுக்குத்தான் இத்தனை சத்தமா என்று கேக்கும்.

நீ ஒரு குட்டி தூக்கம் போடு, நான் இப்ப வந்துடுறேன். மெளனமாய் தலையாட்டினாள்.

புத்திக்கு கொஞ்சமும் வெயில் உறைக்கவில்லை, பழகிய தெருக்களில் பராக்கு பார்த்துக்கொண்டெ மெல்ல நடந்தேன், பழைய ஓட்டு வீடுகள், புதிய வீடுகளை ஏக்கமாய் பார்ப்பது போலிருந்தது. முன்பிருந்த தார் சாலைகளை காணவில்லை. சாப்பாடு முடிந்து,காற்றுக்காக கதவை திறந்து வைத்து பேசிக்கொண்டிருக்கும் தாவனி பெண்களை காணவில்லை. வாசுகி வீடு, அமுதா வீடு, சாந்தி வீடு ம்ஹ¥ம் வீடுகளின் முகமும் அகமும் மாறிவிட்டன. என் மகன் காலத்தில் பெண்களின் பெயர்களும் மாறியிருக்கும். எதற்கும் எதுவும் சாட்சியில்லை.

பத்தினிக்கோட்டத்தை கடந்த போது, அந்த வீட்டில் ஆள் நடமாட்டமில்லை, கலைச்செல்வி எப்படியிருப்பாள், இன்னும் அதே தொழிலில் இருப்பாளா, ஐயர்ட்ட கேக்கனும். அவளாலதான் தெரு பெயரையே பத்தினிக் கோட்டமாக்கிட்டோம். இன்னும் ஒரு தெரு நகர்ந்தால் சால்ட் ஆபீஸ் வரும். அடுத்து பாலு வீடுதான். பாலு வீட்டை விட சால்ட் ஆபீஸ்தான் எங்கள் சபா கூடுமிடம்.

வெயில் புக முடியாத மர அடர்த்தியில் வெள்ளைக்காரன் காலத்து கட்டிடம், குளுமையாய். பாலு துண்டை தலைக்கு வைத்து நேராக படுத்திருந்தான்.

தவிட்டுக் குருவிகளும், மைனாக்களும் காற்றோடு சினேகம் பேசிக்கொண்டிருந்தன. திண்ணையில் தாவி உட்கார்ந்த சத்தத்தில், எழுந்து, வா என்றான்

. திரும்பி போகனுமாடா?

ஆமாம்பா இன்னும் ப்ராஜெக்ட் முடியலை.

எப்ப வந்து செட்டில் ஆரதா உத்தேசம்?

வரனும்னு இருக்கு ஆனா ஏதாவது காரணத்துல நகர்ந்துகிட்டேயிருக்கு.

வேறெதும் வரன் வந்துச்சா?

விடு, எனக்கு இதுல இஷ்டமில்லைடா.

தனியா காலத்தை தள்ளுறது கஷ்டமாயில்லையாடா.

பட்ட அவமானத்துக்கு இன்னொரு கல்யாணம் அவசியமா? அவளும் ஓடிட்டா என்ன பன்றது?

கவிழ்ந்த கண்களில் கூச்சமும், அவமானமும் கலந்திருந்தது, கையில் கிடைத்த காய்ந்த வேப்பங்குச்சியில், வரிசை மாறாத எறும்புகளை கலைத்துக் கொண்டிருந்தான். அவாத்துலேந்து வந்து அழுதா, கல்யாணம் ஆவாத எம் புள்ளையை வெள்ளை தோலை காமிச்சு இழுத்துட்டு ஓடிட்டாளேன்னு, நல்லாயிருப்பாளான்னு. இந்த ஆறு மாசத்திலே, நூத்து சொச்சம் கேள்வி, எல்லாம் இதை பத்திதான்.

இதோ பார் இந்த எறும்புகளை கலைக்கிறதுல எனக்கெதும் கஷ்டமிருக்கா?

எறும்புக்கு கஷ்டமாச்சேன்னு நான் விடனும், இல்லேன்னா அது வழிய மாத்திடுச்சு பார்த்தியா. எறும்பு மாதிரி நானும் என் வழிய த்திண்டுட்டேன். ஒத்த பிராமணனா இந்த ஊர்ல காலம் தள்ளறது கஷ்டம்தான், ஆத்திர அவசரத்துக்கு சாப்பிட ஒரு சைவாள் ஹோட்டலில்லை. இத்தினி காலம் ஓடிருச்சு, ம் போகட்டும் போ.

ஏன்டா ஒத்தைக்கு திண்டாடுறே, சொந்தக்காரங்களோட போய்டலாமே.

அது சரிபட்டு வராது. இப்படியே இருந்துட்டு போ வேண்டியதுதான்.

ஏன் சாமியாரா போ போறியா?

காதுல விழுந்துச்சான்னு தெரியலை, மரக்கிளையில் ஓடி பிடித்து விளையாடும் அணில்களின் மேல் நிலைத்திருந்தான். என்ன சொன்னே, சந்யாஸியாவரதா, அதுக்கு முக்கியமா பயமிருக்கப்படாது. மனசு சுத்தம் வேணும். நான் அதுக்கு லாயக்கில்லேடா.

உனக்கொன்னு தெரியுமா? ஒரு நா கலைச்செல்வியை ஆத்துக்கு கூப்பிட்டேன்.

என்னடா சொல்ற,

ஆமாம் ஆத்துக்கு வந்தா.

தெருவிலே யாரும் பார்க்கலையா? தப்பை யாரும் பார்க்கலைன்னா தப்பில்லைங்கிற சித்தாந்தமாயிடுச்சு. இப்போலாம் ஆறு மணிக்கு மேல் யாரும் ஆத்தை விட்டு வெளில வரதில்லை. டி.வி போதை, ட்ரிங்ஸ், ட்ரக்ஸ் எல்லாத்தையும் தூக்கி சாப்ட்ருச்சு.

அவனே பேசட்டும் என காத்திருந்தேன்.

அவள தொட்ட போது ஆத்துக்காரி ஞாபகம், கையெடுத்து நெஞ்சுல வச்சுண்டேன். ஏன் அழுதேன்னு தெரியல. அழாதிங்க அழாதிங்கனுட்டு என்னை மடியில சாச்சு முதுகை தடவிக் கொடுத்தா. எப்போ, எப்படி தூங்கினேன்னு தெரியலே, காலையில முழிச்சு பாத்தா அவள காணும்.

ஒரு நிமிஷம் வெல வெலன்னு ஆயிடுத்து. ஆத்துக்காரி போனப்ப கூட நான்….

உணர்வுபூர்வமாய் கண்களில் நீர், துடைத்து விட்டேன்.

இந்த ஜென்மம் இப்படியாயிடுத்தேடா, என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று வார்த்தைகளை தேட ஆரம்பித்தேன்.

– ஜூலை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *