கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 11,919 
 
 

சமவயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு அலுவலகத்தில், அதுவும் ஒரே துறையில் ஒரே நாளில் சேர்ந்தால், சேர்ந்த நாள் முதலாய் நன்றாக பேசிப் பழகினால் அவர்கள் இருவரைப்பற்றியும் இந்த உலகம் என்னவெல்லாம் பேசுமோ, அதுவெல்லாம் பேசினது – என்னையும் சாந்தகுமாாியையும் பற்றி.

கல்லூாியிலும் அம்மா அப்பாவின் கூட்டுக்குள்ளும் ராஜாக்கள் போல வாழ்ந்திருந்துவிட்டு நிஜ உலகத்தினுள் நுழைந்தபோது ஒரு சுழலுக்குள் வந்து சிக்கிக் கொண்டதுபோல அந்த வங்கி அலுவலகம் எங்களுக்கு ஒரு பெரும் மாயமான் வேட்டையாய் பயம்காட்டியது. எங்களுக்கு முன்னே அங்கு இருந்தவர்களின் உடலில் வங்கி கவசகுண்டலங்களாய்ச் சேர்ந்திருந்தது. அவர்கள் உபயோகிக்கிற மங்கல்தாள் கணக்குப் புத்தகங்களும், க்ரெடிட், டெபிட் மந்திரங்களும், கால்குலேட்டர் தேவைப்படாமல் சிறிதும் தப்பில்லாது செய்த லட்சலட்சமான கூட்டல்களும், தூக்கத்திலும் வட்டி விகிதம் மனப்பாடமாய்ச் சொல்கிற ஆளுமையும் எங்களை அசரடித்தது, இந்த மாயவிளையாட்டில் புகுந்து ஜெயிக்க எங்களால் ஆகுமா என்று பயந்து போனோம். நல்ல வேளை, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலைமையில் கூடவே கையைப் பிடித்துக் கொண்டு பாதையின் இருபுறமும் தடவித் தடவி வெளியேறும்வழி தேடுவதற்கு ஒரு துணையாவது இருக்கிறதே என்கிற நிம்மதி தமிழகத்தின் சம்பந்தமில்லாத இரு மூலைகளிலிருந்து வந்திருந்த எங்கள் இருவரையும் நெருங்கின சிநேகிதர்களாக்கியது.

அந்தப் பொிய வங்கியில் எங்கள் வேலைகுறித்து இரண்டு விஷயங்கள் கேட்டால் அதில் பத்து சந்தேகங்கள் வந்தது. எங்களுக்கு மேலே இருந்தவர்களுக்கு அரசாங்க வேலைக்கே உாிய பெருமிதம் இருந்தது, கூடவே இளைஞர்கள் மேலே அவநம்பிக்கையும் அலட்சியமும். ‘பள்ளிக்கூடத்திலிருந்து பாசா, பெயிலான்னுகூட பார்க்காம நேரா வேலைக்கு வந்துடறாங்கப்பா, அப்புறம் அது புாியலை, இது புாியலை-ன்னு நம்ம உயிரை எடுக்கறாங்க ‘ என்று இரண்டு பேர் எங்கள் முன்னாலேயே பேசிச் சலித்துக் கொண்டார்கள், வேறு யாராவது இப்படிச் சொல்லியிருந்தால் உடனே சண்டைக்குப் போயிருப்போம், ஆனால் இங்கே சீனியர் என்றாகிவிட்டபிறகு, எல்லாவற்றையும் ஒரு அசட்டுச் சிாிப்போடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எங்கள் கோபங்களை தனியாய் இருக்கும்போது பரஸ்பரம் புலம்பல்களாகவும், பொறுமல்களாகவும் தணித்துக் கொண்டோம். எதிலும் முழுவிவரம் சொல்லாமல் எங்களை இழுத்தடிப்பதில் அவர்களுக்கு ஒரு கொடூர சந்தோஷம் இருந்தது. ‘எனக்கு சாியா புாியலை சார் ‘ என்று கெஞ்சிக்கேட்டு மண்டியிட்டு சரணடைந்தபிறகு, எங்களைவிட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கிற மிதப்புடன் விளக்கிச் சொன்னார்கள், பணிந்து போவதில்தான் கற்றுக்கொள்ள முடியும் என்று வந்த ஒருவாரத்திற்குள் புாிந்து கொண்டோம்.

அதற்காக எப்போதும் அவர்களைக் கேட்டுக் கொண்டிருப்பதும் முடியாது, ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலைகள் இருந்தது, எங்களுக்கு சொல்லித் தருவதற்கென்று எவரும் நியமிக்கப் படவில்லை. ஆகவே காலை வந்ததும் மேனேஜர் சொல்கிற குறிப்புகளை வாங்கிக் கொண்டு நாங்களாய் தேடிப் பிடித்துத் தொிந்துகொண்டு அந்த வேலையைச் செய்ய வேண்டியதுதான். சந்தேகங்கள் வந்தால் எங்களுக்கு முன்னே இருந்தவர்களின் வேலைக்கிடையில் ஒழிகிற நேரம் பார்த்து பிடித்துக் கொள்ள வேண்டும், கேட்டுத் தொிந்து கொண்டு வேலையைச் செய்து முடிக்க வேண்டும். நாளில் பாதி நேரம் சும்மா உட்கார்ந்திருக்கிறது போல் இருந்தாலும், மீதி நேரம் கடுமையாய் உழைக்க வேண்டியிருந்தது, இல்லையென்றால் தொிந்து கொள்வதும் சாத்தியமில்லை, வேலையும் முடியாது.

ஆகவே நானும் சாந்தகுமாாியும் வேலையைப் பகிர்ந்து கொண்டோம். புதிதாய்ச் சேர்ந்தவர்கள் என்கிற சலுகையில் அதை மேலாளர் கண்டுகொள்ளவில்லை, எனவே அலுவலகத்தில் நான் ஒரு பக்கம் அவள் ஒரு பக்கமாய் லெட்ஜர்கள் தேடுவது, தலையணை உயரப் புத்தகங்களில் குறிப்புகள் எடுப்பது, மீன்வருகிற வரையில் பொறுத்திருக்கிற கொக்குபோல காத்திருந்து சும்மா இருப்பதாய்த் தோன்றுகிற சீனியர்களிடம்போய் வழிந்து அவர்களின் சலிப்புகளுக்கும், கிண்டல் திட்டுக்களுக்கும் நடுவே விவரம் சேகாிப்பது என்று அலைந்தோம். அவ்வப்போது ஆசுவாசப் படுத்திக் கொள்ளக் கிடைக்கிற நேரங்களில் லஞ்ச் ரூமில் சேர்ந்து உட்கார்ந்து விவாதிப்போம், சந்தேகங்கள் கேட்டு எங்களுக்குத் தோன்றின விளக்கங்கள் சொல்லிக்கொள்வோம். சிலசமயம் ஐந்து மணிக்கே வங்கி முடிந்துவிட்டாலும், ராத்திாி ஏழரை எட்டு மணிவரையில்கூட நாங்கள் இருவர் மட்டும் உட்கார்ந்து கணக்குகள் போட்டுக்கொண்டிருப்போம். அல்லது காலை எல்லோரும் வருவதற்கு முன்னால் வர வேண்டியிருக்கும், எது எப்படியோ முதல் நாள் கொடுத்த வேலையை அடுத்தநாள் காலைக்குள் முடித்துவிடுவது என்பது ஒரு பொிய போராட்டமாய் இருந்தது. கேட்பதற்கு வேடிக்கையாகவோ, நாங்கள் ரொம்ப அலட்டுவதாகவோ தோன்றலாம், ஆனால் நாங்கள் பட்டபாடுகள் நிஜம். முன்பின் தொியாத ஒருவரோடு ஆயுள்காலம் வாழ்வதற்குப் பழக்கப் படுத்திக் கொள்கிற புதுமணப்பெண்போல அந்த வங்கியின் உள்விவகாரங்கள் புாிந்துகொண்டு எங்களுக்கென்று ஒரு மேஜையும், கோப்புகளுமாய் நாங்கள் செட்டிலாவதற்கு மூன்று மாதத்திற்கு மேல் ஆனது.

இப்படி ஒரு போராட்டமாய்க் கழிந்த அந்த மூன்று மாதங்களில் எங்கள் இருவருக்கும் இடையே பலமான நட்பு உண்டாகியிருந்தது. அதற்குக் காரணமே, எங்கள் இருவருக்கும் பொதுவாய் இருந்த எங்கள் வேலை பற்றிய அறியாமையும், அதை உடைத்து வெளியே வரவேண்டும் என்கிற அசைக்க முடியாத வெறி அல்லது நம்பிக்கையும்தான். எங்கள் வேலை சம்பந்தமாய் முட்டாள் தனமான கேள்விகளைக்கூட ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் முட்டாள் இல்லை என்பதை நன்றாகப் புாிந்து கொண்டிருந்தோம், ஆகவே எனக்கு வருகிற சந்தேகங்களைவிட, அவளுடைய சந்தேகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதில்தேடி அலைந்திருக்கிறேன், பதில்பெற்று அவளுக்கு விளக்கிச் சொல்லி நானும் ஒரு புது விஷயம் கற்றுக் கொண்டேன் என்று சந்தோஷப் பட்டிருக்கிறேன். அவளும் அப்படியே செய்ததுதான் எனக்கு ஆச்சாியமாய் இருந்தது. பரஸ்பரம் பலவீனங்களைப் புாிந்து கொண்டிருந்ததால், அடுத்தவருடைய குறைபாட்டை நிரப்ப வேண்டும் என்பதிலேயே எங்கள் இருவாின் கவனம் இருந்தது. அதை ஒரு நண்பனுக்கு – தோழிக்குச் செய்யும் இயல்பான உதவியாகத்தான் நினைத்தோம், ஆனால் அதுவே நாங்கள் இருவரும் வளரக் காரணமாய் இருந்தது.

இந்த வருடம் ‘சிறந்த வங்கி ஊழியர் ‘ விருதை எனக்கும் சாந்த குமாாிக்கும்தான் சீனியர்களின் முணுமுணுப்புக்கிடையில் பகிர்ந்து கொடுத்தார்கள். போக வேண்டிய பயணம் இன்னும் நீண்ட தூரம் மீதமிருப்பது புாிந்தபோதும், இடையில் எதிர்ப்பட்ட ஒரு பாலைவனச்சோலையாய் இந்த பாராட்டும் அங்கீகாரமும் இருந்தது. ‘வாழ்க்கையின் முதல் போட்டியில் ஜெயித்துவிட்டோம் ‘ என்று ஐஸ்க்ாீம் சாப்பிட்டுக் கொண்டாடினோம். பாசாங்குகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக் கொண்டோம்.

நட்பினால் விளைந்தது இந்த வெற்றி என்றால், அந்த சந்தோஷத்திற்கும் ஒரு இருள்சூழ்ந்த மறுபக்கம் இருந்தது. ஒன்றாக வங்கிக்கு வந்து, இரவு எந்நேரமானாலும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திருந்து ஒன்றாகவே கிளம்பி வீட்டுக்குப் போகப் பழகியிருந்த எங்களைப் பற்றி அலுவலகத்தில் பலவிதமான வதந்திகள் பரவத் துவங்கியிருந்தது. காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும், விட்டுவிட்டதாகவும் – இவை சொல்லக்கூடியவை, சொல்லக்கூடாத வதந்திகளும் பல பேசப் பட்டன. முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எப்போதாவது காதில் விழும், பிறகு சிகரெட் புகைக்க வெளியே போகிற பத்து நிமிடத்தில் உடன் இருக்கிற நண்பர்களே சொல்ல ஆரம்பித்தார்கள், ‘இப்படியெல்லாம் பேசறாங்க ‘ என்று மூன்றாமவர்கள்மேல் பழியைப் போட்டுவிட்டு, ‘சீக்கிரம் ரெண்டு பேரும் ஒரு முடிவு எடுங்களேன் ‘ என்று தூண்டில் விாித்து மீன் தேடுகிற நண்பர்கள். மீன் சிக்கினதென்றால், மறுநிமிடம் உயிரை உறிஞ்சிச் சாப்பிட்டுவிடத் தயாராயிருக்கிற நண்பர்கள்.

ஒன்றும் பேசாமல் சிாித்து மழுப்பிவிட்டு, நேரடியாய் சாந்தகுமாாியிடம் வந்து சொல்லிவிடுவேன். அவளுக்கு இவை பொிய அதிர்ச்சியை உண்டாக்கவில்லை என்று தோன்றியது. ‘சொல்லிட்டுப் போகட்டும் குமார் ‘ என்பாள். நான் மறுத்து ஏதாவது சொன்னாலும், ‘அவங்களால முடியாததைத்தான் மத்தவங்கமேலே பழியாப் போட்டு சந்தோஷப் படறாங்க, கிடக்கட்டும் விடுங்க ‘ என்பாள்.

சீக்கிரமே வதந்திகள் ஒருபடி முன்னேறி நேரடியாய் எங்களை எதிர்கொள்ள ஆரம்பித்தன. சாந்தகுமாாியிடம் புதிதாய் வந்த மேனேஜர் கேட்டாராம், ‘குமாருக்கும் உனக்கும் என்ன உறவு ‘ என்று. அவள் ‘உங்களுக்கும் எனக்கும் இருக்கிற அதே உறவுதான், அலுவலக சிநேகிதர் ‘ என்று சிாித்தபடி சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். எனக்கு அப்படி நாசூக்காய் சமாளிப்பதற்கு நிதானமோ, அவசியமோ இல்லாததால், என்னிடம் அப்படிக் கேட்ட ஒரு சீனியாின் சட்டையைப் பிடித்துவிட, அது மன்னிப்புக் கேட்கச் சொல்லி ஸ்ட்ரைக் செய்யும் அளவு போய்விட்டது. அன்று மாலை அவள் என்னிடம் கேட்ட கேள்வி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ‘ரெண்டு பேரும் ஒரே கேள்விதான் கேட்டாங்க, மேனேஜர் என்கிட்டே அப்படிக் கேட்டவிஷயம் நான் சொல்லித்தான் உங்களுக்கே தொியும், ஆனா விஸ்வநாதன் சார் உங்ககிட்டே கேட்ட கேள்வி, இப்போ ஊருக்கே தொியும், என்ன காரணம்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க குமார் ‘. வதந்திகளுக்கு அநாவசிய அங்கீகாரம் தருவதால்தான் அவை இன்னும் வேகமாய்ப் பரவுகின்றன, அவற்றை மதிக்காமல் விடுவதுதான் வதந்திகளைக் கொல்லும் வழி என்பதை அப்போது புாிந்து கொண்டேன்.

நான் புாிந்து கொண்டாலும், நான் செய்த கலாட்டாவுக்கு பின் விளைவு இல்லாமல் இல்லை, பகட்டான முகமூடி அணிந்து நாசூக்காய் எங்களைச் சுற்றிவந்த வதந்திகள் திடுமென்று ஒருநாள் திரை கிழித்துக் கொண்டு நாகாீகமில்லாத அவற்றின் நிஜமுகம் காட்டத் துவங்கின. ஆண்கள் கழிப்பறையிலும் நோட்டாஸ் போர்டிலும் அசிங்கமான வாசகங்களாய் படம் வரைந்து பாகம் குறித்து வெளிவந்தன. அன்றைய தினம் வங்கிக்கு வந்த சில வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்ட ஸ்லிப்களிலும் எங்களைப் பற்றிய ஆபாச வாசகங்கள் இருந்ததாய்ச் சொன்னார்கள். யார் செய்தார்கள் என்று தொியும், ஆனால் ஏதும் செய்ய முடியாத நிலைமை. பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். எல்லோரும் எங்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருப்பதுபோல ஒரு உறுத்தும் உணர்வு, மிகக் கூச்சமாய் இருந்தது. திரும்பினபோது சாந்தகுமாாியின் கண்களில் முதல் தடவையாய் அழுகைக்கான அடையாளங்கள் பார்த்தேன். ஒரு உண்மையான சிநேகிதனாய் என்னால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை, அருகே போய் ஆறுதல் சொல்லலாம் என்றால் அதற்கும் ஏதேனும் கதைகட்டுவார்கள் இவர்கள். அவர்கள் பரப்பின வதந்தி உண்டாக்கின பாதிப்பைவிட, சாந்தகுமாாியின் அழுகை அதிகமாய்த் தாக்க, உள்ளுக்குள் நானும் அழுதேன், நான் ஒரு பெண்ணாகவோ அல்லது சாந்தகுமாாி ஒரு ஆணாகவோ இருந்திருக்கலாம் என்று அப்போது தோன்றியது.

***********************************

அடுத்த வாரமே சாந்தகுமாாிக்கு திருமணம் நிச்சயமானது. ஹைதராபாத்திலிருந்து வந்து பார்த்துவிட்டுப்போன பையன் சம்மதம் சொல்லிவிட உடனடியாய் திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டார்கள், முகம் சிவக்கிற வெட்கத்தோடு அவள் இதை என்னிடம் சொன்னபோது முதலிலேயே சொல்லாததற்காக கோபித்துக் கொண்டேன். ஆயிரம் மன்னிப்புகள் கேட்டாள், ‘சொல்லணும்ன்னுதான் நினைச்சேன் குமார், அப்புறம் எல்லாம் நிச்சயமானப்புறம் சொல்லலாமே-ன்னு விட்டுட்டேன், ஸாாி ‘ என்றாள் நிஜமாய் வருந்தி. அதற்கு மேல் என் கோபம் செல்லவில்லை. சிாித்து வாழ்த்துக்கள் சொன்னேன். கல்யாணப் பாிசாய் ஒரு வாட்ச் வாங்கிக் கொடுத்தேன். அதைக் கையில் கட்டினபோது அவள் முகம்முழுக்க பூாிப்பையும் பெருமிதத்தையும் பார்ப்பதற்கு மனநிறைவாய் இருந்தது.

மறுநாள் வங்கியில் எல்லோருக்கும் சாந்தகுமாாி ஸ்வீட் கொடுத்தாள். ஒவ்வொருவரும் இனிப்பு வாங்கிக் கொண்ட கையோடு சடங்குபோல என்னைத் திரும்பிப் பார்த்தது எனக்கு எாிச்சலாய் இருந்தது. ஆனால் அவள் முகத்தில் கோபமோ, சலிப்போ இல்லை, எப்போதும்போல வாய்நிறைய சிாித்துக் கொண்டிருந்தாள். என்னிடம் ஸ்வீட் தர வந்தபோது, ‘மூஞ்சிலே என்ன எள்ளும் கொள்ளும் வெடிக்குது ? அவங்களெல்லாம் உங்களைத் திரும்பிப் பார்த்தாங்களே, அதுக்காக கோபமா ? நானும் கவனிச்சேன், ஆனா அது தப்பான பார்வை இல்லை குமார், நம்மைப் பத்தி அவங்க நினைச்சதெல்லாம் தப்புன்னு இப்போ நிரூபணமாயிடுச்சே, அதனால உங்ககிட்டே மன்னிப்பு கேட்கறதுக்காக பார்க்கிறாங்க, அவ்வளவுதான், இதுக்குப்போய் கோவப்படலாமா ? ‘ என்றாள். அப்போதும் எனக்கு சமாதானமாகவில்லை. எனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டேன். ‘சில விஷயங்களிலே நீங்க இன்னும் குழந்தைதான் குமார் ‘ என்று இயல்பாய் என் தலையைக் கலைத்துவிட்டுச் சென்றாள். சுற்றிப் பார்த்தேன், ஒருவர்கூட எங்களைக் கவனிக்கவில்லை. எல்லோரும் ஸ்வீட் சாப்பிடுவதில் கவனமாய் இருந்தார்கள். சாந்தகுமாாி சொல்வது உண்மைதான் என்று தோன்றியது, இதற்காகவே அவசரமாய் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டாளோ என்று சந்தேகமாகக்கூட இருந்தது.

உடனடியாய் முகூர்த்தம் கிடைக்காததால் திருமணத்தை ஆறுமாதம் கழித்துதான் வைத்திருந்தார்கள். அதனால் சாந்தகுமாாி எப்போதும்போல் வங்கிக்கு வந்து போய்க்கொண்டுதான் இருந்தாள். எப்போதும்போல் நாங்கள் பழகிக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் ஒருவர் என்றால் ஒருவர்கூட எங்களைப் பற்றி தவறாய்ப் பேசவில்லை. முன்பு பேசியவர்களும் இப்போது எங்களிடம் சகஜமாய்ப் பழக ஆரம்பித்தார்கள், விஸ்வநாதன்சார்கூட என்னிடம் வலிய வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எனக்கு எல்லாம் அதிசயமாய் இருந்தது. சாந்தகுமாாியிடம் கேட்டபோது ‘இதிலென்ன ஆச்சாியம் இருக்கு குமார் ? முதல் போட்டியிலே ஜெயிச்சமாதிாியே, நாம இரண்டாவது போட்டியிலேயும் ஜெயிச்சாச்சு ‘ என்றாள் கட்டை விரல் உயர்த்தி.

அவளுடைய வார்த்தைகளைக் கேட்டபோது என் சந்தேகம் உறுதியானது, இவர்கள் பேசுகிற அசிங்கங்களைத் தடுப்பதற்காகத்தான் அவசரமாய் இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறாள். நிஜமாகவே அவர்களை ஜெயித்துவிட்டோமா என்று எனக்குப் புாியவில்லை. போட்டியிலிருந்து விலகிக் கொள்வது வெற்றியாகாது என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வேறு உறவைக் கற்பனை செய்யக்கூட தயாாில்லாத களத்தில் நடக்கிற இந்தப் போட்டிக்கு வேறு முடிவே இல்லை என்று தோன்றியது. யாரேனும் ஒருவர் விலகித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.

***********************************

இதெல்லாம் நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். என் தம்பிக்கு ஹைதராபாத்தில் ஒரு இன்டர்வியூ வந்தது. முதல்முறையாக வேலை தேடிப் போகிறான், நானும் கூட வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அவனுக்கு ஆதரவாய் இருக்குமே என்று ஒப்புக் கொண்டேன். இருவருக்கும் ரயிலில் டிக்கெட் பதிவுசெய்துவிட்டு சாந்தகுமாாியிடம் சொன்னபோது, ‘அங்கே எங்கே தங்கப் போறீங்க ? ‘ என்றாள் முதல் கேள்வியாய்.

‘தொியலை, ரெண்டு நாள்தானே, எதாவது லாட்ஜ்ல ரூம் போட வேண்டியதுதான் ‘ என்றேன்.

‘அதெல்லாம் வேண்டாம், அவர் அங்கேதானே இருக்கார், நான் ஃபோன் பண்ணி சொல்லிடறேன், அவர் வீட்டிலே போய் தங்கிக்கோங்க ‘ என்றாள்.

‘எவர் ? ‘ என்றேன் புாியாமல், உடனடியாய் கோபித்துக் கொண்டாள், ‘தொியாத மாதிாி கேட்காதீங்க ‘ என்று பாதி சிணுங்கலாய் அவள் சொன்னபோதுதான் புாிந்தது. அவளுடைய வருங்காலக் கணவனைச் சொல்கிறாள்.

‘அதெல்லாம் வேண்டாங்க, அவரை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டு ‘ என்றேன் தயக்கமாய்.

‘தொந்தரவெல்லாம் ஒண்ணும் இல்லை, உங்களைப்பத்தி நிறைய சொல்லியிருக்கேன், பார்க்கணும்-ன்னு சொல்லிட்டே இருந்தார், நீங்க அவர் வீட்டுக்குப்போனா ரொம்ப சந்தோஷப் படுவார் ‘ என்று பிடிவாதம் பிடித்தவளுக்காக ஒப்புக் கொண்டேன். விலாசம் வாங்கிக் கொண்டேன்.

***********************************

சரவணன் எங்களை ரயில் நிலையத்திலேயே வந்திருந்து கூட்டிப் போனார். ‘உங்களை நேர்ல பார்த்ததில்லையே தவிர மத்தபடி உங்களை எனக்கு நல்லாவே தொியும், சாந்தா எப்பவும் உங்களைப்பத்திதான் பேசிட்டு இருப்பா ‘ என்றார். ஃபோனில் நிறைய பேசுகிறார்கள் போலும்.

வீடு பொிதாகவே இருந்தது. மூன்று அறைகள், அதில் ஒன்று சமையலறை, அங்கே ஒன்றிரண்டு பாத்திரங்கள் மட்டும். கேஸ் இணைப்பிற்கு எழுதிக் கொடுத்திருப்பதாக சொன்னார். இன்னொரு அறையில் இரட்டைக் கட்டில் படுக்கையோடு ஃபோன் இருந்தது., கம்ப்யூட்டர் இருந்தது. பால்கனியில் கயிறுகட்டி உள்ளாடைகள் காய்ந்து கொண்டிருந்தது. லேசாய் வழுக்கின பாத்ரூம் கண்ணாடியில் நிறைய தூசி. ஹாலில் அங்கங்கே தரையில் செய்தித் தாள்களும், பாலிதீன் காகிதங்களும் பரந்து கிடக்க, சுவரோரமாய் ஏழெட்டு இணை செருப்புகளும் ஷூக்களும்.

‘தனியாவா இருக்கீங்க ? ‘ என்றதற்கு ‘ஃப்ரெண்ட்ஸோட இருந்தேன், கல்யாணம் நிச்சயமானதும் இந்த வீட்டை வாடகைக்குப் பிடிச்சேன். ‘ என்று ஒரு வெட்கச்சிாிப்பு சிாித்தார்.

என் தம்பி போகவேண்டிய இடம் வீட்டுக்குப் பக்கத்தில்தானாம், அவரே கூட்டிப் போவதாய் சொன்னார்.

‘நாங்க கண்டுபிடிச்சுப் போயிக்கறோம், உங்களுக்கு எதுக்கு சிரமம் ? ‘ என்றதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. சனிக்கிழமை என்பதால் அவர் அலுவலகமும் விடுமுறையாய் இருந்தது. ஆகவே அவரும் எங்களோடு ஆட்டோவில் கிளம்பிவிட்டார்.

***********************************

ஒரு பொிய தோட்டத்துக்கு நடுவில் அந்தக் கட்டிடம் இருந்தது. வந்த எல்லோரையும் வரவேற்று குளிர்பானங்கள் கொடுத்தார்கள், என் தம்பி கழுத்தில் டை உறுத்த அந்த ஏஸி குளிாிலும் வியர்த்திருந்தான். சரவணன்தான் அவனுக்கு தைாியம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘தன்னம்பிக்கையோடு பேசு, அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள் ‘, ‘நீ படித்த அறிவைவிட, நீ பழகும் விதத்துக்குதான் அதிக மதிப்பெண் ‘ என்றெல்லாம் தோளில் தட்டி டிப்ஸ் கொடுத்ததை ஆச்சாியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அனுபவசாலியின் தெளிவோடு அவர் பேசியதைக் கேட்டு அவன் மெல்லமெல்ல இயல்பானான். அவன் பெயர் அழைக்கப் பட்டபோது மலர்வாய்ச் சிாித்தபடி நம்பிக்கையோடு உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தோம்., உள்ளே என்ன நடக்கிறதோ என்று எனக்குக் கவலையாய் இருந்தது. கைகளை சிரமமாய்ப் பிசைந்து கொண்டிருந்தேன். என் தம்பி அவனிடமிருந்த படபடப்பையெல்லாம் என்னிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான் போலிருந்தது. என் பதட்டத்தை அவரும் கவனித்து விட்டார். ‘உங்க தம்பி வெளியே வர ஒரு மணி நேரமாவது ஆகும், நாம அப்படியே ஒரு வாக் போயிட்டு வருவோமே ‘ என்றார். என்னையும் அறியாமல் ஒரு விடுதலைப் புன்னகை வெளிப்பட்டது. எழுந்து வெளியே நடந்தோம்.

வெளியே வந்ததும் முகத்தில் வீசிய தென்றல் காற்றுக்கு முன்னால் உள்ளே இருக்கிற ஏஸியெல்லாம் மருந்துக்கும் ஆகாது என்று தோன்றியது. குட்டைத் தென்னை மரங்களும், பெயர் தொியாத சின்னச் செடிகளில் வண்ண வண்ணப் பூக்களும் வளர்த்திருந்த தோட்டத்தை ஒரு முறை சுற்றி வந்தோம். தரையெங்கும் குளுமையாய் நீர் பாய்கிற பைப்புகளை மிதித்து விடாமல் நடந்தோம்.

காரணமே இல்லாமல் சரவணனைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். சிலரைப் பார்த்ததும் பிடித்துப் போகும், சரவணன் விஷயத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு அவரை முதல்முறை பார்த்தபோது உண்டாகவில்லை. அவர் கலகலப்பாய்ப் பேசியபோதும் கூச்சமாகதான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் பழகப் பழக அவருடைய இயல்பான கம்பீரம் ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்டது எனக்குப் பிடித்திருந்தது. என் தம்பி விஷயத்தில் அவர் காட்டின அக்கறையும் என்னை மிகக் கவர்ந்திருந்தது. ஏதோ ஒருவிதத்தில் அவர் சாதாரணர்களைவிட ஒரு படி மேலே இருப்பதாய்த் தோன்றியது.

இதை நினைத்ததும் எனக்கு உடனே சாந்தகுமாாியின் ஞாபகம் வந்தது, எல்லா விதத்திலும் நல்ல துணையாகத்தான் பிடித்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டேன். மனசுக்குள் ஒரு சந்தோஷப்பூ மலர்ந்தது.

கட்டடத்தின் இன்னொரு முனையில் ஒரு கேன்ட்டான் இருந்தது. ‘ஒரு டா சாப்பிடலாமே ‘ என்றேன். ‘நானும் அதையேதான் சொல்ல நினைச்சேன் ‘ என்றார் அவர்.

கேன்ட்டானுக்குள் எங்களை அனுமதிக்க மறுத்தார்கள், இன்டர்வியூவுக்கு வந்திருக்கிறோம் என்றதும் சந்தேகமாய் உள்ளேவிட்டார்கள். ஓரமாயிருந்த கவுன்டாில் டோக்கன் பெற்று பிளாஸ்டிக் கோப்பைகளில் டா வாங்கிக் கொண்டோம். ஜன்னலுக்குப் பக்கத்து இருக்கையாய் தேடிப் பிடித்து அமர்ந்தோம். அத்தனை சேர்களில் எங்களைத்தவிர யாருமே இல்லாத வெறுமை உறுத்தியது. செக்கச்செவேலென்று டா லேசாய் கசப்பது போலிருந்தது.

‘டா-யும் பிாியாணி-யும்தான் ஹைதராபாத்ல ஸ்பெஷல் ‘ என்றார் சரவணன். இதற்கு என்ன சொல்வதென்று தொியவில்லை. மறுபடி குடித்துப் பார்த்தேன், கசப்புதான். இங்கே உள்ளவர்களுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது.

ஓாிரு உறிஞ்சல்களுக்குப் பிறகு அவரே மீண்டும், ‘சாந்தா உங்களுக்கு எப்படிப் பழக்கம் மிஸ்டர். குமார் ? ‘ என்றார்.

அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு சாியாய்ப் புாியவில்லை, ‘ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ் ‘ என்றேன் மொட்டையாய்.

‘அது தொியும் சார், ஆஃபீஸ்ல நூறு பேர் இருக்காங்க, எல்லோருமா நல்லா பழகிடறாங்க ? உங்க ரெண்டு பேருக்கும் எப்படி நல்ல பழக்கம் ஆச்சு-ன்னு கேட்டேன் ‘ என்றார். நாங்கள் இருவரும் ஒரே நாளில் அலுவலகம் சேர்ந்ததைச் சொன்னேன். ஒன்றாய் கஷ்டப் பட்டதையும், சமாளித்ததையும் கொஞ்சம் சொன்னேன்.

‘இன்ட்ரஸ்டிங், ஜெயில்ல கைதிகள் ரெண்டுபேர் ஃப்ரண்ட்ஸ் ஆகி சேர்ந்து வெளியே தப்பிச்சுப் போக திட்டம் போடறமாதிாி, அப்படித்தானே ‘ என்று சிாித்தார். அவர் சொன்ன உவமை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஏதும் பேசாமல் இருந்தேன்.

‘ஸோ, ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் ஆயாச்சு, அப்புறம் என்ன ஆச்சு ? சாதாரணமா ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகினா கண்டபடி கதை கட்டுவாங்களே, அப்படி யாரும் உங்களைப்பத்தி பேசலையா ? ‘ என்றார்.

எனக்கு அந்தக் கேள்வி பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. அதிலிருந்து மீள்வதற்குள், சரவணன் தொிந்துகொண்டே கேட்கிறாரோ என்கிற சந்தேகமும் வந்தது. யார் சொல்லியிருப்பார்கள் ? சாந்த குமாாியா ? அல்லது வேறு எவரேனுமா ? சாந்தகுமாாி சொல்லியிருக்க மாட்டாள் என்று தோன்றியது. இதற்கு என்ன பதில் சொல்வது ?

‘என்ன குமார், திடார்ன்னு அமைதி ஆகிட்டாங்க ? ‘ என்றார் விடாமல்.

‘இல்லை, ஏதோ யோசனை, என்ன கேட்டாங்க ? ‘ என்று சமாளிக்க முயன்றேன், மறுபடி கேட்க மாட்டார் என்று நினைத்தேன், ஆனால் விடாமல் மீண்டும் கேட்டார், அதே வார்த்தைகள், அதே நிதானம், அதே சிாிப்பு.

பொய்சொல்லத் தோன்றவில்லை. ‘சிலபேர் பேசினதா சொன்னாங்க சார், நாங்க அதையெல்லாம் பொிசா கண்டுக்கலை ‘ என்றேன்., கவனமாய் வார்த்தைகள் தேர்ந்தெடுத்துப் பேச நினைத்தும் ஏதோ உளறிவிட்டதுபோல் இருந்தது.

‘வொிகுட், அப்படித்தான் இருக்கணும் ‘ என்று அவர் சொன்னதில் கொஞ்சம் சந்தோஷப் படுவதற்குள், ‘அப்படி என்னதான் பேசினாங்க ? ‘ என்றார்.

மறுபடி மெளனமானேன். ஏன் இப்படி தோண்டித் துருவிக் கேட்கிறார் ? முதல்தடவையாய் அவர்மேல் சின்ன வெறுப்பு வந்தது.

அவர் என் முகத்திற்கு நேராய் கைகளை ஆட்டி ‘இந்த உலகத்திலேதான் இருக்கீங்களா ? ‘ என்றார்.

‘ம், ஏதோ யோசனை ‘ என்றேன். ‘ம், சொல்லுங்க, என்ன பேசிகிட்டாங்க உங்களைப் பத்தி ? ‘

‘அது எதுக்கு சார், ஏதேதோ கேவலமா பேசிகிட்டாங்க ‘ என்றேன் அருவருப்பாய். அதற்குமேல் அவர் கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என் பொறுமையைச் சோதிப்பதற்காகவே, ‘சும்மா தொிஞ்சுக்கதான் கேட்கிறேன் குமார், சொல்லுங்களேன் ‘ என்றார். குரலின் வேண்டுகோளில் பொதிந்திருக்கிற கட்டளை.

‘அது ஒண்ணும் பொிசா இல்லை சார், நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறதா பேசிகிட்டாங்க, அப்புறம் உங்க கல்யாண விஷயம் தொிஞ்சதும் தானா வாயை மூடிகிட்டாங்க ‘, அந்த வாக்கியத்துக்கு முக்கியத்துவமே தராததுபோன்ற அலட்சியத் தொனியில் சொன்னேன். ஆனாலும் என் குரலின் நடுக்கத்தை அவர் கவனித்திருக்கலாம்.

சரவணன் பொிதாய்ச் சிாித்தார். ‘அட, இவ்வளவுதானா ? ஏதோ கேவலமா பேசிகிட்டாங்க-ன்னு சொன்னீங்க, காதலிக்கிறது கேவலமா குமார் ? ‘ என்றார்.

போர்க்களத்தில் எல்லா ஆயுதங்களையும் இழந்து நிற்கிறவன்போல் உணர்ந்தேன், எங்கோ பேச்சு துவங்கி எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, யாரேனும் வந்து இதைத் தடுத்தால் பரவாயில்லையே என்று உள்ளே பிரார்த்தித்தேன்.

‘ஏன் மறுபடி சைலன்ட் ஆயிட்டாங்க ? சொல்லுங்க குமார், காதலிக்கிறது கேவலமா ?, சாி, வேற மாதிாி கேட்கிறேன், சாந்தாவோட இவ்வளவு பழகியிருக்கீங்களே, ஒரு நிமிஷம்கூட அவளைக் காதலிக்கிறதா நினைச்சதில்லை நீங்க ? உண்மையான பதில் சொல்லணும் ‘ என்றார்.

நிச்சயமாய் இல்லை. ஒரு நிமிடம் என்ன, ஒரு விநாடிகூட சாந்தகுமாாியை அப்படி ஒரு பார்வை பார்த்ததில்லை நான், ஆனால் அதை சரவணனிடம் அடித்துச் சொல்ல ஏன் அப்படித் தயங்கினேன் என்றுதான் புாியவில்லை. அவசியமில்லை என்று பட்டிருக்க வேண்டும். அல்லது சொன்னால் அந்த நட்பின் தூய்மை அவருக்குப் புாியுமா என்றும் நினைத்திருக்கலாம். என் கட்சிக்கு ஆதரவாய் எவ்வளவோ வாதங்கள், விஷயங்கள் இருந்தும் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன்.

அவர் மறுபடி கேட்டார், ‘ஏன் தயங்கறீங்க ? சொல்லுங்க குமார், அப்படி நினைச்சதே இல்லையா நீங்க ? உங்களை விடுங்க, சாந்தா எப்பவாவது அப்படி நினைச்சிருக்கலாம் இல்லையா ? அவ நினைக்கலைன்னாலும் அந்த வயசு நினைக்கத் தூண்டியிருக்கும்தானே ? ‘

எனக்கு அங்கே உட்காரவே அவமானமாய் இருந்தது. ஏன் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கிறார், என்னிடம் என்ன பதில் எதிர்பார்க்கிறார், இதெல்லாம் எங்கே கொண்டுவிடப் போகிறது என்றெல்லாம் புாியவே இல்லை. உடனே அங்கிருந்து கோபமாய் எழுந்து வெளியேறிவிடவே விரும்பினேன், ஆனால் அது சாந்தகுமாாியை பாதிக்கலாம் என்று தோன்றியது. தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன்.

சரவணன் இன்னும் ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். ஊசிபோல் உள்ளே குத்தும் கேள்விகள், ஆனால் எந்த கேள்வியைக் கேட்கும்போதும் அவாிடம் கோபமோ, சோகமோ இல்லை. முகத்தில் சிாிப்பு மாறாத கொடூரம். சிலவற்றிற்கு நான் பதில் சொன்னேன், அது வேறு அநாவசியக் கேள்விகளுக்குக் கொண்டுபோய்விடுகிறது என்று புாிந்ததும் பதில் சொல்வதை நிறுத்திவிட்டேன்.

என் தம்பி எங்களைத் தேடிக் கொண்டு கேன்டானுக்கே வந்துவிட்டதால் வலுக்கட்டாயமாக எங்கள் பேச்சுவார்த்தை துண்டிக்கப் பட்டது. பெரும் நிம்மதியாய் உணர்ந்தேன்.

***********************************

அன்று மாலை ரயிலில் மேல் பர்த்தில் படுத்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன். சரவணன் அதன்பிறகு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை, ஆனால் முதலில் கம்பீரமாய்த் தோன்றிய அவருடைய சிாிப்பு, அந்த சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் ஒரு மெதுவிஷம்போல உள்ளே குத்தியது. சில சமயங்களில் அதே சிாிப்பு, ‘நீ பதில் சொல்லாவிட்டால் என்ன, இந்த கேள்விகளுக்கெல்லாம் எங்கே பதில் வாங்க வேண்டுமோ அங்கே வாங்கிக் கொள்கிறேன் ‘ என்று சொல்வது போல் இருந்தது. போகப்போக அந்த சிாிப்பையும் பார்வையையும் சந்திக்கவே பயப்பட ஆரம்பித்திருந்தேன்.

இந்தக் கல்யாணத்தின்மூலமாக இரண்டாவது போட்டியில் ஜெயித்துவிட்டதாக சாந்தகுமாாி நம்பிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதே கல்யாணத்தால் மூன்றாவது போட்டி ஒன்று அவள் வாழ்க்கையில் துவங்கப் போவது அவளுக்குத் தொிந்திருக்குமா ?

அவளிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன், ஆனால் சொல்லமுடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில் இந்தப் போட்டியை அவள் தனியாகத்தான் சமாளித்தாக வேண்டும். அவளால் சமாளிக்க முடியும் என்று ஒரு பக்கமும், முடியவே முடியாது என்று இன்னொரு பக்கமும் தோன்றியது, எதுவாயினும் நான் செய்யக்கூடுவது எதுவும் இல்லை என்பது மட்டும் தெளிவாய்த் தொிந்தது.

ஊருக்குப் போனதும் மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டே செகந்திராபாத் தாண்டினதும் எல்லாம் மறந்து தூங்கிப் போனேன்.

– ஏப்ரல் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *