ரெக்கார்ட் டான்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 18,166 
 

“யய்யா எப்பும் வந்த?ஒன் பொண்டாட்டிப்புள்ளய சொவமாயிருக்காவளா?”

“எல்லாரும் நல்லாயிருக்கோம்.நீ எப்படியிருக்க பெரிம்ம…ஒன்பேர சொல்லி நல்லாயிருக்கேன்யா.”

“யப்பா! ஒன்ன ஆச்சி சாப்பிடக்கூப்பிடுது.”

“ஏலே! ஐய்யா…நீ எப்பும் வந்த?” என்று கேட்ட பெரிம்மயிடம் “இன்னைக்குதான் எட்டுமணி கேட்டிசி பஸுக்குக்கு”வந்தோமென்றான் மகன்.

“என்னய்யா?எல்லாருமா வந்துருக்கிய?”

“இல்ல பெரிம்ம.அவ வரல நானும் புள்ளையிலும்தான் வந்திருக்கோம்,காலாண்டு பரிட்சை முடிஞ்சி, அதான்…லீவுக்கு இவங்கள உடவந்தேன்”.

“சரிச்சரி…அப்பும் இந்த பத்து நாளும் தெருக்காட்ட புழுதிக்காடாக்கிரானுவ” என்றவள் மகனிடம் “ஒங்க ஆச்சி தோசகீச சுட்டுவச்சிருப்பா ஆறீரப்போவுது போங்க போய் நல்லா சாப்பிடுங்கல” என்றாள்.

இட்லி தோசையெல்லாம் நகரத்து வேலைக்குத்தான் சரி.

ஊருக்கு வந்துட்டா எனக்கு எப்போதும் காலையில பழையக்கஞ்சிதான். அதுவும் பருத்தரிசிக்கஞ்சிக்கு தொட்டுக்க எள்ளுத்துவயலு,சீனரைக்காய் வத்தல் வறுத்தது;மதியத்துக்கு அதே பழையக்கஞ்சிதான். ஆனா, தொட்டுக்க எங்கவீட்டு முருங்கமரத்துல எளங்கீரையாப்பாத்து பறிச்சி, தேங்காச்சில்லு ரெண்ட இடிச்சுபோட்டு, தேங்கண்ணயில வெங்காயத்த சேர்த்து நல்ல வதக்கிய கீரப்பொரியலு; ராத்திரிக்கி பருப்புக்குழம்பும், பொரிச்ச சாலக்கருவாடும்!.

இதுதான் ஊரிலிருக்கும்போது நான் உண்ணும் உணவு மெனு.முதலாவதாக காலை உணவருந்தி ரயில்பயணம் தந்த களைப்பில் கண்ணயர்ந்துப்போனேன்.

மாலை ஆறரைமணிவாக்கில் வீட்டிற்கு வந்தான் சட்டி.அவனின் நிஜப்பெயர் சுடலைமுத்து. அவனின் நிறத்திற்கேற்றார்போல் வைத்த பட்டப்பெயர் தான் கரிச்சட்டி. அது காலப்போக்கில் சுருங்கி இப்போது சட்டியாகியிருக்கிறது.

காலை ஒன்பதுமணி முதல் மாலை ஆறுமணிவரை மிகச்சிறந்த ‘கொத்தனார்’. ஆறுமணிக்குமேல் மிதமிஞ்சிக்குடிக்கும் ‘குடிமகனார்’. நான் ஊருக்கு வந்தது எப்படியும் தெரிந்துவிடுமவனுக்கு…

“ஏன் வந்த?”

“எதுக்கு வந்த?” என்றெல்லாம் கேட்கமாட்டான்.

“எத்தனைக் கொண்டு வந்த” என்ற கேள்வியை மட்டும் மறக்கமாட்டான். ஏனென்றால், தமிழ்நாடு-கர்நாடக எல்லையான ஓசூரில் நான் வேலைப் பார்ப்பதால் பெங்களூர் சரக்கு கொண்டு வந்திருப்பானென்று ஊர் வந்தாலே பயலுக என் வீட்டைசுற்றி மொய்க்கத் துவங்கிடுவார்கள்.

“நாளைக்கே கெளம்புறேன். அதனால் ரெண்டே ரெண்டு தான் கொண்டுவந்தேன்” என்றேன்.

“சரிடே…நான் தண்ணியடுத்துட்டு மேலபோறேன். நீ சரக்கும், சாலக்கருவாடும் எடுத்துட்டு சீக்கிரமா மச்சிக்கு வா”யென்று படியேறினான்.

எங்கள்வீட்டு மச்சிதான் நாங்கள் மது அருந்தும் மறைவிடம். வீட்டுக்குப் பின்னால் நிற்கும் தென்னைமரத்திலிருந்து தென்றல்காற்றும், முன்னால் நிற்கும் வேப்பமரத்திலிருந்து விடலைகாற்றும் வீசி
மேலும் எங்களுக்கு போதைக்கூட்டும்.

முழுப்பாட்டில் அரையானது. சட்டிக்கு போதை முழுதானது. சட்டி சுவர்முட்டி சரிந்தான். நான் “ரெண்டேரெண்டு கட்டிங்” மட்டும் போட்டுவிட்டு வயிறு கடாமுடாவிற்கு விடைத்தேடி வடக்காட்டுக்குப்போக தயாரானேன்.

சுத்தியிருக்கும் தெய்வங்களுக்கெல்லாம் முட்டைப்பலி கொடுத்தபின்னே சுடலை சுடுகாட்டுக்கு வேட்டைக்கு செல்லமுடியும். அதுபோலத்தான் அவசரமா ஆய் வந்தாலும் அவனத்தாண்டி அவ்வளவு லேசுல வடக்காட்டுக்குள்ள போயில, பீடி, சிகரெட்டு, பாக்கு, தண்ணிப் போடுற ஆம்பிளைங்க யாரும் நுழைஞ்சிட முடியாது.

அந்த அவன்தான் பெரியஇசக்கி. வடக்காட்டின் நுழைவுவாயிலில்தான் அவனுடைய வெள்ளாட்டுக்கிடை. ஆதலால், அவனின் ஓசிக்கண்ணிலிருந்து ஒருப்பயலும் தப்பமுடியாது. குத்திருட்டில் குத்த வைத்துப் போனாலும் குட்டிமறியைப்போல் தூக்கிவிடுவான்.

நான் அவன் கிடை வந்ததும், நடையில் கொஞ்சம் வேகமேற்றினேன். உடைமரத்தின் இடைவழியாய் ஒளியும், ஒருகுரலும் என்னைநோக்கி பாய்ந்தது.

யாரென்று? நான் கேட்கும்முன்னே, பெரியஇசக்கியண்ணன் என்னருகே வந்தான்.

“என்னடே தம்பி அரவம் காட்டாம போற?”

“இல்லண்ணே அவசரம் அதான் கவனிக்கல.”

“எப்பும் வந்த? எப்படியிருக்க?”

“நல்லாயிருக்கண்ணே…”

“பொடிசுகளும் வந்திருக்கா?”

“ஆமா வந்திருக்கு….”

“ரெண்டுப்பேத்துக்கும் ஸ்கூலு…பத்துநாலு லீவூ…அதான் அவங்கள உடவந்தேன்.”

“ரெண்டும் திரும்பிப்போகுறவர திங்றதுக்கு நொங்கு யென்பொறுப்புடே.”

“சரிண்ணே…”

“அப்புறம் ஓசூர்லயிருந்து நம்ம அயிட்டம் ஏதும் கொண்டுவந்தியா?”

“இருக்குத்தாரேன். இப்பும் விடுப்பா…வயித்தக்கலக்குது வடக்கப்போயிட்டு வந்துருதேன்”

“சரி! ஒரு டோஸ் குடு?”

எனக்கும் வயிறு கடமுடாங்குது.

சாரத்தில வைத்திருந்த சட்டித்தந்த டோஸை இருவரும் ஒருசேர கீழ்உதட்டை முன்னிழுத்து உள்வைத்து வடக்காட்டினை நோக்கி வேகமாய் நடந்தோம்.

என் வீட்டில் கழிவறைக்கட்டி பத்துப்பதினைந்து வருடங்களாகிவிட்டது. ஆயினும், வடகாட்டுக்குப்போய் வெளிக்கிப்போனால்தான் வயிறு சுத்தமாகும்.மனசு நிம்மதியாகும்.

பெரியஇசக்கி ஒரு நடமாடும் பண்பலை. பொழுதடைய காட்டுக்குள் கிடந்தாலும் ஊருக்குள் நடக்கும் அத்தனையும் அவனுக்கு அத்துப்படி.ஊர்க்காரர்களே அவனிடம் செய்திக்கேட்டு ‘ஆ’வென்று வாய்பிளப்பர்.

நானும் அவனும் எதிரெதிராய் குத்தவைத்து, எக்கச்சக்க கதைகள்பேசி, வடக்கிணற்றில் கால் கழுவிவிட்டு அவனின் கிடைப்பக்கம் வரும்போது மந்தையில் ஏதோவொரு அறிவிப்புச்சத்தம் என் காதில் கேட்டது.

“யண்ணே…மந்தையில என்ன? ரேடியோச்சத்தம் கேக்குது…”

“அதுவா? நம்மூருக்கு….ரெக்காடான்ஸ் குருப்பு வந்திருக்குடே…எட்டரைக்குமேலத்தான் ஆட்டம். நீபோயிட்டு சட்டுப்புட்டுன்னு சாப்புட்டுட்டு பொடிசுகளையும் கூட்டிட்டு வா. வரும்போது மறக்காம சரக்கு கொண்டுவந்திரு சரியா?”

“சர்..ரிப்பா…”

“ரெக்கார்ட் டான்ஸ்”என்றதும் எனக்குத்தெரிந்த மச்சான் ஒருத்தரின் ஞாபகம்தான் வந்தது. இப்போது அவருக்கு வயது ஐம்பதுக்குமேலிருக்கும். அவரின் இளம்வயதில் இதேபோல் எங்கள் ஊருக்கு வந்திருந்த “ரெக்கார்ட் டான்ஸ்” குழுவிலுள்ள ஒரு பெண்ணோடு அவருக்கு காதல்.இன்னுமவளின் நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்துக்கொள்வார்.

“மாப்ள உங்க அக்காலாம் அவ அழகுக்கு முன்ன கிட்டயே நிக்க முடியாது. அவஒடம்பு தேன்சிட்டுமாதிரி,சிரிப்பு தேங்காப்புட்டுமாதிரி இருக்குமோய்…”

“‘செந்தூரப்பூவே இங்கு தேன்சிந்த வா வா’பாட்டுக்கு ஆடிக்கிட்டே யன்ன ஒருபார்வ பாப்பா பாரும் அப்படியே பாட்லோடு பட்டச்சாராயம் அடிச்சமாதிரி இருக்கும் மாப்ள”

“எங்கம்மாதான் அவள ஊரவிட்டே அடிச்சித்தொரத்தி, எங்க காதலப்பிரிச்சி ஒங்க நொக்கா செனப்பன்னிய யனக்கு கட்டிவச்சிட்டா நாசமாப்போறவ” என்பார்.

இப்போதும் எங்காவது ‘செந்தூரப்பூவே இங்கு தேன்சிந்த வா வா’ ஒலிக்கக்கேட்டால் அந்த செந்தூரப்பூவை நினைத்து கண்ணீர்சிந்துவார்.

மந்தையென்பது ஒருகாலத்தில் ஆடுமாடுகள் அடைக்கலமாகும் இடமாகயிருந்தது.ஆனால்,அதுதான் இப்போது எங்களுக்கு பேருந்து நிலையமாகவும், நிகழ்ச்சி நடத்தும் திடலாகவும், கடை வீதியாகவுமிருக்கிறது.

நான் சாப்பிட்டுவிட்டு மந்தைநோக்கிப் புறப்பட்டேன். அங்கு சுத்தம்செய்யப்பட்ட நிகழ்ச்சிக்குக்கான இடத்தில் நான்கு மூலைகளிலும் நடப்பட்டிருந்த கம்புகளில் சுப்பையா அண்ணன் “போகஸ் லைட்டும்,டியூப் லைட்டும்” கட்டிக்கொண்டிருந்தான். அவன் எங்களூரில் “மைக்செட்” தொழில் செய்துவருகிறான். மின்சார விளக்குகளுக்கு தேவையான மின்சாரம் மாடத்தியக்காள் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டியிருந்தது. மந்தையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவள்வீட்டில்தான் மின்சாரம் எடுக்கப்படும். ஏனென்றால், அவள் வீடு அங்குதான் உள்ளது. மந்தையில் ஆட்களின் நடமாட்டம் கூடிக்கொண்டேயிருந்தது…

சுப்பையாண்ணனிடம் பேசிக்கொண்டுயிருந்த என்குரல்கேட்டு சலூன்கடை மாமா என்னருகில் வந்தார்.

“ஏ! மாப்ள…எப்பும்வோய் வந்தியரு?”

“காலைல மாமு…”

“ஒக்காப்பு….ட காலைல வந்தவன்.கடைக்கு ஏன்வர்ல?”

“தூங்கிட்டேன் ஓய்…”

“தங்கச்சி, புள்ளையலு எல்லாம் சொவந்தான?”

“சொவந்தான் மாமு…”

“மாப்ள… சரிப்போரும்…போயிட்டு கிளாசு, தண்ணி வாங்கிட்டு வாரும்…ஆளுக்கொரு கட்டிங் போடலாம்.”

“யோ!மாமு…எனக்கு வேணாம். நான் சாப்புட்டுட்டேன். இனும சரக்கடிச்சா வாந்தி எடுத்துருவேன் ஓய்…”

“ஒரு மயிரும் வராது.போய்ட்டு வாரும்…மாப்ள வரும்போது மறக்காம சைன்டிஸ்ட்டு வாங்கிட்டு வாரும்”

“யோ! சைன்டிஸ்ட்டு இல்லையா…அதுப்பேரு சைடிஷ்யா…”

“யன்ன யழவோ? சீக்கிரம் வாங்கிவாரும்.”

நானும் மாமாவும் நிகழ்ச்சி நடைபெறும் இடம்தள்ளிப்போய், ஒரு இருள்மறைவில் குடித்துவிட்டு வந்தோம்.

“சரி…மாப்ள நான் கெளம்புறேன்”

“யோ…என்ன ஆட்டம் பாக்கலையா?”

“ஆத்தாடி! இங்க நான் ஆட்டம் பாத்தா அங்க ஒங்க அக்கா பத்ரகாளியா ஆடியிருவா”என தள்ளாடியப்படி வீடு கிளம்பினார்.

மணி எட்டரை ஆனது…

பெண்கள் இடம்பார்த்து பாய் விரித்து அமர்ந்தனர்.

ஆண்கள் துண்டு விரித்து பீடியிழுத்து “ஆட்டத்த ஆரம்பிங்கப்பா” என்றனர்.

சிறுவர்களும், சிறுப்புத்திக்கொண்ட சில பெருசுகளும் ஒப்பனைச் செய்யும் பெண்களை திரையின் ஓட்டைவழியாய் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

“ஹலோ…ஹலோ…”

“ஒன்…டூ…த்ரி…”

“மைக் டெஸ்டிங்…”

“அன்பார்ந்த தெய்வநாயகப்பேரி கிராமத்து பெரியோர்களே!தாய்மார்களே! அண்ணன்மார்களே!அருமை தம்பிமார்களே! உங்கள் அனைவருக்கும் “திருச்சி கவிதா ரெக்கார்ட் டான்ஸ்” குழுவினரின் முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக்கொண்டு,இதோ நீங்கள் ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் எங்களது ஆட்டம் ஆரம்பமாகிறது” என்று குழுத்தலைவரும் அவர்களின் குடும்பத்தலைவரும் மைக்கில் அறிவித்தார்.

ஆம். அவர்கள் ஒரு குடும்பமாகத்தான் வந்திருந்தனர். கணவன், மனைவி, ஒரு பதினாறுவயதுப் பெண், ஒரு பத்துவயது சிறுவன், ஒரு வயதுக்குட்பட்ட பெண் குழந்தையொன்றை மந்தையில் நிற்கும் பூவரசமரத்தினில் தொட்டில்கட்டி தூங்க வைத்திருந்தனர்.

முதலாவதாக அம்மன்பாடலுக்கு ஆடினர். சாமிக்கொண்டாடிகள் மட்டும் அசந்துப்பார்த்தனர். மற்ற அனைவரும் அமைதியாக இருந்தனர்.

இரண்டாவது பாடலாக இதோ! தல அஜீத்தின் “ஆலுமா டோலுமா”என்றதும் இளைஞர்கள் ஆரவாரமாகினர்.

ஆடிய சிறுவனுக்கு ஐம்பது ரூபாய் நன்கொடை வழங்கினர். அதனை ஐம்பது லட்சங்களாக பெற்றுக்கொண்டதாக குழுத்தலைவர் நன்றி தெரிவித்தார்.

தல ஆட்டத்தைப் பார்த்தீங்க.இப்போது தளபதி மெர்சல் காட்டப்போகிறாரென்று ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு மீண்டும் அதேசிறுவன் ஆட இளைஞர் கூட்டம் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அவனின் மேல்சட்டையில் ரூபாய் நோட்டுகளை குத்திவிட்டு குதூகலித்தனர்.

அதற்கடுத்து சில மெலடி பாடல்களுக்கு குழுவினர் ஆடினர். கூட்டம் கொட்டாவிவிட தொடங்கியது. பெருசுகள் பீடியும், இளசுகள் சிகரெட்டும் இழுக்கத் தொடங்கினர்.

கூட்டத்தை கூர்ந்துப்பார்த்த குழுத்தலைவர் கொஞ்சம் உஷாராகி அடுத்து வருகிறது உங்களுக்காக ஒரு அதிரடிப்பாடலென்று “சின்ன மச்சான்” பாடலுக்கு தன் மகளை ஆடவைத்தார். கூட்டத்தில் விசில்பறந்தது. ஆண்கள் ஆட்டத்திற்கிடையே சிறியவளின் கைகளில் “பத்தும் இருபதுமாய்” கொடுத்துக்கொண்டிருந்தனர். அவளுக்கு இருநூறு ரூபாய் கிடைத்தது. கொட்டாவிக்கு ‘ஆ’பிளந்தக்கூட்டம்,

சின்னமச்சானைத் தொடர்ந்து அந்த சின்னப்பெண்ணின் தாய் “மச்சானப் பாத்தீங்களா” பாடலுக்கு நடமாடினாள். அவளின் கருத்தத்தேகம், பெருத்தவயிறுக்காக ஐம்பது ரூபாய்தான் கிடைத்தது. அதோடு மட்டுமில்லாமல் கூட்டம் பாதிக்குமேல் களைந்துப் போயிருந்தது.

என்னருகில் சுருட்டு பிடித்த்துக்கொண்டிருந்த இசக்கிமுத்துதாத்தா “பேரப்புள்ள எனக்கு மொத்தம் எட்டுப்புள்ள. ஆனாலும், ஒட்டுத்துணியில்லாம ஒங்கப்பாட்டிய ஒருநாளும் பாத்ததில்லடே…இப்பவுள்ள பயலுவல்லாம் இத்தனோன்டு போனுல எத்தன பொம்பளயில அம்மணமா பாக்கிரானுவ. அவனுவக்கெல்லாம் இப்படி முத்திப்போனதும், முழுசா மூடிக்கிட்டும் ஆடுனா புடிக்குமாச்சொல்லு?. இந்த மாதிரி கலையெல்லாம் இனித்தேறாதுடே” யென்று காதோட்டைக்குள் சொருகி வைத்திருந்த ஐந்துரூபாய் நாணயத்தை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கச்சொல்லி அவரும் வீட்டுக்குப்புறப்பட்டார்.

“தாத்தா சொன்னமாதிரியே பயலுவயெல்லாம் போரடிக்கினு சரக்கடிக்க கெளம்பிட்டானுவ”

காத்திருந்த கடைசிக்கொஞ்சம் பெருசுகளின் கோரிக்கைக்காக கணவனும்,மனைவியும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாகவும்,சிவாஜி பத்மினியாகவும் ஆடிமுடித்து நிகழ்ச்சி முடித்தனர். அதற்காக சொற்பக்காசும், சோறுப்பொங்கித் தின்பதற்கு அரிசிப்பருப்பும் அவர்களுக்கு கிடைத்தது. குழுத்தலைவர் ஊர்மக்களுக்கு மைக்கில் நன்றிசொல்லி முடிக்கும் முன்னே அனைவரும் வீடு போய் சேர்ந்திருந்தனர்.

நாங்களும் வீட்டுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தோம். மகன் சாப்பிடலாமலேயே உறங்கிவிட்டான். மகளும் நானும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது…

“யப்பா!நானும் தம்பியும் விஜய் பாட்டுக்கு ‘ஹன்றடு ரூபிஸ்’ குடுத்தோம்.”

“நான் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன். வெரிக்குட்ம்மா…”

“டான்ஸ் செமையா இருந்துச்சிப்பா.”

“ஆமாம்மா…”

“அந்த ரெக்கார்ட் டான்ஸ்க்காரங்க சாப்பிட்டிருப்பாங்களாப்பா?”

“தெரியலையம்மா…!”

“நம்ம சாப்பிட்டுட்டு அவங்களுக்கு சோறுக்கொண்டு போலாம்மா…? ஆச்சித்தான் நெறையபொங்கிருக்கில்ல.”

“சரிம்மா…”

நானும் மகளும் டிபன்பாக்சில் சோறும்குழம்பும் எடுத்துக்கொண்டு மந்தைக்குப் போனோம். மந்தை மயானம்போல் அமைதியாகயிருந்தது. வெட்டியார் பிணமெரிப்பதுபோல் ஒப்பனைக்கலைக்காமலேயே
அடுப்பின் உலைக்கு குழுத்தலைவரின் மனைவி தீமூட்டிக்கொண்டிருந்தாள்.

அவரும் மகனும் துணிமணிகளையும்,பொருட்களையும் மூட்டைக்கட்டிக்கொண்டிருந்தனர். அவர்மகள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள்.

“அண்ணாச்சி…அண்..ணா..ச்சி…”

“சொல்லுங்கண்ணே…”

“இதுல சாப்பாடு இருக்கு. எல்லாரும் சாப்பிட்டுக்கோங்க…”

“யென் பொஞ்சாதி ஒலவச்சிட்டாளண்ணே…”

“பரவாயில்ல…சாப்பிடுங்க.”

“சரிண்ணே…ரொம்ப நன்றி!”

“இதுயாரு ஒங்கப்பொண்ணா…?”

“ஆமா…அண்ணாச்சி!”

“ஒங்க மொவச்சாட அப்படியே இருக்குது”

“சரிண்ணாச்சி…நீங்க சாப்பிடுங்க நாங்க வர்றோம்” என்று அவரிடமிருந்து விடைபெற்று வரும்போது “யப்பா! அந்த குட்டிப்பாப்பா தொட்டிலில அழகா காலாட்டிக்கிடந்துச்சி பாத்தீயப்பா” யென்றாள் மகள்.

என் மகள் பார்த்த அந்தக்குட்டி பாப்பாவின் கால்களாவது அவளின் குடும்பத்தாரைப்போல் ஆடிப்பிழைக்காமல், என் மகளைப் போல் பள்ளிக்கூடம் போகட்டுமென்று வேண்டிக்கொண்டு வீடு வந்து தூக்கமின்றி தவித்துக் கிடந்தேன்…

– பிப்ரவரி 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *