கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 18,717 
 
 

எப்போதும் வரும் ஒரு கனவு.

கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று… கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து அதன் இதழ்கள் அண்ட பெருவெளியை மறைத்து எழுந்து நிற்கும்போது, அதனுள் இருந்து வெளி வரும் ஒரு கசப்பின் மணம், என்னை கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு முட்ட முட்ட முட்ட வைத்து… அது தாங்காமல், அலறி எழும் நான், அந்த கனவு தந்த பயத்தில் இருந்து மீளாமல் கண்ணீர் வடிய நெடு நேரம் படுக்கையில் அமர்ந்திருப்பேன்.

“கெனா”ல இப்படி கெதக்’குனு பயப்படாதட்டி, யட்சி பிடிசுக்குவா”. ஒவ்வொரு முறை அலறி எழும்போது அம்மாச்சியின் இந்த வார்த்தைகள் மனசுக்குள் வந்து மேலும் பயத்தை அதிகரிக்கவே செய்யும். இப்படி அலறி அடித்து ஓடினாலும், யட்சிகள் மீதான பிரமிப்பு மட்டும் ஒரு போதும் குறைந்ததே இல்லை. “தண்ணீல நெழல பாக்காத” என்று அம்மாச்சி சொன்ன நாளில் தொடங்கி இருக்கும் என்று நினைகிறேன் யட்சிகள் மீதான காதல்.

யட்சிகள் சூழ் உலகம் அது.

“பாரிஜாதம் வீட்டுல முனி நிக்காம்ல”….

“ரயிலோட்டுல செவப்பு சேலைல மோகினிய பாத்துல்லா நம்ம வள்ளி பெய இப்படி காச்சல்ல கிடக்கான்”….

“அந்த கலேட்டர் (கலக்ட்டருக்கு படித்த பெயிலாகி போனாலும்…எங்களுக்கு மட்டும் கலக்கட்டராகவே தங்கி போன மோகன் மாமா) வீட்டுல தினமும நட்ட நடு சாமத்துல வரிசையா கல்லு வந்து விழுதாமே ! ஆத்துக்கு போன அவன் பொண்டாட்டி, திருப்பி வரும்போது அவகூடவே எதையோ இழுத்துட்டு வந்துருக்கா. இந்த பெய அத நம்ப மாட்டிக்கானே”. என்று வயல் வேலை முடிந்து வீடு வரும் ஒவ்வொருவரின் இரவையும் இப்படி யட்சிகளும், யட்சன்களும் மட்டுமே தின்று தீர்ப்பார்கள்.

படங்களில் வருவது போல பகலில் பரபரவென்று இருக்கும் அம்மாச்சியின் ஊர், இரவில் அதி அமானுஷ்யமாக இருக்கும். பத்து அடிக்கு ஒரு யட்சியும், இருபதாவது அடிக்கு ஒரு யட்சனும் வசிப்பதாக நம்பி கொண்டிருந்த ஊரில் மாலை ஆறு மணிக்கு மேல் பெரிதான போக்குவரத்துகள் இருக்காது. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு முன்னரே சொல்லி அனுப்படும் சேதி. “ஏலா…ச்சாமம் கீமம் வந்து தொலச்சுராதீய…விடிகால வாங்க” என்று.

சாயங்காலாத்திற்கு மேல் பூக்காரருக்கு ஊருக்குள் அனுமதி கிடையாது. பூ வாசத்திற்கு யட்சி அடிமை என்றும், மாலை நேரத்துக்கு பின் தெரியும் பூவை, அது எங்கிருந்தாலும், அவள் பின் தொடர்ந்து செல்லுவாள் என்பதும் அங்கு நிலவிய பயம் கலந்த நம்பிக்கைகளில் ஒன்று.

இதற்க்கெல்லாம் அடங்குமா பூ ஆசை கொண்ட பேய் மனது ?பூ வேண்டும் என்று அம்மாச்சி வீட்டு நடகூடத்தில் நான் புரளாத நாட்கள் குறைவு.

பூக்களை விட பூக்காரர் கொண்டு வரும் அந்த நார் குடலைக்கு நான் அடிமை. தன்னுடைய சைக்கிளின் வலது கை ஹேண்டில் பார் பக்கம் ஒரு பூ குடலையை தொங்க விட்டுருப்பார். தூக்கணாங் குருவிகூட்டின் பெரிய வடிவமாக, பனை நாரினால் பின்னப்பட்ட அந்த குடலையினுள் வாழை இலை வைத்து அதில் மல்லி, பிச்சி, கேந்தி, முல்லை என்று கலந்து கட்டியிருப்பார். அதில் இருந்து மல்லியோ பிச்சியோ எடுத்து, கூடையின் ஓரத்தில் தொங்க விட பட்டிருக்கும் சிறு கத்தியால் அழகாக நறுக்கி, தண்ணீர் தெளிக்கப்பட்ட வாழை இலையில் வைத்து, பூக்காரர் தரும் அழகே தனிதான். இதற்காக மட்டுமல்லாமல், பூ பின்னால் யட்சி வருவாள் என்று தெரிந்த பின், பூக்களின் மீது குறுகுறுப்புடன் கூடிய ஆர்வம் வந்திருந்தது.

பூக்களின் மீது பைத்தியமாக திரிந்த ஒரு வேனல் கால சித்திரை பின்னிரவில், சம்மந்தமே இல்லாமல் குளிர் காய்ச்சலும், வலிப்பும் வந்து தொலைக்க, யட்சியை பார்த்து நான் பயந்திருக்க வேண்டும் என்று தீவிரமாக யோசித்த அம்மாச்சி, யட்சியுடன் சமாதானமாக போக விரும்பினாள். நோய் குறைந்த கருக்கலில, யட்சி இருப்பதாக நம்பபட்ட, ஊர் முடியும் ஒரு செம்மண் சாலையின் முனையில் இருந்த ஒற்றை பனை மரத்தின் கீழ் கூட்டி சென்றாள்.

ஒரு பூ, ஒரு நொங்கு என்று எதுவுமில்லை. தூக்கணாங் குருவி கூடு கூட இல்லை. ஒரு கிளி சத்தம் கூட இல்லாமல் தலை விரித்து ஹோ-வென்று நின்றது பனை. சேலை கொசுவத்தினுள் சொருவி வைத்திருந்த சிவப்பு சட்டை துணி, கருப்பு வளையல்கள், சடை குஞ்சலம், கொலுசு, ஜாங்கிரி, ஸ்டிக்கர் பொட்டு என்று எல்லாவற்றையும் பனையின் கீழ் வைத்து வான் பார்த்தபடி சொன்னாள்.

“ஏதோ அறியா புள்ள….தெரியமா பூ வச்சுக்கிட்டு அங்கன இங்கன சுத்திருச்சு. உன் குடும்பத்து புள்ள. மன்னிச்சு விட்ரு தாயி. இனி அதெல்லாம் செய்ய மாட்டா.” என்றபடியே கை உசத்தி கும்புடு போட்டாள். அப்போது கூட யட்சிகளின் மீதான பயமோ, பீதியோ வரவில்லை எனக்கு. மாறாக அந்த சிவப்பு சட்டை, குஞ்சலத்தில் யட்சி எப்படி இருப்பாள் என்ற ஆர்வம் ஒட்டி கொண்டது. ஆனால் அந்த சிறு வயது கற்பனைக்குள் யட்சிகள் அடங்க மறுத்தார்கள். எப்படி இருப்பாள் யட்சி ???? என்பது மட்டுமே அந்த வயதின் ஏகாந்தமான கனவாக இருந்தது.

குளிர் படர்ந்த ஒரு மார்கழி நாளில் இறந்து போன மாடசாமி பெரியப்பாவின் முதுகில், யட்சியின் நான்கு விரல் தடங்களை பார்த்த நேரத்தில் ஊர் உறைந்து போனது. ஊர் முழுக்கவே அன்று ஒருவித பீதியும் பயமும் எல்லோர் முகத்திலும் வழிந்து ஓடி கொண்டிருந்தது. சுடுகாடு போய் வந்த மறு நிமிடங்களில் ஊர் அடங்கி போனது. எல்லோரும் வீட்டு கதவை சாத்தியிருந்தார்கள். மண் மீது காற்று பட்டு எழும் சிறு சரசரப்பு கூட ரத்தததை சூடாக்கியது. குளிர் தாங்காமல் கோரப் பாயிண் மீது நாலு சாக்கை போட்டு அதன் மேல் அம்மாச்சியை கட்டி கொண்டு படுத்திருந்த போது, ரகசிய குரலில் அவளிடம் கேட்டேன்.

யட்சி யாரு ?

அம்மாச்சி சட்டென்று சொன்னாள்.

“நம்ம கொல சாமிதான். என்ன செத்த கோவக்காரி. நேரம் தவறி போனா, நம்ம புள்ளைங்கதானன்னு எல்லாம் பாக்க மாட்டா. ஒரே அடிதான். அந்தானிக்கி அங்கனையே உசிர் போயிரும்” என்றாள்.

சுடலமாடன விட பெரிய ஆளா ? என்றேன்.

ஆமாமா. சுடலைக்கெல்லாம் அவ அடங்க மாட்டா.

அவ எப்பிடி இருப்பா ?

“ஆத்தங்கரை ஓரமா ஒரு சங்கிலிபுத்தார் கோவில் இருக்குல்லா….அவர சுத்தி வளந்துருக்குமே அரளி செடி. அதுல வழஞ்சு வழஞ்சு செக்க செவேல்னு… அரளி பூ இருக்குமே. அப்பிடி இருப்பா யட்சி” என்றாள் அம்மாச்சி.

மறுநாள் ஆற்று பக்கம் போனபோது சங்கிலிபுத்தார் ஞாபகம் வந்தார். குளித்து முடித்து, கோவில் சுற்றி அரளி செடி பக்கம் வந்தபோது புல்லரித்தது ஞாபகம் இருக்கிறது. காற்று இல்லாமல் நெட்டுகுத்தாக, துளி அசைவு இல்லாமல் உறைந்து நின்றது அரளி. விரிந்து படர்ந்திருந்த அரளி செடியில் இருந்து ஒரு வித கசப்பான நறுமணம் சுற்றி சுழன்றது என்னை. செடி முழுக்க செவப்பு பூக்கள். கீழே விழுந்து கிடந்த ஒரு பூவை எடுத்து கைக்குள் வைத்தேன்.

நீண்டு வளைந்த அந்த மெல்லிய காம்பும், எதிர்பாரா இடத்தில் இருந்து சட்டென்று ஐந்து தலை நாகம் போல தலை தலைதூக்கும் இதழ்களுமாக, அதன் நடுவில் இருந்த குழியும்…பூவையே உற்று பார்த்து கொண்டிருந்த நேரத்தில், முகம் தெரியாத அமானுஷ்யம் ஒன்று என் அருகே நின்றது போல் சட்டென்று தோன்றியது.

மூச்சு காற்று இல்லாமல், தொட்டு தழுவுதல் இல்லாமல், உணரவும் முடியாத ஒரு அமானுஷ்யம். சொல்ல முடியா முதல் முதலான பயத்துடன் அரளி பூவை தூர எரிந்து அங்கிருந்து ஓடினேன். மறுநாள் நிஜமாகவே காய்ச்சல் வந்தது. வடக்கு தெரு ராமர் கோவில் பூசாரி வந்து கொத்தாக திருநீறு அள்ளி முகம் மீது எரிந்து, கொஞ்சம் பூசியும் விட்டார்.

அடுத்தடுத்து வந்த நாட்களின் என் காய்ச்சல் குறைவது போல் இல்லை என்பதால் , அது யட்சியின் வேலைதான் என்பதை நம்ப ஆரம்பித்த அம்மா, அதன் பின் அங்கிருக்கவே அறத்சியாகி போனாள். ஒரு நிமிடத்தை கூட அம்மாச்சியின் ஊரில் கழிக்க அம்மா விரும்பவில்லை போலும். ஊர் கிளம்ப யத்தனித்த நாளின், முதல் பஸ்ஸுக்கே எங்களை அழைத்து சென்றாள். எங்கள் குடும்பத்தை எதோ ஒரு அமானுஷ்ய சக்தி சூழ்ந்திருப்பதாக அம்மா உணர ஆரம்பித்து விட்டாள். ஆனால்…அது என்ன அன்பதை அவளால் கண்டறிய முடியவில்லை. வேறு வழியில்லாமல், என்னை “சுடலை கொண்டாடி” தாத்தாவிடம் அழைத்து சென்றாள்.

சாமி ஆடுபவர்களை “சாமி கொண்டாடி” என்று அழைப்பதுதான் ஊரின் வழக்கம். குறிப்பாக “சுடலை கொண்டாடி தாத்தாவின்” உண்மையான பெயர் என்ன என்பது யாருக்குமே தெரியாது. ஊரில் உள்ள கை குழந்தைக்கும் அவர் “சுடலை கொண்டாடி”தான். ஒற்றை கால் இல்லாத அவருக்கு சாமி வரும்போது பார்க்க வேண்டுமே, அவர் ஆடுகிறாரா இல்லை பறக்கிறாரா என்றே சந்தேகம் வந்துவிடும். அவருடைய அந்த ஆவேசமும் ஆட்டமும்தான் “சுடலை கொண்டாடி” என்ற பெயரையே அவருக்கு வாங்கி கொடுத்தது.

என் தொடர் காய்ச்சல் பற்றி “சுடலை கொண்டாடி” தாத்தாவிடம் அம்மா சொன்ன போது “ஏலா…சின்ன புள்ளனா காச்ச வரத்தாம்ல செய்யும். இதுக்கெல்லாம் அழுவுத…. ஊர் கொடை நடக்குதுல. புள்ளைய தினமும் ராக் கொடைக்கு கூட்டி வந்து சாமிய காட்டு. எல்லாஜ் சரியாவும்” என்றபடியே அனுப்பி வைத்தார். அம்மாவும் என்னை தினமும் கொடை இரவுக்கு கூட்டி போனாள்.

நான்காம் நாள் நள்ளிரவு கொடையின் போது, வழக்கம் போல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அங்கே சற்று தூரத்தில் பார்வதி அம்மனுக்காக சாமியாடி கொண்டிருந்த சுப்பு அத்தை, அந்த கூட்டத்தில் இருந்து விலகி, ஆவேசம் வந்தவளாக என் எதிரே வந்து ஆடத் தொடங்கினாள். நான் அதிர்ச்சியில் உறைய, எதிர்பாரா ஒரு கணத்தில் என்னை இரு கை பற்றி தன்வசம் இழுக்க ஆரம்பித்தாள். ஊர் அலறும் அளவுக்கு பயத்தில் கத்த, அம்மா, அப்பா, தாத்தா, அப்பாச்சி, பெரியம்மை, மதினி என்று ஒரு கும்பலே அவர்கள் பக்கம் என்னை இழுத்தது. ஒற்றை மனுசி சுப்பு அத்தை. அவளை இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அவளுடைய கை நகம் கீறி எனக்கு ரத்தம் வர வர, என்னை இழுத்து சென்று யட்சி சிலை இருந்த பூடத்தின் முன் விட்டு, ஆடினாள் ஒரு பேயாட்டம். குதிகால் தொடும் தலைமுடி வானெங்கும் பறக்க, உடலெங்கும் ஊறிய மஞ்சள் தண்ணி என் மேல் தெறித்து விழ, ரத்தம் சிதறி விழும் ஒரு வேகத்தில் ஆடினாள்.

என் மொத்த குடும்பமும் சுப்பத்தையிடம் கையெடுத்து நின்றது, என்னை விட்டு விட வேண்டி. அழுகையும் வர தயங்கிய பயத்தின் உச்சத்தில், மிரண்டு நின்றேன். ஒரு சில நிமிடங்கள் இந்த களேபரம். எங்கிருந்துதான் வந்தாரோ தெரியாது சுடலைகொண்டாடி தாத்தா. அங்கு வந்தார். நடந்து வந்தாரில்லை. பறந்துதான் வந்தார். அப்படி ஒரு பாய்ச்சல். வந்த வேகத்தில் யட்சியாகவே மாறி நின்ற சுப்பு அத்தையின், தலைமுடியை கொத்தாக பிடித்து அடங்க முடியாமல் தவித்து நின்ற அவளின் நெற்றியில் திருநீறை அள்ளி எறிந்தார். ஆட்டம் நின்ற அவளிடம் இருந்து, என்னை அழைத்து சென்று குடும்பத்திடம் விட்டார். பின் அப்பாச்சியிடம் “நாளைக்கு “தங்காள்”ல போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருல” என்று சொன்னார்.

“தங்காள்” மலையாள மாந்த்ரீகவாதி. சேரன்மகாதேவிக்கும், அம்பாசமுத்திரதிற்கும் இடையே உள்ள, ஈ காக்கா கூட எச்சம் போடாத காட்டுக்குள் இருந்தார். அவரது வீட்டை ராத்திரியில் முனியும் மோகினியும் காவல் காத்து வருவதாகவும், சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டிற்கு செல்பவர்கள் ரத்தம் கக்கி சாக வேண்டியதுதான் என்றும் கதைகள் உலாவி கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஊரில் இருந்து அரிசியாகவோ, நெல்லாகவோ, கருப்பட்டியாகவோ, கரும்பாகவோ, மஞ்சளாகவோ, ஒரு பெட்டி நிறைய வைத்து “தங்காளுக்கு” வரியாக அனுப்பி விடுவார்கள். அந்த தங்காளை பார்க்க சொல்லித்தான் அப்பாச்சியிடம் அறிவுறுத்தி கொண்டிருந்தார் சுடலைகொண்டாடி தாத்தா.

தங்காளை– பார்க்க போயிருந்த குடும்பம் மொத்தமும், மிகப்பெரும் பீதியுடன் திரும்ப வந்திருந்தார்கள். அங்கு என்ன நடந்தது என்று நாள் முழுக்க புலம்பி கொண்டிருந்தாள் அப்பாச்சி.

“சில புள்ளைங்கள மட்டும் யட்சிக்கு புடிச்சு போயிருமாம். அது மாதிரி… இப்போ நம்ம புள்ளைய யட்சிக்கு புடிச்சு போயிருக்கு. கிட்டத்தட்ட நேர்ந்து விட்டது மாதிரிதான்” இப்படி அப்பாச்சி முடிப்பதற்கு முன்பாக அம்மா பெருங்குரலெடுத்து அழுதாள். வீட்டில் உண்மையிலயே ஒரு சுடுகாட்டு சூழல் வந்திருந்தது.

அதற்கடுத்து வந்த நாட்களில் தாயத்து கட்டி கொண்ட காளியாக மாறி இருந்தேன் நான். எப்போதும் கூடவே யாரவது இருந்தார்கள். பள்ளிக்கு கூட்டி செல்ல, கூட்டி வர குடும்பமே வந்து சென்றது. படுக்கையில் அம்மாச்சியும் அப்பாச்சியும் இணைந்து கொண்டார்கள். என் ஆடைகளை காயபோடுவதற்கு என்று வீட்டுக்குள் இடம் கொண்டு வரப்பட்டது. கழிந்த தலைமுடிகள் சேர்த்து வைக்கப்பட்டு வருடத்திற்க்கு ஒரு முறை திருப்பதியில் போட்டு வரப்பட்டது. ஏதோ ஒரு நாளில் என் மீதிருந்து அரளி பூ வாசம் அடிப்பதாக பூக்காரம்மா கூறிய நாளில் மீண்டும் வீட்டில் யட்சியை பற்றிய பயம் குடியேறி இருந்தது.

பதினான்கு வயதில் தொடங்கிய இந்த, “யட்சி ஆட்டம்” பதினேழிலும் தொடர்ந்து, உலகில் இருந்து அந்நியப்பட்டு போன ஒரு நாளில் வீட்டுக்கு “கல்லூர்” சித்தி வந்தாள். சின்னையா “பால் கொடம்” எடுக்க இருப்பதாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லாததால் என்னை அழைத்து செல்ல வந்திருப்பதாகவும் நிறைய வாதாடி, கல்லூருக்கு கூட்டி சென்றாள். சின்னையா “பதினாலாம் நாளின் ராகொடையின் போதுதான் பால்குடம் எடுக்க இருப்பதாகவும்” அதற்க்கு இரண்டு நாட்கள் இருப்பதாகவும் சித்தி சொல்லி கொண்டாள். அந்த இரண்டு நாட்கள் இடைவெளியிலும் என்னை திருநெல்வேலி, ஜவுளிக்கடை, பலகார கடை என்று கூடவே பிடித்து இழுத்து சென்றாள்.

இருந்தாலும் பதினாலாம் நாளின், “ராக்கொடைக்கு நான் வரவில்லை” என்பதை சித்தியிடமும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருந்தேன். அங்கு சாமியாடுபவர்களிடம் சிக்கி மறுபடியும் ஒரு யட்சி ஆட்டம் நடந்து விட கூடாது என்பதற்காக பத்திரமாக வீட்டில் இருக்க முடிவு செய்தேன். துணைக்கு சில சொந்தக்கார குட்டி பெண்களை விட்டுவிட்டு, வருத்தத்துடன் கோவிலுக்கு கிளம்பி சென்றாள் சித்தி. தாயம், பல்லாங்குழி என்று என்னவோ விளையாண்டு அப்படியே தூங்கி போனேன். நீண்ட நெடு நாள் கழித்து மீண்டும் வந்ததது அரளி பூ கனவு. என் மனம், முகம், மூளை எல்லாம் பூ நிறைந்து மூச்சு முட்டி எழுந்திருக்கையில், வீட்டில் யாருமில்லை என்பது புத்திக்கு உரைத்தது. நான் தூங்கியவுடன் என்னுடன் இருந்தவர்களெல்லாம் கோவிலுக்கு சென்றிருக்க வேண்டும் என்று தோன்றியது.

யாருமற்ற அந்த வீடு, இருட்டை தின்று நின்று கொண்டிருந்தது. வேர்த்து வழிந்திருந்த உடலில், இருட்டின் வாசம் படர்ந்து லேசான நடுக்கத்தை கொண்டு வந்தது. மடமடவென்று எழுந்து எதையும் பற்றி யோசிக்காமல், என்ன நேரம் என்று கூட தெரிந்து கொள்ளாமல், வீட்டை விட்டு வெளிவந்து கோவில் நோக்கி நடக்க தொடங்கினேன்.

ஊர் முழுவதும் கோவிலில் இருந்ததால், வீட்டு விளக்கின் வெளிச்சம் அற்று போயிருந்தது. ஒரு சில இடங்களில், கோவிலுக்கு போகாதவர்களின் நடமாட்டம் தெரிந்தது. இருட்டின் அடர்த்தியின் ஊடே தெரிந்த, தெரு விளக்கின் வெளிச்சத்தில் கால் தடுக்கியது சில இடங்களில். பல பாறைகளையும், சில முட்புதர்களையும் தாண்டி வர வேண்டியதாக இருந்தது பயத்தை அதிகரித்தது. பயம் பயம் பயம் என்று பயம் சூழ்ந்த நடை ஒரு பிசாசை போன்ற வேகத்தை தந்திருந்தது.

ஒரு பாறையை கடக்க நேர்கையில், பொளீரென்று கழுத்தில் விழுந்த கை ஒன்று அப்படியே இறுக்கி, என்னை தர தரவென்று, பாறைக்கு அந்தப்புரம் இழுத்து போனது. என்ன ஏதென்று புரிவதர்க்குள் சில தூரம் இழுபட்டிருந்தேன். கால் செருப்பு அறுந்து, முட்கள் குத்தி கிழித்திருந்தன காலை. கழுத்து இறுக்கத்தின் அழுத்தத்தில் மூச்சு விட முடியாமல் திணறினேன். வலியும் பயமும் கத்துவதர்க்கான தைரியத்தை முற்றிலும் அழித்திருந்தது. சற்று எம்பி, கால் ஊன்றி அந்த கைகளில் இருந்து விடுபடுவதர்க்குள் சுளீரென்று அறை விழுந்தது. முகமா ? கழுத்தா ? முதுகா ? என்று யூகிக்க முடியாத அளவிற்கு விழுந்த அடியால் கிட்டதட்ட மூச்சு நிற்கும் அளவிற்கான மயக்கத்தில் கீழே விழுந்தேன். சிறு பாறை கற்கள் முதுகை குத்தி கிழித்தது. எழுந்து ஓடி விட வேண்டும் என்று மூளை பரபரபத்த அளவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றாலும், எழுந்து நிற்க பிரயத்தனப் படுவதர்க்குள், மலை மாடு போன்ற உருவம் என் மேல் விழுந்ததில் மூச்சு முட்டியது. சந்தனமும் ஜவ்வாதும் அரபி சென்ட்டும் கலந்த நாற்றம் குடலை உருவியது. முதல் முதலான ஒரு அன்னிய ஸ்பரிசம் பெரும் அருவருப்பை தந்தது. அவனை என்னில் இருந்து அகற்ற அத்தனை வழிகளையும் தொடங்கினே. எதுவும் முடியவில்லை என்னால். மலை மாடு போன்ற அந்த உருவத்துடன் சண்டையிட என் பதினேழு வயது பூஞ்சை உடலால் இயலவில்லை. கைகள் பற்றி, வாயை பொத்தி, கால்கள் அமுத்தி என் ஆடைகளை உருவ முயன்று கொண்டிருந்தான்.

என் பலமெல்லாம் இழந்து, தோல்வியின் வாசலில் நின்று கொண்டிருந்த வேளையின் உச்சி நொடியில், என்னை சுற்றிலும் ஒரு அரளி பூ வாசனை பரவுவதை உணர்ந்தேன். ஒரு கசப்பின் வாசம். ஒரு வெறுப்பின் வாசம். ஒரு ஆங்காரத்தின் உச்ச வாசம். என் அடி வயிற்றில் இருந்து ஒரு மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று நீண்டு வந்து கொண்டிருந்தது தெரிந்தது. அந்த அரக்கு பூ மொக்கு, என் கண்களுக்கு புலப்பட தொடங்கிய போதே ஒரு ஆங்காரமுமான உணர்வு வந்தது. வினாடிகளில் நான் யட்சியானேன். என் நகங்கள் கூர்மை அடைந்திருந்தன. என் பற்கள் வெளியில் வர தொடங்கி இருந்தது. என் கடைவாயில் ரத்தம் பார்க்கும் ஆசை வந்திருந்தது.

கைகளுக்கு கிடைத்த சிறு பாறை கற்களை விசிறி அடித்தேன் அவன் மேல். கை நகங்களால் அவன் மூஞ்சி முகரை உடல் எதுவென்று தெரியாமல் பிராண்ட தொடங்கினேன். வாய் திறந்து கடித்து ரத்தம் உறிஞ்ச ஆரம்பித்தேன். முட்டு கால்களால் அவன் இடுப்பின் கீழே ஓங்கி ஓங்கி உதைத்தேன். கத்திய அவன் வாயை, ஒரு முதலையின் வாயை பிளப்பது போல என் இரு கைககள் பிளக்க துவங்கி இருந்தேன். உச்சகட்ட அசுர பலத்தில், என் மேலிருந்த அவனை புரட்டி கீழே போட்டு, எழுந்து நின்று ஆவேசம் தீர மிதிக்க ஆரம்பித்தேன். அப்படியும் குறையாத வேகத்தில், அருகில் இருந்த செடியோ, கொடியோ எதோ ஒன்றில் கிளைகளை பறித்து எடுத்து விளாசினேன். தூரத்தில் கோவிலில் ராக் கோடையில் உச்சி கால பூஜை பறைகள் அடிக்க தொடங்கி இருந்தார்கள். அவனின் காட்டு கத்தல் அந்த பறைகளில் கரைந்து போனது.

ஆவேசம் அடங்கியது. கையில் இருந்த கிளைகளை தூர வீசிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தேன். அவன் இருக்கானா செத்தானா என்பது பற்றியெல்லாம் துளி கூட கவலையற்ற மனதுடன். மிக பெரும் விடுதலை உணர்வு தொடங்கியிருந்தது உடலெங்கும். வந்த வழியே திரும்பி வீட்டுக்கே நடந்தேன். யட்சி என் கூடவே வருவது போல் இருந்தது. இருட்டு பழகி இருந்தது. கசப்பின் வாசமும்.

மறுநாள் காலை ஊரே பரபரத்து கொண்டிருந்தது. “துபாய்ல இருந்து ஊருக்கு வந்த, கீழ்வீட்டு மாரியம்மா மவன் செல்வம், நரிபொத்தை பக்க்கதுல ஒரு அரளி செடிக்கு கீழேல தாறுமாறா அடி பட்டு கிடக்கான் போலயே. யட்சில அவனை அடிச்சுருக்கா. இதுக்குதான் நேரங் காலம் பாத்து வெளில போகனும்கிறது” என்று பேசி கொண்டார்கள்.

இப்போதும் அரளி பூவின் கனவுகள் வரத்தான் செய்கிறது. பயமில்லை. மூச்சடைப்பில்லை. என்றாவது ஒரு நாள் “என் பெண் குழந்தை” யட்சி யாரென்று கேட்குமானால் அதற்க்கு சொல்வதற்கு “அம்மாச்சியை விடவும் மிக அழகான கதை என்னிடம் இருக்கிறது என்று புன்னகைத்து கொள்கிறேன்”.

Print Friendly, PDF & Email

2 thoughts on “யட்சி ஆட்டம்

  1. அம்பாசமுத்திரம் கிராமத்து கோவில்கொடைக்கு சென்றிருக்கிற சிறுவனின் சூழலுக்கு கொண்டுவந்துவிட்டது எழுத்து நடை . மிரட்டல்.

  2. மிக அழகான கதை… யட்சி பற்றிய வர்ணனைகளும் கதையின் யதார்த்தமும் மனதை தொடுகிறது… மேலும் எழுத வாழ்த்துக்கள், கவிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *